Published:Updated:

'அயல்நாட்டு மரங்களும் நம் நீர்வளத்தைத்தான் சுரண்டுகின்றன!' ஆனைமலை அனுபவங்கள்

'அயல்நாட்டு மரங்களும் நம் நீர்வளத்தைத்தான் சுரண்டுகின்றன!' ஆனைமலை அனுபவங்கள்
'அயல்நாட்டு மரங்களும் நம் நீர்வளத்தைத்தான் சுரண்டுகின்றன!' ஆனைமலை அனுபவங்கள்

சோலைக் காட்டைக் கடந்துவிட்டோம். இன்னும் ஒரேயொரு மலையைக் கடந்துவிட்டால் ஊருக்குள் சென்றுவிடுவோம். ஒருவித ஏக்கத்துடனேயே அடுத்த மலையை ஏறத் தொடங்கினோம். இதை ஏறி முடித்துவிட்டால் அடவிப் பயணம் முடிவுற்றுவிடுமே என்ற ஐயம் நெஞ்சைப் பிழிந்துகொண்டிருந்தது.

ரிடத்தில் நடக்க வேண்டுமென்றால் நமக்குப் பாதை வேண்டும். ஆனால், காட்டுயிர்கள் அப்படியான பாதைகள் ஏற்படுவதற்காகக் காத்திருப்பதில்லை. அவை போகிற போக்கில் தமக்கான பாதைகளை உருவாக்கிக்கொண்டே செல்லும். யானை ஒரு வழியில் நடந்துசென்றால் அந்த வழியே மனிதர்கள் செல்லும் பாதையாகிவிடும். காடுகளுக்குள் நாம் பயணிக்கும் பல மண் பாதைகள் அவை உருவாக்கியவைதான். 

அதேபோலத்தான் காட்டுமாடுகளும். அவை நடப்பதால் உண்டாகும் பாதை மெல்லிய மண் கோடு போல நீண்டு செல்லும். சறுக்கலான மலைப் பாதைகளில் வழுக்கிவிடும் புல்வெளிக் காடுகளில் நடந்து செல்கையில் அங்கு நமக்கென்றே போடப்பட்டிருப்பதுபோல் ஆங்காங்கே மெல்லிய கோடு போன்ற மண் பரப்பு தெரியும். சறுக்கி விழாமல் நடந்துசெல்வதற்கு அந்தச் சிறிய மண் பாதை நமக்கு உறுதுணை புரியும். அதை எந்த மனிதரும் சென்று உருவாக்கி வைக்கவில்லை. அது காட்டுமாடு நடந்துசென்ற வழி. அந்த வழி நமக்குப் பாதையாகிப் பள்ளத்தில் விழாமல் தாங்கிப் பிடித்து நிற்கின்றது. 

சுமார் 110 டிகிரிக்கு சரிவாக இருந்த மலையை ஏறும்போது அப்படியொரு பாதையில்தான் நடந்து சென்றுகொண்டிருந்தோம். காட்டுப் புகையிலைச் செடிகள் ஆங்காங்கே புற்களைவிட உயரமாக உயர்ந்து நின்றிருந்தது. திரும்பிய திசையெல்லாம் ஆங்காங்கே வாடிப்போன நீலக் குறிஞ்சி செடிகளும் ஃபெர்ன்ஸ்(Ferns) எனப்படும் பூக்காத தாவரங்களும் வளர்ந்திருந்தன. அவை மலையேறும்போது அடிக்கடி காலில் சிக்கிக்கொண்டேயிருந்தது. ஒருவித சலிப்புடனும் அசௌகர்யத்துடனும் அதைக் காலிலிருந்து எடுத்துவிட்டபடி சென்றுகொண்டிருந்தேன். பாதையைவிட்டு விலகித் தரையே தெரியாத அளவுக்கு வளர்ந்திருந்த புல்வெளிச் சரிவில் நடக்கும்போதெல்லாம் கால் வழுக்கி அடிக்கடி விழுந்துகொண்டேயிருந்தேன். 

'அயல்நாட்டு மரங்களும் நம் நீர்வளத்தைத்தான் சுரண்டுகின்றன!' ஆனைமலை அனுபவங்கள்

சோலைக் காடுகளுக்குள் புகுந்து அதைச் சுற்றி வெளியேற வேண்டும். அப்படி வெளியேறி அதையடுத்து இருந்த இன்னொரு செங்குத்தான மலையை ஏறி இறங்கினால்தான் ஊர்ப் பாதைக்குள் வரமுடியும். எங்களுடன் வந்திருந்த மற்ற குழுக்கள் இந்நேரம் இறங்கியிருப்பார்கள். ஆனைமலைக் காட்டின் அரவணைப்பிலிருந்து விடுபட மனமில்லை. இறங்கும் முன் இன்னொருமுறை இந்த அழகை ரசித்து வர வாய்ப்பு கிடைக்காதா என்று மனம் அடம்பிடிக்கத் தொடங்கியது. நல்லவேளையாக, உடன் வந்திருந்த இரண்டு வழிகாட்டிகளின் ரோந்துப் பணி பாக்கியிருந்தது. குழுவினர் அனைவரும் மற்ற காவலர்களோடு இறங்கத் தொடங்கிவிட்டனர். நான் அடம்பிடித்து, ரோந்துப் பணியை முடித்துவிட்டு வரும் அவர்களோடு இறங்குவதாகச் சொல்லிவிட்டேன். 

அவர்களின் ரோந்துப்பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இதோ நாங்கள் ஊடுருவவுள்ள சோலைக் காட்டை கடந்துவிட்டால் கிட்டத்தட்ட காடேற்றம் முடிந்துவிடும். சோலைக் காட்டைப் பார்த்ததும் கொடைக்கானல்தான் நினைவுக்கு வந்தது. அது ஒருகாலத்தில் எவ்வளவு செழிப்பான சோலைக் காடுகள் நிறைந்திருந்த பகுதி. அயல் தாவரப் பயிரிடுதல்களும் பண மரப் பயிரிடுதல்களும் அங்கிருந்த சோலைக் காடுகளைக் கிட்டத்தட்டச் சுத்தமாகத் துடைத்தெறிந்துவிட்டன. எங்கு பார்க்கினும் பைன், யூகலிப்டஸ் என்று நெடிதுயர்ந்து நிற்கும் மரங்கள் எவ்வளவு ஆபத்தானவை. கொடைக்கானலில் அந்த மரங்களின்முன் நிற்கும்போதெல்லாம் தோன்றுவது ஒன்றுதான். ஏதோ பெரிய அரக்கன் அந்தப் பகுதியின் நீர்வளத்தை எல்லாம் தானே உறிஞ்சிக்கொண்டு தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்குத் தேவையான மண் வளத்தை எல்லாம் தான் மட்டுமே கிரகித்துக்கொண்டு பேய்ச்சிரிப்பு சிரித்து நிற்பதுபோன்ற மாயை தோன்றும். 

இங்கு ஆங்காங்கே ஒன்றிரண்டு இடங்களில் பைன் மரங்கள் நிற்கின்றன. ஆனால், கண்களை உறுத்தும் அளவுக்கு இல்லை. அவற்றையும் அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தூறல் போட்டுக்கொண்டிருந்த மழைக்காட்டில், ஈரப்பதமான நிலப்பகுதியில் மரங்களும் ஈரத்தில் ஊறிப்போய் இருந்தன. எப்போதும் ஈரத்திலேயே இருப்பதால் மரம் முழுக்கப் பாசிகள் வளர்ந்திருந்தன. இந்தப் பாசிகள் மரத்தைச் சார்ந்து வாழக்கூடியவை. நிறைய மரங்களைச் சுற்றி ஃபெர்ன் வகையைச் சேர்ந்த பூக்காத தாவரங்களின் கொடிகளும் வளர்ந்திருந்தன. 

'அயல்நாட்டு மரங்களும் நம் நீர்வளத்தைத்தான் சுரண்டுகின்றன!' ஆனைமலை அனுபவங்கள்

சோலைக் காட்டுக்குள் நடப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அன்றுதான் புரிந்துகொண்டேன். ஈர நிலத்தில் உதிரும் இலை தழைகள் அங்கேயே ஊறிப்போய் கிடப்பதால் முற்றிலுமாக அழுகி மக்குபோல் ஆகிவிடும். அந்த மக்குகள் மண் தரைக்கு மேலே சில சென்டிமீட்டர்களில் தொடங்கி சில இன்ச்கள் வரை இருக்கலாம். மக்குகளும் நன்கு ஊறிப்போய் இருந்ததால் சரிவான பாதையில் வழுக்கிக்கொண்டேயிருந்தன. மிக எச்சரிக்கையாகத்தான் ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்க வேண்டும். அப்படித்தான் எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன். சோலைக் காட்டுச் சரிவுக்குள் இறங்கினோம். இடையே ஒரு சிற்றோடை பாய்ந்துகொண்டிருந்தது. அந்தச் சிற்றோடையில் சிறிது நீர் அருந்திவிட்டுச் செல்வோம் என்று நின்ற சமயம் சுற்றியும் நோட்டமிட்டேன். அப்போது உடன் வந்திருந்த காவலர் சொன்னார், 

"இது பாக்குறதுக்கு சிற்றோடை மாதிரி தானுங்களே இருக்கு. ஆனா, நெசத்துல இது ஒரு காட்டாறு. நாம இங்க இருந்த நாலு நாளும் பேஞ்ச மழையெல்லாம் வெறும் டீசர்தான். இன்னும் முழுப்படமும் ஆரம்பிக்கல. அதுவே அடுத்த மாசம் இதே நேரத்துல வந்து பாத்தீங்கன்னா நீங்க நிக்குற இடம் வரைக்குமே இந்த ஆத்தோட தண்ணீர் ஓடுமுங்க. அந்த வெள்ளத்துல இப்படிச் சுத்துறதுலாம் நெனச்சுக்கூடப் பாக்க முடியாது" என்றவரை நான் மெல்லிய புன்சிரிப்போடு நோக்கினேன். "ஏனுங்க நம்பிக்கையில்லீங்களா! அப்படியே கொஞ்சம் திரும்பி உங்க வலப்பக்கமா இருக்குற மரத்துல பாருங்களே!" என்றவரின் பேச்சைக் கேட்டு நானும் தலையைத் திருப்பினேன். 

'V' வடிவத்தில் சரிவு இறங்கிச் சிற்றோடையிலிருந்து மீண்டும் ஏறுகிறது. நடுவே சிற்றோடை சில அடிகளுக்குச் சமமாக நிற்க அதில் ஓரளவுக்கு நீர் ஓடிக் கொண்டிருந்தது. சிற்றோடையிலிருந்து சுமார் இருபது அடி தூரத்தில் மேட்டில் நான் நின்று கொண்டிருந்தேன். எனக்கு வலப்பகமாக அத்திமரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகைப் பழ மரம் இருந்தது. அதை ஏன் பார்க்கச் சொல்கிறார் என்ற சந்தேகத்தோடு எனக்கு வலப்பக்கமாக இருந்த மரத்தைப் பார்த்தேன். அந்த மரத்தில் என் மார்புக்குக் கொஞ்சம் கீழே வரை அதிகமாக நீரில் ஊறிப் போயிருந்த தடம் தெரிந்தது. "அந்த அச்சு இருக்குல்லீங்களா! போன மழைக்கு அதுவரைக்கும் காட்டாறு வெள்ளம் ஓடுச்சு" என்று என் பார்வையைத் தொடர்ந்து அவரும் விளக்கினார். 

சிற்றோடையாக மாறி நிற்கும் காட்டாற்றைக் கடந்து மேலேறத் தொடங்கினோம். அங்கிருந்த ஒரு மரத்தில் அரிவாளை வைத்து அதன் பட்டைகளை நன்றாகச் சுரண்டிவிட்டதுபோல் காட்சியளித்தது. எங்கள் குழுக்களில் ஒன்று நேற்றோ அதற்கு முந்தைய தினமோ இந்தப் பக்கமாக வந்திருந்தபோது அடையாளத்துக்காகச் செய்திருக்கலாம் என்று நினைத்தேன். பின்னால் வந்தவர், "மிளா கொம்பு உரசிருக்குப் பாருங்க" என்று மற்றொரு காவலரிடம் கூறினார். அவரும் அதைக் குறிப்பு எழுதத் தொடங்கினார். கடமான் என்றழைக்கப்படும் மிளா மரங்களில் உரசி உரசிக் கொம்பு உதிர்ப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உரசிய தடங்களைப் பார்ப்பது இதுதான் முதல்முறை. 

'அயல்நாட்டு மரங்களும் நம் நீர்வளத்தைத்தான் சுரண்டுகின்றன!' ஆனைமலை அனுபவங்கள்

ஆண்டுக்கு ஒருமுறை இனப்பெருக்க காலம் முடிந்ததும் கடமான்கள் இந்த மாதிரி தம் கொம்புகளை உதிர்க்கும். அதன்பின் மீண்டும் முளைக்கத் தொடங்கும். அப்படி முளைக்கும்போது வெல்வெட் போன்ற மென்மையான தோலோடு கொம்பு வளரும். ஓரளவுக்குக் கொம்பு நன்றாக வளரும்வரை 'தொலி' என்றழைக்கப்படும் அந்தத் தோலும் இருக்கும். லேசாக அடிபட்டால்கூடக் காயமடைந்து ரத்தம் வந்துவிடும் அளவுக்கு அந்தத் தோல் மென்மையாக இருப்பதால் இந்தச் சமயத்தில் கடமான்கள் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிக் கொம்பு உதிர்க்கும் சமயத்தில் இப்படி ஏதாவது மரத்திலோ பாறையிலோ சென்று கொம்பின் அடிப்பாகத்தை நன்றாகத் தேய்த்து உரசிக் கொள்ளும். அந்தத் தடத்தைப் பார்த்துவிட்டுச் சில தூரம் மேலேறினோம். கிட்டத்தட்ட சோலையைக் கடந்து வெளியேறும் சமயம் அங்கிருந்த ஒரு பாறைக்கு அருகே கடமான் கொம்பு ஒன்று கிடந்தது. அநேகமாக அங்கே உரசிய மானின் கொம்பாகத்தான் இருக்குமென்று காவலர்கள் ஊகித்தார்கள். 

சோலைக் காட்டைக் கடந்துவிட்டோம். இன்னும் ஒரேயொரு மலையைக் கடந்துவிட்டால் ஊருக்குள் சென்றுவிடுவோம். ஒருவித ஏக்கத்துடனேயே அடுத்த மலையை ஏறத் தொடங்கினோம். இதை ஏறி முடித்துவிட்டால் அடவிப் பயணம் முடிவுற்றுவிடுமே என்ற ஐயம் நெஞ்சைப் பிழிந்துகொண்டிருந்தது. வேறு வழியில்லை, போய்த்தான் ஆக வேண்டும். இது என்னுடைய இடமில்லை, காட்டுயிர்களுக்கான வாழ்விடம். 

இதுதான் இறுதி மலை. முன்பைப் போலவே குறிஞ்சிச் செடியின் வேர்களும் வாடிக் கிடந்த பரணிச் செடிகளும் அவ்வப்போது கால்களில் சிக்கிக்கொண்டேயிருந்தன. தரை தெரியாத அளவுக்குப் படர்ந்திருந்த புல்வெளிக் காட்டில் அப்போதுதான் மழை பெய்திருந்ததால் அடிக்கடி வழுக்கிவிட்டுத் தொப் தொப்பென்று விழுந்துகொண்டிருந்தேன். அதேபோல் ஒருமுறை விழுந்ததுதான் தாமதம். செங்குத்தான மலையாக இருந்ததாலும் மல்லாக்க விழுந்ததாலும் சரிவில் சறுக்கிக்கொண்டே போனேன். சில மீட்டர்களுக்குச் சறுக்கியிருப்பேன். திடீரென்று ஓரிடத்தில் அப்படியே நின்றுவிட்டேன். உண்மையில் காலில் மாட்டிய குறிஞ்சி வேர்களால் நிறுத்தப்பட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். 

'அயல்நாட்டு மரங்களும் நம் நீர்வளத்தைத்தான் சுரண்டுகின்றன!' ஆனைமலை அனுபவங்கள்

அதற்குள் வனக்காவலர்களும் ஓடிவர, அவர்களின் உதவியுடன் அதே வேரைப் பிடித்துத் திடமாகி எழுந்து நின்ற பிறகு, சறுக்கிச் சென்ற திசையில் திரும்பிப் பார்த்தேன். அதே திசையில் மேலும் சுமார் 10 மீட்டர் தொடர்ந்து சறுக்கியிருந்தால் ஆழமான பள்ளத்தில் விழுந்திருப்பேன். முழங்காலில் வலி கடுமையாக இருந்ததால் கால்களை உதறத் தூக்கினேன், வரவில்லை. குறிஞ்சி வேர் இன்னமும் காலில் சிக்கிக்கொண்டிருந்தது. 

"இந்தக் காட்டுக்கு உங்களை அனுப்ப மனசில்லீங்க. அதான் இப்படி அடிக்கடி இழுத்துப் புடிச்சுட்டே இருக்குது. நல்லவேளையா இந்த வேர் மட்டும் புடிக்கலைன்னா இந்நேரம்..." என்று பேச்சை முடிக்காமல் நிறுத்தினார் ஒரு வனக்காவலர். 

"ஆமாங்க, இந்தக் காடுதான் என் உயிரையும் காப்பாத்தியிருக்கு. இவளுக்கு மட்டுமில்ல, எனக்கும்தான் இவள விட்டுப் போக மனசில்ல."

Vikatan
அடுத்த கட்டுரைக்கு