Published:Updated:

அனலின் பிடியில்! - டெல்லியில் காற்று மாசு இதனால்தானா?

அனலின் பிடியில்! - டெல்லியில் காற்று மாசு இதனால்தானா?
News
அனலின் பிடியில்! - டெல்லியில் காற்று மாசு இதனால்தானா?

அனலின் பிடியில்! - டெல்லியில் காற்று மாசு இதனால்தானா?

திகரித்து வரும் டெல்லியின் காற்று மாசைக் கருத்தில் கொண்டு அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் அடுத்த மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஜெனரேட்டர் மற்றும் டீசல்  வாகனங்கள் இயங்குவதற்குக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 200 மீட்டர் தொலைவில் இருக்கும் பொருள் கூடத் தெரியாத அளவுக்கு டெல்லியில் மாசு அதிகரிப்பதற்கு, அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் வயல்வெளிகளில் வைக்கோல் எரிக்கப்படுவதே காரணம் என கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் மத்திய சுற்றுச்சூழல் துறையோ, அருகில் இருக்கும் மாநிலங்களில் எரிக்கப்படும் வைக்கோல் வெறும் 20 சதவிகிதம்  மட்டும்தான் காற்றை பாதிக்கும். டெல்லியில் அளவுக்கு அதிகமாகத் சேர்ந்திருக்கும் கழிவுகள்தான் இந்த நிலைக்கு முக்கியக் காரணம் என அறிவித்துள்ளது. வளிமண்டலப்பரப்பில் இருக்கும் தூசுத் துகள்களில் சல்ஃபர் ஆக்ஸைடு மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு மிக அதிக அளவு இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல்துறை கூறுகிறது. இந்த துகள்கள்தான் மூச்சுக்கழலை, காசநோய் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்பட முக்கியக் காரணம் என்பது அதிர்ச்சி தரும் தகவல்.  இந்தத் துகள்களில் 80-90% வரை டெல்லியின் பதர்பூர் அனல் மின் நிலையத்தால் வெளியேற்றப்படுபவை  என்பது கூடுதல் அதிர்ச்சி.

50 சதவிகித சிறுவர்கள் பாதிப்பு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தனியார் கருத்துக்கணிப்பு மையம் ஒன்று சென்றவருடம் நடத்திய ஆய்வில், டெல்லி வாழ் சிறுவர்களில் 50 சதவிகிதம் பேர் தீவிர நுரையீரல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற  தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே வருடம் மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், தேசிய அனல் மின் கழகத்தின் கீழ் இயங்கும் 47 அனல் மின் நிலையங்கள் அனைத்துமே விதிகளுக்குப் புறம்பாக இயங்கி வருகிறது. அதிக அளவில் மாசு உற்பத்தி செய்வது டெல்லியின் பதர்பூர் அனல் மின் நிலையம்தான் என்று கூறப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்த அனல் மின் நிலையத்திலிருந்து உற்பத்தி ஆகும் மின்சாரத்தில் மிகக் குறைந்த அளவுதான் டெல்லிக்குத்  தரப்படுகிறது.

மேலும், வாயு மின் உற்பத்தி நிலையங்கள் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ 5.50 மட்டுமே வாங்குகின்றன. ஆனால், குறைந்த அளவில் மட்டுமே மின் உற்பத்தி செய்யும் பதர்பூர் அனல் மின் நிலையம்  ஒரு யூனிட்டுக்கு ரூ.6.20 வரை வாங்குகிறது. இது ஒரு வகையில் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. டெல்லியில் ஏற்கெனவே நிறைய வாயு மின் உற்பத்தி நிலையங்கள் இருக்கும் நிலையில் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மாசை கருத்தில் கொண்டு பதர்பூர் மின் நிலையத்தை நிரந்தரமாக மூடுவதே சரியான முடிவு என்கின்றனர் சில ஆலோசகர்கள்.

செயலற்றுக் கிடக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

இது போதாது என்று, டெல்லியின் மேல்பரப்பு வளிமண்டலத்தில் தேங்கிக் கிடக்கும் சாம்பல் துகள்களில் 30 சதவிகிதம் வரை இந்த அனல் மின் நிலையம் வெளியேற்றுவதுதான் என ஐ.ஐ.டி கான்பூர் மாணவர்களின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதோடு குப்பைக் கழிவுகள் சேர்வதுபோல சாம்பல் கழிவுகளும் டன் கணக்குகளில் அப்புறப்படுத்தப்படாமல், அனல் மின் நிலையத்தின் பின்புறம் 767 ஏக்கர் பரப்பளவில் மலை போலக் குவிக்கப்பட்டு வருகிறது. இத்தனைக்கும் கழிவு மறுசுழற்சிக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, அதுவும் சாம்பலோடு சாம்பலாகக்  காற்றில் பறந்துவிட்டன.  இதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் செயல்பாடற்றுக் கிடக்கும் தேசிய அனல் மின் கழகத்தின் மீதும், செயல்படாத டெல்லி மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் மீதும் இப்போது  குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

பதர்பூர் மூடப்படுமா?

மற்றொரு பக்கம் டெல்லியைச் சுற்றி இருக்கும் ஒன்பது  வாயு மின் நிலையங்கள் வழியாக மின்சார உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்த வாயு மின் நிலையங்கள், 6.70 பில்லியன் யூனிட் அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருக்கின்றன. இது பதர்பூர் மின் நிலையத்தை நிரந்தரமாக மூடிவிடுவதால் ஏற்படும் 400 மெகாவாட் மின் உற்பத்தியையும் சமன் செய்துவிடும்.

ஆனால் அனல்மின் நிலையப் பங்குதாரர்கள் முன்வந்தால் மட்டுமே அதனை நிரந்தரமாக மூட முடியும். இதற்கான பேச்சுவார்த்தைகளை டெல்லி அரசு முன்னெடுக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

அதே சமயம் அனல் மின் நிலையக் கழிவுகளே இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலையில் அனுமின் நிலையக் கழிவுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

- ஐஷ்வர்யா