Published:Updated:

'அமைச்சர்கள் சுயமாக முடிவெடுத்தார்கள்!' -வழி ஏற்படுத்திக் கொடுத்த 'வர்தா' புயல்

'அமைச்சர்கள் சுயமாக முடிவெடுத்தார்கள்!' -வழி ஏற்படுத்திக் கொடுத்த 'வர்தா' புயல்
'அமைச்சர்கள் சுயமாக முடிவெடுத்தார்கள்!' -வழி ஏற்படுத்திக் கொடுத்த 'வர்தா' புயல்

'அமைச்சர்கள் சுயமாக முடிவெடுத்தார்கள்!' -வழி ஏற்படுத்திக் கொடுத்த 'வர்தா' புயல்

ர்தா புயலின் பாதிப்பில் இருந்து சென்னையும் புறநகர்ப் பகுதிகளும் இன்னும் மீண்டு எழவில்லை. ' கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது உத்தரவுக்காக அமைச்சர்கள் காத்துக் கிடந்தார்கள். இந்த ஆண்டு புயலுக்கு அமைச்சர்கள் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கினார்கள்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வர்தா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் விலகுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். சாலையோரங்களில் சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள், வேரோடு பெயர்ந்து விழுந்த மரங்கள், அரித்துப் போன சாலைகள் என கடந்த டிசம்பர் மாதக் கொடூரத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டிவிட்டுச் சென்றுவிட்டது வர்தா புயல். " வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பு வெளியான நாட்களில் இருந்தே, மாநில அரசின் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினர். இதுதொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அனைவரையும் தயார்படுத்தினார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவர்களும் இவ்வளவு துரிதமாக பணியில் இறங்குவார்கள் என நாங்கள் நினைக்கவில்லை" என ஆச்சரியத்தோடு பேசினார் ஆனந்தம் அறக்கட்டளையின் நிறுவனர் செல்வகுமார். 

" உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்து சென்னை மாநகரில் விழுந்து கிடந்த மரங்களையும் கம்பங்களையும் அப்புறப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தினார். வெளி மாவட்டங்களில் இருந்து மாநகராட்சி, நகராட்சிப் பணியாளர்களையும் வரவழைத்தார். அதேபோல், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அடுத்துச் செய்ய வேண்டிய புனரமைப்புப் பணிகள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். புயலின் தாக்கம் முடிந்த ஓரிரு நாட்களில் சென்னையில் சில இடங்களில் மின் விநியோகம் சீரானது. புறநகர்ப் பகுதிகளில் மின்சார தடங்கள் அனைத்தும் உயர்மட்ட அளவில் செல்வதால், பணிகள் நிறைவடைய தாமதம் ஆகலாம். மின் கம்பங்களையும் ட்ரான்ஸ்பார்மர்களையும் அப்பறப்படுத்தியதில் மின்துறை அமைச்சர் தங்கமணியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன. அதேபோல், அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் மருத்துவர்களும் 108 ஆம்புலன்ஸூகளும் காத்திருந்தன.

இத்தனைக்கும் காரணம். யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்காமல் அமைச்சர்கள் தங்களுடைய துறையின் உயர் அதிகாரிகளிடம் விவாதித்ததுதான். அதிகாரம் பரவலாக்கப்பட்டதால்தான், அமைச்சர்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் வெள்ளத்தின்போது, சரியான முறையில் உத்தரவு வராததால் மனித உயிர்ப் பலிகள் அறுபதைத் தாண்டின. இந்தக் கணக்கும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டதுதான். ஆனால், பலி எண்ணிக்கை 150த் தாண்டிவிட்டன என்ற தகவலும் வெளியானது. இந்தமுறை, 192 கிலோமீட்டர் வேகத்தில் வர்தா புயல் வீசிய போதும் பத்து பேர் வரையில் மரணமடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. அமைச்சர்களின் அறிவுரைகளை துறையின் செயலர்கள் கேட்டுச் செயல்பட்டதையும் காண முடிந்தது" என விவரித்தவர். தொடர்ந்து நம்மிடம், 

" புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பதில் தன்னார்வ குழுக்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் அசோக் நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கினோம். எங்கள் கைகளில் அரிவாள் மட்டுமே இருந்தது. ஆனால், சில நிமிடங்களில் அந்த வழியாகச் சென்ற 25 பேர் வரையில் எங்களோடு இணைந்துவிட்டனர். இளைய தலைமுறையினர் மிகுந்த ஆர்வத்தோடு தன்னார்வ பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்தால், அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையான நிவாரணப் பணிகள் சென்று சேரும். புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் சரியான திட்டமிடல் அவசியமாகிறது. இந்தமுறை பழவேற்காடு பகுதியில் புயலின் கோரத் தாண்டவம் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தப் பகுதி மக்களுக்கு 600 உணவுப் பொட்டலங்களை எடுத்துச் செல்லத் தயாரானோம். அதற்குள், வேறு ஒரு பகுதியில் இருந்து பழவேற்காடு பகுதிக்கு உணவு சென்று சேர்ந்துவிட்டது எனத் தகவல் வந்தது. உடனே, உணவு தேவைப்படும் வேறு ஒரு பகுதிக்கு விரைந்தோம். கடந்த டிசம்பர் வெள்ளத்தின்போது மக்களுக்கு போர்வை, பாய் போன்றவை கொடுக்கப்பட்டன. சாலை ஓரத்தில் இருந்தவர்களே அதிகப்படியாக வாங்கிக் கொண்டதால், ஒவ்வொருவர் வீட்டிலும் பத்து போர்வைகள் வரையில் உள்ளன. ஆனால், உதவி தேவைப்படுகிறவர்களுக்கு பாயும் போர்வையும் முழுமையாகச் சென்று சேரவில்லை. 

இதுபோன்ற நிலைகளைத் தவிர்க்க வேண்டுமென்றால், பேரிடர் காலங்களில் ஐந்து வகையாகப் பணிகளைப் பிரித்துக் கொண்டு செயல்பட வேண்டும். முதலாவது, தடுப்பு நடவடிக்கைகள் (பாதுகாப்பாக தங்க வைப்பது உள்பட); இரண்டாவது மீட்புப் பணிகளில் ஈடுபடுவது; மூன்றாவது, மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், உறங்குவதற்கேற்ற பொருட்கள், அடிப்படை மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்குதல்; நான்காவது, பேரிடர் நீங்கிய பிறகு, வீட்டுக்குச் செல்லும் மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு வகைகளைக் கொடுப்பது; ஐந்தாவதாக அவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையானவற்றை வழங்குவது. உதாரணமாக, டீக்கடை, தள்ளுவண்டி, அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்குவது போன்றவை. வாழ்வாதாரத்திற்கான உதவிகளை வழங்குவது மிக அவசியமானது. யாருக்கு என்ன தேவை என்பதை தன்னார்வ குழுக்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக, முக்கியமான இடங்களில் சேவை மையத்தை அரசு தொடங்க வேண்டும். நம்மைப் போல் அதிக மக்கள் தொகை உள்ள மாவட்டங்களில் அரசு நினைத்தால் எதையும் சாதித்துவிட முடியாது. தன்னார்வ குழுக்களின் பங்களிப்பு மிக அவசியம். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் அரசின் சேவை மையங்கள் செயல்பட வேண்டும்" என்றார் விரிவாக. 

- ஆ.விஜயானந்த்
 

அடுத்த கட்டுரைக்கு