Published:Updated:

மரம் செய விரும்பு! - ‘வர்தா’வை சீரமைக்கும் முயற்சி 

மரம் செய விரும்பு! - ‘வர்தா’வை சீரமைக்கும் முயற்சி 
மரம் செய விரும்பு! - ‘வர்தா’வை சீரமைக்கும் முயற்சி 

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் ஏற்பட்ட வர்தா புயலின் கொடூரத் தடங்கள் இன்னும் அழியவில்லை. " அரசு ஊழியர்களைவிடவும், சாலையை சீரமைக்கும் பணியில் த.மு.மு.க தொண்டர்களின் பணி வியக்க வைக்கிறது" என்கின்றனர் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள். 

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உலுக்கியெடுத்தது வர்தா புயல். எட்டு நாட்கள் கடந்துவிட்டாலும், புனரமைப்புப் பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. மத்திய உள்துறை அதிகாரிகள் குழுவினர், புயல் மதிப்பை அளவிடுவதற்காக வருகை தர உள்ளனர். சாலைகளில் சரிந்து விழுந்த மரங்கள், பெயர்த்தெடுக்கப்பட்ட மின்கம்பங்களை

அப்புறப்படுத்தும் பணிகளில் அரசு நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. "மின் கம்பங்களின் இழப்பைவிட, மிகப் பெரிய இழப்பு என்பது சாலையோரங்களில் முறிந்து விழுந்த லட்சக்கணக்கான மரங்கள்தான். நூற்றாண்டு பழைமை வாய்ந்த மரங்களும் அழிந்து போய்விட்டன. மீண்டும் இவற்றைத் துளிர்க்க வைப்பது என்பது சாத்தியமில்லை. எனவே, மூன்று மாவட்டங்களிலும் ஒரு லட்சம் மரக் கன்றுகளை நட்டு வளர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்" என்கிறார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர்.ஹாஜாகனி. அவர் நம்மிடம், 

"மனித சமூகத்துக்கு சேவை செய்வது என்பது இறை வழிபாட்டின் ஒரு பகுதி. ' உங்களின் ஒவ்வொரு எலும்பு மூட்டுக்காவும் தர்மம் பண்ணுங்கள்' என இஸ்லாம் சொல்கிறது. அதையொட்டியே, த.மு.மு.கவின் சமூக சேவைப் பணி தொடர்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத வெள்ளத்தின்போது, படகுகள் மூலம் மக்களை மீட்பது, நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துவது என தன்னார்வப் பணியில் கூடுதல் ஈடுபாடு காட்டினோம்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவின்போதும், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு உணவுப் பொட்டலமும் தண்ணீரும் வழங்கினோம். இரவு பகலாகக் காவல் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, எங்களால் முடிந்த சிறு உதவியாக இது அமைந்தது. 'வர்தா புயலால் பாதிப்பு ஏற்படலாம்' என்பதை அறிந்து, த.மு.மு.க சார்பில் பத்தாயிரம் தன்னார்வலர்களைத் தயார்படுத்தி வைத்திருந்தோம். அடித்து ஓய்ந்த புயலில், மரங்கள் பெயர்ந்து விழுந்ததை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவை எல்லாம் மீண்டும் அதே அளவில் வளர பல வருடங்கள் தேவைப்படும். மிகுந்த மன வலியோடுதான் அந்த மரங்களை சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் இறங்கினோம். மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் நீர் இறைப்பதற்காக ஜெனரேட்டர் வசதி செய்து கொடுத்தோம். 

அரசு ஊழியர்களின் பணி ஒருபுறம் இருந்தாலும், எங்கள் தன்னார்வலர்கள் மீட்புப் பணியில் துரிதமாக இறங்கினர். தாம்பரம் யாகூப் உள்பட நிர்வாகிகள் அனைவரும் தனித் தனி குழுக்களாக நிவாரணப் பணியில் ஈடுபட்டனர். வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, பழைய மகாபலிபுரம் சாலை, ஜி.எஸ்.டி சாலை, காஞ்சிபுரம் நகரம், திருவள்ளூர் உள்பட எங்கெல்லாம் உடனடியாக உதவி தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் தன்னார்வலர்களை அனுப்பி வைத்தோம். தற்போது 'மரம் செய விரும்பு' என்ற பெயரில் ஒரு லட்சம் மரக் கன்றுகளை நட இருக்கிறோம். இவற்றை முறையாகப் பராமரித்து வளர்க்கவும் அந்தந்தப் பகுதி மக்களை ஈடுபடுத்தியுள்ளோம். 'மரங்களை நட்டு வளர்ப்பதை நிரந்தர நல்லறம்' என்று நபியின் பொன்மொழி கூறுகிறது. குளம், ஏரிகள் வெட்டுவதைப் போல மரங்கள் நீண்டகாலம் நிலைத்து நின்று பயன் அளிக்கக் கூடியது. மரம் நடும் பணியில் ஈடுபடும் மனிதனின் நீடித்த நல்லறத்தில் இதுவும் சேரும். எனவே, நிரந்தர நல்லறத்திற்கான பணியில், த.மு.மு.க தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்" என்றார் நெகிழ்ச்சியோடு. 

- ஆ.விஜயானந்த்

அடுத்த கட்டுரைக்கு