Published:Updated:

மர வெட்டியோடு களமிறங்கிய இன்ஸ்பெக்டர்! வர்தாவை புனரமைத்த அதிசயம் 

Vikatan Correspondent
மர வெட்டியோடு களமிறங்கிய இன்ஸ்பெக்டர்!  வர்தாவை புனரமைத்த அதிசயம் 
மர வெட்டியோடு களமிறங்கிய இன்ஸ்பெக்டர்! வர்தாவை புனரமைத்த அதிசயம் 

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை சோழிங்கநல்லூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியை இரண்டே நாளில் இயல்பு நிலைமைக்கு திரும்ப வைத்துள்ளனர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான தனி ஒருவன் டீம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களையும் வதம் செய்தது வர்தா புயல். மூன்று மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், இன்னும் இயல்பு நிலைமைக்குத் திரும்பாத நேரத்தில் இரண்டே நாளில் சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகள் இயல்பு நிலைமைக்கு திரும்பி உள்ளது. சென்னை புறநகரைப் பொறுத்தவரைக்கும் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள குடியிருப்புகள் அதிகளவில் புயலில் சிக்கி பாதிக்கப்பட்டன. குறிப்பாக சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஓ.எம்.ஆர் சாலை தண்ணீரில் மிதந்தது. காந்திநகர், எழில் நகர், தேவராஜ்நகர், கிராமநெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதியில் மட்டும் 3000 மரங்கள் வேரோடு சரிந்தன. குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் 78,000 மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். 
 
இந்த தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். அவர்களுடன் சோழிங்கநல்லூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீஸ் டீம் மீட்பு பணிகளில் உடனடியாக களமிறங்கியது. மின்வாரியம், மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து மீட்பு பணிகளில் சோழிங்கநல்லூர் போலீஸாரும் தங்கள் பங்குக்கு மரங்களை அகற்றுவது, மக்களை மீட்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

தண்ணீரில் தத்தளித்த குடியிருப்புகளிலிருந்த மக்களை முதலில் படகு மூலம் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, உடைகளை கொடுத்தனர். சாலைகளில் வேரோடு சரிந்து கிடந்த மரங்களையும் மற்றும் மின்கம்பங்களையும் அகற்றும் பணியிலும் போலீஸ் டீம் களமிறங்கியது. கடலூர், சிதம்பரத்திலிருந்து வந்திருந்த மின்வாரிய ஊழியர்களுடன் சேர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீஸ் டீம் மின் இணைப்பை கொடுக்கும் பணியில் ஈடுபட்டன. அடுத்து மரங்களை அகற்ற அரசின் தயவை எதிர்பார்க்காமல் சொந்தமாகவே மரம் அறுக்கும் இயந்திரங்களை வாங்கினர். துப்பாக்கி, ரவுடிகளைப் பிடித்த கையில் மரம் அறுக்கும் இயந்திரங்களைப் பிடித்த போலீஸ், அவற்றை துண்டு, துண்டாக அறுத்து அப்புறப்படுத்தினர். 13-ம் தேதி தொடங்கிய மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தன. இதனால் இரண்டே நாட்களில் பெரும்பாலான மீட்பு பணிகள் முடிவடைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். மக்களின் அன்றாட தேவைகளும் உடனடியாக சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில்  பாதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு விரைவாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டன. குடிதண்ணீர் லாரி மூலம் விநியோகிக்கப்பட்டன. கொசுவத்தி சுருளும் கொடுக்கப்பட்டன. இதற்குப் பின்னணியில் மீட்பு குழுவினருடன் சேர்ந்து போலீஸ் டீம் இரவு, பகல் பாராமல் செய்த மீட்பு பணிகளும், அவர்களின் தியாகமும் இருக்கிறது.

சோழிங்கநல்லூர் இன்ஸ்பெக்டராக சிவக்குமார், வர்தா புயல் வருவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அங்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான போலீஸ் டீம் செய்த மீட்பு பணிகளை பொதுமக்கள் மனதார பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற மனிதநேயமிக்க இன்ஸ்பெக்டர்களும் தமிழக காவல்துறையில் இன்னும் இருக்கின்றனர் என்பதற்கு இன்ஸ்பெக்டர் சிவகுமார் போன்றோர்களே எடுத்துக்காட்டாக உள்ளனர். 

- எஸ்.மகேஷ்