Published:Updated:

குண்டாறு, சிலம்பாறு, உப்பாறு, வரட்டாறு... எல்லாம் மதுரையில் 'இருந்த' ஆறுகள்!

குண்டாறு, சிலம்பாறு, உப்பாறு, வரட்டாறு... எல்லாம் மதுரையில் 'இருந்த' ஆறுகள்!
குண்டாறு, சிலம்பாறு, உப்பாறு, வரட்டாறு... எல்லாம் மதுரையில் 'இருந்த' ஆறுகள்!

அன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதுரை அத்தனை மூர்க்கமாக இல்லை. சொன்ன நேரத்துக்கு சரியாக வந்து குழுமியிருந்தனர்  "நாணல் நண்பர்கள்". அந்த காலை நேரத்திலேயே அவர்களிடம் அத்தனை உற்சாகம். மதுரை நகரத்தைத் தாண்டிய தூரத்தில் இருந்த ஒரு சிறிய டீக்கடையில் தான் சந்திப்பு.  மண் சார்ந்த மரங்களையும், மண் சார்ந்த மரபுகளையும் தேடி... அதைக் காக்க தங்களால் இயன்ற முன்னெடுப்புகளை செய்யும் ஒரு எளிமையான இளைஞர் கூட்டம். 

" நாங்க எல்லோரும் ஒன்றிணைஞ்சது ஈழ விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த போது தான்.  ஃபேஸ்புக் மூலமா தொடர்பு கொண்டு...அப்படியே இணைஞ்சு உருவான ஒரு குழு எங்களுடையது. நல்ல நண்பர்களா அறிமுகமானோம்... எல்லோருமே தமிழ்ப் பற்று, பயணக் காதல் என்கிற புள்ளியில ஒண்றிணைஞ்சோம். அங்கிருந்து தொடங்கி... இன்னிக்கு எங்களுக்கான ஒரு தனித்துவமான அடையாளத்தோடு இயங்கிட்டிருக்கோம்..." என்று தொடக்கக் கதையைத் தொடங்குகிறார் "நாணல் நண்பர்கள்" குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன். சூடாக டீயும், உளுந்து வடையும் சாப்பிட்டபடியே உரையாடல் தொடர்கிறது... 

" சூழலியல் பிரச்னைகளுக்கான முக்கியமான தீர்வா எல்லோரும் முன்வைக்கிறது மரம் நடுவதைத் தான். ஆனா, பெரும்பாலும் என்ன மரத்த நடுறோம்ங்குற விழிப்பு உணர்வே இல்லாம செயல்படுறோம். மரம் என்பது மனிதர்களுக்கான நலங்களையும், வளங்களையும் மட்டுமே தருவது கிடையாது. அது ஒரு பல்லுயிர்த் தொகுப்பு. நம் மண்ணுக்கு அந்நியமான மரங்களை நடுவது இயற்கை சுழற்சியில பெரிய குழப்பத்த ஏற்படுத்திடுது. எடுத்துக்காட்டுக்கு நம் மண்ணின் மரமான உசில மரத்த வெட்டிடுறோம். அதுக்கு பதிலா அந்நிய மரமான, தூங்குமூஞ்சி மரத்தையோ குல்முஹர் மரத்தையோ நடுகிறோம் என்றால்... உசில மரத்தில் இருந்த பறவைகள், நுண்ணியிரிகள் இந்த மரத்துல வாழாது. இது ஒரு இயற்கை விதிமீறல்.மேலும், நம் மண் சார்ந்த மரத்தடியிலருந்து ஒரு கைபிடி மண்ணை எடுத்தால் அதில் 50 லட்சம் நுண்ணியிரிகள் இருக்கும். அதே வெளிநாட்டு மரங்கள்ல கால்பங்கு அளவுக்குத் தான் அந்த நுண்ணியிரிகள் இருக்கும். இது போன்ற விஷயங்கள ஆராய்வதும், ஆவணப்படுத்துவதும் எங்க குழுவோட முக்கியமான செயல்பாடு..." என்று சொல்கிறார் கார்த்திகேயன். இவர் பழைய பேப்பர் கடை வைத்திருக்கிறார். மரங்கள் மீதான பேரன்பால், இந்தக் குழுவில் இணைந்து பணியாற்றி வருகிறார். 

நாம் சென்ற சமயம்,அவர்களின் பயணம் மதுரை அருகே இருக்கும் இடையப்பட்டி கிராமத்தின் வெள்ளிமலை கோவில் காட்டை நோக்கியதாக இருந்தது. காடும் காடும் சார்ந்த நிலமான முல்லைத் திணை குறித்த ஆய்வுகளுக்கானது இந்தப் பயணம். ஒரு கோவிலை ஒட்டி இருக்கக் கூடிய மானாவரி காட்டினை "கோவில் காடு" என்றழைக்கிறார்கள். தமிழ் மரபில் இந்தக் காடுகள் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு பழைய பஜாஜ் வண்டியில் நாணல் நண்பர்களுடன்  ஆழமான தேடலுக்கான, எளிமையான பயணம் தொடங்குகிறது... 

"  'மரத்தை வெட்டி, அதிலுள்ள மூலிகையை எடுத்துத் தான் என் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றால், விட்டு விடுங்கள் நான் சாகிறேன், மரம் வாழட்டும்' ன்னு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சங்கப் புலவன் பாடியிருக்கான். இறை வழிபாட்டுக்கு முன்னிருந்தே, நம்ம சமூகத்தில் மர வழிபாடு இருந்திருக்கிறது..." என்று சொல்லியபடியே வண்டியை ஓரம் நிறுத்துகிறார் சாதிக். அங்கு சாலையோரத்தில் அடிபட்ட ஒரு சிறு பறவையைக் கையில் கொண்டுவருகிறார். அதன் இறகுகளைத் தூக்கி சோதித்துப் பார்க்கிறார். "இது தவுட்டுக் குருவி... ஆங்கிலத்துல செவன் சிஸ்டர்ஸ்ன்னு சொல்லுவாய்ங்க. எப்பவும் ஏழு குருவிகள் ஒண்ணாத் தான் இருக்கும். பெரிய அடி ஒண்ணும் படல... பயந்து போயிருக்கு" என்று அதை வருடியபடியே தன் பைக்குள் போடுகிறார். 

இடையபட்டி வெள்ளி மலையாண்டி கோவில் அருகே வண்டியை நிறுத்திவிட்டு... அந்த உலர் நிலக் காட்டினுள் நடக்கிறார்கள். மதுரைக்கு மறுபெயர் கடம்ப நாடாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. அந்தளவுக்கு கடம்ப மரங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், இன்று அரிதிலும், அரிதாகவே அது இருக்கிறது. சில மணிநேர நடைக்குப் பிறகு மூன்று கடம்ப மரங்கள் அங்கிருப்பதை ஆவணப்படுத்துகிறார்கள். பின்பு, ஒரு பெரும் பாறையில் உட்கார்ந்து கொஞ்சம் ஓய்வெடுக்கிறார்கள். அங்கு சில விவாதங்களையும் நிகழ்த்துகிறார்கள். 

" காடுகள் என்றாலே பசுமைப் போர்த்திய குளிர்ந்த இடம் கிடையாது. குறிஞ்சித் திணையில் தான் அது சாத்தியம். முல்லை முழுக்கவே மானாவரி காடுகளைக் கொண்டது. இங்கிருந்து தான் அரசாட்சி முறை உருவானதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால், முல்லையில் கால்நடை வளர்ப்பு முக்கியமான தொழில். கால்நடைகள் சொத்துக்களாக உருபெறுகின்றன. சொத்துக்கள், வாரிசு, உரிமை, பாதுகாப்பு... எனத் தொடர்ந்து அது ஒரு நிலவுடைமைச் சமூகமாக உருவாகிறது. இடையர்கள் கையில் கோல் இருக்கும்... அது தான் பிற்காலத்தில் "கோன்", "கோ"... அரசன்... செங்கோல்... போன்ற விஷயங்களுக்கு வித்திடுகிறது..." இது பூபாலன், விவசாயி. 

" முல்லையில் பெண்கள் வீரமானவர்களாக, வலிமையானவர்களாக இருக்கிறார்கள். தன்னந்தனியாக ஆடு, மாடுகளை காட்டுக்குள் மேய்க்கும் அளவுக்குத் திறன் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கிருந்து மருத நிலத்துக்கு இடப்பெயரும் போது... அவர்கள் ஆண்களுக்கு அடிமையாகிறார்கள்..." நெடுஞ்செழியன், தனியார் நிறுவன ஊழியர். 

" நான் அப்படி நினைக்கவில்லை. பெண் அடிமையானது கால மாற்றத்தால் தான். இட மாற்றத்தால் இல்லை என்பது என் கருத்து..." விகாஸ், கல்லூரி மாணவர். இப்படியாக சில விவாதங்களைத் தொடர்ந்து, மீண்டும் நடக்கிறார்கள். அங்கு பாறைகள் நிறைந்த ஒரு பகுதி வருகிறது. இது ஒரு நீர் வழித் தடம் என்று கூறி, அதற்கான சில ஆராய்வுகளை மேற்கொண்டு ஆவணப்படுத்திக் கொள்கிறார்கள். மேகங்களைக் கிழித்து சூரியன் தலைகாட்டத் துவங்குகிறது. நடைத் தொடர்கிறது. 

" மதுரை என்றால் வைகை ஆறு தான் எல்லாருக்கும் நினைவு வரும். ஆனால், குண்டாறு, சிலம்பாறு, உப்பாறு, வரட்டாறு என கிட்டத்தட்ட 10 ஆறுகள் இருந்ததற்கான ஆதாரங்களை ஆவணப்படுத்தியிருக்கிறோம். மேலும், இயற்கை விவசாயம், நாட்டு மீன் வளர்ப்பு உட்பட சூழலியல் சார்ந்த பல்வேறு விஷயங்களைத் தொடர்ந்து தேடி ஆவணப்படுத்தி வருகிறோம்..." என்கிறார் கவித் தமிழ்.  நடை முடியும் நேரம் நெருங்குகிறது. காட்டின் ஓரத்தில் சில செருப்புகள் கிடக்கின்றன. 

" இந்த மக்கள பொறுத்தவரைக்கும் ஒட்டு மொத்த வனப்பரப்பும் கோவில் தான். அதனால், செருப்பணிந்து யாரும் காட்டுக்குள் செல்ல மாட்டார்கள்..." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, காட்டிலிருந்து தலையில் விறகுளையும், சுள்ளிகளையும் சுமந்தபடியே வந்து செருப்புகளை அணிகிறார்கள் சில பெண்கள். அவர்களோடு சில நிமிடங்கள் பேசிவிட்டு... கொண்டு வந்திருந்த ராகி புட்டை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறார்கள். 

" விளைநிலங்கள் எல்லாமே இன்னிக்கு விலைநிலங்களா மாறி நிக்குது. அந்நிய மரங்களை நம்ம மண்ணில் நடுவது மிகப் பெரிய வன்முறை. பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் அது சிலுவை. தொடர் பயணங்களின் மூலமும், பிரசாரங்களின் மூலமும் இந்த நிலையை மாற்ற முயற்சிப்பதே எங்களோட அடுத்த இலக்கு..." என்று சொல்கிறார் தமிழ் தாசன். 

தான் கொண்டுவந்திருந்த தவுட்டுக் குருவியை வெளியில் எடுக்கிறார் சாதிக்... " இங்க வேண்டாம்... எடுத்த இடத்திலேயே விட்ருவோம்... அப்பத் தான் அதோட கூட்டத்தோட அது சேரும்" என்கிறார் கார்த்தி.

" இல்ல ... அது ஒண்ணும் பிரச்னையில்ல ... அது எப்படியும் அங்க போயிடும்... முதல்ல அதால பறக்க முடியாதான்னு பார்ப்போம்..." என்றபடியே அதை கீழே விடுகிறார். சில அடிகள் நடந்து, பின்னர் வேகமாக தன் வாழ்வை நோக்கி பறக்கத் தொடங்கியது அந்தக் குருவி... ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள் "நாணல் நண்பர்கள்"...

- இரா.கலைச்செல்வன்