Published:Updated:

'பிளாஸ்டிக் அரிசி என்ற ஒன்று இல்லவே இல்லை' - அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மறுப்பு

குருபிரசாத்
'பிளாஸ்டிக் அரிசி என்ற ஒன்று இல்லவே இல்லை' - அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மறுப்பு
'பிளாஸ்டிக் அரிசி என்ற ஒன்று இல்லவே இல்லை' - அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மறுப்பு

பால் கலப்படம், பிளாஸ்டிக் அரிசி போன்ற விவகாரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் இது குறித்த தகவல்களும், வீடியோக்களும் வெளியாகி மக்களின் அச்சத்தை அதிகரித்துள்ளன. 

இந்நிலையில், தமிழ்நாடு நெல் அரிசி, ஆலை மில் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் துளசிலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில், பிளாஸ்டிக் அரிசி குறித்து வதந்தி பரவி வருகிறது. இதனால் மக்களுக்குத் தேவையில்லாத அச்சம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அரிசி என்று ஒன்றில்லை. பிளாஸ்டிக்கைச் சாப்பிட்டு கால்நடைகளே இறந்து விட்டதாகப் பல செய்திகள் வந்துள்ளன. ஆனால், பிளாஸ்டிக் அரிசியைச் சாப்பிட்டதால் மனிதர்கள் யாரும் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் இல்லை. எனவே, பிளாஸ்டிக் அரிசி உருவாக சாத்தியமே இல்லை. இந்த வதந்தியையடுத்து, அரசு அதிகாரிகள் தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகளில் சோதனை மேற்கொண்டனர். ஆனால், பிளாஸ்டிக் அரிசி கண்டறியபடவில்லை.

நெல் விளைவிப்பதற்கு அதிக உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்பிறகு அரிசியில் எந்த ரசாயனமும் கலப்பது இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை 70 சதவிகிதம் நெல் உற்பத்தி இங்கே செய்யப்படுகிறது. 30 சதவிகிதம் அரசுதான் பிற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு சதவிகிதம் கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை. குறிப்பாக, தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு என்பதில்லை. தட்டுப்பாடால்தான் பிளாஸ்டிக் அரிசி வருகிறது என்ற பேச்சுவரக் கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறேன். பிளாஸ்டிக் அரிசி பற்றிய வீடியோக்கள், சமூக வலைத்தளங்களில் பரப்புவோர்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.