Published:Updated:

ஜப்பானின் இயற்கை விஞ்ஞானி தேடி வந்து பாராட்டிய இந்திய விவசாயி..! #VikatanExclusive

ஜப்பானின் இயற்கை விஞ்ஞானி தேடி வந்து பாராட்டிய இந்திய விவசாயி..! #VikatanExclusive
ஜப்பானின் இயற்கை விஞ்ஞானி தேடி வந்து பாராட்டிய இந்திய விவசாயி..! #VikatanExclusive

ஜப்பானின் இயற்கை விஞ்ஞானி தேடி வந்து பாராட்டிய இந்திய விவசாயி..! #VikatanExclusive

விதைப்பந்துகள்.! ஒரு புறம் தயாரிப்பில் உலகசாதனை முயற்சி நடந்துகொண்டிருக்கையில், மறுபுறம் இந்த விதைப்பந்துகள், தமிழக தட்பவெப்பநிலை மற்றும் நில அமைப்பிற்கு ஏற்றதல்ல என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், கடந்த 31 வருடங்களாக  விதைப்பந்துகளால் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார் ஒருவர் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம்.! மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ராஜு டிடஸ்தான் அவர்.! அவரை போனில் தொடர்புகொண்டோம்.

“நான் அடிப்படையில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். இப்போது எனக்கு வயது 71. கடந்த 31 வருடங்களாக இயற்கை முறையில் விவசாயம் செய்துவருகிறேன். சின்ன வயதில் இருந்தே எனக்கு விவசாயம் ரொம்பப் பிடிக்கும். இந்தியாவில் பசுமைப் புரட்சி ஆரம்பித்த சமயம் அது. எல்லோரும் ரசாயன உரங்கள் மற்றும் அதிக மகசூல் கொடுக்கக்கூடிய விதைகளை வாங்கிப் பயிரிட்டார்கள். நானும்தான்.! முதலில் நல்ல லாபம் கிடைத்தாலும், சில வருடங்களில் வரவிற்கு மேல் செலவானது. கடன் அதிகமானதால் ஒரு கட்டத்தில் என்னால் விவசாயம் பார்க்க முடியாத நிலை. ’இனி நமக்கு விவசாயம் சரியாக வராது. நிலத்தை விற்று விட்டலாம்’ என்று தோன்றியது. அந்தக் காலத்தில் காந்தியவாதிகளால் நடத்தப்படும் ’கிராம நண்பர்கள் மையம்’ இருக்கும். கருத்தரங்குகள், நாடகங்கள், விழிப்புஉணர்வு பேரணி என மக்களை நல் வழிப்படுத்தும் அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். அந்த அமைப்பிற்கு சென்ற என் அம்மா, எனக்காக ஒரு புத்தகத்தை வாங்கி வந்தார். அது, பிரபல ஜப்பான் இயற்கை விஞ்ஞானி ’மசானபு ஃபுகோகா’ எழுதிய ‘One Straw Relolution’. அந்தப் புத்தகம் என் வாழ்கையையே புரட்டிப்போட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தப் புத்தகம் இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுத்தது. இயற்கை முறை விவசாயத்தை அறிமுகம் செய்தது. உரம், கலப்பு விதைகள், ரசாயன மருந்துகள் என அந்தப் புத்தகம் தவிர்க்கச் சொல்லியது ஏராளம். சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். நடவு செய்யும் விவசாய முறையையே வேண்டாம் என்றது அந்தப் புத்தகம்.

முதலில் எனக்கு வியப்பாக இருந்தது. என்னை குறை சொல்வது போல தோன்றியது. அந்தப் புத்தகத்தைத் தூக்கி எறிந்துவிட்டேன் . ஆனால் அது என்னை  விடவில்லை. என்னை ஈர்த்து, அந்த விவசாய முறையை முயற்சித்துப்பார்க்கத் தூண்டியது. முயற்சியில் இறங்கினேன். வருடம் 1985. புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதன்படி அனைத்தையும் செய்ய ஆரம்பித்தேன். முதலில் நிலத்தை சரி செய்யும் முயற்சியில் இறங்கினேன். அதற்காக சுபாபுல் (Subabul), பவார் (Pawar), ஹோக்ரு (Gokru) போன்ற மரம், செடி, புல் வகைகளின் விதைகளை வாங்கி நிலத்தில் தூவிவேன். ஒரு மழைக்கே புற்கள் எல்லாம் நன்றாக வளர ஆரம்பித்தன. தொடர்ந்து மரமும் வளர ஆரம்பித்தது. அதைப் பார்த்து என் மனதில் லேசாக நம்பிக்கையும் வளர்ந்தது.

விவசாய நிலத்தில் புற்களை வளர்த்துக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து, சுற்றியுள்ள நிலத்துக்காரர்கள் சிரித்தார்கள். எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகச் சொன்னார்கள். நான் எதைப் பற்றியும் கவலைப் படவில்லை. சுபாபுல் மரம் வேகமாகவும் பிரமாண்டமாகவும் வளரும். அதன் கிளைகள் பக்கத்து நிலத்திற்குள் சென்றதால், அந்த நிலத்துக்காரர்கள் என்னுடன் சண்டைக்கு வருவார்கள். அதே நேரம், அவர்கள் வீட்டுக் கால்நடைகள் உட்பட, ஊரில் இருக்கும் அனைத்து கால்நடைகளும் என் நிலத்தில் வளர்ந்துகிடக்கும் புற்களை மேய்வதற்கு வந்துவிடும்.! அவ்வளவு செழிப்பாக இருக்கும் என் நிலம்.

புற்களும், மரங்களும் தயார் என்ற நிலையில் அடுத்ததாக, காய்கறி, பழங்கள், கிழங்குகள், தானியங்கள் போன்ற உணவுப்பொருள்களைக் கொடுக்கக்கூடிய விதைகளை விதைப்பந்துகளில் புதைத்து எனது நிலம் முழுவதும் விசினேன். விதைப்பந்துகளில் கொஞ்சம் களிமண், நிறைய விதைகள் இருக்க வேண்டும். அதன் அளவு டேபிள் டென்னிஸ் பந்தின் அளவே இருக்க வேண்டும். அடி ஒன்றிற்கு ஒரு பந்து வீதம் நிலத்தில் வீசப்பட வேண்டும். இப்படி பல வரைமுறைகள் அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது. அப்படியே செய்தேன். புற்களில் இருக்கும் ஈரப்பதம், விதைப்பந்திற்கு தேவையான நீரைக் கொடுத்தது. நிலம் முழுவதும் வளர்ந்து கிடந்த சுபாபுல் என்ற மரம் யூரியாவிற்கு இணையான இயற்கை உரத்தைக் கொடுக்கக்கூடியது. மேலும், புற்களை மேய வரும் கால்நடைகளின் சாணமும் நல்ல உரமாக இருந்தது. இப்படி எல்லாமும் தானாக நடந்ததால், எனக்கு எந்தச் செலவும் இல்லை. நல்ல விளைச்சல், தேவைக்கு எடுத்துக்கொண்டது போக மற்ற உணவுப் பொருள்களை விற்று நல்ல லாபம் கிடைத்தது. முதல் முயற்சியே வெற்றி என்று சொல்லலாம்.

1988ல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்த ’மசானபு ஃபுகோகா’, எனது விதைப்பந்து விவசாய முறையைக் கேள்விப்பட்டு என்  நிலத்திற்கு வந்தார். ஜப்பானில் வெற்றியடைந்த ஒரு விவசாய முறையை இந்தியாவின் தட்பவெப்பநிலை, மண்ணின் தன்மைக்கு ஏற்ற வகையில் மாற்றி நான் வெற்றி பெற்றிருப்பதைக் கண்டார். ஆச்சர்யப்பட்டார். என்னைப் பாராட்டினார். அந்தப் பாராட்டு தான் இன்றும் நான் வேகமாகச் செயல்படக்காரணம்.

’மசானபு ஃபுகோகா’ ஆச்சர்யப்படக்காரணம் இந்தியாவின் தட்பவெப்பநிலையும், மண்ணின் தன்மையும்தான். ஜப்பானின் நிலை வேறு, ஈரப்பதம் மிகுந்த புற்கள் நிறைந்த பூமி அது. அதனால்தான் விதைப்பந்துகள் அங்கே சாத்தியமானது. விதைப்புமுறை இல்லா விவசாயமும் காடு வளர்ப்பும் வெற்றி பெற்றது. இந்தியாவைப் பொருத்தவரை, விதைப் பந்துகளாக இருக்கட்டும், விதைப்புமுறை இல்லா விவசாயமாக இருக்கட்டும், காடுவளர்ப்பாக இருக்கட்டும், புற்கள் நிறைந்த ஈரப்பதமான நிலம் அவசியம்.! இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து இங்கே வருகை தருகிறார்கள். என்னுடைய விவசாய முறை பற்றி அறிந்துகொள்கிறார்கள். அவர்களிடம் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். ’புற்கள்தான் நம் நிலத்திற்கு உகந்தது. அவற்றை வளர விடுங்கள். காடுகள் தானாக வளரும்’.

30 வருடங்களைக் கடந்து நான் பயணிக்க ’மசானபு ஃபுகோகா’ எப்படி ஒரு காரணமாக இருக்கிறாரோ, அதே போல என் மனைவி சாலினியும் ஒரு காரணம். அவர் இல்லாமல் நான் இல்லை. எனக்கு ஒரு முறை வாத நோய் தாக்கியிருந்தது. என் மனைவி இதய நோயாளி. ஆனால் நாங்கள் இருவரும் இன்று வரை இயற்கையை நேசித்துக்கொண்டு, எங்களைப் பார்க்க வருபவர்களுக்கு இந்த இயற்கை முறை விவசாயத்தைப் பற்றி சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். காடுகளின் தேவையை உணர்த்துகிறோம்.`` என்றார் நெகிழ்ச்சியோடு.

வீட்டின் முன்னால் புற்கள் வளர்ந்தால் அதனை உடனே பிடிங்கி வீசிவிடும் நமக்குத்தான் தற்போது விதைப்பந்துகள் மீது ஆர்வம் வந்திருக்கிறது. வெறும் கரட்டு மேட்டில் விதைப்பந்துகளை வீசி, மண்ணோடு மக்கிப்போகச்செய்வதை விட, சிறிதேனும் புற்கள் இருக்கும் பகுதியில் வீசிவிட்டு வாருங்கள். காடுகளை உருவாக்க விதைப்பந்துகள் நிச்சயம் உதவும் என்றாலும் கூட, அதனைச் சரியான இடத்தில் வீசுவது விதைப்பந்துகளை உயிர்ப்பிக்கவைக்கும். நம் செயலை அர்த்தமுள்ளதாக்கும்.

அடுத்த கட்டுரைக்கு