Published:Updated:

300 பேர்... 180 கிணறுகள்... கேரளப் பெண்கள் செய்த மகத்தான சாதனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
300 பேர்... 180 கிணறுகள்... கேரளப் பெண்கள் செய்த மகத்தான சாதனை!
300 பேர்... 180 கிணறுகள்... கேரளப் பெண்கள் செய்த மகத்தான சாதனை!

300 பேர்... 180 கிணறுகள்... கேரளப் பெண்கள் செய்த மகத்தான சாதனை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கணிப்பொறி முதல் நாட்டைக் காக்கும் சவால் நிறைந்த பணி வரையிலும் அனைத்திலும் ஆண்களுக்கு இணையாக பெண்கள் சாதித்துக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த 300 பெண்கள் சேர்ந்து, வறட்சியை விரட்டும் நோக்கத்தில் 180 கிணறுகளைத் தோண்டி மக்களின் தாகம் தணிக்க வகை செய்திருக்கிறார்கள். 

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கிறது, பூக்கோட்டுக்காவு என்கிற ஊராட்சி. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிக்கவே தண்ணீர் கிடைக்காத நிலைமை உருவானது. தண்ணீருக்காக மக்கள் தினந்தோறும் 3 முதல் 5 கி.மீ தூரத்துக்குச் செல்ல வேண்டிய நிலை. ஆனாலும், குடிக்க தண்ணீர் வேண்டுமே என்பதற்காக தினமும் இந்த துயரத்தைச் சந்தித்து வந்தனர். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போய் இருக்கிறது. 

காரணம், அந்த ஊராட்சியைச் சேர்ந்த 300 பெண்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் பெண்கள், நீர் நிலைகளைத் தூர்வாறுவது, ஓடைகளைச் சீர்ப்படுத்துவது என எல்லா ஊரிலும் நடப்பது போலவே வேலை செய்து வந்தனர். ஆனால், தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க இந்த வேலையால் உடனடித் தீர்வு ஏற்படாது என்பது அவர்களுக்குத் தெரிய வந்ததும் மாற்றுப் பணி குறித்து  ஆலோசனை நடத்தினர்.

அதன்படி, தங்களது ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர்க் கிணறு தோண்டுவது என முடிவு செய்தனர். ஆனால், அது சாதாரண வேலை கிடையாது என்பது அவர்களுக்குத் தெரியும். அத்துடன், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் 35 வயது முதல் 70 வயது வரையிலான பெண்கள் இருப்பதால் அனைவராலும் அந்தக் கடினமான பணிகளைச் செய்ய முடியுமா என்கிற நியாயமான சந்தேகமும் ஏற்பட்டது. இருப்பினும் துணிந்து களத்தில் இறங்கினார்கள். தங்களிடம் உள்ள மண்வெட்டி, கடப்பாறை ஆகியவற்றைக்கொண்டு மண்ணைத் தோண்டி கிணறு வெட்டத் தொடங்கினர். 

இதுபற்றி அந்தப் பணியில் ஈடுபட்ட ராதா என்ற பெண்மணி கூறுகையில், ’’கிணறு தோண்டுவது குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது. ஆனாலும், ஓட்டப்பள்ளம் என்ற ஒன்றியத்துக்கு உட்பட்ட எங்களது ஊராட்சியில் கடுமையான குடிநீர்த் தேவை ஏற்பட்டதால் அந்தப் பணியில் ஈடுபட முடிவு செய்தோம். ஆரம்பத்தில் எங்களுடைய குடும்பத்தில் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. காரணம், கிணறு தோண்டும்போது மண் சரிவு ஏற்படும் ஆபத்து அதிகம் இருக்கிறது.

அப்படி மண் சரிவு ஏற்பட்டால் வேகமாக வெளியேற வேண்டும். பெண்களால் அது சாத்தியம் இல்லை என்று குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அத்துடன், கிணற்றுக்குள் வேலை செய்யும்போது மூச்சுத் திணறல் ஏற்படலாம். அதனால் அந்த வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், நாங்கள் குடும்பத்தினரிடம் பேசி அவர்களைச் சம்மதிக்க வைத்தோம். முதலில் எங்களுக்கு கடினமான வேலையாகத்தான் இருந்தது. நாங்கள் தோண்டிய முதல் கிணறு ஒரு குழி மாதிரித்தான் அமைந்தது.

அதன் பின்னர், நாங்கள் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகி விட்டோம். இப்போது வரையிலும் 180 கிணறுகளைத் தோண்டி இருக்கிறோம். 70 அடி ஆழம் வரையிலான கிணறுகளை எங்களால் தோண்ட முடியும் என நிரூபித்துக் காட்டி  இருக்கிறோம். இப்போது எங்களிடம் நிறைய பேர் வந்து கிணறு தோண்டித் தருமாறு கோரிக்கை வைக்கிறார்கள். அந்த அளவுக்கு நாங்கள் எக்ஸ்பெர்ட் ஆகி விட்டோம். இந்த வருடம் கோடை காலத்தில் எங்கள் ஊர் மக்கள் நிச்சயமாக தண்ணீருக்காக தவித்தபடி பல கி.மீ தூரத்துக்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது” என்று அழுத்தமாகப் பேசினார். 

லட்சுமி என்பவர் இது பற்றிப் பேசுகையில், ’’எங்களது பஞ்சாயத்தில் 20,000 குடும்பங்கள் இருக்கின்றன. நாங்கள் கடந்த காலங்களில் குடிநீருக்காகச் சிரமப்பட்டோம். இப்போது 180 கிணறுகள் தோண்டப்பட்டு இருப்பதால் இனி அந்த நிலைமை வராது. இப்போது தென் மேற்குப் பருவமழை தொடங்கி இருப்பதாலேயே பணிகளை நிறுத்தி வைத்து இருக்கிறோம். விரைவிலேயே மீண்டும் எங்களுடைய பணியைத் தொடருவோம்.

எங்களுடைய வேலையைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த மக்கள் தங்களுக்கும் கிணறு வெட்டித் தருமாறு கோரிக்கை விடுக்கிறார்கள். அவர்களுக்கும் கிணறு உருவாக்கிக் கொடுப்போம். வயதுக்கும் உடல் பலத்துக்கும் ஏற்றாற்போல நாங்கள் வேலையைப் பிரித்துக்கொண்டு செயல்பட்டதால் எந்தக் கஷ்டமும் தெரியவில்லை.  இந்த வேலையில் நல்ல அனுபவம் கிடைத்து விட்டதால் இப்போது நாங்கள் தோண்டும் கிணறுகள் அந்தத் தொழிலில் ஆண்டுக்கணக்காக ஈடுபட்டு வருபவர்களுக்கு நிகரானதாக இருக்கிறது” என்கிறார் பெருமையுடன்.

பூக்கோட்டுக்காவு கிராம பஞ்சாயத்துத் தலைவரான ஜெயதேவன், ‘’எல்லா ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டதோ அப்படித்தான் நங்களும் ஆரம்பத்தில் செயல்பட்டு வந்தோம். ஆனால், இந்தப் பகுதியில் நிலவும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே பஞ்சாயத்து தீர்மானத்தின் அடிப்படையில் கிணறு தோண்டும் பணிகளை மேற்கொண்டோம். அது வெற்றிகரமாக அமைந்ததில் எங்களுக்கும் திருப்தியே.

இந்தப் பணிகளுக்காக பொதுவாக ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலும் சம்பளம் கொடுக்கப்படும். ஆனால், இந்தப் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட 240 ரூபாய் சம்பளம் என்பது மிகவும் சொற்பமானது தான். அரசின் வரையறைப்படி அவர்களுக்கு அந்தச் சம்பளம் மட்டுமே கொடுக்க முடிந்தது. ஆனால், அந்தச் சம்பளம் கூட இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். எங்களது பஞ்சாயத்துக்கே அரசிடம் இருந்து 75 லட்சம் ரூபாய் வர வேண்டியது இருக்கிறது. அதில் 35 லட்சம் ரூபாய் இந்தப் பெண்களுக்கான சம்பளம் என்பதுதான் வருத்தமாக உள்ளது. 

மத்திய அரசிடம் இருந்து இந்தத் திட்டத்துக்காக மாநிலத்துக்கு தற்போது பணம் வந்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் எங்களுக்கும் கிடைக்கலாம். இந்தப் பெண்களின் வேலையைப் பார்த்து இப்போது எங்கள் பஞ்சாயத்தில் மட்டும் 500 பேர் கிணறு தோண்டித் தருமாறு விண்ணப்பித்து இருக்கிறார்கள். ஏழ்மை நிலையின் அடிப்படையில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கிணறு தோண்டித்தர பஞ்சாயத்துக் கூட்டத்தில் முடிவு செய்து இருக்கிறோம். இப்படி ஒரு திட்டத்தை நிறைவேற்றியது எங்களுக்கு பெருமைக்குரியதாகி இருக்கிறது” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

நாட்டுக்கே முன் உதாரணமாகத் திகழும் இந்தச் சாதனைப் பெண்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இருக்காதா பின்னே?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு