Published:Updated:

அத்திப்பட்டி ஆகும் திண்டுக்கல்... தண்ணீருக்காக அலையும் பொதுமக்கள்! #TNDrought2017

விகடன் விமர்சனக்குழு
அத்திப்பட்டி ஆகும் திண்டுக்கல்... தண்ணீருக்காக அலையும் பொதுமக்கள்! #TNDrought2017
அத்திப்பட்டி ஆகும் திண்டுக்கல்... தண்ணீருக்காக அலையும் பொதுமக்கள்! #TNDrought2017

அத்திப்பட்டி ஆகும் திண்டுக்கல்... தண்ணீருக்காக அலையும் பொதுமக்கள்! #TNDrought2017

தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்து இயக்குநர் பாலசந்தர் எடுத்த பிரபலமான திரைப்படம் தண்ணீர்... தண்ணீர். அந்தத் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் போலவே தற்போது தமிழகத்தின் பல நகரங்களும் மாறிவருகின்றன. உச்சக்கட்டமாக, தமிழகத்தில் அதிக குடிநீர் பஞ்சம் உள்ள மாவட்டமாக மாறிவிட்டது திண்டுக்கல். மாநகராட்சிப் பகுதிகளில் 50 நாள்களுக்கும் மேலாக தண்ணீர் வராததால் மக்கள் அவதிப்படுகின்றனர். சில இடங்களில் அறுபது நாள்களுக்கு மேலாக தண்ணீரின்றி தாகத்தில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் திண்டுக்கல்வாசிகள். இதைப் பயன்படுத்தி சிலர், அநியாய விலைக்குத் தண்ணீரை விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். திண்டுக்கல்லின் தெருக்களில் தனியாருக்குச் சொந்தமான தண்ணீர் வண்டிகள்தான் அதிகமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. தண்ணீருக்காக காலிகுடங்களுடன் பொதுமக்கள் நாள்தோறும் சாலைகளில் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இக்கட்டான நிலையிலும், குடிநீர்ப் பிரச்னையை தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி யோசிக்காமல், இதிலும் அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ஆளும்கட்சியினர் எனக் குற்றம்சாட்டுகிறார் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி. 

இது தொடர்பாக நம்மிடம் பேசியவர், “திண்டுக்கல் மக்களின் குடிநீர்த் தேவைக்காக இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. காமராஜர் அணை மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் . திண்டுக்கல் மாநகராட்சி பகுதியின் ஒருநாள் தேவை 21 எம்.எல்.டி. ஆனால், இந்த இரண்டு திட்டங்கள் மூலமாக தற்போது, ஐந்து எம்.எல்.டி தண்ணீர்தான் கிடைத்து வருகிறது. ஒருநாளின் தேவையில் நான்கில் ஒருபங்கு தேவைதான் தற்போது கிடைக்கிறது. அதையும் முறையாகப் பிரித்து பொதுமக்களுக்குக் கொடுக்காமல், மாநகராட்சிக்குச் சொந்தமான லாரிகள் மூலமாக, தனியார் நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களும் கொடுக்கிறார்கள். மக்கள் தாகம் தீர்க்க வேண்டிய அதிகாரிகளும், அமைச்சர் உள்ளிட்ட ஆளும்கட்சியினர் இதையும் ஒரு வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள். மாநகராட்சியின் எந்தப் பகுதிக்குப் போனாலும், தண்ணீர் வந்து ரெண்டு மாசமாச்சு என்ற புகார் கேட்டுக்கொண்டே இருக்கிறது. சில இடங்களில் 70 நாள்கள் தண்ணீர் வரவில்லை. பொன்சீனிவாசன் நகரில் தண்ணீர் வந்து நான்கு மாதம் ஆகிறது என்கிறார்கள்.

மக்களின் அடிப்படை தேவையான குடிநீரைக்கூட முறையாக வழங்காத அரசு, எப்படி மக்கள் நலுனுக்கான அரசாக இருக்க முடியும்? வறட்சி காரணமாக நீர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைந்து விட்டது என்கிறார்கள். உண்மைதான், ஆனால், பல இடங்களில் நிலத்தடி நீர் இருந்தும், போர்வெல்களை பராமரிக்காமல் போட்டு வைத்திருப்பதால், அவற்றில் தண்ணீர் எடுக்க முடியவில்லை. உடைந்த குழாய்கள், பழுதான மோட்டார்கள் என சின்னச் சின்ன பிரச்னைகளைச் சரிசெய்தாலே தற்போது கிடைப்பதை விட, இன்னும் கூடுதலாகத் தண்ணீரைப் பெற முடியும். ஆனால், அதில் அக்கறை காட்டாமல், அலட்சியமாக இருக்கிறார்கள் அதிகாரிகள். தற்போது கிடைக்கும் 5 எம்.எல்.டி தண்ணீரையும் ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒருசில முன்னாள் கவுன்சிலர்கள், அவர்களது வார்டுகளுக்கு மட்டும் லாரிகள் கொண்டு சென்று கொடுக்கிறார்கள். தற்போது கிடைக்கும் தண்ணீரை லாரிகளில் கொடுக்காமல், முறைப்படி குழாய் வழியாகக் கொடுத்தால்கூட ஓரளவு அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீர் கொடுத்து சமாளிக்க முடியும். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் அதிகாரிகள் எடுக்கத் தயாராக இல்லை.

இது தொடர்பாக, அதிமுக, பாஜகவைத் தவிர்த்து அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து பேசினோம். குடிநீர்ப் பிரச்னையை சரிசெய்வது தொடர்பாக, கலெக்டர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை சந்தித்துப் பேசலாம் என முடிவு செய்தோம். ஆனால் சந்திக்க மறுக்கிறார்கள் அதிகாரிகள். எதிர்கட்சிகளின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக, கடந்த வாரம், அமைச்சர் சீனிவாசன் தலைமையில், மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். குடிநீர்ப் பிரச்னைக்கான ஆலோசனை கூட்டம் எனக் கூட்டிய அந்தக் கூட்டத்தில், பொதுமக்களுக்குப் பதிலாக முழுக்க முழுக்க கட்சிக்காரர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். கண்துடைப்புக்காக நடந்த அந்தக் கூட்டத்தில், ‘இன்னும் நான்கு நாள்களில் 100 லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர்ப் பிரச்னையை சமாளிப்போம்‘ என அமைச்சர் வாக்குறுதி அளித்தார். இது தொடர்பாக, மாநகராட்சியின் தலைமைப் பொறியாளரை, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினோம். அப்போது அமைச்சர் சொன்னதைப் பற்றி கேட்டோம்.  தனியாக பணம் ஒதுக்கவில்லை. நகரில் உள்ள வியாபாரிகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் எனச் சிலரிடம் உதவுமாறு கேட்டிருக்கிறோம் எனச் சொன்னார். ஆக, கடுமையான தண்ணீர் பஞ்சத்தைப் போக்க அரசு, அமைச்சர், மாவட்ட நிர்வாகம் எதுவும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க அரசின் செயல்படாத தன்மையை  வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்தநிலை தொடரும் பட்சத்தில் அடுத்தகட்டமாக அனைத்து கட்சிகள் சார்பாக, மாபெரும் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்‘‘ என்றார்.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நீராதாரங்களில் இரவு பகல் என 24 மணி நேரமும் தண்ணீரை உறிஞ்சி, வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் வாகனங்கள் தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் மூலமாக, தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், திண்டுக்கல் நகரில் சுமார் மூன்றரை கோடி ரூபாய் அளவுக்குத் தண்ணீர் விற்பனை நடந்துள்ளது எனக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். தண்ணீர் கிடைக்கிறதே என்பதற்காக ஒரே இடத்தில் தொடர்ந்து, தண்ணீரை உறிஞ்சுவது மூலம், அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறையும். எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தாலும், அதை கண்டுகொள்ளாமல், விற்பனையில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர் தண்ணீர் வியாபாரிகள். 

அடுத்த கட்டுரைக்கு