Published:Updated:

‘நள்ளிரவில் கடத்தப்படும் தாதுமணல்!’ - வைகுண்டராஜனைச் சுற்றும் அடுத்த வில்லங்கம்

நமது நிருபர்
‘நள்ளிரவில் கடத்தப்படும் தாதுமணல்!’ - வைகுண்டராஜனைச் சுற்றும் அடுத்த வில்லங்கம்
‘நள்ளிரவில் கடத்தப்படும் தாதுமணல்!’ - வைகுண்டராஜனைச் சுற்றும் அடுத்த வில்லங்கம்

நெல்லை மாவட்டத்தில் நள்ளிரவில் தாது மணல் கடத்தப்படுவதாக வைகுண்டராஜனின் அண்ணன் குமரேசன் கலெக்டருக்கும் போலீஸ் டி.ஐ.ஜி-க்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்துரிக்கும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி கபில்குமார் சரத்கருக்கும் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனின் அண்ணன் குமரேசன் பரபரப்பான புகார் மனுக்களை அனுப்பியிருக்கிறார். அந்த மனுக்களில், "நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி தாதுமணல் ஏற்றுமதி செய்வதாக நான், பலமுறை புகார் கொடுத்துள்ளேன். கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தானே முன்வந்து தாதுமணல் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், 2013-ம் ஆண்டு முதல் தாதுமணலுக்கு தடை உத்தரவிட்ட பிறகு, நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களில் பல லட்சம் மெட்ரிக் டன் தாதுமணல் சாலை வழியாகக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

நான், புகார் கொடுத்தால் குடும்பப் பகை என்று அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. தாது மணலுக்கும் குடும்பப் பகைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நான் சொத்தைப் பிரித்துக் கேட்டு புகார்செய்யவில்லை. மேலும், என்னுடைய சொந்த ஊரான கீரைக்காரன்தட்டு கிராமத்திலிருந்து கரைச்சுத்துப்புதூருக்கு நான் குடிபெயர்ந்து 40 ஆண்டுகளாகிவிட்டது. நான் தாதுமணல் தொழிலும் செய்யவில்லை. இந்தியாவில் எந்தப் பகுதியிலும் தாதுமணல் சுரங்க குத்தகைக்கு மனு செய்யவில்லை. தாதுமணல் விவகாரம் தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ககன்தீப் சிங் பேடி ஆய்வு நடத்தி தாக்கல் செய்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், 'கடற்கரைப் பகுதியில் தாது மணல் சம்பந்தமாக தொடர் கண்காணிப்பில் போலீஸார் இருக்க வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவும் பின்பற்றப்படவில்லை.

 என்னுடைய புகாரின்பேரில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட கமிட்டி அனுப்பிய அறிக்கைகள் அரசு அலுவலகங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வி.வி.மினரல் நிறுவனத்துக்கு எதிராகப் புகார் கொடுத்ததால் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு விண்ணப்பித்து மூன்று மாதங்கள் காத்திருக்கிறேன். தற்போது, நள்ளிரவில் தாது மணல் கடத்தப்படுகிறது. இதற்கு உடந்தையாக உள்ள அரசு அதிகாரிகள், போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து வி.வி.மினரல் மேலாளர் அலெக்ஸ் கூறுகையில், "தாதுமணல் நிறுவனத்துக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. குடோன்களிலிருந்து மணலை எடுத்துச் செல்லும் போக்குவரத்துக்குதான் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வி.வி.மினரல் நிறுவனத்தால் சமுதாயத்துக்கோ மக்களுக்கோ அல்லது அவர்களது உடைமைகளுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை என பலமுறை நிபுணர்கள் குழு மூலம் நிரூபித்து, அதற்கான சான்று ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. சிலர் தொடுத்த வழக்குகள், புகார்களின் அடிப்படையில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு சட்டசபையில் எதிர்க்கட்சியினரின் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, 'தாதுமணல் குவாரிக்குத் தடை விதிப்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, தாதுமணல் எடுத்துச் செல்லும் போக்குவரத்துக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளோம்' என்று குறிப்பிட்டார்.

இதனால், அதிகாரிகளோ பிற துறைகளோ சட்டத்தின் அடிப்படை முகாந்திரம் அறியும் காரணத்தால் இதுபற்றி பேசுவதில்லை. இந்த விவகாரத்தில் சட்டப்படி என்ன செய்ய வேண்டும், எப்படி கையாள வேண்டும் என்பது அரசுக்கும் நீதிமன்றங்களுக்கும் தெரியும். அதற்கான நடவடிக்கைகளைஅவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். நாங்களும் சட்டம் என்ன சொல்கிறதோ அதைச் செய்வதற்காகத்தான் காத்திருக்கிறோம். இந்த நிலையில் குமரேசன் தன்னை சமூக ஆர்வலர், போராளிபோலக் காட்டிக்கொண்டு அதிகாரிகளிடத்தில் புகார் கொடுத்துவருகிறார். மேலும் அவர், அதிகாரிகளையும் அரசு நிர்வாகத்தையும் நீதிமன்றங்களையும் அவமதிப்பதுபோல பேசி வருகிறார். மொத்தத்தில் இவர் குடும்பப் பகை, காழ்ப்புணர்ச்சி, பொறாமை ஆகியவற்றின் காரணமாகவே இதுபோன்று செயல்படுகிறாரே தவிர, சமூகத்தில் அக்கறை, போராளி என்றெல்லாம் எதுவும் கிடையாது. குமரேசனிடம் எந்தவித ஆதாரங்களும் கிடையாது. தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறுவதெல்லாம் வேடிக்கையாக உள்ளது. எந்தவகையில் இவருக்கு உயிருக்கு ஆபத்து என இவரால் ஆதாரத்துடன் கூறமுடியுமா? இவையெல்லாம் அவரது மனநல பாதிப்புகளால் வெளிப்படும் வார்த்தைகள்தான்" என்றார்.