Published:Updated:

53 ஆண்டு காத்திருப்புக்குப் பின் குடிநீர் பெறும் தனுஷ்கோடி... உதவிய விகடன்!

53 ஆண்டு காத்திருப்புக்குப் பின் குடிநீர் பெறும் தனுஷ்கோடி... உதவிய விகடன்!
53 ஆண்டு காத்திருப்புக்குப் பின் குடிநீர் பெறும் தனுஷ்கோடி... உதவிய விகடன்!

கடந்த 53 ஆண்டுகளாகக் குடிநீருக்காக கடற்கரை ஓரங்களில் தோண்டப்படும் நீர் ஊற்றுகளையே நம்பியிருந்த தனுஷ்கோடி மக்களுக்கு விகடன் இணையதளத்தின் உதவியால் இன்றிலிருந்து நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர்க் கிட்டியிருக்கிறது.

53 ஆண்டுகளுக்கு முன் அழகிய துறைமுகமாக விளங்கிய நகரம் தனுஷ்கோடி. ஆங்கிலேயர்களின் கடல்வழி போக்குவரத்துக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த கடல் நகரமும்கூட. 1964-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் உருக்குலைந்துபோனது. ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் புயலுக்கு முன் அங்கே வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்கான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இந்த ரயிலுக்கு 'வாட்டார் டேங்' எனப் பெயரிட்டு அழைத்தனர் மக்கள். 

புயலால் உருக்குலைந்து போன தனுஷ்கோடியை ’வாழத் தகுதியற்ற பகுதி’ என அரசு அறிவித்தது. இதனால், அங்கு வசித்து வந்த பலதரப்பட்ட மக்களும் இடம்பெயர்ந்து சென்றனர். ஆனால், மீன் பிடித்தலைத் தவிர, வேறு வேலை ஏதும் தெரியாத மீனவ மக்கள் பலர் அங்கேயே தங்கினர். சாலை, மின்சாரம், குடிநீர் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத தனுஷ்கோடியில் தங்களின் தொழில் காரணமாக மீனவர்கள் அங்கேயே தங்க வேண்டிய நிலை உருவானது. மின்சாரம், சாலை வசதி இன்றி வாழ்ந்துவிடலாம் என எண்ணி வாழத் தொடங்கிய மீனவர்கள் தங்களின் தாகத்தைத் தீர்க்க குடிநீருக்காகத் தவித்த நிலையில் மீனவர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கடலோர நீர் ஊற்றுகள். 

முகுந்தராயர் சத்திரம், தாவுகாடு, கம்பிபாடு, பாலம் போன்ற பகுதிகளில் உள்ள கடற்கரை ஓரங்களிலிருந்து சில அடி தூரத்தில் இதுபோன்ற ஊற்றுகள் தோண்டப்படுகின்றன. சுமார் 5 அடி ஆழத்தில் தோண்டப்படும் ஊற்றில் ஊற்றெடுக்கும் தண்ணீரை அகப்பை மூலம் சிறுகச் சிறுகச் சேகரித்து குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். உப்புக் கரிக்கும் கடலுக்கு நடுவே எஞ்சியிருக்கும் நிலப்பரப்பில் ஊற்றெடுக்கும் இந்த நன்னீர் ஊற்றுகளை நம்பியே இப்போதும் நூற்றுக்கணக்கான மீனவ குடும்பங்கள் தனுஷ்கோடியில் வாழ்ந்து வருகின்றனர். 

இந்தச் செய்தியினை விகடன் இணையதளத்தில் பதிவிட்டிருந்தோம். தங்களைச் சுற்றி நாலா புறமும் அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு சமுத்திர நீர் சூழப்பட்டிருந்தும் அவற்றில் ஒரு சொட்டினைக் கூட குடிநீருக்காகப் பயன்படுத்த முடியாத நிலையில் ஊற்று நீரை பருகி வரும் மீனவ மக்களின் அவலத்தை அறிந்த ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகத்தினர் தனுஷ்கோடி பகுதியில் வசிக்கும் மீனவர்களுக்குக் குடிநீர் வழங்க முடிவு செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் நடராஜனின் ஆலோசனைப் படி நகராட்சிக்குச் சொந்தமான டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தனலெட்சுமி இன்று மீனவ மக்களின் தாகம் தீர்க்கும் பணியினை தனுஷ்கோடி சர்ஜ் பகுதியில் தொடங்கிவைத்தார். முதல் முறையாக அரசு நிர்வாகத்தினர் குடிநீர் வழங்க வந்திருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடனும் ஆர்வத்துடனும் குடிநீரைக் குடங்களில் பிடித்துச் சென்றனர். 

இந்தத் தாகம் தீர்க்கும் பணியைத்  தொடங்கிவைத்த நகராட்சி ஆணையர் தனலெட்சுமி ''தனுஷ்கோடி புயலால் அழிந்த பகுதியாக இருந்தாலும் ஏராளமான மீனவர்கள் அவர்களின் தொழில் கருதி இங்கேயே  தங்கியுள்ளனர். இதுவரை இப்பகுதிகளுக்குச் சாலை வசதி இல்லாததால் குடிநீர் போன்ற அத்யாவசியப் பணிகளைச் செய்துகொடுக்க முடியவில்லை. இனி குடிநீரில் தொடங்கி அடுத்தடுத்த தேவைகளை நிறைவேற்ற முடியும். முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி பாலம், சர்ஜ் ஆகிய 3 இடங்களில் தலா 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்குகள் வைக்கப்பட்டு அவற்றில் வாரத்தில் 3 நாள்கள் நீர் நிரப்பபடும். இந்த நீரை தனுஷ்கோடியில் வசிக்கும் மீனவர்களும் தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகளும் வீணாக்காமல் குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்'' எனக் கேட்டு கொண்டார். ஆணையருடன், சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் உடனிருந்தார்.

சாலை வசதி, சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் என இரண்டையும் அடைந்துவிட்ட தனுஷ்கோடி மக்களுக்கு இன்னும் எட்டா நிலையில் இருந்து வந்த குடிநீரும் இப்போது கிட்டியிருக்கிறது.