Published:Updated:

ஆர்கானிக் பொருள்களுக்கு அரசு தரும் சான்றிதழ்... எப்படிப் பெறுவது? #OrganicFarming

ஆர்.குமரேசன்
ஆர்கானிக் பொருள்களுக்கு அரசு தரும் சான்றிதழ்... எப்படிப் பெறுவது? #OrganicFarming
ஆர்கானிக் பொருள்களுக்கு அரசு தரும் சான்றிதழ்... எப்படிப் பெறுவது? #OrganicFarming

இயற்கை விவசாயம். இன்றைக்கு ஊரெல்லாம் இதே பேச்சு. ஆர்கானிக் கடைகள் ஆங்காங்கே உருவாகிக்கொண்டே இருக்கின்றன. நமது ஆரோக்கியம் மீதான அக்கறையும், பயமும்தான் இதற்கு காரணம். அதே நேரத்தில் இயற்கை முறையில் பொருள்களை விளைவிப்பதால் நிலமும் வளமாவது விவசாயிகளுக்கு கூடுதல் நன்மை. இப்படி ஒரு கல்லில் பல மாங்காய்கள் அடிக்கும் இயற்கை விவசாயம் செய்வதற்கும் முறையான சான்று வாங்க வேண்டும். அப்போதுதான், இது உண்மையில் ஆர்கானிக் தானா என ஊர் உலகம் கேள்வி கேட்காமல் ஒத்துக்கொள்ளும். 

தற்போது இயற்கை விவசாயம் எனச் சொல்லப்படுவது அனைத்துமே நஞ்சில்லாத விவசாயம் மட்டுமே. இயற்கை விவசாயம் செய்பவர்கள் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே. மலைகளில் வசிக்கும் ஆதிவாசிகள், சில தொல்குடிகள் மட்டும்தான் இயற்கை விவசாயம் செய்கிறார்கள். இயற்கை வேளாண்மை என்பது, உழாமல், பூமி என்ன கொடுக்கிறதோ அதை எடுத்துக்கொள்வது. அதில் மனிதனின் வேலை விதைப்பதும், அறுவடை செய்வது மட்டும்தான். அதே நேரம், ரசாயனத்தை பயன்படுத்தாமல் இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி செய்யும் விவசாயத்துக்கு ‘அங்கக வேளாண்மை’ என பெயரிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. அங்கக வேளாண்மை செய்யும் விவசாயிகள் அங்கக வேளாண்மைக்கான சான்று (Organic Certification) பெற்றிருப்பது அவசியம். இந்தச் சான்று இருந்தால் தான் உங்கள் பொருள் அங்கக வேளாண்மை முறையில் விளைவித்தது என்பதை ஒப்புக்கொள்வார்கள். ஏற்றுமதி செய்யும் போதும், இந்த சான்றிதழ் அவசியமாகிறது. 

தமிழ்நாட்டில் பெரும்பாலும் அங்கக வேளாண்மை செய்யும் விவசாயிகள், அங்கக வேளாண்மை சான்றிதழ் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இதனால் இவர்கள் விளைவிக்கும் நஞ்சில்லா பொருள்களுக்கும் சந்தையில் மலிந்து கிடக்கும் நஞ்சான பொருள்களுக்கும் வித்தியாசம் தெரியவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்புவரை சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறை மிகவும் கடினமானதாகவும், அதிக பணம் தேவைப்படுவதாகவும் இருந்தது. ஆனால், இதை மிகவும் எளிமையாக்கி இருக்கிறது தமிழ்நாடு அரசு. அங்கக சான்றளிப்பதற்காக, தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை (Tamilnadu Organic Certification of Department) என்ற பெயரில் தனியாக ஒருதுறை உருவாக்கப்பட்டு, அது கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அபீடா (APEDA) நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு இந்தத் துறை செயல்பட்டு வருகிறது. 

அங்கக சான்றிதழ் (Organic Certification) பெற விரும்புவோர், இந்தத் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அங்கக வேளாண்மையில் ஈடுபடுபவர்கள், தனிநபராகவோ, குழுவாகவோ இந்தத் துறையில் பதிவு செய்துகொண்டால், சில ஆய்வுகளுக்குப் பிறகு அங்கக வேளாண்மைக்கான சான்றிதழ் அளிக்கிறார்கள். கால்நடை பராமரிப்பு, தேனீ வளர்ப்பு, வனப்பொருள்கள் சேகரிப்பு ஆகிய தொழில்களில் ஈடுபடுபவர்களும் இங்கு பதிவு செய்துகொண்டு ஆர்கானிக் சான்றிதழ் பெறமுடியும். பெருநிறுவனங்கள், அங்கக பொருள்களை பதனிடுவோர், ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்துகொள்ளலாம். 

இதில் பதிவு செய்துகொள்வதற்காக விண்ணப்பப் படிவத்தை, (www.tnocd.net) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப் படிவத்துடன், பண்ணையின் பொது விபர குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் பாசனநீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்தம், நில ஆவணம் (பட்டா, சிட்டா நகல்) பான் கார்டு ஆகிய விவரங்களை மூன்று நகல்களுடன், பதிவுக்கான கட்டணத்தை வரைவோலையாக எடுத்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பரிசீலித்து முறையான ஆய்வுக்குப் பிறகு, தகுதியான நபர்களுக்கு அங்கக விளைபொருள்கள் உற்பத்தியாளர் மற்றும் அங்கக விளைபொருள் பதனிடுவோருக்கு (Organic Processor), அங்கக விளைபொருள் விற்பனை செய்வோர் (Organic Trader) என அபீடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும். இதில், ஒவ்வொரு பிரிவினருக்குமான விதிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி, விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யும்பொழுது தெரிந்துகொள்ளலாம். 

தனிநபர் சிறு, குறு விவசாயிகளுக்கு 2,700 ரூபாயும், தனிநபர் பிற விவசாயிகளுக்கு 3,200 ரூபாயும், குழுப்பதிவுக்கு 7,200 ரூபாயும், வணிக நிறுவனங்களுக்கு 9,400 ரூபாயும் சான்று கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை வங்கி வரைவோலையாக ('Director of Organic Certification'  Coimbatore) என்ற பெயரில் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு இயக்குநர், 1424 தடாகம் சாலை, ஜி.சி.டி. போஸ்ட், கோயம்புத்தூர். என்ற முகவரியிலும், (tnocdcbe@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.