Published:Updated:

ஒரு மணி நேரத்திற்கு 3 குடம்தான்... 24 மணி நேரமும் தண்ணீர் பிடிக்கும் மலைக்கிராமம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒரு மணி நேரத்திற்கு 3 குடம்தான்... 24 மணி நேரமும் தண்ணீர் பிடிக்கும் மலைக்கிராமம்!
ஒரு மணி நேரத்திற்கு 3 குடம்தான்... 24 மணி நேரமும் தண்ணீர் பிடிக்கும் மலைக்கிராமம்!

ஒரு மணி நேரத்திற்கு 3 குடம்தான்... 24 மணி நேரமும் தண்ணீர் பிடிக்கும் மலைக்கிராமம்!

எனக்குச் சொந்த ஊர் நீலகிரி. பிறந்து வளர்ந்தது அங்கேதான். ஆனால், அந்தக் கிராமத்தைப் போய் பார்த்தபோது ”இப்படி ஒரு கிராமம் இங்க இருக்கா” என்றுதான் தோன்றியது. நீலகிரியில் இருக்கிற பெரும்பாலான மக்களுக்கே இப்படி ஒரு கிராமம் இருப்பது இப்போது வரை தெரியாமல்தான் இருக்கிறது. கோத்தகிரியில் இருக்கிற நண்பர்களை அங்கு அழைத்துக்கொண்டு செல்லும் போதெல்லாம் ”நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து இங்கதான் இருக்கேன் இப்படியோர் ஊர் இருக்கிறதே எனக்கு இன்னக்கித்தான் தெரியும்” என்பார்கள். அப்படி இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிற ஒரு மலைக்கிராமம். கரிக்கையூர்!

தொலைத்தொடர்பு வசதிகள் அவ்வளவாக பரிச்சயமாகாத பழங்குடியின மக்கள் வசிக்கிற மலைக்கிராமம் கரிக்கையூர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து 30 கிலோ மீட்டர்  தொலைவில் இருக்கிறது. மல்லிக்கொம்பு, நடூர் எனக் கரிக்கையூரைச் சுற்றிச் சுமார் 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இரண்டு நாள்களுக்கு முன் அங்கு சென்றிருந்த போதுதான் கவனித்தேன். இத்தனை வருடங்களில் இப்படியான ஒருக் காட்சியை நீலகிரி மாவட்டத்தில் வேறு எங்குமே நான் கண்டதில்லை. அங்கிருந்த தண்ணீத் தொட்டிக்கு முன்னால் சுமார் முப்பது குடங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. எல்லாமே காலிக் குடங்கள். ஒரு குடத்தில் தண்ணீர் விழுகிற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அதற்கு மத்தியில் நாற்பத்தைந்து வயதிருக்கும் ஒரு பெண் அமர்ந்திருந்தார். “அம்மா என்ன  இவ்வளவு கொடம் வச்சுருக்கீங்க ஊருக்கே நீங்கதான் தண்ணீ புடிச்சி குடுக்குறீங்களா”  என்றேன்.

“என்னோட பேரு  வசந்தா.  எங்க  ஊர்ல  மொத்தம் 40 வீடு இருக்குய்யா.  ஒரு நாளைக்கு ரெண்டு வீடுன்னு தண்ணீ பிடிக்கணும். குடும்பத்துல இருக்கிற எண்ணிக்கையை வச்சு தண்ணீ பிடிக்கிற நேரம் மாறும்.  வீட்ல நாலு பேர் மட்டும் இருந்தா நைட் பத்து மணியில இருந்து விடியக்காலை மூணு மணி வரை தண்ணீ பிடிப்பாங்க. நாலு பேருக்கு மேல இருக்கவங்க  காலைல மூணு மணிக்கு ஆரம்பிச்சா நைட் பத்து மணி வர தண்ணீ பிடிக்கணும். நா காலைல இருந்து தண்ணீ புடிக்கிறேன் ஒரு மணி நேரத்துக்கு மூணு கொடம்தான் நிரம்பும். நைட் வர நின்னு மொத்தம் முப்பத்தி அஞ்சி கொடம் புடிப்பேன். வேலைய விட்டுத்தான் தண்ணீ பிடிக்கணும். பக்கத்து வீட்டுல இருக்க குடங்களைக் கடன் வாங்கித்தான் தண்ணீ புடிக்கிறேன். அவங்களோட நேரம் வந்தா கொடத்த திருப்பிக் குடுத்துறணும்” என்று சொல்லிவிட்டு நிரம்பியிருந்த குடத்தை எடுத்துக்கொண்டு போனார்.  

ஒரு மணி நேரத்திற்கு மூன்று குடம் என்றால் ஒரு குடம் நிரப்புவதற்கு 20 நிமிடங்கள். அப்படியெனில்  பைப்பில் வருகிற தண்ணீரின் அளவை ஒரு நொடி  யோசித்துப் பாருங்கள். 24 மணி நேரமும் தண்ணீர் பிடிக்கிறார்கள் என்பதை கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது. காரணம் கரிக்கையூர் போன்ற மலைப்பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் என்பது சர்வசாதாரணமானது. சிறுத்தை, கரடி, யானை என எப்போதும் நடமாட்டம் இருந்துகொண்டேயிருக்கும். அப்படியான கிராமத்தில் இரவெல்லாம்  இரண்டுபேர் மட்டும் தண்ணீர் பிடிக்கிறார்கள் என்றதும் பக்கென்று இருந்தது.

ஊரில் அரசு பழங்குடியினர்  உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி ஒன்று இருக்கிறது. 140 மாணவர்கள் படிக்கிற பள்ளியில் 60 மாணவர்கள் பள்ளியில் தங்கி பயில்கிறார்கள். ஊரில் இருக்கிற மக்களுக்கே இப்படியான பிரச்னை என்றால் பள்ளியில் பயில்கின்ற மாணவர்கள்  குடிப்பதற்கும், உணவிற்கும், குளிப்பதற்கும் என்ன செய்கிறார்கள் என விசாரிக்க ஆரம்பித்தேன். பள்ளி விடுமுறை என்பதால் அங்கிருந்த ருக்மணி என்கிற பெண்ணிடம்  பேசியதில் “எல்லோருக்கும் இதே பிரச்னைதான். இந்த ஸ்கூல்ல படிக்கிற எல்லாமே எங்க ஊர் புள்ளைங்கதான். மூணு வேளையும் அவங்களுக்கு அங்கதான் சாப்பாடு. தினமும் யார் தண்ணீ பிடிக்கிறமோ அவங்க பிடிக்கிற குடத்துல பத்துக் குடத்தைப் பள்ளிக்கூடத்துக்குக் குடுத்துருவோம். பசங்க குளிக்கிறதுக்கு வேண்டிய தண்ணீய தலைமை ஆசிரியர் காசு குடுத்து வாங்கித்தருவார். தண்ணீர் இல்லாத நேரத்துல பசங்க காட்டுல இருக்க சுனைல இருந்து தண்ணீ எடுத்து வருவாங்க” என்றார்.

இவ்வளவு தண்ணீர் பிரச்னைக்கு என்ன காரணம் என விசாரித்ததில் தெரிந்த உண்மைகள் அதிர்ச்சியாக இருந்தன. கரிக்கையூர் கிராம மக்கள் நம்பி இருப்பது மலைகளில் உற்பத்தியாகிற சுனை நீரைத்தான். மலைகளில் உற்பத்தியாகிற நீரை குழாய்களின் உதவியோடு எடுத்து தண்ணீர் தொட்டியில் சேமித்துப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பருவமழை பொய்த்தது, காடுகளின் வறட்சி என முன்பைப் போல மலைகளில் நீர் உற்பத்தியாவதுமில்லை. சுனைகளில் நீர் வருவதுமில்லை. அப்படியும் தண்ணீர் வருகிற இடங்களில் போடப்பட்டிருக்கிற குழாய்களை யானைகள் சேதப்படுத்தி விடுகின்றன. பள்ளிக்கு எனத் தனியாக அரசு குழாய் பதித்து தண்ணீர்த் தொட்டி அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதையும் யானைகள் அடித்து நொறுக்கி விட்டன. யானை அடித்து நொறுக்கிய பகுதியில் சிறிய குழாய் பதித்து இப்போது தண்ணீர்ப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். காசு கொடுத்து தண்ணீர் வாங்கலாம். ஆனால் ஆயிரம் லிட்டர் ஆயிரம் ரூபாய். கூலி வேலைக்குப் போகிறவர்களுக்கு ஆயிரம் ரூபாய் என்பது மிகப் பெரியதொகை. தண்ணீர் இல்லை என்கிற நேரத்தில் மட்டும் பங்களாப்பாடி என்கிற இடத்தில இருந்து பன்னிரண்டு குடங்களை 300 ரூபாய்க்கு விலைக்கு வாங்குகிறார்கள்.  

தண்ணீர் பிடிக்கிற அன்றைய நாளில் குளிக்கிறவர்கள் அடுத்து பதினைந்து நாள் கழித்து எப்போது மீண்டும் தண்ணீர் பிடிக்கிறார்களோ அப்போதுதான் குளிக்கிறார்கள். துணி துவைப்பதில் இருக்கிற கஷடங்களைக் கேட்கும்போது  ஜீரணித்துக் கொள்ள முடியாத வார்த்தைகள் வந்து விழுகின்றன. “பழைய துணிய மூட்டையா கட்டி  தீனி மட்டம் ஊருக்கு பஸ்ல  எடுத்துட்டு போய்டுவோம். அந்த ஊர்  இங்க இருந்து பத்து கிலோ மீட்டர்  தள்ளி இருக்கு. காலைல போனா எல்லா துணியவும் தொவச்சு காய வச்சு திரும்ப எடுத்து வர சாயந்திரம் ஆய்டும்” என்கிறார்கள்.

ஊர் மக்கள் சொன்ன தீனி மட்டம் பகுதிக்குப் போய் பார்த்தபோது ஒரு அம்மா பள்ளி சீருடைகளைத் துவைத்துக்கொண்டிருந்தார். பல மைல் கடந்து வந்து துணி துவைத்து தேயிலைச் செடிகளின் மேல் காயப்போட்டிருந்தார்கள். காயப்போட்டிருந்த உடைகளுக்குப் பக்கத்தில் சில பெண்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் நிலையையெல்லாம் அப்படியே எழுத்தாகக் கொண்டு வருவதற்கெல்லாம் மிகப் பெரிய மனதைரியம் வேண்டும்.

இரவு பதினோரு மணிக்கு ஊரே இருளில் மூழ்கி இருக்கிறது. காலையில் பார்த்த இடத்தில் வேறு சிலர் இருந்தார்கள். மற்றபடி அதே காட்சிகள். அதே குடங்கள். பகல் என்பது மட்டும் இரவாக மாறியிருந்தது. தண்ணீர் பிடிக்கிற இடத்தில மூன்று பெண்கள் அமர்ந்திருந்தார்கள். ஆண் ஒருவர் தீ மூட்டிய இடத்தில அமர்ந்து  குளிர் காய்ந்து கொண்டிருந்தார். காலையில் என்னோடு பேசிய ருக்மணி அக்கா கையில் டார்ச் லைட் வைத்துக்கொண்டு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த நான்கு பெண்களில் ஒருவர் “எத்தனையோ பேர் வந்து பார்த்துட்டு போறாங்க. போட்டோ பிடிச்சிட்டு போறாங்க. இன்னக்கி வரைக்கும் எந்த நல்லதும்  நடக்கல. ஒடஞ்சு போன குழாய சரிபண்ணி குடுக்கச் சொல்லிக் கேட்டோம். யானை ஊருக்குள்ள வராம இருக்க ஒரு வேலி  போட்டுத் தர சொல்லி கேட்டோம், இன்னைக்கு வர யாருக்குமே அது கேக்கல. இன்னும் பத்து நிமிசத்துல எல்லாரும் அவங்க  அவங்க வீட்டுக்குப் போயிடுவீங்க. நானும் என் வீட்டுக்காரரும்தான் தனியா நின்னு தண்ணீ புடிக்கணும்.  இந்த நெலம மாறுமான்னு தெரியல ஆனா பழகிடுச்சு” என்றார்.

கரிக்கையூர் மக்களின்  வெளியே தெரியாத  துயரங்களுக்கு மேல் இயற்கை பச்சை பசேல் எனப் படர்ந்திருப்பதுதான் மிகப்பெரிய முரணாக இருக்கிறது. துயரங்களைக் கடந்துவருவது பழகிவிட்டது என்றாலும் சில துயரங்களை மைல்கள் கடந்தும் சுமக்க வேண்டியதாய் இருக்கிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு