Published:Updated:

சிகரெட் துண்டுகள்... குளிர்பான பாட்டில்கள்... பிளாஸ்டிக் பைகள்... உலகின் மிகப்பெரிய குப்பைத்தொட்டி!

சிகரெட் துண்டுகள்... குளிர்பான பாட்டில்கள்... பிளாஸ்டிக் பைகள்... உலகின் மிகப்பெரிய குப்பைத்தொட்டி!
சிகரெட் துண்டுகள்... குளிர்பான பாட்டில்கள்... பிளாஸ்டிக் பைகள்... உலகின் மிகப்பெரிய குப்பைத்தொட்டி!

சிகரெட் துண்டுகள்... குளிர்பான பாட்டில்கள்... பிளாஸ்டிக் பைகள்... உலகின் மிகப்பெரிய குப்பைத்தொட்டி!

பாதியில் அணைக்கப்பட்டு தூக்கிவீசப்படும் சிகரெட் துண்டுகள், தாகத்திற்கு அருந்திவிட்டு கண்காணா தொலைவிற்கு நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் குடுவைகளின் மூடிகள், சாக்லேட் கவர்கள், பிளாஸ்டிக் பைகள், கண்ணாடிக் குடுவைகள் மற்றும் ஸ்ட்ரா... இவை அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்னவென உங்களால் யூகிக்க முடிகிறதா? 

நீங்கள் யூகித்தது ஓரளவு சரிதான்; ஆம், இவை அனைத்துமே மனிதர்களால் தூக்கியெறியப்படும் குப்பைகள். ஆனால் நீங்கள் நினைப்பது போல இவை அனைத்தும் மிகச்சரியாக குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டு, பின்னர் அரசாங்கங்களால் முறையாக கையாளப்பட்டு, பின்னர் அழிக்கப்படும் அல்லது மறுசுழற்சி செய்யப்படும் குப்பைகள் கிடையாது. தெருமுனைகளில் குப்பைத்தொட்டிகள் இருக்கும் தெருக்களில், மனிதர்களால் ஏதோ ஒரு மூலையில் வீசப்பட்டு, சாக்கடைகளில் கலந்து, நீர்நிலைகளை அடைந்து, அங்கிருந்து செவ்வனே கடலில் சென்று கலப்பவை; அல்லது கடலுக்கு செல்லும் வழியில் அடைத்துக்கொண்டு, நீரானது கடலுக்கு செல்லாமல் தடுப்பவை. விலங்குகளின் வயிற்றுக்குள் சென்று, அவற்றின் உயிரைப் பறிப்பவை; அல்லது கடல்வாழ் உயிரினங்களின் சூழலைக் கெடுப்பவை. இவை அனைத்தும் படிப்பதற்கு கொஞ்சம் மிகையாகத் தெரியலாம். ஆனால் கடல்வாழ் ஆராய்ச்சியாளர்களின் கூற்று இந்த வாக்கியங்களை விடவும் அச்சமூட்டுகின்றன.

ஆம். ஒரு வருடத்தில் மட்டும் கடலுக்கு வந்து குவியும் பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கை மட்டும், 8 மில்லியன் மெட்ரிக் டன்கள் என அதிரவைக்கின்றனர் ஆய்வாளர்கள். இது சுமார் 30,000 யானைகளின் எடைக்கு நிகரானது. ஒவ்வொரு நாளும் கடலுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் வந்து குவிந்துகொண்டேதான் இருக்கின்றன. இவை அனைத்தும் கிலோ கணக்கில் அல்ல. டன் கணக்கில்! சாலையில் சில குப்பைகள் கண்ணில் தட்டுப்பட்டாலே அசௌகரியமாக உணர்வோம். ஆனால் சிறியது முதல் பெரியது வரையிலான மீன்கள், ஆமைகள், திமிங்கலங்கள், சிப்பிகள், பவளப்பாறைகள் மற்றும் எண்ணற்ற அரிய உயிரினங்கள் வாழும் கடலில் இத்தனை டன்கள் குப்பைகளைக் கொட்டினால் அவை என்ன செய்யும்? அழிந்து போவதைத் தவிர! 

இவையனைத்தும் கடலுக்குள் கொண்டுவந்து கொட்டப்படும் குப்பைகள் அல்ல; மனிதர்களால் ஏதோ ஒரு மூலையில் இருந்து வீசப்பட்டு, கடலுக்குள் வந்தவை. மேலே சொன்னது போல நாம் தெருவில் வீசிய குப்பையும் இதில் அடங்கும்; கடற்கரைகளில் வீசிய குப்பைகளும் இதில் அடங்கும். இவற்றின் தீமைகளை உணர்ந்துதான் உலகில் பல்வேறு கடலியல் ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் கடலில் இருக்கும் குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை சுத்தப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்

இதில் கடற்கரைகளில் கொட்டப்படும் கழிவுகளை சுத்தம் செய்வதற்காக வருடந்தோறும் ஓஷன் கன்சர்வென்ஸி (ocean conservancy) என்ற அமைப்பின் மூலம் உலகெங்கும் விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கடற்கரைகளில் கழிவுகளை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவில் தலைமையகத்தை கொண்டு இயங்கிவரும் இந்த அமைப்பு உலகெங்கும் பல நாடுகளில் இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இந்த வருடமும் செப்டம்பர் மாதம் 16-ம் தேதி தமிழக கடற்கரைகளில், சுத்தப்படுத்தும் பணிகள் தன்னார்வலர்களின் உதவியோடு நடைபெறவிருக்கிறது. ஓஷன் கன்சர்வன்ஸி மற்றும் சென்னையில் இயங்கிவரும் Indian Maritime Foundation ஆகிய இரண்டு அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறது. கடந்த பத்து வருடங்களாக நடந்துவரும் இந்த நிகழ்வில் இதுவரைக்கும் பல டன் அளவிலான குப்பைகள் கடற்கரைகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவை மாநகராட்சியின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 

இவர்களைத் தவிர நீங்களும் கடல் அன்னைக்கு உதவலாம். எப்படி தெரியுமா?  அடுத்த முறை நீங்கள் கடற்கரைக்கு செல்லும்போது பிளாஸ்டிக் குப்பைகளை, அங்கே வீசாமல் இருந்தாலே போதும். ஏனெனில், சமூகத்தில் மாற்றம் என்பது தனிமனிதர்களிடம் இருந்துதான் துவங்கவேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு