Published:Updated:

`புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள், பழங்குடிகளுக்கு ஆபத்தே!' - ஆய்வாளர் பகத்சிங்

பழங்குடிகள்
பழங்குடிகள்

இந்திய வரலாற்றில் எளிய மக்களுக்காக இயற்றப்பட்ட ஒரு சட்டம், இவ்வளவு எதிர்ப்புகளைச் சந்தித்ததில்லை. மேல்தட்டுச் சமூகத்தினர் அந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

"பழங்குடிகள் என்றாலே, இலை தழைகளைக் கட்டிக்கொண்டு, அரைகுறை ஆடையுடன், விலங்குகளின் எலும்புகளைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, 'கைய்யோ, முய்யோ' என்று பேசுவதும் அரைகுறை ஆடையுடன் நடனமாடுவதும்தான் அவர்களுக்கான அடையாளமாக நம் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டுள்ளது."
காணி
காணி

மேற்கண்ட வாக்கியத்தோடு தொடங்குகிறது அந்த நூல். பழங்குடிகள் என்றால் யார், மனித வரலாற்றில் அவர்களுக்கு இருக்கின்ற தவிர்க்க முடியாத பங்கு என்ன, வரலாற்று ஆய்வாளர்களும் சூழலியல் ஆய்வாளர்களும் தொடர்ந்து அவர்களுக்கு முதன்மைத்துவம் கொடுத்துக்கொண்டிருப்பது ஏன் என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் அமைந்துள்ளது சமீபத்தில் வெளியான 'வாழும் மூதாதையர்கள்' என்ற நூல்.

சினிமாக்களில் பழங்குடிகள் குறித்துக் காட்டப்படும் பல்வேறு காட்சிகள் அவர்களைப் பற்றிய தவறான புரிதல்களுக்கே வித்திட்டுள்ளன. சமீபத்தில் அந்தக் காட்சியமைப்புகள் மாறிக்கொண்டிருப்பது ஒருபுறம் ஆறுதலைத் தந்தாலும், சமுதாயத்தைப் பொறுத்தவரை நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருப்பதைச் சமகாலத்தில் நடக்கின்ற பல சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. பழங்குடிகளுக்கு வாழ்வுரிமையை, வாழ்விட உரிமையை வழங்குகின்ற வன உரிமைச் சட்டம் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டதிலிருந்து பல எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.

 `கடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்!’  - அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்

இந்திய வரலாற்றில் எளிய மக்களுக்காக இயற்றப்பட்ட ஒரு சட்டம், இவ்வளவு எதிர்ப்புகளைச் சந்தித்ததில்லை. மேல்தட்டுச் சமூகத்தினர் அந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கு அவர்களுடைய வாழ்விடம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் அவர்களே எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தை அந்தச் சட்டம் வழங்குவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. இரண்டாவது, காடுகளை வியாபாரப் பண்டமாக்க, உற்பத்திச் சாதனமாக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்குத் தடங்கலாக இந்தச் சட்டம் விளங்குகிறது.

நம் மூதாதையர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, இந்த நூலை அனைவருமே தத்தம் கடமையாக நினைத்து வாசிக்க வேண்டும்.
பிரேமா ரேவதி, சமூகச் செயற்பாட்டாளர்

இந்தச் சட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, பழங்குடியின மக்களுடைய வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பல்வேறு முயற்சிகளை நாம் சமகாலத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், தங்கள் அன்றாட வாழ்வில், கலாசாரத்தில் சூழலியல் பாதுகாப்பை மரபுரீதியான ஓர் அங்கமாகக் கொண்டு வாழ்கிறார்கள் பழங்குடிகள். தமிழகத்தில் பட்டியல் படுத்தப்பட்டுள்ள 36 பழங்குடிகளில் 13 பழங்குடிகளின் வாழ்வுமுறை, மரபு, கலாசாரம், அவற்றிலுள்ள சூழலியல் ஒத்திசைவான நடைமுறைகள் அனைத்தையும் ஆய்வு செய்து தமிழில் 'வாழும் மூதாதையர்கள்' என்ற ஆய்வு நூல் வெளியாகியுள்ளது.

அதன் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய சமூகச் செயற்பாட்டாளர் பிரேமா ரேவதி, "வன உரிமைச் சட்டம் இன்னமும் முறையாக அமல்படுத்தாமல், பழங்குடிகளின் உரிமைகளைப் பறித்துக்கொண்டிருக்கிறது பெருநிறுவனங்களின் அரசியல். காடுகளுக்கும் பழங்குடிகளுக்கும் இடையேயுள்ள பிணைப்பு, அந்த உறவு காடுகள் பாதுகாப்பில் ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது. நம் மூதாதையர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, இந்த நூலை அனைவருமே தத்தம் கடமையாக நினைத்து வாசிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நூல் வெளியீடு
நூல் வெளியீடு

பழங்குடியின மக்கள் தொடர்பான ஆய்வின் முக்கியத்துவம் குறித்து நம்மிடம் பேசிய நூலாசிரியர் முனைவர். பகத் சிங், "பலமுனை நெருக்கடிகளைச் சந்திப்பவர்களாகப் பழங்குடிகள் உள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் சமூக - பொருளாதார நெருக்கடியும் பாதிப்புகளும் பொது வெளிச்சத்துக்கு வராமலேயே போகின்றன. வனம் என்பது இன்று வணிக மையமாகப் பாவிக்கப்படுவதால், பழங்குடிகளை வெளியேற்றப் பல்வேறு சதி செயல்கள் அரங்கேற்றப்படுகிறது. அரசும் இந்த வணிக மயத்தை ஊக்குவிக்கவே செய்கிறது. மறுபுறம் பழங்குடிகளை வளர்த்துவிட மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் யாவும் பழங்குடிகளின் உள்ளார்ந்த சமூகப் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியதாக இல்லாமல் பொதுச் சமூகத்தின் தேவைகளை அவர்களின் மீது திணிப்பதாக மட்டுமல்லாமல், அவர்களை வனத்துக்கு வெளியே கொண்டு வர நெருக்கடி உருவாக்குவதாகவே உள்ளது.

அழியும் நிலையில் ஆனைமலை பழங்குடிகள்!

புலிகள் பாதுகாப்புக்காக இப்போது கையாளப்படும் முறைகள்கூட மறைமுகமாகப் பழங்குடிகளை வனத்திலிருந்து அந்நியப்படுத்தும் முயற்சியாகவே உள்ளது. இந்த நெருக்கடிகளில் இருந்து பழங்குடிகளைப் பாதுகாப்பது என்பது சூழலியல் பாதுகாப்போடு சேர்ந்தது. எனவே, பொதுச் சமூகத்துக்கு பழங்குடிகளின் வாழ்க்கை குறித்து இன்னும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அதற்கு பழங்குடியியல் ஆய்வுகளும் இலக்கியமும் அதிகம் வெளிவர வேண்டும்" என்றவரிடம் இந்த ஆய்வை மேற்கொள்ளத் தூண்டிய காரணம் குறித்துக் கேட்டபோது,

"பொதுவாக, வனத்தைப் பாதுகாக்க நினைப்பவர்கள் கார்ப்பரேட் சதியைப் புரிந்துகொள்ளாமல் 'மனிதர்களற்ற காடு' என்ற ஜாலத்தை அதன் உள்பொருள் அறியாமல் ஆதரித்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். பழங்குடிகளை வெறும் இனவரைவியல் தன்மையோடு மட்டும் அடையாளப்படுத்தாமல், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்னைகளையும் முன்வைக்க முயன்றேன். அதற்கான வெளியை 'உயிர்' பதிப்பகம் ஏற்படுத்திக்கொடுத்தது" என்று கூறினார்.

தோடர் பழங்குடிகள், 1861
தோடர் பழங்குடிகள், 1861

நூல் வெளியீட்டில் பேசிய தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவர் தமிழ்ச்செல்வன், "காடுகளுக்குள் நடக்கும் குற்றங்களுக்கும் பெருநிறுவன ஆக்கிரமிப்புகளுக்கும் பழங்குடிகள் சாட்சியாக விளங்குவதால்தான், அவர்களை வெளியேற்றுவதில் அரசு தீவிரம் காட்டுகிறது" என்றார். மேற்கொண்டு பெசியவர், எர்லி ஹியூமன்ஸ் (Early Humans), சேபியன்ஸ் (Sapiens) போன்ற நூல்களோடு இதை ஒப்பிட்டு, "இது சர்வதேச அளவில் இடம்பெற வேண்டிய நூல்" என்று கூறினார்.

நாம் எல்லோருமே காட்டில் பிறந்தவர்கள். நமக்குள் நகரத்தைப் பற்றிய சிந்தனை வந்த பிறகு, காட்டுக்கு எதிரானதாக அந்தச் சிந்தனை மாறியதுதான், பழங்குடிகளுக்கு எதிரான சிந்தனையாக இப்போது மாறி நிற்கிறது. பழங்குடிகளின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்வதே, அவர்களுடைய வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும் அதன்மூலம் காடுகளைப் பாதுகாக்கவும் உதவும். அந்தப் புரிதலை நாம் அடைவதற்கு 'வாழும் மூதாதையர்கள்' உதவியாக இருக்கும்.

`கோல்டன் ஹேண்ட்ஷேக்' எனும் அநீதியின் உச்சம்: பரிதவிக்கும் பழங்குடிகள்!
அடுத்த கட்டுரைக்கு