Published:Updated:

புலி, சிங்கம் கொல்லும்  கால்நடைகளுக்கு தன் ஓவியங்களை விற்று பணம் கொடுக்கும் சுனிதா!

மான் (காட்டுயிர்)
மான் (காட்டுயிர்) ( sunitha dhairyam )

`` `புலி வந்து என்னோட மாட்டை அடிச்சிருச்சும்மா', `சிறுத்தை எங்க கன்னுக்குட்டியைச் சாப்பிட்டுருச்சு" என்ற கிராம மக்களின் குரல்கள் இவரின் மனத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

வெளிநாட்டிலிருந்து திரும்பிய பெரும்பாலானோருக்கு ஒரு நன்கு வசதியான வீடு மற்றும் அதிக வருமானம் தரும் ஒரு தொழில் அல்லது அதிக சம்பளத்தில் ஒரு வேலை என்பதை வாழ்க்கையாக அமைத்துக் கொள்கிறார்கள். ஆனால், சுனிதா தைர்யம் (Sunita Dhairyam) முற்றிலும் வேறுபட்டவர். அமெரிக்கக் கனவுகளைத் தூக்கிப் போட்டுவிட்டு இந்தியாவுக்கு மீண்டும் வந்து, காட்டு விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான மோதலைத் தீர்க்க, பந்திப்பூர் தேசியப் பூங்காவுக்கு அருகில் தங்கிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஒவ்வொருவரும் ஒரு வழியில் தங்களால் முடிந்ததைச் செய்துகொண்டிருக்கின்றனர். சுனிதா தைர்யம் ஓவியத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறவர். தான் வரையும் ஓவியங்களை விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியைப் புலி, சிறுத்தை ஆகியவற்றால் கொல்லப்படும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடாக வழங்கிக்கொண்டிருக்கிறார்.

புலிகளைக் காப்பது குறித்து, பழங்குடி மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். சுவர் ஓவியங்கள் வரைவதுதான் சுனிதாவின் மிகப்பெரிய பலம். தமது ஓவியங்களைப் பழங்குடி மக்களுக்காகக் கொடுத்து உதவிய பெருந்தன்மை கொண்டவர். பழங்குடிகளின் சுயதொழில் முயற்சிகளுக்கும் உதவி வருகிறார்.

இவர் குடியிருந்த வீட்டில் மின்சாரம், மொபைல் என பல விஷயங்கள் கிடையாது. தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்னைகள் சோதனை கொடுக்க ஆரம்பித்தன. ஆனால், இந்தத் தனிமை பிடித்துப்போகவே இங்கேயே தங்கிவிட்டார், சுனிதா.

சுனிதா, 1962-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி பெங்களூரில் பிறந்தவர். அப்பா, கர்னல் ஜே.கே.தைர்யம் ராணுவத்தில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அம்மா லீலா சூரி. அம்மா பாதி கன்னடம், பாதி ஆங்கிலம். ஆனால், கர்னல் தைர்யம் சென்னையைச் சேர்ந்த தமிழர். இதனால் சுனிதாவுக்கு கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் பேசத் தெரியும். அம்மா வழியில் பரம்பரையாகவே ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர்கள். அதனால் இவருக்கும் ஓவியம் வரையும் திறன் இயல்பாகவே இருந்திருக்கிறது. சிம்லாவில் இருக்கும் `கான்வென்ட் ஆஃப் ஜீசஸ் அண்டு மேரி’ பள்ளியில் படிப்பை முடித்தார். பள்ளியிலேயே ஓவியப் போட்டியில் தேசிய அளவில் பதக்கங்களை வாங்கினார். அதன் பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் `டெக்ஸ்டைல் டிசைனிங்’ துறையில் பட்டம் பெற்றார்.

sunitha's painting
sunitha's painting

1983-ல் படிப்பு முடிந்ததும் நாகர்ஹொலே வனப்பகுதிக்குப் பக்கத்தில் இருக்கும் கபினி ரிசார்ட்சில் மேனேஜர் வேலை கிடைத்தது. ஓராண்டு அங்கே வேலை பார்த்தார். அந்தப் பகுதியில் இருக்கும் காடுகளைச் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும்போது, கூடவே இவரும் அதிகமாகக் கற்றுக் கொண்டார். 1984-ம் ஆண்டில் திருமணமானதும் அமெரிக்காவுக்குக் குடியேறினார். சில ஆண்டுகள் அங்கே குடியிருந்தவருக்கு திருமண வாழ்க்கை முறிந்துபோகவே 1998-ல் இந்தியா திரும்பினார்.

அடுத்து என்ன செய்யலாமென யோசித்தவருக்கு ஓவியம் கைகொடுத்தது. இவரின் சித்தியிடம் பந்திப்பூர் வனப்பகுதியில் வைத்திருந்த இடத்தை வாங்கி 50,000 ரூபாய் செலவில் சிறிய வீட்டைக் கட்டினார். வீடு முழுக்க ஓவியங்களாக வரைந்து வைத்தார். இதைப் பார்த்த வன அதிகாரிகள் சிலர், கர்நாடக வனத் துறை அலுவலகங்களுக்கு ஓவியங்களை வரைந்து கொடுக்கச் சொல்லவே, இவரும் காட்டுயிர்களை மையப்படுத்தி ஓவியங்கள் வரைந்து கொடுத்தார். மைசூரு மகாராஜாவின் ஃபெர்ன்ஹில் மாளிகையிலும் ஓவியங்களை வரைந்து கொடுத்திருக்கிறார். இவர் குடியிருந்த வீடு மின்சாரம், மொபைல் என பல விஷயங்கள் கிடையாது. தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்னைகள் சோதனை கொடுத்தன. ஆனால், இந்தத் தனிமை பிடித்துப்போகவே இங்கேயே தங்கிவிட்டார், சுனிதா.

room painting
room painting

2000-ம் வருடம் டாக்டர் பைனு என்பவர் சுனிதாவின் கிராமத்தில் ஒரு சிறிய கிளினிக் வைக்க விரும்பினார். அவருக்குச் சுனிதா நிலம் கொடுத்தார். சிறிய அளவில் ஒரு மருத்துவமனை கட்டினார், டாக்டர் பைனு. அங்கே எல்லோருக்கும் இலவச மருத்துவம்தான். அப்போது அங்கே வரும் நோயாளிகள் பலருடனும் சுனிதா பேசும் வாய்ப்பு கிடைத்தது. ``புலி வந்து என்னோட மாட்டை அடிச்சிருச்சும்மா', `சிறுத்தை எங்க கன்னுக்குட்டியைச் சாப்பிட்டுருச்சு" என்ற கிராம மக்களின் குரல்கள் இவரின் மனத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. ஓவியத்தை வைத்துக் காட்டுயிர் பாதுகாப்புக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தார்.

அந்த நேரம், சுனிதா தங்கியிருக்கும் கிராமப் பகுதியில் மாரியம்மன் கோயில் நிலத்தை ஊரில் உள்ள சிலர் சொந்தம் கொண்டாடினர். ஊர் மக்களின் ஆதரவோடு அந்த நிலத்தைக் கைப்பற்றிப் பொதுச் சொத்தாக மாற்றினார், சுனிதா. 2007-ம் ஆண்டு, `மாரியம்மா சாரிட்டபிள் டிரஸ்ட்’ அமைப்பை ஏற்படுத்தினார்.

புலி, சிறுத்தை போன்றவற்றால் கால்நடைகளை இழந்தவர்களுக்கு, இழப்பீடு தருவதற்காகவே அந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பால் பந்திப்பூர் வனப்பகுதியில் உள்ள 23 கிராமங்கள் மட்டுமல்லாது முதுமலை வனப் பகுதிகளில் உள்ள கிராமங்களும் பயனடைந்திருக்கின்றன. புலி, சிறுத்தையால் கொல்லப்படும் பசுவுக்கு முதலில் 2,000 கொடுக்கப்பட்டது. இப்போது அது 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 5,000 ரூபாய் என்பது கால்நடைகளுக்கு ஒரு சிறிய தொகை என்றாலும் இழப்பீடு கொடுப்பதன் மூலம் காட்டுயிர்களை மனிதன் பழிவாங்கும் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

tiger painting
tiger painting

வனத்துறை கிராம மக்களுக்கு இழப்பீடு வழங்க நீண்ட நேரம் எடுப்பது மட்டுமல்லாமல், காடுகளுக்குள் கொல்லப்பட்ட கால்நடைகளுக்கான விண்ணப்பங்களை வனத்துறை கருத்தில் கொள்ளவில்லை. அதனால் நாம் கொடுக்கும் இழப்பீடு கிராம மக்களின் மனநிலையை மாற்றும் என்று நம்புகிறார், சுனிதா. இதுவரை சுமார் 1,000 -க்கும் அதிகமான கால்நடை இறப்புகளுக்கு இழப்பீடு கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் ஓர் ஆண்டுக்கு 80 முதல் 150 கால்நடைகள்வரை புலி, சிறுத்தைகளால் கொல்லப்படுகின்றன. நோய், விபத்து ஆகியவற்றால் இறக்கும் கால்நடைகளையும், புலி, சிறுத்தைகள் அடித்துக் கொன்றுவிட்டன என்று சொல்லிச் சிலர் இவரிடம் பணம் வாங்க முயல்வதும் இங்கு நடந்துள்ளது. அதனால், கொல்லப்பட்ட அனைத்துக் கால்நடைகளையும் நேரில் பார்த்துச் சோதித்த பின்னர்தான் இழப்பீடு கொடுக்கிறார்.

இதுதவிர, கிராமப் பகுதியில் இருக்கும் நாய்களால் காட்டுயிர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் நாய்களுக்குத் தடுப்பூசிகள் போடுவதையும் இந்த அமைப்பு வழக்கமாக வைத்திருக்கிறது. இதையெல்லாம் இவரின் ஓவியங்களை விற்பனைசெய்யும் பணத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் ஓவியங்களை வாங்க ஆட்கள் இல்லை, அதற்காகப் பெரும் முயற்சிகள் எடுத்தார். இதுபோக ஓவியங்கள் வாங்குபவர்கள் தள்ளுபடி கேட்பார்கள். உங்கள் பணத்தை நல்ல செயலுக்காகத்தான் பயன்படுத்தப் போகிறோம் என்று சொல்லியும், இவரிடம் தள்ளுபடி கேட்டனர், சிலர். அதனால் டெம்பிள் ட்ரீ டிசைன்ஸ் எனும் அமைப்பு ஆரம்பித்து டீ-ஷர்ட்களில் வனவிலங்கு ஓவியங்களை அச்சிட்டு விற்பனையும் செய்து வருகிறார். இதை வைத்துக் கால்நடைகளின் இழப்பீடு சார்ந்த விஷயங்களுக்குச் செலவு செய்துகொண்டிருக்கிறார்.

sunitha dhairyam
sunitha dhairyam

அந்த ஊர் மக்களுக்காக வாழை நாரைக் கொண்டு கைத்தறி நூற்பு பயிற்சி மையம் தொடங்க வேண்டும் என்பதுதான் இவரது அடுத்த இலக்கு. உள்ளூர் மக்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதும், வனவிலங்கு பன்முகத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பற்றி அவர்களுக்கு உணர்த்துவதும் அவசியம் என்று நம்புகிறார், சுனிதா.

அடுத்த கட்டுரைக்கு