Published:Updated:

`சாப்பிடவே கூடாத சிப்பியை வாங்குகிறார்கள்!’ - கொச்சி விபரீதம்

மீனவர்கள்
மீனவர்கள் ( Pixabay )

இவை ஒரு சதுர மீட்டருக்கு 150-200 என்ற அளவில் பரவியிருகின்றன. இவை இப்படி எண்ணிக்கையில் அதிகமாகப் பரவி வாழ்வதால், உள்ளூர் சிப்பி இனங்களுக்குத் தேவைப்படும் வாழ்வாதாரத்தை ஆக்கிரமித்து விடுகின்றன.

'கடவுளின் தேசம்' என்றழைக்கப்படும் கேரளாவிற்கு, அமெரிக்க உவர்நீரில் வாழும் உவர்நீர் சிப்பியினங்கள் (American Brackish water Mussel) படையெடுத்துள்ளன. அது, அங்குள்ள சுற்றுச்சூழல் ஆய்வாளர்களை அதிர்சிக்குள்ளாகியிருக்கிறது. அவை, கேரளாவின் பூர்வீகச் சிப்பியினங்களான பச்சைச் சிப்பிமீன் (Green Mussel) வகைகளை அழித்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றார்கள்.

கொச்சி
கொச்சி
Pixabay

கடந்த சில நாள்களுக்கு முன்பு, கடலோர ஆய்வில் ஈடுபட்டிருந்த சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் சிலர், விநோதமான சிப்பி மீன் வகைகளைக் கண்டனர். பூர்வீக சிப்பி மீன்களைப் (Green Mussel) பற்றி நன்கு பரிச்சயம் உள்ளதால், இது அந்த வகையைச் சேர்ந்ததல்ல என்று அவர்களுக்குத் தெரிந்தது. ஆகவே, அதை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, சந்தேகித்தபடி அது அமெரிக்க உவர்நீர் கடற்காய்கள் (American Brackish water Mussel) என்று உறுதியானது. இதன் அறிவியல் பெயர் Mytella strigata.

இது எப்படி இங்கு வந்தது... எங்கெல்லாம் பரவியிருக்கின்றன... எவ்வளவு அடர்த்தியாகப் பரவியிருக்கின்றன?

அவற்றை மேற்கொண்டு ஆய்வுசெய்த வல்லுநர்கள், இது முதன்முதலாகக் கொச்சியிலுள்ள கழிமுக நீரில் (கடல் சேருமிடத்தில் உள்ள நிலையற்ற ஆற்று நீர் ) காணப்பட்டதை உறுதி செய்தனர். இது கொச்சி துறைமுகத்திற்கு அருகில் உள்ளதால் சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து வரும் கப்பல் மூலம் இவை பரவியிருக்கலாம் என்று கூறுகின்றனர். கப்பலை நிலையாக வைத்துக்கொள்ள ஓரளவுக்கு கப்பலில் நீர் தேக்கி வைக்கப்படும். அந்த நிலைபடுத்தும் நீரை துறைமுகங்களில் வெளியேற்றியபோது, இவை இங்கு வந்திருக்கலாம் என்று கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (குசாட்) கடல்சார் அறிவியல் துறை குழு கருதுகிறது.

அமெரிக்க உவர்நீர் சிப்பிகள்
அமெரிக்க உவர்நீர் சிப்பிகள்

அமெரிக்க உவர்நீர் சிப்பிகள் (American Brackish water Mussel) மூலம் வரும் ஆபத்து என்ன?

இவை (American Brackish water Mussel) பிரதானமாக மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இது சிங்கப்பூரிலும் வேகமாகப் பரவியது. சிங்கப்பூரின் பூர்வ மீன் இனங்களின் வாழ்விடத்தை இது ஆக்கிரமித்து மாற்றியமைத்தது.

5 முதல் 35 பிபிடி (parts per thousand) வரை பரந்த அளவிலான உப்புத்தன்மையுடன் உள்ள தண்ணீரில்கூட இவற்றால் வாழ முடியும். இந்த ஆக்கிரமிப்பு உயிரினம் சூழலியல் அமைப்பை மாற்றியமைக்கும், பூர்வீக உயிரினங்களுடன் போட்டியிடும், உள்ளூர் மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்புக்கு ஆபத்தை விளைவிக்கும், புதிய நோய்களை அறிமுகப்படுத்தும்.

ஒரு நிலப்பகுதிக்குத் தொடர்பில்லாத, புதிய உயிரினம் அந்த நிலப்பகுதிக்கு அறிமுகமாகும்போது அதை அயல் உயிரினம் (Exotic species) என்கிறோம். அவற்றுடைய வாழ்வியல் உள்ளூர் உயிரினங்களின் வாழ்வியலை ஒத்ததாக இருந்தால், அதுவே அந்த வாழ்விடங்களில் வாழ்கின்ற பூர்வீக உயிரினங்களின் வாழ்விடங்களை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டு, அவற்றுடைய இருப்புக்கு ஆபத்து விளைவிக்கும். அப்படி, இயல் உயிரினங்களின் (Native Species) வாழ்விடங்களை அழித்து, அவற்றை அழிவின் விளிம்பிற்குத் தள்ளுகின்ற உயிரினங்களை ஆக்கிரமிப்பு உயிரினங்கள் (Invasive Species) என்று அழைப்போம். அமெரிக்க உவர்நீர் சிப்பி இனமும், அப்படியோர் ஆக்கிரமிப்பு உயிரினமாகத்தான் மாறிக்கொண்டிருக்கிறது.

சிப்பி மீன்கள்
சிப்பி மீன்கள்

இவை ஒரு சதுர மீட்டருக்கு 150-200 என்ற அளவில் பரவியிருகின்றன. இவை இப்படி எண்ணிக்கையில் அதிகமாகப் பரவி வாழ்வதால், உள்ளூர் சிப்பி இனங்களுக்குத் தேவைப்படும் வாழ்வாதாரத்தை ஆக்கிரமித்து விடுகின்றன. இதனால் வாழ்விடப் பற்றாக்குறை ஏற்படும். அதோடு புதிய புதிய நோய்களையும் உள்ளூர் சிப்பி இனங்களின் மத்தியில் இவை அறிமுகப்படுத்தும்.

ஆக்சிஜன் மிகக் குறைவாகக் கிடைக்கும் இடத்தில்கூட இவற்றால் பரவலாக வாழமுடியும் என்பதால், சிப்பி இனங்கள் மட்டுமன்றி மற்ற மீன் வகைகளின் வாழ்விடத்தையும் இவை ஆக்கிரமித்துக்கொள்ளும். அதனால், அந்த வாழ்விடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இயல் உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படுகின்றன.

இது, உண்ணத்தக்க வகையைச் சார்ந்ததல்ல. ஆனால், இதைப் பச்சைச் சிப்பியினம் எனத் தவறாகக் கருதி, சில உள்ளுர்வாசிகள் சாப்பிட்டும் வருகின்றனர். அதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படுமோ என்றும் ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள்.

கடந்த வருடம் இதே போல, கருங்கோடிட்ட சிப்பியினம் (அறிவியல் பெயர்: Mytilopsis sallei ) இதே போலக் கொச்சி பகுதிகளில் பரவியிருந்தன. மீண்டும் அதே போல இந்த வருடம், அமெரிக்க உவர்நீர் சிப்பியினம் பரவியுள்ளதால் சூழலியல் ஆய்வாளர்கள் அச்சத்திலும் கவலையிலும் உள்ளனர்.

உள்நாட்டு உயிரினங்கள்
உள்நாட்டு உயிரினங்கள்
Pixabay

இந்த அந்நிய ஆக்கிரமிப்பு இனங்களின் பெருக்கம் கேரளக் கடற்கரையின் உவர் நீர் வாழ்விடங்களிலுள்ள உள்ளூர் இனங்களின் பன்மைத்தன்மைக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பு உயிரினங்கள் பெரும்பாலும் மனிதத் தலையீடுகளால்தான் ஏற்படுகின்றன. ஒருமுறை ஊடுருவிவிட்டால், அவற்றை முற்றிலும் அப்புறப்படுத்தி, அவை ஆக்கிரமித்த சூழலியலின் தன்மையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது மிகக் கடினம். அதைச் சாத்தியப்படுத்த பல ஆண்டுகள் தேவைப்படும். அந்த இடைப்பட்ட காலத்தில் இவையும் வேகமாகப் பரவும் ஆபத்தும்கூட உள்ளது.

இந்நிலையில், புதிய ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறியுள்ள அமெரிக்க உவர்நீர் சிப்பி இனம் ஆய்வாளர்கள் மத்தியில் அப்பகுதியின் சூழலியல் குறித்துப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலினத்தை மாற்றிக்கொள்ளும் வ்ரேசஸ் மீன்கள்... காரணத்தைக் கண்டுபிடித்த ஆராய்ச்சி
அடுத்த கட்டுரைக்கு