Published:Updated:

புத்தம் புது காலை : சூரியனுடன் ஒரு தீரா காதல்... சூரியகாந்திப் பூவின் கதை தெரியுமா?!

"பெண்ணே… உன் தாய் சொல்வதுதான் சரி. அலைபாயாதே... என்னால் உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மரபல்ல!" என்று அறிவுரை கூறவும், க்ளெய்ட்டி கண்ணீர்மல்க "ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை... தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் வரத்தையாவது கொடு" என்று வேண்டினாள்.

தமிழில் சூரியகாந்தி, ஆங்கிலத்தில் சன்ஃப்ளவர் என்று அழைக்கப்படும் இந்தப் பூவின் அறிவியல் பெயர் ஹீலியாந்தஸ் (Helianthus annuus).

கிரேக்க மொழியில், Helios என்றால் சூரியன், anthus என்றால் பூ என்று பொருள். இப்படி சூரியனையும், மலரையும் இணைத்து தமிழில், ஆங்கிலத்தில், கிரேக்க மொழியில் என அனைத்திலும், ஒரேபோல அழைக்கப்படுவது இந்தப் பூவின் உருவம் சூரியனைப் போல இருப்பதாலா அல்லது சூரியன் செல்லும் திசையில் மட்டும் தன் முகத்தை சாய்த்துக் கொள்வதாலா என்ற கேள்வி எழுகிறதல்லவா?!

ஏன் இப்படி சூரியகாந்தி மட்டும் ஒவ்வொரு நாளும் சூரியன் செல்லும் திசையில், தனது பார்வையால் பயணிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, ஓர் அழகான கதையும், அதற்கான அறிவியல் விளக்கமும் உள்ளது. அறிவோம் வாருங்கள்!

கிரேக்க நாட்டில் வாழ்ந்து வந்த அழகி க்ளெய்ட்டிக்கு பூக்கள் என்றால் அவ்வளவு பிரியம். அவள் வீட்டில் இருப்பதைக் காட்டிலும் தோட்டத்தில் இருக்கும் நேரம்தான் அதிகம். அவளது தாய் தினமும் தரும் வேலைகளையெல்லாம் வேகமாக முடித்துவிட்டு, மீண்டும் தோட்டத்திற்குள் ஓடிவிடுவாள்.

அன்றும் அதேபோலத்தான். எப்போதும் போல தோட்டத்துப் பூக்களுடன் பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருந்தவள், வானம் மேகமூட்டத்தால் சற்றே குளிரத் தொடங்க, நிமிர்ந்து வானத்தைப் பார்க்கிறாள்.

புத்தம் புது காலை : சூரியனுடன் ஒரு தீரா காதல்... சூரியகாந்திப் பூவின் கதை தெரியுமா?!

ஆச்சரியம்... கடவுள்களுக்கெல்லாம் கடவுளான ஜ்யூஸின் மகனான அப்பல்லோ வானில் தனது ரதத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பல்லோதான் கிரேக்கர்களின் சூரியக் கடவுள் என்றும், அவர் தினசரி தனது கிழக்கு மாளிகையிலிருந்து ரதத்தில் ஏறி, மேற்கு நோக்கி வானத்தில் பயணம் செய்வார் என்றும் பலமுறை அவளது தாய் சொல்லிக் கேட்டிருந்தபோதும், அப்போதுதான் அந்த முகத்தை நேராகப் பார்க்கிறாள் க்ளெய்ட்டி.

மேகங்கள் சூழ்ந்து அவரது ஒளியை மட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்த அந்த மங்கிய ஒளியில், அதையெல்லாம் மீறி ஜொலித்துக் கொண்டிருந்த அழகின் அதிரூப வடிவமான அப்பல்லோவை முதன்முதலாகப் பார்த்த க்ளெய்ட்டிக்கு கண்டவுடன் காதல் தோன்றுகிறது.

அன்று முதல், அப்பல்லோவின் முகத்தைக் காண ஒவ்வொரு நாளும் காத்திருந்தாலும், கண்களைக் கூசச் செய்யும் ஒளியைத் தவிர, வேறொன்றும் காண இயலாத க்ளெய்ட்டி, நாட்கள்... வாரங்கள்...மாதங்கள்... வருடங்கள் என காத்திருக்கத் தொடங்கினாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாள் முழுவதும் கிழக்கும் மேற்குமாக வானத்தைப் பார்த்தபடி தனது மகள் தினமும் தோட்டத்தில் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்த அவளது தாய், "மகளே... அப்பல்லோ கடவுளின் ரூபம். அவரால் மனிதர்களைக் காதலிக்க முடியாது. புரிந்து கொள்... அங்குமிங்கும் அலைபாய்ந்து உடலை வருத்திக் கொள்ளாதே" என்று பலமுறை அறிவுறுத்தியபோதும், அப்பல்லோ அவளது காதலை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தாள் க்ளெய்ட்டி.

பூமியில், தனக்காக தவமாய் தவமிருக்கும் இந்த அழகிய பெண்ணைப் பார்த்த அப்பல்லோ மனமிறங்கி ஒருநாள் அவள்முன் தோன்றி, "பெண்ணே… உன் தாய் சொல்வதுதான் சரி. அலைபாயாதே... என்னால் உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மரபல்ல!" என்று அறிவுரை கூறவும், க்ளெய்ட்டி கண்ணீர்மல்க "ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை... தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் வரத்தையாவது கொடு" என்று வேண்டினாள்.

புத்தம் புது காலை : சூரியனுடன் ஒரு தீரா காதல்... சூரியகாந்திப் பூவின் கதை தெரியுமா?!

அப்பல்லோ அவளுக்குக் கொடுத்த வரத்தின்படி அந்தத் தோட்டத்திலேயே பூச்செடியாக மாறினாள் க்ளெய்ட்டி.

அன்றிலிருந்து, ஒரே இடத்தில் வேரூன்றி, தனது காதலனைப் பார்த்தவுடன் முகமலர்ந்து, தனது காதலன் செல்லும் திசையெல்லாம் தனது தலையை சாய்த்து, இன்றும் தனது ஒருதலைக் காதலை ஆணித்தரமாக உணர்த்துகிறாள் க்ளெய்ட்டி என்ற சூரியகாந்தி என்கிறது இந்த கிரேக்கக் கதை.

தனது வாழ்நாளையே காதலுக்காக அர்ப்பணித்த பெண்ணின் மறு உருவமாக சூரியகாந்தி காணப்படுவதால் தான், தங்களது காதலில் நம்பிக்கையைக் கூட்ட காதலர்கள் சூரியகாந்தி பூங்கொத்தினை பரிசாக அளிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இதுபோன்ற கதைகளைக் கேட்க நன்றாக இருந்தாலும் அறிவியல் தானே நமக்கு அறிவு? சூரியகாந்தியின் இந்த தலைசாய்த்த பயணத்திற்கு அறிவியல் என்ன சொல்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்!

புத்தம் புது காலை : சூரியனுடன் ஒரு தீரா காதல்... சூரியகாந்திப் பூவின் கதை தெரியுமா?!

எப்படி செடியின் வேர்கள் மண்ணுக்குள் நீரைத்தேடி வளர்வதை Geotropism என்ற புவிநாட்டம் என்கிறோமோ, அதேபோல சூரிய ஒளியைத் தேடி, செடிகள் வளர்வதை Phototropism என்ற சூரிய ஒளி சார்ந்த அசைவு என்கிறோம். இந்த Phototropism தான், சூரியனைக் கண்டவுடன் சூரியகாந்தியை மலரச் செய்கிறது.

அதேபோல் சூரியன் பயணிக்கும் திசையில் சூரியகாந்தி தலைசாய்ப்பதை ஒளிதூண்டுதிருப்பம் என்று அழைக்கும் அறிவியல் 'Auxin' என்ற தாவர ஊக்கி தான் இதற்கு காரணம் என்றும் கூறுகிறது. உண்மையில் இந்த ஆக்சின்கள் தான் செடியின் தண்டுகள் நன்கு தழைத்து வளர உதவுகிறது என்றாலும், இவை சூரிய ஒளியால் சிதைந்துவிடும் தன்மை கொண்டவை என்பதால், பொதுவாக ஆக்சின்கள் நிழலில் மட்டுமே அதிகம் சுரக்கின்றன.

இதனால் ஆக்சின்கள் சுரக்கும் தண்டு முடிச்சுகள் சூரியகாந்திப் பூவை ஒரு குடைபோல செயல்பட வைத்து, அதைச் சூரியனை நோக்கித் திருப்பிவிட்டு, அந்தப் பூவின் நிழலில் அதிகம் சுரந்து, செடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

அத்துடன் ஆக்சின்கள் சுரக்கும் முடிச்சுகளின் எடை கூடும்போது, அதை சமன்செய்ய, சூரியகாந்திப்பூ இன்னும் சூரியனை நோக்கி அதிகமாகத் திரும்புவது, நமக்கு பூ காதலுடன் திரும்புவதாக கதைகள் சொல்லவும் வைத்திருக்கிறது.

கதைகள் எப்போதும் அழகானவை தான்... அந்த கதைகள் வளர்க்கும் நம்பிக்கைகள் இன்னும் அழகானவை... ஆனால், அறிவியல் என்னும் உண்மை தான், இந்த நம்பிக்கைகளிடம் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பி, அறிவுவிதைகளை நம்முள் எப்போதும் விதைத்து, நம்மை வளர்த்துக் கொண்டிருக்கின்றன!

#seeds_of_science

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு