Published:Updated:

கற்பதற்கு இடம் தடையில்லை... சலூன் கடையில் நூலகம் நடத்தும் இந்தியன் கணேசன்! ~ திரைகடலோடியும் - 5

சலூன் நூலகத்தில் கணேசன்

சலூனில் அருமையான நூல்களின் சேகரம் இருக்கிறது. குறைந்தபட்சம் இப்படியெல்லாம் நூல்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதே ஓர் அறிவுதான். சிலருக்கு வாசிப்பு பிடித்துப்போய், `இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுத் தருகிறேன்’ என்று கேட்பதே கணேசனுக்குப் பெரிய வெற்றிதான்.

கற்பதற்கு இடம் தடையில்லை... சலூன் கடையில் நூலகம் நடத்தும் இந்தியன் கணேசன்! ~ திரைகடலோடியும் - 5

சலூனில் அருமையான நூல்களின் சேகரம் இருக்கிறது. குறைந்தபட்சம் இப்படியெல்லாம் நூல்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதே ஓர் அறிவுதான். சிலருக்கு வாசிப்பு பிடித்துப்போய், `இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுத் தருகிறேன்’ என்று கேட்பதே கணேசனுக்குப் பெரிய வெற்றிதான்.

Published:Updated:
சலூன் நூலகத்தில் கணேசன்

புதுக்கோட்டை மாவட்டம், மணல் மேல்குடி பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களில் ஒன்று `ஓம் இந்தியன் சலூன்.’ இந்த சலூனின் உரிமையாளர் இந்தியன் கணேசன் (56), வேறொருவரிடமிருந்து இந்தக் கடையை வாங்கியதால் கடையின் பெயரை அப்படியே வைத்துக்கொண்டதோடு தன்னுடைய பெயரில் அதை முன்னொட்டாகவும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

சலூன் எப்போதும் பரப்பரப்பாக இருக்கிறது. தன் முறைக்குக் காத்திருப்பவர்கள் யாரும் பொழுதை வீணடிக்க வேண்டியதில்லை; சலூனில் அருமையான நூல்களின் சேகரம் இருக்கிறது. எடுத்து வாசிக்கலாம், சந்தடியில்லாமல் ஊருக்குள் ஒரு வாசிப்பு இயக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் கணேசன். சலூனில் சிகை திருத்திக்கொண்டிருந்த அவரின் பட்டதாரி மகன் வரவேற்பாக எங்கள் மீது ஒரு புன்முறுவலை உதிர்த்துவிட்டு இயல்பாகத் தன் வேலையைத் தொடர்கிறார்.

`சிகை திருத்தகத்தில் ஒரு நூலகம்’ என்னும் கருத்து கணேசனுக்குள் எப்படி விதையாய் விழுந்தது?

இந்தியன் கணேசன் தனது சலூன் நூலகத்தில்
இந்தியன் கணேசன் தனது சலூன் நூலகத்தில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``சிறு வயதிலிருந்தே எனக்கு படிப்பு மேல ரொம்ப ஆர்வம். அந்த ஆர்வத்தாலேயே நான் அந்தக் காலத்தில் அப்பா சலூன்ல முத்தாரம், தினமலர், தினத்தந்தி மாதிரி பேப்பர்கள் படிச்சிருந்தேன். வகுப்பில் முதல் மாணவனாய் இருந்தேன். ஆசிரியர்கள் என்னை ஊக்குவித்தார்கள். என்னைப் பள்ளியில் கொண்டுபோய்ச் சேர்த்ததே ஓர் ஆசிரியர்தான். ஆறாவது படிக்கையில் முழு ஆண்டுத் தேர்வு முடிந்த பிறகு கோடை விடுமுறையில் அப்பா இறந்துவிட்டார். குடும்பச் சூழ்நிலையில் என் படிப்பு நின்றுபோனது. எனக்குத் தாங்க முடியாத சோகம். அதையும் மீறி படிக்கணும் படிக்கணும்னு முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன்.

1984-ல் பிழைப்புக்காக அம்மாப்பட்டினத்திலிருந்து மணமேல்குடிக்குக் குடும்பத்தோடு வந்துவிட்டோம். எங்கள் சலூனின் பக்கத்தில் ஒரு நூலகம் இருந்தது. வேலை நேரம் போக, மீதி நேரமெல்லாம் நூலகத்தில்தான் இருப்பேன். பெரியாரை, உலகத்தை, எல்லாவற்றையும் அங்கேதான் படித்தேன். நான் படிக்கிறதோட நிறுத்திவிடக் கூடாதென்று மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன். அவர்களுக்கு என்னால் என்னென்ன புத்தகங்களைக் கொடுக்க முடியுமோ அதைக் கொடுப்பேன், ஒரு சேவை மாதிரி. படிப்பதற்காகவே என்னிடம் வருவார்கள். அந்த நேரத்தில் ஜோசப் ஆசிரியருடைய நட்பு கிடைத்தது. அவர் கலை இலக்கியப் பெருமன்றத்துக்காரர் அவர் வழியாக இலக்கியங்கள் அறிமுகமானது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிதாய் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது, படிப்பு தடைபடக்கூடாது. எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி இருந்தது. அப்போதுதான் (1996-ல்) தமிழக அரசு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தைக் கொண்டு வந்தது. அந்த ஆண்டிலேயே எம்.ஏ சேர்ந்து படித்தேன். எம்.ஏ பாஸ் ஆன பிறகு, இலக்கணம் கற்றுக் கவிஞராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பி.லிட். எழுதித் தேறினேன். பிறகு எம்.ஏ தமிழ் எழுதி முதல் வகுப்பில் தேறினேன். 2010-ல் நடந்த செம்மொழி மாநாட்டுக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். அதில் அழைப்புப் பெற்று நோக்கராக மூன்று நாள்கள் கலந்துகொண்டேன்.

2011-ல் `ஒற்றைக் கீற்று’ என்னும் தலைப்பில் ஒரு கவிதை நூல் வெளியிட்டேன், 2016-ல் இன்னொரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டேன். உங்களைப் போல என்னைப் பார்க்க வந்த ஒருவர், `இந்த சலூன் நூலகத்தைப் பற்றி உலகத்துக்கு தெரிய வேண்டும், அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்’ என்று வார இதழ் ஒன்றில் ஒரு பேட்டிக்கு ஏற்பாடு செய்தார், 2017 தீபாவளி சிறப்பிதழில் புகைப்படங்களுடன் ஐந்து பக்கம் எழுதி யிருந்தார்கள். பிறகு, கல்கியிலிருந்து வந்திருந்தார்கள். அது அடுத்த பொங்கல் மலரில் வெளியானது. தொழிலோடு நூலக முயற்சியையும் எழுத்து முயற்சியையும் கைவிடாமல் தொடர வேண்டும் என்று ஆசை.”

நூல்கள்
நூல்கள்

வாய்ப்பு மறுக்கப்பட்ட சூழலையே புதிய வாய்ப்பாகக் கருதி மேற்கொண்ட முயற்சி கணேசனுக்குப் புதிய முகவரியைத் தந்திருக்கிறது. நவீன இலக்கியங்கள் தொடங்கி சங்க இலக்கியம், இலக்கணம் வரை பல்வேறு வகையான நூல்களை அவரது சிகைத் திருத்தகத்தில் இருப்புச் செய்திருக்கிறார், வருகையாளர்கள் குறைந்தபட்சம் இப்படியெல்லாம் நூல்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதே ஓர் அறிவுதான். நூல்களை எடுத்துப் புரட்டிப் பார்ப்பவர்களில் சிலருக்கு வாசிப்பு பிடித்துப்போய், `இந்தப் புத்தகத்தை படித்துவிட்டுத் தருகிறேன்’ என்று கேட்பதே கணேசனுக்குப் பெரிய வெற்றிதான்.

இப்படித்தான் மணமேல்குடியில் நிறைய வாசிப்பு ஆர்வலர்களை இவர் உருவாக்கியிருக்கிறார். வகுப்பறையைத் தாண்டிய வாசிப்பு, கல்வித்திட்டத்தைத் தாண்டிய அறிவூட்டல் - எப்படி வேண்டுமானலும் வைத்துக்கொள்ளலாம். சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி ஈர்ப்புகளைக் கடந்து மனிதர்களைப் புத்தக வாசிப்புக்குள் இழுத்துச் செல்ல கணேசன் கையாண்டிருக்கும் உத்தி நடைமுறையில் கைகொடுத்திருக்கிறது. சாதித்தவர்களின் வாழ்க்கையில் நேர்ந்த இழப்பும் அவமானங்களுமே சாதனைகளுக்குப் படிக்கற்களாய் இருந்திருக்கின்றன. அதற்குக் கணேசனின் வாழ்க்கை இன்னுமோர் உதாரணம்.

மணமேல்குடி ஒரு பெரிய ஊர். இங்குள்ள வர்த்தக சங்கம் கணேசனின் செயல்பாடுகளுக்கு மிகுந்த ஆதரவு கொடுக்கிறது. இரண்டுமுறை அதில் நிர்வாகப் பொறுப்பில் இருந்திருக்கிறார், மருத்துவர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர், த.மு.எ.க சங்கப் பொறுப்பாளர் உள்ளிட்ட பல பொறுப்புகள் வகித்திருக்கிறார்.

``அப்பாவின் இறப்பால் எனக்கு ஏற்பட்ட பேரிழப்பு, அவமானம், தவிப்பு நாட்டில் எந்தச் சிறுவனுக்கும் (சிறுமிக்கும்) ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற மனவுறுதியோடுதான் இந்தப் புத்தகம் பகிரும் முயற்சியைத் தொடங்கினேன். பள்ளிக்கும் கல்லூரிக்கும் போகாமலும் படிக்க முடியும் என்று என்னைப் போன்ற வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு நான் வகைமாதிரியாய் வாழ விரும்பினேன். பொருளாதார ரீதியாகப் படிக்கச் சிரமப்படும் மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்து கொண்டே இருக்கிறேன்.

புத்தக வாசிப்பு
புத்தக வாசிப்பு

மருத்துவ சமூகத்தவர்களை மற்ற சமூகங்கள் எப்படி நடத்துவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், நான் தேடிப் பெற்ற அறிவு எனக்கொரு புதிய தகுதியைத் தந்திருக்கிறது. வயது மூப்பு பாராமல் என்னை வாடா போடா என்று கட்டளையிட்டவர்கள் இன்று வாங்க என்று மரியாதையோடு பார்ப்பதும் அண்மைக் காலத்தில்தான். ஆனால், பெரியாரைப் படிக்கத் தொடங்கிய காலத்திலேயே சாதி ஒடுக்குதல் என்பதிலிருந்து வெளியேறிவிட்டேன்.”

இந்தியன் கணேசனுக்கு மட்டுமல்ல, வாசிக்கிற எந்த மனிதனுக்கும் வரலாற்றைக் கடந்து செல்லுதல் சாத்தியம்தான் எனத் தோன்றுகிறது. `சலூனில் தொடங்கியிருக்கும் இந்த முன்னோடி முயற்சி, பேருந்து நிலையம் போன்ற சமூகக் கூடுகை நிகழும் எல்லா இடங்களுக்கும் நீட்சி பெற வேண்டும்’ என்பதாக கணேசனின் கனவு விரிகிறது.

தொடரும்...