Published:Updated:

கடற்கரையில் கேட்கும் பெண்களின் பெருந்துயர்கள்| திரைகடலோடியும் - 8

ஜெகதாப்பட்டினம் கடற்கரை

ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் இருநூறுக்கு மேற்பட்ட விதவைகள் தவிர, கணவனால் கைவிடப்பட்ட/ கணவனை விட்டுப் பிரிந்து வாழ்கிற பெண்கள் ஏராளமானோர் இருப்பதாக குறிப்பிட்டுச் சொன்னார் ஏழாச்சி.

கடற்கரையில் கேட்கும் பெண்களின் பெருந்துயர்கள்| திரைகடலோடியும் - 8

ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் இருநூறுக்கு மேற்பட்ட விதவைகள் தவிர, கணவனால் கைவிடப்பட்ட/ கணவனை விட்டுப் பிரிந்து வாழ்கிற பெண்கள் ஏராளமானோர் இருப்பதாக குறிப்பிட்டுச் சொன்னார் ஏழாச்சி.

Published:Updated:
ஜெகதாப்பட்டினம் கடற்கரை

அக்டோபர் 12 (2019) பிற்பகலில் புதுகை செல்வாவின் ஏற்பாட்டில் படப்பதிவாளர் நவீனுடன் புதுக்கோட்டைக் கடற்கரையில் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்துக்குப் போனேன். படகணையும் துறையில் கட்டிப் போடப்பட்டிருந்த கொஞ்சம் விசைப்படகுகள் ஒழிய, துறைமுகத்தில் பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லை. மீன் உலர்த்தும் தளங்களைக் கடந்து ஒரு மதில்சுவர் போல் தெரிந்த மறைப்பைக் கடந்து உள்ளே போனோம். பழுது பார்ப்பதற்காக ஓரிரு பழைய படகுகள் கரையேற்றி வைக்கப்பட்டிருந்தன. அருகில் மீனவர் ஓய்வுக்கூடம்.

மீன்பிடி படகுகள்
மீன்பிடி படகுகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்கு மாணிக்கசாமியும் (வானகிரி, 66) அவருடைய ஒன்றுவிட்ட சகோதரி ஏழாச்சியும் (60) உட்கார்ந்திருந்தனர். துறைமுகம் நிறுவிய காலத்தில் நாகப்பட்டினம் பகுதியிலிருந்து விசை மீன்பிடி படகுகளோடு புலம் பெயர்ந்தவர்களில் மாணிக்கசாமியும் ஒருவர். மதிய உணவுக்குப் பிறகு மீனவர் ஓய்வுக்கூடத்தில் பத்திரப்படுத்தப்பட்டிருந்த இழுவைமடிக் குவியலின் மேல் உட்கார்ந்து கடலைப் பார்த்தவாறு காற்று வாங்கிக் கொண்டிருந்த மாணிக்கசாமியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

“ஒரு போட்டு வாங்கிட்டு (வானகிரியிலிருந்து) இங்க வந்து 32 வருசம் ஆவுது. முன்னால மரபோட்டு (பலகைக் கட்டு) வெச்சிருந்தோம். அத ஒடச்சிப் போட்டுட்டு இப்போ ஸ்டீல் போட்டு வச்சுத் தொழில் பாத்துட்டிருக்கோம். இப்போ ரெண்டு மூணு வருஷமாத் தொழிலுக்கெல்லாம் என்ன அழச்சிட்டுப் போகமாட்டாங்க- நீ ரெஸ்ட் எடுன்னு.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விசைப்படகுத் தொழிலுக்கு வருவதற்கு முன்னால் என்ன தொழில் செய்து கொண்டிருந்தீர்கள்?

“வானகிரியில கட்டுமரம் வச்சிருந்தோம். 23, 25 வயசுல கட்டுமரம் வச்சித் தொழில் பண்ணினேன். கல்யாணம் முடிஞ்சி ரெண்டு குழந்தையாகி, பையன்க வளந்தப்புறம்தான் இங்க வந்தோம். எனக்கு அஞ்சு கொழந்தைக - ரெண்டு பையனும் பொண்ணுகளும். பையன் கொஞ்சம் வளந்தப்புறம், ‘அப்பா, தொழில மாத்தணும்பா'’ன்னான். ‘எனக்குப் போட்டு வாங்கிக்குடு’ன்னு கேட்டான். போட்டு வாங்கிட்டு இங்க வந்தோம். அப்புறமா ரெண்டு போட்டு வாங்கினோம். தொழில் மொறயெல்லாம் மொதல்ல நல்லாயிருந்துச்சு. நாங்களே இந்தக் கடலுக்குப் பழகிக்கிட்டோம்…”

மீன்பிடி படகுகள்
மீன்பிடி படகுகள்

தொடக்கத்தில் விசைப்படகுத் தொழில் எப்படி இருந்தது?

“போட்டெடுத்துட்டுக் கடலுக்குப் போயிட்டாலே சாப்பாட்டுக்குப் பஞ்சம் கெடயாது. இப்போ எல்லாமே தலைகீழாயிடுச்சி. வருமானமெல்லாம் நொம்பப் கொறஞ்சி போயிடுச்சி. நாட்டுப்படகுன்ற சின்னப்படகுங்க வந்ததுக்குப் பெறகுதான் எங்களுக்குப் பாடுபலமே வீணாப்போச்சி. கரையில மீனு செனப்பு வைக்கிறதெல்லாம் மூணு நாட்டிக்கடலுக்குள்ளதான். நாட்டுப்படகுக்காரன் இந்த செனப்பையெல்லாம் அழிச்சுடுறாங்க. பாசியிலதாம் நண்டு இறாலு மீனு எல்லாம் உற்பத்தியாவும் இங்க பெரிசான பெறகுதான் மேல ஏறும். அஞ்சு பத்து நாட்டிக்கலுக்குள்ள வரும். இவங்க அதையெல்லாம் அரிச்சி அழிச்சிர்றாங்க. இனப் பெருக்கம் நடக்கிற எடத்திலியே அழிச்சிர்றாங்க. தூத்துக்குடியிலயிருந்து பெரியபெரிய வள்ளம் வச்சிக்கிறவுக நாங்க மடிஇழுக்கற கடல்ல- இங்கயிருந்து மணமேல்குடி வர- குறுக்க வலயப் போட்டுர்றாங்க. மூணு நாளய்க்கித் தங்கல்ல இருந்து அந்த மீனையெல்லாம் புடிச்சிர்றாங்க. அடுத்த நாளு நாங்க அங்க போயி இழுவைமடியப் போட்டம்னா ஒண்ணையும் காணாது.”

இது, மாநில அரசு இழுவைமடி, இரட்டைமடி, சுருக்குமடிகளுக்குத் தடை விதித்திருக்கும் சூழலில், பாரம்பரிய, நாட்டுப்படகுத் தரப்பினரின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியாத இழுவைமடித் தரப்பினர் நுட்பமாய்க் கட்டமைக்கும் வெற்று வாதமா?

“ஜெகதாப்பட்டினத்துல 400 (விசைப்) படகு இருந்திச்சு. இப்போ 280, 270தான் இருக்கு. காரைக்கால், நாகப்பட்டினத்துல உள்ளவங்க எல்லாம் அங்கேயே போயிட்டாங்க. கோட்டைப்பட்டினத்துல 350 படகு இருக்குது. சேதுபாவாசத்திரத்துல கஜாப் புயலுக்கு முன்னால 200 படகு இருந்தது, இப்போ ஐம்பது, அறுபது இருக்கும். போட்டுகள இப்பத்தான் கட்டிக்கிட்டிருக்காங்க. அவ்வளவு போட்டுகளுக்குமே இப்போ தொழில் கொறஞ்சி போச்சி.''

கடற்கரையில் கேட்கும் பெண்களின் பெருந்துயர்கள்| திரைகடலோடியும் - 8

அருகிலிருந்த ஏழாச்சி தன் கதையைச் சொன்னார்.

“எனக்கு ஏழு பொண்ணுக, மூணு செத்துப்போச்சி, ஒரேயொரு பையன். அவன் பொறந்த மூணாவது நாளைக்கி மூளக்காச்சலடிச்சு ஊமையாயிட்டான். அவனுக்கு முப்பது வயசாவுது. கடலுக்குத் தொழிலுக்குப் போறான். நான் ரெண்டாந் தாரமாத்தான் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். வானகிரியில கல்யாணமாகி, அங்க மூணு கொயந்த பொறந்ததுக்கப்புறம் ஜெகதாப்பட்டினத்துக்கு வந்தோம். அஞ்சு வருசமா இந்த ஊர்ல போட்டு வச்சுட்டிருந்தேன். நடத்தறதுக்கு எனக்கு ஆளில்லாம போட்டக் குடுத்திட்டேன். அப்புறம் 35 வருசமா நான் மீன் யாவாரம்தாம் பண்ணிகிட்டிருக்கேன்.

மீன்பிடி படகுகள்
மீன்பிடி படகுகள்

எங்க வீட்டுக்காரரு முடியாதவரு, எம்புள்ள ஊம, எனக்கு யாரு சம்பாரிச்சுப் போடுவா? அண்ணங்காரம் புள்ள தம்பி புள்ளைக மீன் புடிச்சிட்டு வருவாக, நான் வித்துக் குடுப்பேன். அவங்க 50, 100 ரூபா குடுப்பாங்க. 500, 1000, 2000 போய்க்கு மீனு வாங்கிட்டுப் போவேன். அதைக் கொண்டு தெருவுல விப்பேன்.”

ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் இருநூறுக்கு மேற்பட்ட விதவைகள் தவிர, கணவனால் கைவிடப்பட்ட/ கணவனை விட்டுப் பிரிந்து வாழ்கிற பெண்கள் ஏராளமானோர் இருப்பதாக குறிப்பிட்டுச் சொன்னார் ஏழாச்சி. மனைவி, பிள்ளைகளைப் பற்றி அக்கறைப்படாமல் தன் போக்கில் குடியே கதி என்று நடக்கிற கணவர்கள்; குடிப்பதற்குப் பணம் கேட்டு மனைவியைத் துன்புறுத்தும் கணவர்கள்- இப்படி நிறையப்பேர் ஊரில் இருக்கிறார்கள். சில விவகாரங்கள் பஞ்சாயத்தாரின் பரிசீலனைக்கு வரும். பஞ்சாயத்துச் செய்து அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினாலும் பிரச்சினை அதோடு தீர்ந்து விடுவதில்லை.

மாணிக்கசாமி தொடர்ந்து பேசுகிறார்:

''மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு வேறொரு பெண்ணைத் தேடிப் போகிற கணவர்களைப் போல, இன்னொரு ஆணின் பொருட்டு கணவனை உதறிவிடும் பெண்களும் ஊரில் இருப்பதாய்ச் சொல்கிறார் ஏழாச்சி. சம்பாதித்து வருவதை மனைவி கையில் சேர்க்காமல் குடித்து அழிக்கும் கணவனோடு வாழப் பிடிக்காமல் பிள்ளைகளோடு அவனிடமிருந்து விலகி வாழும் பெண்களும் அங்கு வாழ்கிறார்கள் என்கிற ஏழாச்சியைத் துரத்திக்கொண்டிருக்கும் பெருந்துயர் வேறொன்று:

கடற்கரையில் கேட்கும் பெண்களின் பெருந்துயர்கள்| திரைகடலோடியும் - 8

``நானுந்தான் நொம்பக் கஷ்டப்பட்டு வாழ்றேன். புருஷன் கடலுக்குப் போவாரு. 500 ரூபா கெடச்சா 200 ரூபாய எடுத்திட்டு 300 ரூபாய நம்ம கையில தருவாரு; 200 ரூபா கெடச்சா அத அவரே செலவு பண்ணிடுவாரு... சின்னதிலேருந்தே கஷ்டப்பட்டு, இப்போ 60 வயசு வரைக்கும் கஷ்டந்தாம். நிம்மதியான குடும்பங் கெடயாது எங்களுக்கெல்லாம். தலைக்கு மேல பெரிய பாரம் இருக்கு. ரெண்டு காதுலயும் உளுகாதவன வெச்சி (பேச்சுத்திறனற்ற மகன்) ஒரு கோடிய குடுத்தாலும் அத வச்சி அவன் ஒண்ணும் செய்யப் போறதில்லை. வாயில்லாதவம் பொறக்கிறதே வேஸ்ட்டு! காரியம் சாதிக்க முடியாது! அவன்லாம் நாட்ல இருக்கிறது வேஸ்ட்டு! அவம் பொறந்த பொறகு நொம்ப நொம்ப வேதன! எனக்கு வெசனம்னா அப்புடியொரு வெசனம். அந்த எறக்கி வைக்க முடியாத பாரத்தத் தலையிலே சொமந்துகிட்டுத்தான் ஆண்டவங்கிட்ட வேண்டிகிட்டிருக்கிறேன். என்ன சிலுவையில அறஞ்சிருக்கிறாப்பிலதான் இருக்கு...''

சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஏழாச்சிக்குக் கண்ணீர் பெருகிக் கன்னங்களில் வழிந்தோடுகிறது. குரல் கரகரத்துத் துயரமாய்த் தொனிக்கிறது.

-அலை பாயும்