Published:Updated:

`அனுபவம் போதாது!' - விமர்சனங்களைத் தாண்டி வடசென்னை புகைப்படக்கலைஞர் சண்முகானந்தம் சாதித்த கதை!

மூத்த உறுப்பினர்கள் கேட்ட அந்தக் கேள்வி, அவரிடம் வடசென்னையில் வாழும் இளைஞர்கள், விளிம்பு நிலையில் வாழும் இளைஞர்கள் தொழிலைத் தாண்டி, காட்டுயிர் ஒளிப்படக்கலைக்குள் ஆழமாகக் கால் பதிக்க முடியாமலிருப்பதை அவருக்கு உணர்த்தியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1990-களின் தொடக்கத்தில், எல்லீஸ் சாலையில் ஃபிலிம் ரோல்களை பிரின்ட் போட டார்க் ரூம்களில் கொடுத்துவிட்டு நீண்டநேரம் காத்திருப்பார். அந்த நேரத்தில், பழைய புத்தகக் கடைக்குச் சென்று நூல்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோதுதான் அவருக்கு அந்த இதழ் அறிமுகமானது. ஆங்கில மொழி தெரியாத சூழலிலும் பம்பாயிலிருந்து வெளியான சேன்ச்சுவரி ஏசியா (Sanctuary Asia) என்ற அந்த இதழிலிருந்த காட்டுயிர்ப் படங்களால் ஈர்க்கப்பட்டு அதைத் தொடர்ந்து வாசிக்க முயல்கிறார்.

அப்போதுதான், "காட்டுயிர்களுக்கு என்றே இப்படியொரு தரமான இதழைத் தமிழில் யாராவது கொண்டுவந்தால் நன்றாக இருக்குமே" என்ற எண்ணம் அவருக்கு முதன்முறையாகத் தோன்றியது. ஆனால், எதிர்காலத்தில் அதைத் தாமே சாதிக்கப் போகிறோம் என்று அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

புள்ளி மான்கள்
புள்ளி மான்கள்
ஏ.சண்முகானந்தம்

தேசிய மற்றும் சர்வதேச அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுயிர் ஒளிப்படக்கலை போட்டிகளில் கலந்துகொண்டு, விருதுகளையும் வாங்கியவர் காட்டுயிர் ஒளிப்படக்கலைஞர் ஏ.சண்முகானந்தம். குடும்பத்தின் பொருளாதார நெருக்கடிகளுக்கு நடுவிலும் ஒளிப்படத் துறையில் போராடித் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர்.

வசதியான பொருளாதாரப் பின்புலம் இல்லாத, எளிமையான குடும்பத்திலிருந்து வந்த அவர், கிண்டி ஐ.டி.ஐ-ல் ஒளிப்படக்கலையைக் கற்றுத்தேர்ந்தார். அவர் இடத்தில் சராசரி மனிதர் இருந்திருந்தால், அதன்மூலம் தொழில் முனைவதில், வாழ்வை நோக்கிய பயணத்தில் கவனம் சென்றிருக்கும்.

அதை ஒருபுறம் வாழ்விற்காகச் செய்தாலும், அவருடைய மனம் அதில் முழுமையாக ஈடுபடவில்லை. தன் முதல் கேமராவான பென்டாக்ஸ் கே1000-ஐ (Pentax K1000) எடுத்துக்கொண்டு தன் வீட்டருகில் இருந்த குளங்களில், உயிரினங்களைத் தேடி அலைந்தார். கேமராவோடு கிளம்பியவர், தொழிலுக்காகச் சென்றதைவிட உயிரினங்களைத் தேடிக் கிளம்பிய நாள்கள் அதிகம். பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என்று பல்வேறு உயிரினங்களை ஒளிப்படங்களில் பதிவுசெய்கிறார்.

பம்பாய், காசி, டெல்லி என்று ஒளிப்படக்கலை பயிற்சிகளுக்காக நாடு முழுக்கப் பயணித்ததோடு, தமிழகத்தில் இருந்த முக்கியமான துறைசார் ஆளுமைகளான தியாகராஜன், டி.எஸ்.கே.கரன் எஸ்.விஜயமூர்த்தி, டி.என்.ஏ.பெருமாள், விவேகானந்தன், வாசுதேவன் என்று அனைவரையும் தேடித்தேடிச் சென்று அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயன்றது அவருடைய தேடல் குணம். தமிழகத்தில் பெரும்பாலான காடுகளுக்குப் பயணித்துவிட்ட அவர், தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளுக்கும் வட இந்தியாவில் சில காடுகளுக்கும் காட்டுயிர் ஒளிப்படங்களுக்காகப் பயணித்துள்ளார்.

இந்தப் பொறுப்பை எப்படி உங்களிடம் கொடுப்பது? உங்களுக்கு அனுபவம் போதாது. அதுமட்டுமன்றி நீங்களெல்லாம் இதைச் செய்யக்கூடிய ஆட்களும் கிடையாது.
முன்னாள் மூத்த உறுப்பினர், ஃபோட்டோகிராஃபி சொசைட்டி ஆஃப் சென்னை
ஏ.சண்முகானந்தம்
ஏ.சண்முகானந்தம்

ஒளிப்படக்கலைக்குள் நுழைந்த நேரத்தில், உயிரினங்கள் குறித்த தெளிவு அவருக்கில்லை. அவற்றின் மீதான ஈர்ப்பு மட்டுமே இருந்தது. அதற்கும் அந்த உயிரினங்களுக்கும் இடையே பாலமாக அவர் கையில் இருந்த கேமரா விளங்கியது. அந்தப் பாலத்தைப் புதுப்பித்துக்கொண்டேயிருக்க அவர் கொடுத்த விலை சாதாரணமல்ல.

அன்றைய நிலை இன்றுபோல் இருக்கவில்லை. ஒரு படம் எடுத்தவுடனேயே அதைப் பார்த்து, சரியாக வந்துள்ளதா என்று உறுதி செய்துகொள்ள முடியாது. நெகட்டிவ் ரோல்களை பிரின்ட் போட்ட பிறகே தெரியும். குறைந்தபட்சம் 30 படங்கள் எடுத்தால், அதில் ஒன்றுதான் சரியானதாக, தரமானதாக இருக்கும். பொருளாதாரப் பின்பலம் இல்லாத ஓர் இளைஞர், குடும்பச் சூழலைத் தாண்டி நெகடிவ் ரோல்களுக்கும் பிரின்ட் போடுவதற்கும் செலவு செய்வது ஆடம்பரமாகக் கருதப்பட்ட சூழல் அது. காட்டுயிர் ஒளிப்படக்கலை என்பது பணம் படைத்தவர்களுக்கானதாக இருந்த தருணத்தில், தனக்கிருந்த அத்தனை சிரமங்களையும் கடந்து தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படங்களை பிரின்ட் போடுவது, போட்டிக்கான நுழைவுக் கட்டணம் செலுத்துவது என்று மொத்தச் செலவையும் பொருளாதாரச் சிக்கல்கள், மோசமான குடும்பச் சூழலுக்கு நடுவே போராடிச் சமாளித்து, விடாமல் முயன்றுகொண்டிருந்தார். அந்தத் தீவிர உழைப்புக்கு அங்கீகாரமும் கிடைத்துக்கொண்டிருந்த நேரம் அது.

20 வயதில் தொடங்கிய இந்தப் பயணம், அவருடைய 28-வது வயதில் ஒரு தடங்கலைச் சந்திக்கிறது. குடும்பம், மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்ததால் வேறு வழியின்றி, இவற்றைக் கைவிட்டுக் குடும்பத்திற்காகத் தன் நேரத்தை முழுமையாகச் செலவழிக்க வேண்டிய சூழல். தொலைபேசி வசதிகள்கூட இல்லாத காரணங்களால் போட்டோகிராஃபி சொசைட்டியோடு இருந்த தொடர்பு, துறைசார்ந்த நட்பு வட்டம் அனைத்துமே தடைபடுகிறது. வேறு வழியின்றிச் சுமார் ஐந்து ஆண்டுகளுக்குக் காட்டுயிர் ஒளிப்படக்கலை ஓய்வெடுக்கத் தொடங்குகிறது.

காட்டுயிர்
காட்டுயிர்
ஏ.சண்முகானந்தம்
3 வழிகாட்டுதல்கள்: கல்விக் கடன், காட்டுயிர் ஆய்வாளர் படிப்பு, அரசு வேலைக்கு உறுதுணை!

ஓய்வு மட்டும்தான். அவருடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில், ஓயாமல் தொடரவேண்டிய பயணத்திற்குத் தேவைப்பட்ட சிறிய ஓய்வு.

2001-ம் ஆண்டுக்குப் பிறகு, மீண்டும் தன்னுடைய பழைய நட்பு வட்டங்களைப் புதுப்பித்துக்கொள்ளத் தொடங்குகிறார். அவர் உறுப்பினராக இருந்த போட்டோகிராஃபி சொசைட்டி ஆஃப் சென்னை, இந்த இடைப்பட்ட காலத்தில் போதிய செயல்பாடுகளின்றி முடங்கியிருந்தது. அந்த அமைப்பை மீட்க முயன்றார். ஆனால், அதிலிருந்த மூத்த உறுப்பினர்களின் பதில் அவர் எதிர்பார்த்ததுபோல் இருக்கவில்லை.

"இந்தப் பொறுப்பை எப்படி உங்களிடம் கொடுப்பது? உங்களுக்கு அனுபவம் போதாது. அதுமட்டுமன்றி நீங்களெல்லாம் இதைச் செய்யக்கூடிய ஆட்களும் கிடையாது."

மூத்த உறுப்பினர்கள் கேட்ட அந்தக் கேள்வி, அவரிடம் வடசென்னையில் வாழும் இளைஞர்கள், விளிம்பு நிலையில் வாழும் இளைஞர்கள் தொழிலைத் தாண்டி, ஒளிப்படக்கலைக்குள் ஆழமாகக் கால் பதிக்க முடியாமலிருப்பதை அவருக்கு உணர்த்தியது.

காட்டுயிர் ஒளிப்படக்கலை
காட்டுயிர் ஒளிப்படக்கலை
ஏ.சண்முகானந்தம்

வட சென்னை இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை உணர்த்தும் விதத்தில், பெலிகன் நேச்சர் போட்டோ கிளப் என்ற கூட்டமைப்பை நண்பர்களோடு இணைந்து உருவாக்குகிறார். தொடர்ந்து முனைவர். வே.தட்சிணாமூர்த்தியின் அறிமுகத்தால் காட்டுயிர் ஒளிப்படங்களைப் பள்ளி, கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுக்காகக் காட்சிப்படுத்தத் தொடங்குகிறார். அதன்வழியே இன்றுவரை சூழலியல் கல்வியை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஒளிப்படக்கலை குறித்துத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தவருக்கு 2008-ம் ஆண்டுக்குப் பிறகு, ச.முகமது அலியுடன் கிடைத்த அறிமுகம் அவரைக் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராக மட்டுமன்றி, சூழலியல் எழுத்தாளராக அடுத்தகட்டத்திற்கு உயர்த்துகிறது. தமிழில் காட்டுயிர் குறித்து முழுவண்ணத்தில் வெளியான முதல் நூலான அவருடைய `தமிழகத்தின் இரவாடிகள்' தடாகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அது, 15 ஆண்டுகளுக்குமுன் அவர் கண்ட கனவை நினைவாக்கும் சூழலை உருவாக்கிக் கொடுத்தது.

காட்டுயிர்ப் பாதுகாப்பு
காட்டுயிர்ப் பாதுகாப்பு
ஏ.சண்முகானந்தம்

அந்தக் கனவு குறித்துப் பேசிய சண்முகானந்தம், "முழுவண்ணத்தில் வெளியான நூலைத் தொடர்ந்து, காட்டுயிர்களுக்கான முழுவண்ண இதழைச் சர்வதேசத் தரத்துடன் தமிழில் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை வந்தது. தடாகம் பதிப்பகம் அதற்கு உதவியது. ஆசிரியர் குழுவில் இருந்த லிங்கராஜா வெங்கடேஷ், அருண் நெடுஞ்செழியன் போன்றவர்களின் உதவியோடு தரத்தில் சிறிதும் சமரசமடையாமல் இதழைக் கொண்டுவந்தோம். அந்த உழைப்புக்குக் கிடைத்த பலன், 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் விகடனில் சிறந்த சிற்றிதழுக்காகக் கிடைத்த விருது" என்று கூறினார்.

நான்கு ஆண்டுகள் 'காடு' இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய பின், கருத்து முரண்களால் பிரிந்துவந்தவர், இப்போது `உயிர்' என்ற காட்டுயிர் மற்றும் சூழலியல் தொடர்பான முழுவண்ண இதழை, சேன்ச்சுவரி ஏசியா இதழின் தரத்தோடு நடத்திக் கொண்டிருக்கிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகிவிட்ட, இந்தச் சூழலில் அவருடைய பொருளாதாரச் சிக்கல்கள் முன்பைவிடக் கூடுதலாகியுள்ளன. இருப்பினும், சிரமங்களைக் கடந்து தன் பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறார். நண்பர்களின் பொருளாதார ஒத்துழைப்போடு பல பணிகளை முன்னெடுத்தும் வருகிறார். ஆவணப் படமொன்றையும் இயக்கி வருகிறார்.

பூநாரைகள்
பூநாரைகள்
ஏ.சண்முகானந்தம்
உடலை வளைத்துச் சீறிய மோதிர வளையன்... புதர்க்காடுகளைப் புரிந்துகொள்ள உதவிய பாம்பு நடை!

தடைகள், சறுக்கல்கள், சிக்கல்கள் எவ்வளவு வந்தாலும், அவர் அனைத்தையும் உடைத்து ஓடிக்கொண்டேயிருக்கிறார். கலைஞர்கள் நதிகளைப் போன்றவர்கள். பாதையைத் தடுக்கத் தடுக்க வெள்ளமாகப் பொங்குவார்களே தவிர, வறண்டுவிட மாட்டார்கள். காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் சண்முகானந்தம், காட்டுயிர் துறையில் ஒரு வெள்ளம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு