Published:Updated:

2.0-வில்தான் வில்லன்... ஆனால், நிஜ ஹீரோவான சாலிம் அலி பற்றி தெரியுமா?! #HBDSalimAli

அப்போது அந்தச் சிறுவனுக்குப் பத்து வயதிருக்கும். அவருடைய மாமா வாங்கிக் கொடுத்த சிறிய துப்பாக்கியால் ஒரு பறவையை வேட்டையாடினார். சுயமாக ஆடிய முதல் வேட்டை.

அனைவருமே 2.0 படம் பார்த்திருப்போம். அதில் வரும் பக்ஷிராஜன் என்ற கதாபாத்திரத்தையும் யாரும் மறந்திருக்க மாட்டோம். அந்தப் பக்ஷிராஜனுடைய தாடி, கண்ணாடி, பறவைகள் மீதான காதல் அனைத்தும் ஒரு வரலாற்று மனிதரை நினைவு கூர்கிறது. உலகமே பார்த்து வியந்த ஓர் இந்திய ஆளுமையை, மனிதர்களைக் கொன்று குவிக்கும் வில்லனாகச் சித்திரித்தது விமர்சனத்துக்குள்ளானது.

இந்தியாவின் பறவை மனிதர், பறவையியலாளர் மற்றும் இயற்கையியலாளரான சாலிம் அலி என்ற அந்த வரலாற்று பக்ஷிராஜனின் பிறந்தநாள் இன்று.

பறவைகள்
பறவைகள்
Pixabay

அப்போது அந்தச் சிறுவனுக்குப் பத்து வயதிருக்கும். அவரின் மாமா வாங்கிக் கொடுத்த சிறிய துப்பாக்கியால் ஒரு பறவையை வேட்டையாடினார். சுயமாக ஆடிய முதல் வேட்டை. துள்ளிக்குதித்துச் சென்று உயிரிழந்து வீழ்ந்த அந்தச் சிறிய பறவையைத் தூக்கினார். அது பார்ப்பதற்கு வழக்கமான சிட்டுக்குருவியைப் போலவே இருந்தது. ஆனால், கழுத்தில் மட்டும் மஞ்சள் நிறம். வித்தியாசத்தைப் பார்த்து வியந்த அந்தச் சிறுவன், உடனே அதைத் தன் மாமா, அமீருத்தீனிடம் காட்டி என்ன பறவையென்று கேட்டார்.

அமீர் மாமாவுக்கு விடை தெரியாமல் போகவே, அவர் அந்தச் சிறுவனை அழைத்துக்கொண்டு பாம்பே இயற்கை வரலாற்று அமைப்பின் கௌரவத் தலைவராக இருந்த டபுள்யூ.எஸ்.மில்லர்டிடம் (W.S. Millard) அழைத்துச் சென்றார். சிறுவனின் ஆர்வத்தைக் கண்டு ஆச்சர்யமடைந்த மில்லர்டு, "அந்தப் பறவையின் பெயர், `மஞ்சள் தொண்டை சிட்டு' " என்று சொன்னார்.

2.0-வில்தான் வில்லன்... ஆனால், நிஜ ஹீரோவான சாலிம் அலி பற்றி தெரியுமா?! #HBDSalimAli

ஆம், உலகின் தலைசிறந்த பறவையியலாளர்களுள் ஒருவரும் இந்தியாவின் சூழலியல் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத மாமனிதருமான, பறவை மனிதர் சாலிம் அலியின் வாழ்வில் மாற்றத்திற்கான முதல் விதையைப் போட்ட பெருமை அந்த மஞ்சள் தொண்டை சின்னானையே சேரும்.

அதன்பிறகு, மில்லர்டு சாலிம் அலியை அழைத்துச் சென்று பாடம் செய்து வைத்திருந்த மற்ற பறவைகளைக் காட்டி விளக்கினார். தன் கையிலிருக்கும் பறவையைப் போலவே அங்கு ஒரு பறவை பாடம் செய்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த சாலிம் அலியின் குழந்தை உள்ளம் குதூகலமடைந்தது. அதன்பிறகு, இளம் சாலிம் அலி அந்த இடத்திற்குத் தொடர்ச்சியாகச் செல்லத் தொடங்கினார். அங்கு தொடங்கிய அவருடைய பறவைகளுடனான பயணம், வாழ்வின் இறுதி நிமிடம் வரை ஓயவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரின் சகோதரருக்கு உதவ, பர்மாவிலுள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்குச் செல்கிறார். ஆனால், தொழிற்சாலைகளின்மீது ஈடுபாடில்லாத அவர், அங்கும் பறவைகளைத் தேடியே தன்னுடைய பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறார். பர்மாவிலிருந்து சீக்கிரமே மும்பைக்குத் திரும்பியவர், விலங்கியல் துறையில் தன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பாம்பே இயற்கை வரலாற்று அமைப்பில் ஒரு வேலையையும் பெறுகிறார்.

அப்போது சாலிம் அலிக்கு இருபது வயதே ஆகியிருந்தது. அவர் பார்வையாளர்களை ஒருங்கிணைத்து, பாடம் செய்து வைத்திருந்த பறவைகளைப் பற்றி விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால், உயிரற்றுப் பாடம் செய்து வைக்கப்பட்டிருக்கும் பறவைகளைவிட, ஒவ்வொரு நிமிடத்தையும் ருசித்து வாழ்ந்துகொண்டிருக்கும் உயிருள்ள பறவைகளின் மீதே அவருடைய ஆர்வம் திரும்பிக்கொண்டிருந்தது. அவரால், ஒரு கட்டடத்திற்குள் பறவைகளைச் சிலையாக்கி வைத்து ஆய்வு செய்ய முடியவில்லை.

1930-ம் ஆண்டு, தூக்கணாங்குருவியின் இயல்பு மற்றும் நடத்தைகள் குறித்த ஓர் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார். அந்த ஆய்வுக்கட்டுரை அவருடைய பெயரை, பறவைகள் ஆய்வுத்துறையில் முதல்முறையாக, ஆனால் என்றும் அழிந்துவிடாதவாறு அழுத்தமாகப் பதிய வைத்தது.

ஓடவேண்டும். பறவைகளை அவற்றின் வாழிடத்திலேயே பார்க்கவேண்டும். அவருடைய ஆர்வம் அதில்தான் அதிகமிருந்தது. அதனால், அதில் தன் திறனை வளர்த்துக்கொள்வதற்காக அப்போதைய உலகப் பிரபல பறவை ஆய்வாளர் முனைவர்.இர்வின் ஸ்டிரஸ்மேனை ஜெர்மனிக்குச் சென்று சந்தித்தார். ஒரு வருடம் கழித்துத் திரும்பி வந்தபோது, பொருளாதாரக் காரணங்களால், அருங்காட்சியகத்தில் அவருடைய வேலை இழந்திருந்ததைத் தெரிந்துகொண்டார்.

ஒரு குடும்பஸ்தராக, அவருக்குப் பணம் தேவையாக இருந்தது. அதனால், வேறு வழியின்றி அருங்காட்சியகத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்தார். அந்தப் பணி கிடைத்ததால், அருங்காட்சியகத்தில் தொடர்ந்து ஆய்வு செய்யவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

மும்பைக்கு அருகிலிருந்த கிஹிம் என்ற கிராமம்தான் அவருடைய மனைவியின் ஊர். அங்கு அவருடைய மனைவியின் வீடு, மரங்களால் சூழப்பட்டு அமைதியாக இருக்கும். அங்குதான் சாலிம் அலி, தன்னுடைய பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டு, தூக்கணாங்குருவியின் வாழ்க்கைமுறையை ஆய்வு செய்தார். 1930-ம் ஆண்டு, தூக்கணாங்குருவியின் இயல்பு மற்றும் நடத்தைகள் குறித்த ஓர் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார். அந்த ஆய்வுக்கட்டுரை, சாலிம் அலியைப் பிரபலமாக்கியது. அவருடைய பெயரைப் பறவைகள் ஆய்வுத்துறையில் முதல்முறையாக, ஆனால் என்றும் அழிந்துவிடாதவாறு அழுத்தமாகப் பதிய வைத்தது. அதற்குப் பிறகு, சாலிம் அலி உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்து, பல வகையான பறவை வகைகளை ஆய்வு செய்தார். பல வகைகளைப் புதிதாகக் கண்டுபிடித்தார்.

சாலிம் அலி
சாலிம் அலி
Belinda Wright

அதுவரை பறவைகளைக் கொன்று ஆய்வுக்கூடத்திற்குக் கொண்டு வந்து, அவற்றைப் பாடம் செய்துவைத்து, ஆய்வு செய்துகொண்டிருந்ததை மாற்றி, பறவைகளின் வாழ்விடங்களிலேயே அவற்றின் நடத்தைகளை, வாழ்வியலை ஆய்வு செய்தார். பறவை ஆய்வுத்துறையின் பாதையையே மாற்றி, புதிய சகாப்தத்தை உருவாக்கி வைத்தார் சாலிம் அலி. அதனால்தான் அவர் இன்றுவரை, 'இந்தியாவின் பறவை மனிதர்' என்றும் அழைக்கப்படுகிறார். முறைப்படுத்தப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்திய முதல் இந்தியரும் அவர்தான். அதுவரை, பறவைகளுக்கான நூல்கள் அனைத்தும் ஆய்வாளர்களோடே நின்றிருந்தது.

பறவைகளைப் பற்றி எளிமைப்படுத்திய நூல்களால் பல்வேறு மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தார். பறவைகள் குறித்துப் பல நூல்களை எழுதி, பறவையியலை நாடு முழுவதும் கொண்டுபோய்ச் சேர்த்தார். அவர் எழுதிய "Birds of Indian Sub-continent" என்ற பிரபலமான நூல் மூலம், இந்தத் துணைக்கண்டம் முழுக்க வாழும் அனைத்து வகையான பறவைகளையும் பதிவு செய்தார். இந்தியத் துணைக்கண்டத்தில் அவருடைய கால்தடம் பதியாத இடமே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவருடைய ஆய்வுப்பயணம் விரிவானது.

 சாலிம் அலி
சாலிம் அலி

ஆய்வுத்துறையில் அவர் செய்த பங்களிப்பு அவருக்கு, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உட்பட உலகளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தந்தது. பறவையியலில் அவருடைய பெரும் பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் விதத்தில், பல்வேறு சரணாலயங்களுக்கு, ஆய்வு நிறுவனங்களுக்கு அவ்வளவு ஏன், பறவைகளுக்குக்கூட அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1947-க்குப் பிறகு, 2016-ம் ஆண்டு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நான்காவது புதிய பறவையினமான Himalayan forest thrush என்ற பறவையுடைய அறிவியல் பெயரில் Zoothera Salimalii என்று அவருடைய பெயரும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 1972-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழந்தின்னி வௌவாலுக்கும் Salim Ali's Fruit bat என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறையால் நூற்றாண்டுகாலப் பழைமையான பாம்பே இயற்கை வரலாற்று அமைப்பு செயல்பட முடியாமல் முடங்கும் சூழல் ஏற்பட்டபோது, அதுகுறித்து அப்போதைய பிரதமர் நேருவுக்குக் கடிதம் எழுதி, நிதியுதவி கேட்டு, அந்த அமைப்புக்குப் புத்துயிர் கொடுத்தார். நேரு மற்றும் இந்திரா காந்தியிடம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் சாலிம் அலிக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட்டதில் அவருக்குப் பிரதமரிடமிருந்த செல்வாக்கும் ஒரு முக்கியக் காரணம். அவருடைய பங்களிப்புகளைப் போற்றும் வகையில் 1985-ம் ஆண்டு ராஜ்ய சபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Ornithologists
Ornithologists
Sara

அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் அவர் ஒன்றைத் தவறாமல் செய்துகொண்டிருந்தார். அடுத்த தலைமுறைக்குப் பறவையியல் பற்றிய வகுப்புகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக அடுத்த தலைமுறைகள் பறவைகளைப் பார்க்கும், பறவைகளைப் பாதுகாக்கும், அதன்மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் என்று அவருக்கு நம்பிக்கை இருந்தது.

என்னால் முடிந்ததை நான் செய்துவிட்டேன். இளைய தலைமுறையே! இந்தப் பணி இனி உங்களுடையது.
இந்தியாவின் பறவை மனிதர், சாலிம் அலி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு