Published:Updated:

காட்டைத் தோண்டும்போது கிடைத்த மோதிரம்..! 47 ஆண்டுகள் பழைமையான காதல் சின்னம்

காதல்
காதல் ( Pixabay )

அவர்களுடைய 40 வருடக் காதல் வாழ்க்கைக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது, 1973-ம் ஆண்டின்போது ஷான் பரிசளித்த அந்த மோதிரம்தான்.

காதல் என்றுமே நம் நினைவிலிருந்து நீங்குவதில்லை. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், ஏதேனும் ஒரு வழியில் நம் இதயத்தில் நிழலாடிக்கொண்டிருக்கும் அந்தக் காதல் நினைவுக்கு வந்துவிடும். 47 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கால காதலர் பரிசாகக் கொடுத்த மோதிரம், மீண்டும் கிடைத்து அமெரிக்காவைச் சேர்ந்த டெப்ரா மெக்கென்னாவுக்கு அவரை மீண்டும் நினைத்துப் பூரிக்க வைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மெக்கென்னா, 1973-ம் ஆண்டின்போது போர்ட்லாந்தில் மோர்ஸ் என்ற ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் காதலித்த ஷான் என்பவர் மெக்கென்னாவுக்கு ஒரு மோதிரத்தைப் பரிசளித்தார்.

மோதிரம்
மோதிரம்
Pixabay

பள்ளியில் தொடங்கி கல்லூரிக்காலம் நீண்ட மெக்கென்னா- ஷான் காதல், பின்னர் திருமணத்தில் முடிந்தது. ஷான், ஆறு வருடங்களாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு 2017-ம் ஆண்டு மரணிக்கும் வரை, இருவரும் மகிழ்ச்சி குறைவின்றி வாழ்ந்தனர். அவர்களுடைய 40 வருடக் காதல் வாழ்க்கைக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது, 1973-ம் ஆண்டின்போது ஷான் பரிசளித்த அந்த மோதிரம்தான். ஆனால், அதற்கு அடுத்த சில நாள்களிலேயே மெக்கென்னா ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் அந்த மோதிரத்தைத் தவறவிடவே, இருவரும் அந்தக் காதல் சின்னத்தை அப்படியே மறந்துபோயினர்.

47 ஆண்டுகள் கழித்து, தற்போது ஃபின்லாந்தின் காரினா என்ற வனப்பகுதியிலிருந்த ஒரு பூங்காவில் இரும்பு வேலை செய்துகொண்டிருந்தவர் நிலத்தை, ஏதோவொரு வேலைக்காக 8 இன்ச் தோண்டியபோது அந்த மோதிரம் அவருடைய கைக்குக் கிடைத்துள்ளது. பல்வேறு இடங்களில் சுற்றி இறுதியாக அந்த மோதிரம் மெக்கன்னாவின் கைக்கே கிடைத்தது.

காதல்
காதல்
Pixabay

நியூயார்க் டைம்ஸ் இதழுக்குப் பேட்டியளித்துள்ள டெப்ரா மெக்கென்னா "எதிர்மறையான இந்த உலகத்தில் இப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவம் நிகழுமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. 47 ஆண்டுகள் கழித்து எங்கள் காதல் சின்னம் எனக்குக் கிடைத்துள்ளது" என்று நெகிழ்ந்து கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு