Published:Updated:

சாகாவரம் பெற்ற விலங்குகள் வாழ்வது உண்மையா! பரிணாமவியல் சொல்வது என்ன? #GoodReadAtVikatan

இயற்கையுடைய பரிணாமத்தின் பாதையில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் சாகாவரம் கூட ஒரு பகுதியாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சாகாவரம், அதை வரம் என்று கூறுவதைவிட சாபம் என்று கூறுவதே சரி. சாகாவரம் பெறுவதற்குரிய விலை அவ்வளவு சாதாரணமானது அல்ல என்பதை டிரோஜன் டிதோனஸும் அப்போது புரிந்திருந்தார்.

கிரேக்கப் புராணங்களில் வரக்கூடிய டிதோனஸ் என்ற டிரோஜன் இளவரசர் மிகவும் அழகானவர். அரசர் லாவோமேடனி மகனான அவர் மீது, விடியலுக்கான கடவுள் இயோஸ் காதல் கொண்டாள். அந்தக் காதலின் விளைவாக இளவரசரோடு காலத்துக்கும் வாழ வேண்டுமென்ற ஆசை அவளுக்கு ஏற்பட்டது. அதற்காக, கடவுள் சூயஸிடம், டிதோனஸுக்குச் சாகாவரம்கூட வாங்கிக் கொடுத்தாள். ஆனால், கடவுள் சூயஸ் அந்தச் சாகாவரத்துக்கு ஏற்ப ஒரு பின் விளைவையும் கொடுத்தார். இளவரசர் டிதோனஸ் சாகவில்லை. ஆனால், அவருக்கு வயது கூடுவதற்கான அறிகுறிகள் உடலில் தெரிந்துகொண்டேயிருந்தன. அவருடைய அழகை இழந்தார். அதன் விளைவாக இயோஸுக்கு அவர் மீதிருந்த ஈர்ப்பும் குறைந்தது. காலப்போக்கில், இயோஸ் டிதோனஸை ஓர் அறையில் அடைத்துவிட்டாள். அவரும் அந்த அறையிலேயே முடிவின்றித் தன் புலம்பல்களோடு காலம் கழித்தார்.

பிரிஸ்டில்கோன் பைன்
முதிர்ச்சியே அடையாத, என்றும் இளமையான பைன் மரம்

இது ஒரு புராணக்கதைதான். இந்தக் கதையைப் பொறுத்தவரை, சாகாவரம் என்பது வரமல்ல, சாபம். ஆனால், உண்மை எப்போதுமே கட்டுக்கதைகளிலிருந்து வேறுபட்டிருக்கும். அப்படித்தான் நிஜ வாழ்விலும். நம் பூமியில், அப்படிப்பட்ட சாகாவரம் பெற்ற உயிரினங்கள் நிஜத்திலும் வாழ்கின்றன. ஆனால், டிதோனஸ் போல அவற்றுக்கு இந்த வரம் சாபமாக மாறவில்லை. அவை, மரணமற்ற இளமை நிறைந்த வாழ்வை வாழ்கின்றன.

ஆம், பரிணாமத்தின் பாதையில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் சாகாவரமும் ஒரு பகுதி. அறிவியலாளர்கள், இந்தப் பதத்தைப் பயன்படுத்துவதைப் பெரிதும் விரும்புவதில்லை. ஏனென்றால் அவை சாகாமலே இருப்பதில்லை, இறக்கின்றன. எனினும், அது அவ்வளவு சாதாரணமாக நிகழ்ந்துவிடுவதில்லை. அதேநேரம், அவற்றுக்கு வயதாவதுமில்லை.

அவை வேட்டையாடிகளாலோ, நோய்த் தாக்குதலினாலோ அல்லது எரிமலை வெடிப்பு போன்ற சுற்றுச்சூழலில் நடக்கின்ற மிகப்பெரும் மாறுதலாலோ கொல்லப்படலாம். இவற்றைக் கடந்து, மனிதர்களைப் போல, மற்ற வழக்கமான விலங்குகளைப் போல வெறுமனே வயதாவதால் இவை இறப்பதில்லை. இதன்மூலம், புராணக் கதையில் வருகின்ற டிதோனஸைப் போல் நிஜத்தில் இல்லை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

bristlecone pine
bristlecone pine
Pixabay

பிரிஸ்டில்கோன் பைன் (Bristlecone Pine) என்ற மரத்தை இதற்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். வட அமெரிக்காவில் உள்ள இந்த மர வகை உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட வயதைக் கொண்டவை. அவை 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வளரத் தொடங்கின. இன்னும் உயிரோடு அவை வாழ்கின்றன என்பதைச் சொன்னால் உங்களால் நம்பமுடியுமா! முடியாதுதான். ஆனால், அதுதான் உண்மை. இன்றைய துருக்கியில் அமைந்திருந்த டிராய் என்ற நகரம் உயிர்ப்போடிருந்த காலகட்டத்திலிருந்து இவை இருக்கின்றன. பிரிஸ்டில்கோன் பைன் மரங்கள் பார்ப்பதற்கு மிகவும் வயதானதைப் போல் தெரியும். இருப்பினும் அவற்றின் வெளித்தோற்றத்தை வைத்து நிலவரத்தை எடைபோட்டுவிடாதீர்கள். டிதோனஸிடம் நடந்துகொண்டதைவிட இவற்றிடம் காலம் மிகவும் கனிவோடுதான் நடந்துள்ளது. இவை இடி, மின்னல்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தாக்கப்பட்டுள்ளன. கடுமையான பனிப்பொழிவுகளைக் கடந்து வந்துள்ளன. இந்தக் கடினமான அடிகளைத் தாங்கிக்கொண்டு இந்த வகைப் பைன் மரங்களின் கிளைகள் கூட இன்னும் நிற்கின்றன. இதையெல்லாம் தவிர்த்தால், ஆம், இந்தப் பைன் மரங்கள் வயதானவைதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதையே இன்னும் கவனமாக, ஆழமாகக் கவனிப்போம். 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்றில், பல்வேறு வயதுகளில் உள்ள இந்த மரங்களின் மகரந்தத் துகள்களையும் விதைகளையும் எடுத்து ஆய்வு செய்தபோது, அவற்றின் உடலில் பொதுவாக வயது ஆகும்போது நடக்கின்ற எந்தவித வளர்சிதை மாற்றங்களும் நடக்கவில்லை. இவற்றோடு சேர்த்து இன்னொரு தகவலும் கிடைத்தது. மிகவும் பழைமையான மூத்த மரங்களிலும் சரி, அவற்றில் கொஞ்சம் இளமையான மரங்களிலும் சரி, அவற்றின் உடலிலுள்ள திசுக்கள் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், அவற்றுக்கு வயதே ஆகவில்லை.

உடலின் ஏதாவதொரு பகுதி காயமடைந்தாலோ, வெட்டுப்பட்டாலோ அதை மீட்டுருவாக்கிக்கொள்ளும் திறனை அந்த ஸ்டெம் செல்கள் ஹைட்ராவுக்கு வழங்குகின்றன.
தாமஸ் போஷ் மற்றும் அவரது ஆய்வுக்குழு

ஏனென்றால், அவற்றின் ஸ்டெம் செல்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மிகவும் பழைமையான மரங்கள் பருவநிலைகளுக்கு ஏற்ப பல்வேறு சேதங்களைச் சந்தித்திருக்கும். இருப்பினும் அவற்றின் இளமை பாதிக்கப்படுவதில்லை. அவற்றின் திசுக்கள் மிக நீண்ட காலத்துக்கு ஆரோக்கியமாகவே இருக்கும். இந்தப் பைன் மரங்கள் எப்படி இதைச் செய்கின்றது என்பது இன்றுவரை அறிவியலுக்குப் புதிராகவே உள்ளது. ஜெர்மனியிலுள்ள கியெல் பல்கலைக்கழகப் பேராசிரியர் தாமச் போஷ், ``அதற்கு மரங்களிலுள்ள மெரிஸ்டெம்ஸ் (Meristems) என்ற சிறப்புத் தன்மைதான் காரணம் என்று கூறுகிறார்.

வேர்கள் சேதமடைந்தால் அவற்றை மீண்டும் வளர்த்தெடுக்கப் பயன்படுகின்ற இந்தத் தன்மை, பிரிஸ்டில்கோன் பைன் மரங்களின் ஸ்டெம் செல்கள் அந்தத் தன்மையை அவற்றின் உடல் முழுவதையும் இளமையாக வைத்திருக்கப் பயன்படுத்துவதாக தாமஸ் கருதுகிறார்.

2013-ம் ஆண்டு, அராபிடாப்சிஸ் என்ற தாவரத்திலிருந்த மெரிஸ்டெம் அணுக்களில் தனித்துவமிக்க ஊட்டச்சத்துகளைக் கண்டனர். அத்தகைய ஊட்டச்சத்துகள் கூட, பிரிஸ்டில்கோன் பைன் மரங்களில் வயதாவதைத் தடுத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இளமையோடு இருக்க வைப்பதாக அந்த ஆய்வை அடிப்படையாக வைத்துச் சில தாவரவியல் ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர். இருப்பினும், இந்த ரகசிய நுணுக்கங்கள் மற்ற தாவரங்களிடம் வேலை செய்வதில்லை. அதற்குக் காரணம் அவற்றில் வளர்சிதை மாற்றங்கள் வெகுவேகமாக நடப்பதே என்றும் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு மூலம் குறிப்பிடப்படுகிறது.

கடல் வாழ்வியல்
கடல் வாழ்வியல்

வேகமாக வளர்சிதை மாற்றங்களைச் சந்தித்து, வாழ்ந்து முடித்துவிடுவதைப் பொறுத்தவரை, தாவரங்கள் அளவுக்குப் பொறுமை விலங்குகளுக்குக் கிடையாது. அவை, அந்தளவுக்கு நீண்ட காலம் வாழ்வது கிடையாது. அதிலும் ஒரு விதிவிலக்கோடு இருக்கிறது மிங் (Ming) என்றழைக்கபடும் மெல்லுடலி உயிரினம்.

அறிவியல் ஆதாரங்களின்படி, மிங் என்ற மெல்லுடலிதான் மிகவும் வயதான விலங்காக அறியப்படுகின்றது. 2006-ம் ஆண்டில், ஐஸ்லாந்தின் கடல்பகுதியில் உயிரியியலாளர்கள் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது கண்டுபிடித்த ஒரு மிங் மெல்லுடலி 507 ஆண்டுகள் பழைமையானது. துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் அதை உடனடியாகக் கொன்றுவிட்டனர். இப்படியான, வெளித்தூண்டுதலின் மூலமோ வேட்டையாடிகளின் தாக்குதலினாலோதான் அவை உயிரிழக்கக்கூடும். மற்றபடி, இயற்கையான மரணம் என்பது இவற்றுக்குக் கிடையாது.

விலங்குகளின் அணுக்களில், ஆக்சிஜன் வாயுகள் அடங்கிய மூலக்கூறுகள் சவ்வுகளோடு இணைந்து சிறு சிறு முலக்கூறுகளை உருவாக்கும். இந்தச் செயல்பாடு அணுவின் மற்ற பாகங்களைச் சேதமடையச் செய்யும். ஆனால், இந்த மெல்லுடலிகள் அத்தகைய சேதங்களிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன. பிரிஸ்டில்கோன் பைன் மரங்களில் நடப்பதைப் போலவே, மிங் உடலிலும் அவற்றின் அணுக்கள் வயதாவதைத் தடுத்துள்ளன. மிங் மெல்லுடலியாக இருப்பதால், அதன் ஓடுகளில் உருவாகும் கோடுகளை வைத்து வயதைக் கணக்கிட முடியும். ஆகவே, ஆதாரபூர்வமாக மிங் என்ற இந்த மெல்லுடலிதான் இருப்பதிலேயே வயது மிகுந்த ஆனால், இளமையான விலங்காக உள்ளது. அதேநேரம், அனைத்து விலங்குகளும் மிங்கைப் போல உடலில் வயதைக் குறிக்கும் கோடுகளைச் சுமந்து வாழ்வதில்லை. மிங்கை விடவும் வயதான விலங்கு இருக்கவும் வாய்ப்புள்ளது.

உதாரணத்துக்கு ஹைட்ராவை எடுத்துக்கொள்ளலாம். சிறிய, மென்மையான உடலைக் கொண்ட ஜெல்லி மீனுடைய பெயர்தான் ஹைட்ரா. மிகச் சிறிய விலங்குகள் பெரியனவற்றைப் போல நீண்ட காலத்துக்கு வாழ்வதில்லை. ஆனால், ஓர் உயிரியலாளர் ஒரு ஹைட்ரா ஜெல்லி மீனைத் தன்னுடைய பரிசோதனைக் கூடத்தில் நான்கு வருடங்களுக்கும் மேலாக வைத்து வளர்த்துள்ளார். வெறும் 15 மில்லிமீட்டரே இருக்கக்கூடிய ஓர் உயிரினத்தைப் பொறுத்தவரை, இது மிக நீண்ட காலம்.

இங்கு முக்கியமான அம்சம் என்னவென்றால், முதல் நாளின்போது இருந்த மாதிரியே, அதே இளமையோடு ஹைட்ரா இருந்தது. இப்படித்தான், உயிரியல்ரீதியாகச் சாகாவரம் பெற்ற உயிரினங்கள் பட்டியலில் ஹைட்ராவும் இணைந்தது. ஹைட்ரா எத்தனை நூறு ஆண்டுகளுக்கு வாழும் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அவை 10,000 ஆண்டுகளுக்குக்கூட வாழலாம். யாருக்குத் தெரியும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தாமஸ் போஷ் மற்றும் அவரது ஆய்வுக்குழு, ஹைட்ராவுடைய இந்தத் தன்மை குறித்து ஆராய்ந்து ஒரு விளக்கத்தை முன்வைத்துள்ளனர். மீண்டும் மீண்டும், ஸ்டெம் செல்களின் பக்கமே வருகின்றது. அந்தச் சிறிய உடலில், மிகத் தரமான ஸ்டெம் செல்களைக் கொண்டுள்ளது ஹைட்ரா. உடலின் ஏதாவதொரு பகுதி காயமடைந்தாலோ, வெட்டுப்பட்டாலோ அதை மீட்டுருவாக்கிக்கொள்ளும் திறனை அந்த ஸ்டெம் செல்கள் ஹைட்ராவுக்கு வழங்குகின்றன. இத்தகைய திறன் இந்த ஜெல்லி மீன்களுக்கு இருப்பதே, அவற்றுக்கு ஹைட்ரா என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. கிரேக்கப் புராணக் கதைகளில் வருகின்ற லெர்னேனிய ஹைட்ரா என்ற நீர் அரக்கனின் தலையை எத்தனை முறை துண்டித்தாலும், மீண்டும் மீண்டும் வளர்ந்துவிடும். அந்தப் புராண உயிரினத்தைப் போலவே, எங்கு என்ன அடிபட்டாலும் மீண்டும் வளர்ந்துவிடும் தன்மை இதற்கு உண்டு.

மரபணு
மரபணு

இதுமட்டுமின்றி, இந்த நிஜ உலகின் ஹைட்ரா இன்னும் பல ஆச்சர்யங்களைத் தன்னுள் வைத்துள்ளது. அது மற்ற உயிரினங்களைப் போல் இனப்பெருக்கம் செய்வதில்லை. அவை, தம்மைப் போன்ற ஹைட்ராக்களைக் க்ளோன் செய்வதன் மூலமே தன் இனத்தைப் பெருக்குகின்றன. ஆம், இவை இயற்கையாக க்ளோனிங் முறையைச் செய்கின்றன.

தன்னுடைய உடலிலுள்ள ஸ்டெம் செல்களில் மூன்றை எடுத்து, அதை அடிப்படையாக வைத்து உடலின் மற்ற திசுக்களை மீட்டுருவாக்கி முழு உயிர்ப்போடு இருக்கின்ற மற்றொரு ஹைட்ராவை உருவாக்குகின்றன. அப்படிப் பிரிக்கப்படுகின்ற மூன்று ஸ்டெம் செல்களுமே ஃபாக்ஸ் ஓ (FoxO), என்ற ஊட்டச்சத்தைத் தன்னுள் வைத்துள்ளன. ஒருவேளை, இந்த ஊட்டச்சத்துதான் அவற்றுக்கு இந்தச் சாகாவரத்தை வழங்குகின்றன என்று ஆய்வாளர்கள் ஒரு கருதுகோளை முன்வைக்கின்றனர். அதை நீக்கிவிட்டால், ஹைட்ராவையும் வயதாக வைக்கலாம், மரணிக்க வைக்கலாம். ஆனால், அதைச் செய்ய இந்த ஊட்டச்சத்து என்ன மாதிரியான தற்காப்பு நடவடிக்கைகளைச் செய்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் மிகப்பெரும் சவாலாக இருந்துவருகிறது.

100 ஆண்டுகளுக்கு வாழக்கூடிய மனிதர்கள்கூட, சாகாவரம் பெறவில்லை. ஆனால், வெறும் 15 மில்லிமீட்டரே உள்ள ஜெல்லி மீன் சாகாவரம் பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி, 4.5 மில்லி மீட்டரே உள்ள, நன்கு வளர்ந்த 80 முதல் 90 விழுதுகளை உடலில் கொண்ட Turritopsis dohrnii என்ற ஜெல்லி மீனும் மரணமில்லா வாழ்வைப் பெற்றுள்ளது. அது ஏன்?

அதைப் புரிந்துகொள்ள, நாம் முதலில் ஜெல்லி மீன்களுடைய வாழ்க்கைச் சுழற்சியைப் புரிந்துகொள்ள வேண்டும். முன்னர் அவை க்ளோன் செய்யும் என்று சொன்னேனல்லவா! அப்படியென்றால், அவை நேரடியாக ஜெல்லி மீனாக உருவெடுத்துவிடுவதில்லை. அது கொஞ்சம் சிக்கலானது. ஜெல்லி மீனுடைய உயிரணுவும் முட்டையும் ஒன்றுசேர்ந்து மிகச் சிறிய லார்வாவை உருவாக்குகின்றன. ஆனால், இந்த லார்வா வெறுமனே ஜெல்லி மீனாக வளர்ந்துவிடுவதில்லை. மாறாக, கடினமான பரப்பில் மோதி மென்மையான கிளைகளைக் கொண்ட பாலிப் வடிவத்தை அடைகின்றது.

ஜெல்லி மீன்களின் வாழ்க்கை சுழற்சியிலுள்ள அடிப்படை விதியை மரணமில்லா ஜெல்லி மீன் உடைக்கின்றது.

பெரும்பாலான நேரங்களில், இந்த பாலிப்கள் ஹைட்ராக்களைப் போலவே சிறு சிறு க்ளோன்களை உருவாக்குகின்றன. ஒருசில மட்டும் அப்படி க்ளோன்களை உருவாக்காது. அதற்குப் பதிலாகச் சுதந்திரமாக நீந்தும் ஆண் அல்லது பெண் ஜெல்லி மீன்களாக வளர்கின்றன. அவை, மீண்டும் உயிரணுக்களையும் முட்டைகளையும் உருவாக்குகின்றன. இந்த உயிர் சுழற்சி மீண்டும் தொடங்குகின்றன. இதுதான் ஜெல்லி மீன்களின் வாழ்க்கை சுழற்சியிலுள்ள அடிப்படை விதி. இந்த அடிப்படை விதியை மரணமில்லா ஜெல்லி மீன் உடைக்கின்றது. முற்றிலுமாக வளர்ந்துவிட்ட ஜெல்லி மீனால்கூட, எங்கு தொடங்கியதோ அந்த பாலிப் வடிவத்துக்கு வரமுடியும். அதன்மூலம் அவை மரணத்தைத் தவிர்த்து மீண்டும் தொடக்கத்துக்கே வந்து, வாழ்வை மீண்டும் தொடங்குகின்றன. இது கிட்டத்தட்ட வண்ணத்துப்பூச்சி மீண்டும் பட்டுப்புழு நிலைக்கே திரும்பிவிடுவதைப் போன்றது.

இனப்பெருக்கத்தை நேரடியாக மேற்கொள்ளாத உயிரினங்களில் சாகாவரம் பெற்றவை இருப்பதைப் போலவே, இனப்பெருக்கத்தை நேரடியாக மேற்கொள்ளும் உயிரினங்களிலும் அத்தகையவை இருக்கின்றன. அமெரிக்க கடல் நண்டுகள் (American Lobster) அதற்கொரு சிறந்த உதாரணம். பெரும்பான்மையான விலங்குகள், இனப்பெருக்கத் தகுதியைப் பெறும் வயதை அடைந்தவுடன் வளர்வதையும் நிறுத்திவிடுகின்றன. ஆனால், அமெரிக்க கடல்நண்டுகள் அப்படியில்லை. அதுமட்டுமின்றி, நன்கு வளர்ந்த அதனால் தன்னுடைய உடலில் வெட்டுப்பட்ட பாகத்தை மீண்டும் வளர்த்துக்கொள்ளவும் முடியும். இதன்மூலம், அதன் உடலில் ஏற்படும் காயங்களைச் சரிசெய்துகொண்டு சாகாமல் வாழ்கின்றன.

அமெரிக்கக் கடல் நண்டு
அமெரிக்கக் கடல் நண்டு
Peter Scoones, NPL

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 140 வயதான அமெரிக்கக் கடல் நண்டு, அத்தனை ஆண்டுகள் உயிரோடிருப்பதற்கான காரணத்தை உணர்த்துகின்றது. அவற்றின் சாகாவரத்துக்கான காரணம் அவற்றின் டி.என்.ஏ-வில் ஒளிந்துள்ளது. டி.என்.ஏ-க்களைப் பாதுகாக்க அவற்றின் நுனியில் டெலோமியர்ஸ் என்ற பாகம் இருக்கும். ஒவ்வொரு முறை அணு உடைந்து புதிய அணுக்களை உருவாக்கும்போதும், இந்த டெலோமியர்ஸ்களின் நீளம் குறையும். அந்த நீளம் குறையக் குறைய அணுக்களைப் பாதுகாக்கும் அவற்றின் திறனும் குறையும். ஆகவே, அந்த நீளத்தைப் பொறுத்தே உயிரினத்தின் ஆயுளும் முடிவாகும். ஆனால், அமெரிக்கக் கடல் நண்டுகளின் உடலில் உள்ள டெலோமியர்ஸ்களைப் பாதுகாக்க டெலோமிரேஸ் என்ற மூலப்பொருள் செயல்படுகின்றது. 1998-ம் ஆண்டு நடந்த ஆராய்ச்சியில், இந்த டெலோமிரேஸ்கள் அவற்றின் உடல் முழுக்க இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவை, அந்த நண்டுகளின் உடலை நீண்டகாலத்துக்கு இளமையுடன் வைத்திருக்க முனைகின்றது. வேறு மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்க கடல் நண்டுகள் உயிரியல்ரீதியாக மரணமில்லாதவையாகின்றன.

அமெரிக்கக் கடல் நண்டுகளுக்கு இருக்கும் டெலோமிரேஸ், சில பாலூட்டிகளிடமும் உள்ளது. ஆனால், அதை மரணமில்லா வாழ்வுக்கான யுக்தியாகப் பயன்படுத்துவது நம்மில் சாத்தியமற்றது. ஏனென்றால், நம்மிலிருக்கும் டெலோமிரேஸ்கள் புற்றுநோய்க்கான அணுக்களையே பாதுகாக்கின்றன. அது உடலிலுள்ள மற்ற அணுக்களை அழித்து மரணத்தையே பரிசாக்குகின்றது. ஆனால், அவை புற்றுநோய்க்கான அணுக்களை மட்டுமே பாதுகாப்பதில்லை. நம்மில் கருமுட்டைகளையும் உயிரணுக்களையும்கூடப் பாதுகாக்க டெலோமிரேஸ்கள் உதவுகின்றன.

மிங் (Ming)
மிங் (Ming)
S. Rae
காட்டுயிர்கள் பரப்பும் நோய்கள்... எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் மனிதர்கள்? #GoodRead@Vikatan

இப்படியாகப் பூமியில் பல உயிரினங்கள் பரிணாமத்தின் பாதையில் மரணமில்லாப் பெருவாழ்வைப் பெற்றுள்ளன. இயற்கை அதன் செயல்பாடுகளில் பல அதிசயங்களையும் ரகசியங்களையும் புதைத்து வைத்துள்ளது. அந்த ரகசியங்களில் பலவற்றைக் கட்டவிழ்த்துவிட்டோம். இருப்பினும், முடிச்சுகளை அவிழ்க்க அவிழ்க்க இன்னும் பல ரகசியங்களை இன்னும் ஆழமாக இயற்கை முடிச்சுபோட்டு வைத்துள்ளது என்பதே நிதர்சனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு