Election bannerElection banner
Published:Updated:

ஹோமோ இரக்டஸ், ரோபஸ்டஸ், லூசி... ஒரே குகையில் ஒன்றாக வாழ்ந்த 3 மனித இனங்கள்! #LongRead

மனித இனங்கள்
மனித இனங்கள் ( Pixabay )

பாராந்த்ரோபஸ் ரோபஸ்டஸ் என்ற மனித இனத்தைச் சேர்ந்தவர்கள், நீண்ட, சக்திவாய்ந்த தாடைகளையும் கிழங்கு, தேங்காய் போன்றவற்றைத் தூளாக்கும் பற்களையும் கொண்டிருந்தனர். மற்ற மனித இனங்கள் போலவே இவர்களும் ஹோமோ இரக்டஸ் காலத்தில் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தனர்.

அறிவியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று, மனித இனத்தின் நேரடி மூதாதை யார்? இக்கேள்விக்கு, பல்வேறு இனங்கள் பல ஆண்டுக்கால ஆய்வுகளின் அடிப்படையில் பதில்கள் முன்வைக்கப்பட்டன.

அப்படி, கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட ஓர் ஆய்வின் முடிவில் ஆஸ்ட்ரலோபிதெகஸ் செடிபா (Australopithecus sediba) என்ற மனித இனம்தான் இன்றைய மனித இனத்தின் ஆதி மூதாதை என்று கூறப்பட்டது. ஆனால், மேற்கொண்டு இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து நடத்திய ஆராய்ச்சிகளில், இந்தக் கூற்று தவறு என்று தெரியவந்ததோடு, ஹோமோ இரக்டஸ்தான் ஹோமோ சேப்பியன்ஸ் என்றழைக்கப்படும் இன்றைய நவீன கால மனித இனத்தின் மூதாதை என்பதும் மீண்டுமொரு முறை வரையறுக்கப்பட்டது.

லூசி
ஆஸ்ட்ரலோபிதெகஸ் செடிபா இனத்தைச் சேர்ந்த பெண்ணின் தொல்லெச்சம்

ஆராய்ச்சியாளர்களில் ஒரு சாரார், ஆஸ்ட்ரலோபிதெகஸ் செடிபாதான் நம்முடைய மூதாதை என்று நம்பினார்கள். இந்த இனத்தின் முதல் தொல்லெச்சம் 1970-களில் கிடைத்தது. முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட அந்தப் பெண் ஆஸ்ட்ரலோபிதெகஸ் செடிபா தொல்லெச்ச எலும்புகளுக்கு லூசி என்று பெயர்சூட்டப்பட்டது. மனிதக் குரங்கின் உடலமைப்பைப் போன்ற லூசியின் அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு தொல்லெச்சம் 2008-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலுள்ள மலாபா குகையில் கிடைத்தது. அது 2 மில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்பதும் கண்டறியப்பட்டது. மனித இனத்தின் மூதாதைகளுடைய காலம் 8,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற கூறப்படுகிறது. ஒருவேளை, லூசி இனம் (முதலில் கிடைத்த ஆஸ்ட்ரலோபிதெகஸ் செடிபா இனத்தின் பெண்ணுக்கு லூசி என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதால், இந்தக் கட்டுரையில் அந்த இனத்தை லூசி என்றே எளிமை கருதி பயன்படுத்தியுள்ளேன்) நம்முடைய மூதாதை என்று கூறினால், அதன் எலும்புகள் 20 லட்சம் ஆண்டுகள் பழைமையானது என்ற கூற்று தவறாக இருக்க வேண்டும். ஒருவேளை, 20 ஆண்டுகள் பழைமையானது என்ற கூற்று உண்மையாக இருந்தால், லூசி நம்முடைய மூதாதையாக இருக்க வாய்ப்பே இல்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அந்த மண்டை ஓடுகளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் பூமியில் முதன்முதலில் நடந்த மனித இனம் நம்முடைய மூதாதையான ஹோமோ இரக்டஸ் கிடையாது என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவு நம்முடைய மூதாதைகளும் லூசியுடைய குடும்ப உறுப்பினர்களும் பாராந்த்ரோபஸ் ரோபஸ்டஸ் (Paranthropus robustus) என்றழைக்கப்படும் மற்றுமொரு மனித இனமும் ஒரே காலகட்டத்தில் ஆப்பிரிக்காவின் ஒரே பகுதியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

வாழ்விடம்
வாழ்விடம்

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு மலையுச்சிக் குகையில் ஹோமோ இரக்டஸ் மற்றும் பாராந்த்ரோபஸ் ரோபஸ்டஸ் ஆகிய இரண்டு மனித இனங்களும் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளன. அதே காலகட்டத்தில்தான், நாம் மேலே கூறிய லூசியின் குடும்ப உறுப்பினர் வாழ்ந்ததற்கான ஆதாரமாக 2008-ம் ஆண்டு லூசி இனத்தின் தொல்லெச்சங்கள் தென்னாப்பிரிக்காவிலேயே கிடைத்தன. இதன்மூலம் இந்த மூன்று மனித இனமுமே ஒரே காலகட்டத்தில் அருகருகே தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துள்ளன என்பது தெரியவருகிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னிலுள்ள, லா டிரோப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆண்டி ஹெர்ரீஸ் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் புவியின் பெரும்பகுதியை ஒற்றை மனித இனம்தான் ஆக்கிரமித்திருந்தது என்ற கூற்றை உடைத்து நம் அறிவியல் பார்வை மேலும் விரிவடைந்திருக்கிறது.

ஒரே குகையில் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த மூன்று மூதாதைய மனித இனங்கள்... அசரடிக்கும் புதிய ஆராய்ச்சி! #Ancient #HumanSpecies #CaveMan

Posted by சுற்றமும் சூழலும் on Monday, April 13, 2020
Vikatan

150 ஆண்டுகளுக்குமுன் டார்வின் எழுதிய ``உயிரினங்களின் தோற்றம்" என்ற புத்தகத்தில் மனித இனத்தின் வளர்ச்சி பல்வேறு கிளைகளைக் கொண்ட ஒரு மரத்தைப் போன்றதென்று கூறியிருந்தார். அவரது கூற்றின்படி, மனித இனம் பொதுவான ஓர் இனத்திலிருந்து பிரிந்த பல்வேறு கிளை உயிரினங்களாகும். அத்தகைய மனித மரத்தின் வேர்களைத் தேடிப் பயணிக்கும் ஆய்வாளர்கள், மூன்று வேறுபட்ட கிளைகள் தென்னாப்பிரிக்காவின் ஒரு குகையில் ஒன்றிணைந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு மனித இனம் தோன்றும்போது, அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருந்த வேறு மனித இனம் அழிந்துவிடும் என்ற கருத்து இந்த ஆய்வின் மூலம் உடைக்கப்படுகிறது.
ஆண்டி ஹெர்ரீஸ், ஆய்வுக்குழுவின் துணைத்தலைவர்

இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், டிரைமோலென் என்ற பழங்காலக் குகையில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அப்படி ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த மூன்று வெவ்வேறு மனித இனங்களும் தங்களுக்குள் எந்த அளவுக்குத் தொடர்பு வைத்துக்கொண்டனர் என்ற வினாவுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் கிடைக்கலாம். ஆனால், ஆப்பிரிக்காவில் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் மனித இனம் பன்மைத்தன்மையோடுதான் வாழ்ந்துள்ளது என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. நம்முடைய மூதாதையான ஹோமோ இரக்டஸ் உட்பட அந்த மலைக் குகைகளில் வாழ்ந்துள்ளனர்.

``ஒரு மனித இனம் தோன்றும்போது, அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருந்த வேறு மனித இனம் அழிந்துவிடும் என்ற கருத்து இந்த ஆய்வின் மூலம் உடைக்கப்படுகிறது. ஒரே காலகட்டத்தில் பல்வேறு மனித இனங்கள் வாழ்ந்துள்ளன என்பது இதன்மூலம் நிரூபணமாகின்றது" என்று கூறியுள்ளார் ஆய்வுக்குழுவின் துணைத்தலைவர் ஆண்டி ஹெர்ரீஸ்.

Outline of the found Skull
Outline of the found Skull
Andy Herries

அப்படி வாழ்ந்த மூன்று இனங்களில், இருப்பதிலேயே பழைமையானது லூசி என்ற இனம்தான் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட, மரமேறக்கூடிய கைகளைக் கொண்ட, மனிதக் குரங்கு போன்ற உடலமைப்புடைய இந்த மனித இனம் 3.3 மில்லியன் ஆண்டுகள் பழைமையானது. இந்த இனம், சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. இந்த உடலமைப்பு தவிர மற்ற எந்த வழிகளிலுமே இவை, நவீனகால மனிதர்களுடைய மூதாதைகளோடு தொடர்புடையதாகத் தெரியவில்லை.

பாராந்த்ரோபஸ் ரோபஸ்டஸ் என்ற மனித இனம், நவீனகால மனிதர்களின் மூதாதை இல்லை. இருப்பினும், நீண்ட, சக்திவாய்ந்த தாடைகளையும் கிழங்கு, விதைகள், வேர்கள், தேங்காய் போன்ற காய்களைத் தூளாக்கும் திறனுடைய பற்களையும் கொண்ட இந்த மனித இனமும் நம் மூதாதைகளோடு ஒரே காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தன. இவர்கள், சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.

ஹோமோ இரக்டஸின் உடலமைப்புதான், நவீன கால மனிதர்களின் உடலமைப்போடு பெரும்பாலும் ஒத்துப்போகிறது. ஆப்பிரிக்காவுக்கு வெளியே கிடைத்த முதல் மனிதத் தொல்லெச்சமும் இவர்களுடையதுதான். ஜியார்ஜியாவில் கிடைத்த 1.77 மில்லியன் ஆண்டுகள் பழைமையான ஹோமோ இரக்டஸ் தொல்லெச்சம் முதல் இந்தோனேசியாவில் கிடைத்த 117,000 ஆண்டுகள் பழைமையான தொல்லெச்சம் வரை ஹோமோ இரக்டஸ் இனத்தின் ஆப்பிரிக்காவிலிருந்து நடத்திய இடப்பெயர்ச்சியைப் பற்றிக் கூறுகின்றன. இவர்களே ஆப்பிரிக்காவில் முதலில் பரிணாம வளர்ச்சி அடைந்ததாகப் பொதுவாக நம்பப்படுகிறது. தற்போது, அவர்களுக்கும் முந்தைய காலகட்டத்தில் லூசி பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

டிரைமோலென் குகை
டிரைமோலென் குகை
ஆண்டி ஹெர்ரீஸ்

ஹெர்ரீஸும் அவருடைய ஆய்வுக்குழுவும் சொல்வது சரியாக இருந்தால், ஹோமோ இரக்டஸ் எப்படித் தென்னாப்பிரிக்காவுக்கு வந்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது. ஆம், ஏனென்றால் அவர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி அங்கிருந்து நேரடியாக வடக்குப் பக்கம் பயணித்து, பின்னர் ஆப்பிரிக்காவுக்கு வெளியே இடம் பெயர்ந்துவிட்டதாகத்தான் இதற்கு முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.

நம்முடைய மூதாதைகளில் ஒன்றான ஹோமோ இரக்டஸ் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி வளர்ந்து இடம் பெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. இப்போது கிடைத்துள்ள ஆதாரங்களின்படி பார்த்தால், அவர்கள் தெற்கு ஆப்பிரிக்காவிலிருந்துதான் கிழக்கு ஆப்பிரிக்கா பக்கம் இடம் பெயர்ந்திருக்க வேண்டுமென்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். காலப்போக்கில் அங்கிருந்து வடக்கு ஆப்பிரிக்கா பக்கம் நகர்ந்து, பின்னர் பூமியின் மற்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து மக்கள் தொகையைப் பெருக்கினார்கள்.

`அவர்கள் தெற்கிலிருந்துதான் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கே இடம் பெயர்ந்துள்ளனர்' என்று கூறுகிறார் ஹெர்ரீஸ். ஹோமோ இரக்டஸ் மற்றும் பாராந்த்ரோபஸ் இனங்களின் கல் கருவிகள் தென்னாப்பிரிக்காவில் கிடைத்துள்ளன. இங்கே தோன்றி, பின்னர் இடம் பெயர்ந்த இவர்களுக்கு ஆப்பிரிக்காவிலிருந்து அவர்கள் வெளியே செல்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அப்போது கதையே வேறாக இருந்தது. வெறுமனே, உணவு மற்றும் வாழ்விடம் போதுமான அளவுக்குக் கிடைக்கும் பகுதிகளை நோக்கி மட்டுமே அவர்கள் இடம் பெயர்ந்துகொண்டிருந்தனர்.

ஹோமோ இரக்டஸ் இனம், இடம்பெயர்ந்துகொண்டிருந்த நேரத்தில் ஏதாவதொரு காலகட்டத்தில் அவர்கள் டிரைமோலென் குகையில் இடம் பெயர்ந்து வந்து தங்கியிருக்கலாம்.

இவர்கள் இடம் பெயர்ந்துகொண்டிருந்த இதே காலகட்டத்தில், மனித இனமல்லாத சில உயிரினங்களும் இடம் பெயர்ந்துள்ளன. உதாரணத்துக்கு, அழிந்துவிட்ட வரலாற்றுக்கு முன்பு வாழ்ந்த வரிக்குதிரை இனம் தென்னாப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்துள்ளது. அநேகமாக, ஏதேனும் சுற்றுச்சூழல் மாற்றங்கள்தான் அவர்கள் தோன்றிய இடத்திலிருந்து வேறு இடத்துக்கு இடம்பெயர வேண்டிய, குறிப்பாக வடக்கு நோக்கி இடம் பெயர அவர்களை உந்தியிருக்க வேண்டும்.

Vikatan

ஆதி மனிதர்களின் இடப்பெயர்வில் இத்தகைய சூழலியல் மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மானுடவியல் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிகளில் அத்தகைய தொல்-சூழலியல் மாற்றங்களே பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தும் உள்ளன. இரண்டு மில்லியன் ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அதற்குள் ஆப்பிரிக்க நிலப்பகுதியில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்திருக்கும். அப்போதைய தென்னாப்பிரிக்காவில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும், அங்கிருந்து அவர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு இடம் பெயர்ந்தபோது, அங்கு என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்பது இன்னும் ஆராய வேண்டிய கேள்விகள். அந்த நேரத்தில் காலநிலையில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேயிருந்தது மட்டும் உறுதியாகத் தெரிவதாக தொல்லெச்ச ஆய்வாளரான ரிக் பாட்ஸ் இந்த ஆய்வு குறித்துப் பேசுகையில் கூறியுள்ளார்.

ஆய்வின் போது கிடைத்த தொல்லெச்ச எலும்புகள்
ஆய்வின் போது கிடைத்த தொல்லெச்ச எலும்புகள்
ஆண்டி ஹெர்ரீஸ்

ஹோமோ இரக்டஸ் இனம், ஆப்பிரிக்கா முழுக்க ஆங்காங்கே இடம் பெயர்ந்து பின்னர் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறினர். அப்படி, இடம்பெயர்ந்துகொண்டிருந்த நேரத்தில் ஏதாவதொரு காலகட்டத்தில் அவர்கள் டிரைமோலென் குகையில் இடம் பெயர்ந்து வந்து தங்கியிருக்கலாம். அந்த நேரத்திலேயே அங்கு இதர இரண்டு ஆதி மனிதர்களும் குறிப்பிட்ட காலத்துக்கு வாழ்ந்திருக்கலாம் என்ற கோட்பாடு ஹேர்ரீஸ் குழுவினரால் முன்வைக்கப்படுகிறது.

இந்த ஆய்வின் மூலம் முக்கியமாகத் தெரிய வருவது என்னவென்றால், ஒரு சின்னக் குகைப்பகுதியில் மூன்று வெவ்வேறு மனித இனங்கள் வாழ்ந்துள்ளன. அதுவும் ஒரே காலகட்டத்தில். இது மனித வரலாற்றின் வரைபடத்தில் டிரைமோலென்னுக்குத் தனி இடத்தைப் பெற்றுத்தரும்.

ஜியார்ஜியாவில் கிடைத்த ஹோமோ இரக்டஸ் மண்டை ஓடு
ஜியார்ஜியாவில் கிடைத்த ஹோமோ இரக்டஸ் மண்டை ஓடு

``நாம் நியாண்டர்தால், டெனிசோவன், நவீன கால ஹோமோ சேப்பியன் போன்ற மனித இனங்கள் குறித்து நிறைய விவாதிக்கிறோம். அவர்களை நம்முடைய மரபணுக்களிலேயே, மரபணு ஆராய்ச்சிகளின்போது பார்க்கின்றோம். ஆனால், நம் மூதாதைகளுக்கும் முந்தைய விஷயங்களைப் பற்றி ஆராயத் தற்போது தொடங்கியுள்ளோம். அதற்கான முன்னுதாரணமாக டிரைமோலென் குகை என்று நம்புகிறேன்" என்று இந்த ஆய்வு குறித்துக் கூறியுள்ளார் ஆண்டி ஹெர்ரீஸ்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு