Published:Updated:

உடலை வளைத்துச் சீறிய மோதிர வளையன்... புதர்க்காடுகளைப் புரிந்துகொள்ள உதவிய பாம்பு நடை!

பாம்புகளைப் பார்க்க வேண்டுமென்றாலே, ஓர் இனம்புரியாத சிலிர்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. அன்றிரவு 11 மணிக்கு அம்பையில் அகத்தியர் பட்டி என்ற கிராமத்திற்கு அருகிலிருந்த கரட்டுக்குள் நானும் நண்பரும் பாம்பு நடை மேற்கொண்டிருந்தபோதும் அப்படித்தான் இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரடு தொடங்குமிடத்திலேயே குப்பைக் குவியல். அங்கிருந்த எலிகளை வேட்டையாடவே அந்தச் சாரை வந்திருந்தது. எலிகள் க்றீச்சிட்டுக்கொண்டு சிதறி ஓடின. அதைக் கடந்து, இரவாடிப் பறவையான இரவுப் பக்கியின் ஓசையைக் கேட்டவாறு புதர்க்காடுகளால் நிறைந்திருந்த கரட்டுக்குள் நுழைந்தோம்.

Marbled Balloon Frog
Marbled Balloon Frog
Subagunam Kannan
Marbled Balloon Frog
Marbled Balloon Frog
Subagunam Kannan

சில பாம்பு வகைகள், இரவு நேரத்தில்தான் அதிகமாக வெட்டவெளிக்கு வரும். உதாரணத்திக்கு சுருட்டை விரியனைச் சொல்லலாம். பகல் வெயிலில், வெப்பத்தை உள்வாங்கும் பாறைகள், இரவுநேரத்தில் அந்தச் சூட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும். இரவுநேரக் குளிரில் சுருட்டை விரியன்கள் மொட்டைப் பாறைகளில் வந்து நன்றாகச் சுருண்டு படுத்து அந்தச் சூட்டை இதமாக உள்வாங்கிக்கொண்டிருக்கும். அன்றைய சூழல், அவனைப் பார்க்க முடியுமென்ற நம்பிக்கையை விதைத்திருந்தது.

கரடு கொஞ்சம் மேடாக ஏறியது. அந்த மேட்டில் ஏறிய வேகத்தில் நண்பர் கையைப்பிடித்து நிறுத்தவே, அவர் எதோ உயிரினத்தைப் பார்த்துவிட்டார் என்றுணர்ந்து நானும் அமைதியாக நின்றேன். நின்ற இடத்திலிருந்து முன்னால் கொஞ்சம் தள்ளியிருந்த சிறிய பாறையில் ஓர் ஆண் பளிங்குப் பலூன் தவளை (Marbled Balloon Frog, Male) அமர்ந்திருந்தது. இந்த வகைத் தவளைகள் மண்ணில் குழிதோண்டி வாழ்பவை. மழைக்காலங்களின்போது மட்டுமே அவற்றை எளிதாகப் பார்க்கமுடியும். டிசம்பர் மாதம் என்பதால் அந்த வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

மழை பெய்தபின், குளங்களுக்கு அருகிலிருந்து இவை இனப்பெருக்க ஒலியை ஏற்படுத்தும். மழைக்கான அறிகுறி தெரிந்ததால், அநேகமாக அதற்குத்தான் காத்திருக்கிறதோ என்ற எண்ணமும் மேலெழுந்தது. தொந்தரவு செய்ய வேண்டாமென்று எண்ணி, மேற்கொண்டு சில எட்டுகளையே எடுத்து வைத்திருப்போம். அங்கே, ஒரு தேரை (Common Toad).

தேரை (Common Toad)
தேரை (Common Toad)
Subagunam Kannan
பாறைப் பல்லி (Rock Agama)
பாறைப் பல்லி (Rock Agama)
Subagunam Kannan

இனப்பெருக்கக் காலங்களின்போது, அதன் கழுத்துப் பகுதியிலிருக்கும் பலூன் போன்ற உடலமைப்பை ஊதிப் பெரிதாக்கி இணையை ஈர்க்கும். அவ்வளவு சிறிய தேரையின் நெற்றியிலும்கூட கொசுக்கள் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்து அதன் ரத்தத்தை ருசித்துக்கொண்டிருந்தன.

அதை ரசித்துக்கொண்டிருக்கும்போதே, மெல்லிய தூறல் தொடங்கியது. அங்கிருந்த பாறைக்கு அருகிலேயே பூச்சிகளை வேட்டையாடிக்கொண்டிருந்த பாறைப் பல்லியின் துணையோடு தூரல் நிற்கும் வரை காத்திருந்தோம். மழை நின்றவுடன், அருகிலிருந்த குளத்துக்கரையிலிருந்து பல்வேறு தவளை மற்றும் தேரை ஒலிகள் கேட்கத்தொடங்கின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தக் குளத்திற்குச் செல்லும்போது, பாறைகளுக்கு நடுவே வளர்ந்திருந்த செடிக்குக் கீழே சுருண்டு படுத்திருந்த சுருட்டை விரியனைப் பார்த்தோம். சின்னதாகத் தெரிந்தாலும் வீரியம் மிக்க நஞ்சுக்குச் சொந்தக்காரன். கொஞ்சம் கோபக்காரனும்கூட. இருப்பினும் மனிதர்களைக் கண்டால் விலகிச் செல்லவே விரும்புவான். குட்டிப் பாம்புகள், பல்லிகள், பறவைகளை வேட்டையாடும் இரவாடி வகையைச் சேர்ந்த இது, தனக்கு ஆபத்து நேராதவரை, அதுவும் ஆபத்தை ஏற்படுத்தாது. அதன் நெற்றியிலிருக்கும் நீண்ட வைர வடிவம் அழகைக் கூட்டுகின்றது.

சுருட்டை விரியன் (Saw Scaled Viper)
சுருட்டை விரியன் (Saw Scaled Viper)
Subagunam Kannan
சுருட்டை விரியன் (Saw Scaled Viper)
சுருட்டை விரியன் (Saw Scaled Viper)
Subagunam Kannan

அந்த அழகை ரசித்துவாறு நகர மனமின்றி நின்றிருந்தேன். பாம்புகள் உணவை வேட்டையாட இயற்கை கொடுத்த ஆயுதமே நஞ்சு. அதை உணவுக்காகவும் தற்காப்புக்காகவும் மட்டுமே அவை பயன்படுத்துகின்றன. அச்சம் மேலோங்கும்போதும் மனிதர்களால் ஆபத்து ஏற்படும் போதும்தான் அவை, நம்மீது நஞ்சுத் தாக்குதலைத் தொடுக்கின்றன. அதையுணர்ந்து நாம் எச்சரிக்கையோடு செயல்பட்டாலே, பயத்தில் பாம்புகளை அடித்துக் கொல்லவேண்டிய அவசியம் ஏற்படாது.

நகர மனமின்றித் தேங்கியிருந்த சிந்தனைக் குளத்தில் மூழ்கியிருந்தேன். நண்பர் அதைக் கலக்கிவிடவே, அங்கிருந்து குளக்கரைக்குச் சென்றோம். குளத்தோரத்தில், நீருக்குள்ளிருந்த மீன் மற்றும் கொசு முட்டைகளை, நீர்ப் பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன இரண்டு குளத்துத் தவளைகள் (Indian Skipper Frog). கொஞ்சம் தள்ளியிருந்த பாறை ஒன்றின்மீது, மரத்தவளை அமர்ந்திருந்தது. பச்சைத் தவளைகள் இனப்பெருக்க ஓசையை ஏற்படுத்தின. அவற்றின் கழுத்து, பலூன் போல் உப்புவதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அதைப் பார்க்க முயன்றோம். ஆனால், கண்களுக்குப் புலப்படவில்லை. இன்னும் பல இனம் காண முடியாத தவளை மற்றும் தேரை வகைகளின் ஒலிகள் கேட்டன.

Indian Skipper Frog
Indian Skipper Frog
Subagunam Kannan

தூரத்தில் புள்ளி ஆந்தையின் அலறல் கேட்டது. நேரமும் 1:30-ஐ தொட்டிருந்தது. பாம்பு நடையைத் தொடங்கி நீண்டநேரமாகி விட்டதால், அங்கிருந்து கிளம்பி பனைமரக் கூட்டத்தின் நடுவே சென்றுகொண்டிருந்தோம். மழை தொடங்குவதற்கான அறிகுறியாக, இடி இடித்துக்கொண்டிருந்தது. பாதையில் திடீரென்று ஒரு பாம்பு எங்களை வேகமாகக் கடந்து அருகிலிருந்த புதருக்குள் மறைந்தது. மூளையும் வேகமாக செயல்படத் தொடங்கியது. மூன்றடிக்குக் குறையாமலிருந்த நீளம், உடலின் பாதியிலிருந்து வால் நுனி வரை இருந்த நீள்வட்டக் கோடுகள் என்று பார்த்த சில நொடிகளில் நினைவில் பதிந்தவற்றைத் திரும்பவும் நினைவுபடுத்தி என்ன வகையாக இருக்குமென்று சிந்தித்துப் பார்த்தேன். நண்பரும் பார்த்திருந்தார். ஆனால், இருவருக்குமே புலப்படவில்லை.

மழை தொடங்கப்போகும் அறிகுறி அதிகமானதால், கிளம்ப எத்தனித்து இரண்டு அடிகளே எடுத்து வைத்தோம். பாதையில் அதே வகையைச் சேர்ந்த இன்னொரு பாம்பு இருந்தது. அது, மோதிர வளையன் (Common Trinket Snake).

எங்களைப் பார்த்தவுடன் அதன் எதிர்வினைகளும் வேகவேகமாக நடந்தன. அதன் பாதி உடலை மேலே உயர்த்தி, மூன்றாக மடக்கி, தலையை முன்னால் நீட்டி, பற்களைக் காட்டிச் சீறியது. சில நொடிகளுக்குத்தான், அதே வேகத்தில் அதுவும் புதருக்குள் மறைந்துவிட்டது.

மோதிர வளையன் (Common Trinket Snake)
மோதிர வளையன் (Common Trinket Snake)
Subagunam Kannan

சாரைகளைப் போலவே, அதிகமாக வேட்டையாடி எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பவை இந்த மோதிர வளையன்கள். இரண்டும் பார்ப்பதற்கு ஆண் பாம்புகளைப் போலவே தெரிந்ததால், இணையை ஈர்ப்பதற்கான போட்டியில் இரண்டும் ஈடுபட்டிருக்கலாம் என்று ஆய்வாளரான நண்பர் ஊகித்தார். அது உண்மையாக இருந்தால், அருகில்தான் எங்காவது பெண் பாம்பும் இருக்கும். அவற்றின் வாழ்வியல் செயல்பாட்டில் முக்கியமான நிகழ்வைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று எண்ணி, நாங்களும் அந்த இடத்தில் நிற்காமல் வேகமாகக் கிளம்பினோம்.

குளத்துத் தவளை
குளத்துத் தவளை
Subagunam Kannan

புதர்க்காடுகள் எப்போதுமே, தரிசாக, பயனற்றவையாகவே பார்க்கப்படுகின்றன. புதர்க்காடுகள் எவ்வளவு பல்லுயிரிய வளம் மிக்கவை என்பதற்கான சிறிய உதாரணம்தான் இந்தக் கரடு. இதுபோல் இன்னும் எவ்வளவோ புதர்க்காடுகள் தமிழக நிலப்பரப்பில் உள்ளன. அங்குள்ள பல்லுயிரிய வளம், சூழலியல் சேவை அனைத்தையும் உணர்ந்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற அவசியத்தை உணர்த்தியது அன்றைய பாம்பு நடை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு