
நீர்நில வாழ்விகளான தவளை போன்றவற்றைக் குறிப்பிட்ட நேரங்களில் சென்றால் நம்மால் பார்க்கமுடியும். ஆனால், ஊர்வனங்களுக்கு அப்படியில்லை. சில சமயங்களில் பார்க்கலாம், சில சமயங்களில் முடியாமல் போகலாம்.
பூமியில் தோன்றி பரிணாம வளர்ச்சியடைந்து இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து உயிரினங்களுமே ஆச்சர்யங்கள் நிரம்பியவைதான். ஆனால் புலி, யானை, மான், பறவை போன்றவற்றின்மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்பும் ஆர்வமும் ஏனோ ஊர்வனங்களின்மீது ஏற்படுவதே இல்லை. பல்லிகளும் பாம்புகளும் தவளைகளும் நம் நிலத்தின் சூழலியல் சமநிலையைப் பேணிப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அந்தப் பங்கு குறித்து ஆய்வு செய்துகொண்டிருப்பவர்தான் உயிரியலாளர் முனைவர்.சஞ்சய் மோலுர். Journal of Threatened taxa என்ற சர்வதேச ஆய்விதழின் முதன்மை ஆசிரியராகவும் Zoo Outreach என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவரைக் கோயம்புத்தூரில் சந்தித்தோம்.
ஊர்வனங்களுடைய பரிணாம வளர்ச்சி, மக்களுடனான பாம்புகளின் உறவு என அவருடன் பல்வேறு விஷயங்கள் உரையாடினோம்.

எனக்குப் புதிராகவே இருந்துகொண்டிருக்கிற ஷீல்டு டெயில் பாம்புகளிடமிருந்தே கேள்விகளைத் தொடங்கலாமே. `ஷீல்டு டெயில்' என்ற வகைப் பாம்புகளில் எத்தனையோ வகைகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவ்வளவு வகைகள் அதில் இருக்கின்றனவா! ஷீல்டு டெயில் வகைப் பாம்புகளை என்ன மாதிரியான வாழிடங்களில் நாம் பார்க்கலாம்?
புதிர் உங்களுக்கு மட்டுமில்லை (சிரிக்கிறார்...). இதுவரை சில வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகைப் பாம்புகள் உருவத்தில் மிகமிகச் சிறியவை. அதனால், வெகு அரிதாகவே கண்ணில் படுகின்றன. இன்னும் பல வகைகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்க இதுவும் ஒரு காரணம். இதன் வகைகளுக்கு இடையே நுண்ணிய வேறுபாடுகளே இருக்கும். அதனால், அவற்றை வகைப்படுத்துவது மிகவும் சிக்கலாகவும் கடினமாகவும் இருந்து வருகிறது. ஷீல்டு டெயில்களின் வகைப்பாட்டியல் குறித்த ஆழமான புரிதல் இருந்தால் மட்டுமே அவற்றின் வகைகளைக் கண்டறிய முடியும். அது இன்னும் சாத்தியப்படவில்லை.
ஷீல்டு டெயில் பாம்புகள் (Shield-tail snake) மற்றும் புழுப் பாம்புகளை (Blind worm snakes) வகைப்படுத்தப் போதுமான தரவுகள் இல்லாதது மிக முக்கியமான காரணம். எங்கெல்லாம் அவை பரவி வாழ்கின்றன, என்ன மாதிரியான வாழிடங்களில் வாழ்கின்றன என்பது போன்ற தரவுகள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. இவற்றில் பல வகைகள் மழைக்காலங்களில் சாலையோரங்களில் காணப்படும். அதேசமயம், மிக உயரமான மலை உச்சிகளிலும் காணப்பட்டுள்ளன. ஆக, அவற்றுக்கு உயரமோ அல்லது மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலை போன்ற இடங்களோ கூட ஒரு தடையாக இருக்கவில்லை என்று தெரிகிறது. இப்படிக் குழப்பமான நிலை நிலவுவதால் அவற்றைப் பற்றிய தரவுகள் இன்னும் முழுமையடையவில்லை.
அறிவியல், பறவைகள், ஆமைகள் என்று பல உயிரினங்களில் அறிவியல்பூர்வமாக மக்கள் பங்கு வகிக்கும் வகையில் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதுபோன்ற செயல்பாடுகள் ஊர்வனங்களில், குறிப்பாகப் பாம்புகளில் இருக்கின்றனவா? அதன் தாக்கம் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இருக்கின்றது?
ஹூம்... ஊர்வனவியல் துறையில் சிலவற்றைச் செய்துகொண்டிருக்கிறோம். உதாரணமாக, தவளை நடை (Frog walks), பாம்பு நடை (Snake walks) போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. நிறைய மக்கள் அதில் ஆர்வமாகக் கலந்துகொண்டு அந்த உயிரினங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் குறிப்பெடுக்கவும் முனைகிறார்கள். மக்களுக்கு அவற்றைப் பற்றி அறிமுகப்படுத்துவதுதான் முதல்கட்ட நோக்கமாக இருக்கின்றது.

மற்ற உயிரினங்களில் மக்கள் தரவுகளைச் சேகரித்துப் பதிவு செய்யத் தகுந்த இணையதள முன்னெடுப்புகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, ebird, India Biodiversity portal போன்றவை. அதுபோல ஊர்வனங்களுக்கென்று பிரத்யேகமாக ஏதேனும் இருக்கின்றதா!
இதுவரை எனக்குத் தெரிந்து இல்லை. அதற்கான தேவை இங்கு அதிகமாகவே இருக்கின்றது. ஆனால், ஊர்வனங்களில் இதுபோன்ற முன்னெடுப்புகளை எடுப்பதில் ஒரு சிக்கலும் இருக்கின்றது. பறவைகளைப் பார்க்கப் போகும்போது அவற்றை நிச்சயமாகப் பார்க்கமுடியும். நீர்நில வாழ்விகளான தவளை போன்றவற்றைக் குறிப்பிட்ட நேரங்களில் சென்றால் நம்மால் பார்க்கமுடியும். ஆனால், ஊர்வனங்களுக்கு அப்படியில்லை. சில சமயங்களில் பார்க்கலாம், சில சமயங்களில் முடியாமல் போகலாம். கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பொறுத்துத்தான் அமையும்.
இருப்பினும், ஊர்வனங்கள் மீது மக்களுக்கு இருக்கும் அச்சத்தையும் அருவருப்பு உணர்வையும் போக்குவதற்கு, இதுபோன்ற செயல்பாடுகள் இன்று மிக அவசியமாகின்றது.
நிறைய காட்டுயிர் ஆர்வலர்கள், காட்டுயிர்கள் பற்றியும் அவற்றின் வாழிடங்கள் பற்றியும் பல்வேறு ஆய்வுகளைச் சில ஆய்வாளர்களின் வழிகாட்டுதல்களோடு சுயமாக மேற்கொள்கிறார்கள். அத்தகைய ஆய்வுகளை ஆய்வுக்கட்டுரைகளாகச் சமர்ப்பிக்க ஆய்வாளர்களாக இல்லாத சாதாரண குடிமக்களால் முடியுமா!
நிச்சயமாக முடியும். Journal of Threaten Taxa என்ற மாத ஆய்விதழிலேயே அதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதில் குடிமக்கள் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, பிரிட்டன் என்று பல நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதில் பங்கு வகிக்கின்றனர். அதை, அந்த ஆய்வாளர்கள் சரிபார்த்து அங்கீகரிப்பார்கள். இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து, இன்னும் சிறப்பாகச் செய்யத் தேவையான அறிவுரைகளையும் பயிற்சிகளையும்கூட வழங்குகிறார்கள்.
நாகலாந்திலுள்ள சிஸாமி (Chizami) என்ற கிராமத்தைச் சேர்ந்த 13 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 17 மாணவர்கள் அவர்களுடைய சொந்தக் கிராமத்தில், இதற்குமு ன் என்ன மாதிரியான வேட்டை முறைகள் பின்பற்றப்பட்டன, என்னென்ன விலங்குகள் வேட்டையாடப்பட்டன, எப்படி வேட்டையாடப்பட்டன என்று ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை தயாரித்தார்கள். அதை அவர்களிடம் சமர்ப்பித்தபோது இதன் ஆசிரியர்கள் யார் என்பதை நாங்கள் சொல்லவில்லை. அதைச் சரிபார்த்த மூன்று ஆய்வாளர்களுமே கட்டுரையின் ஆசிரியர்களைப் பெரிதும் பாராட்டினார்கள்.
``இதுவொரு சிறப்பான ஆய்வு. ஒன்றிரண்டு விஷயங்களில் மட்டும் இன்னும் கொஞ்சம் விரிவாக ஆய்வு செய்திருக்கலாம். மற்றபடி இதில் ஒரு குறையுமில்லை" என்றார்கள்.முனைவர்.சஞ்சய் மோலுர்
அதன்பிறகுதான், இதைச் செய்தது 15 வயதுகுட்பட்ட குழந்தைகள் என்ற உண்மையை நாங்கள் சொன்னோம். அவர்கள் ஆச்சர்யப்பட்டு, இந்த வயதுக்கு இவ்வளவு விரிவாகச் செய்தது மிகப்பெரிய விஷயம்தான் என்றார்கள். அவர்களின் ஆய்வைப் பாராட்டி ஆய்வாளர்கள் ஒரு குறிப்பும் எழுதினார்கள். அதுவும் அந்த ஆய்வுக்கட்டுரையோடு வெளியானது.
இதைப் போல் இன்னும் ஒரு சில அமைப்புகள் மக்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகளை வழங்குகின்றன.

பாம்புகளின் பரிணாம வளர்ச்சி, பாம்புகளிடமிருந்து அரணை வந்ததா, அரணையிலிருந்து பாம்பு வந்ததா என்பது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான கேள்விகள் அடுத்த பகுதியில் (பகுதி-2) நாளை வெளியாகும்.