மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எதுவும் கடந்து போகும்! - 10 - அன்லிமிட்டெட் காலம்!

எதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
News
எதுவும் கடந்து போகும்

இந்த வாரம் அழகிய பெரியவன்

அழகிய பெரியவன்
அழகிய பெரியவன்

சித்திரம் பேசுதடி, எந்தன் சிந்தை மயங்குதடி என்ற ‘சபாஷ் மீனா’ (1958) திரைப்படப் பாடலைக் கேட்கும்போதெல்லாம், நாயகன் தன் மனதில் பதிந்திருக்கும் காதலியின் தோற்றத்தை ஒரு சுவரில் சுண்ணக் கட்டியால் வெண்ணிறச் சித்திரமாகத் தீட்டி ரசித்துக்கொண்டே பாடுகின்ற காட்சியும் மனதில் விரியும். சிவாஜி கணேசனும் மாலினியும் அக்காட்சிக்கு உயிரூட்டியிருப்பார்கள். யூடியூபில் இப்பாடலைப் பார்க்கும்போதெல்லாம், இயக்குநர் பி.ஆர்.பந்துலு இக்காட்சியை நுட்பமாகச் சிந்தித்து அமைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்வேன்.

அரை நூற்றாண்டுக்கு முன்னால் உலவிய மனிதர்களின் காதல் பதிவுகள் எல்லாமே பிரதானமான மனச்சித்திரங்கள்தான்! நினைத்த நேரத்திலெல்லாம் காதலர்கள் பார்த்துக்கொள்ள முடியாது. மாதத்துக்கு ஒருமுறையோ, வாரத்துக்கு ஒருமுறையோ சாத்தியப்படலாம். அல்லது திருவிழாக்களில் கூட்டத்தோடு கூட்டமாகப் பார்த்துக்கொள்ளலாம். அப்படிப் பார்த்துக் கொள்ளும் நினைவுகளே மனச்சித்திரங்களாகப் பதிந்து, மறுபடி பார்க்கும் வரைக்கும் தாக்குப் பிடிக்கும். குரல் கேட்க முடியாது. புகைப்படங்கள் இருக்காது.

அப்போது புகைப்படம் எடுப்பது செலவு பிடிக்கிறதும் நேரத்தைத் தின்கிறதுமான விசயம். அதற்கெனத் தயாராகி, பேருந்து பிடித்தோ, நடந்தோ டவுனுக்குப் போகவேண்டும். எடுத்த படத்தையும் உடனே பார்க்க இயலாது. ஸ்டூடியோகாரர் நெகட்டிவை ரசாயன நீரில் கழுவி அச்சிட்டுத் தரும் வரையில் பொறுமை முக்கியம்.

அப்படிக் காத்திருந்து கிடைக்கும் படத்தில் கண்ணை மூடிவிட்டிருந்தாலோ, முகத்தைக் கோணியிருந்தாலோ அவ்வளவுதான். ஒன்றும் செய்வதற்கில்லை. கலர் கரெக்‌ஷன் செய்ய வாய்ப்பே இல்லை! அந்தப் படத்தைத்தான் ஒருவருக்கொருவர் ரகசியமாகப் பரிமாறிக் கொள்ள வேண்டும். புகைப்படம் எடுக்க வாய்ப்பில்லை என்றால் மனச் சித்திரத்தையே எண்ணி அசைபோட வேண்டியதுதான்! இப்போது அவசியப் பட்டாலொழிய நேரில் போகத் தேவையில்லை! முகம் பார்த்துப் பேசிக்கொள்வதற்குக் கைப்பேசியில் வசதிகள் வந்துவிட்டன. கணநேரத்தில் கணக்கற்ற படங்களையும், செல்ஃபிகளையும் எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ள முடிகிறது!

அப்போது மிதிவண்டி வாங்குவது ஒரு கனவு. எளியதான `டிவிஎஸ் 50’ வாங்குவது அதைவிடப் பெரிய கனவு. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் ஒரு மிதிவண்டியும், ஒரு டிவிஎஸ் 50ம் இருந்தன. அவை வந்த விதம் ஒரு தனிக்கதை! அனேகமாக டவுனில் அப்போது டிவிஎஸ் 50 வைத்திருந்த வெகுசிலரில் நானும் ஒருவன்.

ஆனால் அதற்குப் பெட்ரோல் போடுவது பெரும் உபாதை. கால் லிட்டர், அரை லிட்டர் என்றெல்லாம்கூடப் போட்டிருக்கிறேன். ஒருமுறை நானும் நண்பர் ஒருவரும் எதற்கோ ஆம்பூர் வரை சென்றுவிட்டுத் திரும்புகையில் பெட்ரோல் தீர்ந்துபோய் பத்துக் கிலோமீட்டர் தள்ளிக்கொண்டு வந்தோம். இன்று ஊரைச் சுற்றி நான்கைந்து பெட்ரோல் பங்க்குகள் வந்துவிட்டன. ஏகப்பட்ட மெக்கானிக்குகள். நடைவண்டி, மிதிவண்டி, ஸ்கூட்டர் என்ற பரிணாம வளர்ச்சியெல்லாம் போய், ஓட்டப் பழகுவதே நேரடியாக பைக்கில்தான்!

அன்று காக்காய் குருவி இல்லாத சாலைகள், இன்று கனரக வண்டிகளால் நிறைந்து அதிர்கின்றன. இரவில் கூட இரவு உறங்குவதில்லை! வெளிச்சம் கண்களை உறுத்துகிறது. ஆளில்லாத சாலையிலும் கவனமாகப் போன காலம் போய், ஆட்களுக்கு நடுவிலும் நுழைந்து நுழைந்து நூறு கிலோமீட்டர் வேகத்தில் வண்டிகளை ஓட்டுகிறார்கள். சாலைகள் அகன்றதால் வாகனப் பெருக்கம். கார்களும் ஆட்டோக்களும் மலிந்துவிட்டன. முன்பு பொதுப் போக்குவரத்தாக இருந்த பேருந்து சேவைகளை இன்று பல கம்பெனிகள் நிறுத்தியேவிட்டன!

கடிதங்கள் தவறிப்போனதால் வாழ்க்கையும், வாய்ப்புகளும் தவறிப்போன காலம் அது. ஊரிலேயே அதிக அளவுக்குக் கடிதங்கள் வருவது எனக்கு மட்டும்தான். மகளிர் மிதிவண்டியில் மாதவண்ணன் பதினோரு மணிவாக்கில் ஊருக்குள் வருவார். யாராவது ஒருவர் நமக்கு எழுதியிருக்க வேண்டுமே என மனம் விரும்பும். ஒருநாள் காற்று மழையென்று இருந்ததையும் பொருட்படுத்தாமல், கடிதம் வந்திருக்கிறதா என்று பார்த்துவருவதற்கு அஞ்சலகத்திற்கே போய்விட்டேன். என் கடிதப் பைத்திய நிலையைப் பார்த்து மாதவண்ணன் கடிந்துகொண்டார். ஒரு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றும், சரியான நேரத்தில் கடிதம் வராததால் சென்னையில் நடந்த முக்கியமான அதன் பரிசளிப்பு விழாவைத் தவற விட்டிருக்கிறேன். இப்போது எழுத்துவழிக் கடிதங்கள் செவிவழிக் கடிதங்களாக உருமாறி நொடிகளில் பட்டுவாடா செய்யப்பட்டு விடுகின்றன!

இளையராஜாவின் மாபெரும் ரசிகன் நான். அவர் இசையில் வெளியாகும் சினிமாக்களுக்குப் போனால் முதலில் பாட்டுப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்வது என் வழக்கம். ஓய்வுப் பொழுதுகளில் அவற்றைப் பாடிப்பார்ப்பது பிடித்தமானது. வீட்டில் பழைய டக்காய் ரேடியோ ஒன்று இருந்தது. திரைகானம், நேயர் விருப்பம், தேனிசை, திரைத்தென்றல் எனக் கேட்பதைக் கடந்து டேப்ரெக்கார்டர் வைத்திருக்கும் மார்ட்டின் வீட்டுக்கும், ராபின்சன் வீட்டுக்கும், ராஜேந்திர பிரசாத்தின் ரெக்கார்டிங் சென்டருக்கும் இசைஞானியின் பாட்டு கேட்பதற்கென்றே போவேன்.

மார்ட்டின் வீட்டில் ‘ஒலியும் ஒளியும்’ பார்ப்பதற்கும், கிரிக்கெட் பார்ப்பதற்கும் போனால், வீட்டு வாசலில் இருக்கும் புளியமரத்தடியில் அவர் மேசையைப் போட்டு டி.வி-யை வைத்துவிடுவார். இருபது முப்பது பேர் உட்கார்ந்து பார்ப்போம். இளையராஜா சிம்பொனி அமைத்த செய்தி வந்தபோது வாழ்த்துக் கவிதையொன்றை எழுதினேன். அதை ஆயிரம் நோட்டீஸ்களாக அச்சடித்து ஊரெல்லாம் கொடுத்தோம்! இன்று ஸ்பாட்டிபபை, கானா, காரவன், யூடியூபில் ஆயிரமாயிரம் ரூபமெடுத்துப் பாடல்களாய் எனக்கென்று நிறைந்திருக்கிறார் ராஜா! போதாததற்கு ஸ்டார்மேக்கரிலும், ஸ்மூலிலும் பிடித்த பாடல்களை அந்த இசையோடு முணுமுணுக்கவும் முடிகிறது!

இரண்டாயிரத்தின் தொடக்க வருடங்களில், ஃப்ரீலேன்ஸ் ஜர்னலிசம் செய்வதற்கு வசதியாக இருக்குமென்று, புனிதபாண்டியன் எனக்கு ஒரு கைப்பேசியை வாங்கிக் கொடுத்தார். அது அப்போது புழக்கத்திலிருந்த செங்கல் அளவு நோக்கியா! கையில்தான் வைத்துக்கொள்ள வேண்டும். பாக்கெட்டில் போட்டால் சட்டை கிழிந்துவிடும். அதற்கு ரீசார்ஜ் செய்வது சவாலாக இருந்தது. பணத்துக்குப் பல நண்பர்கள் உதவினார்கள்.

எதுவும் கடந்து போகும்! - 10 - அன்லிமிட்டெட் காலம்!

பத்து ரூபாய் தொடங்கி நூறு, ஐந்நூறுக்கெல்லாம் ரீசார்ஜ் கூப்பன்கள் கிடைக்கும். அதை வாங்கிச் சுரண்டி, ரகசிய எண்ணை எஸ்.எம்.எஸ் செய்வார்கள். அப்படிதான் ரீசார்ஜ் செய்துகொள்வோம். காலத்தை அளந்து, காசை அளந்து பேசிய கைப்பேசிக் காலம் அது! இப்போது அன்லிமிட்டெட் காலம்! களைத்துப்போகும் வரைக்கும் பேசலாம்.

அப்போதும் இப்போதும் என்று தனியே ஒரு நூல் எழுதலாம். அவ்வளவு நினைவுகளும் செய்திகளும் மண்டிக்கிடக்கின்றன. அப்போது என்று விவரிக்கப்படுகின்ற எல்லாவற்றிலும் ஒரு எக்ஸைட்மென்ட் இருந்தது. இந்தத் தலைமுறையில் எக்ஸைட்மென்ட் என்கிற அந்தப் பரவசம் ஏறக்குறைய காலாவதியாகிவிட்டது. பரவசம் என்பது மூளை அடையும் அதியானந்த உணர்வு. வியப்பும் தித்திப்பும் நிறைந்தது. குழந்தைமையுடன் நெருங்கிய தொடர்புடையது. மனித உணர்வுகளில் அடிப்படையானதும் உற்சாகம் அளிக்கக் கூடியதுமான அது எப்போதுமே அழியாது. இப்போதும் அழியவில்லைதான் என்றாலும் அதன் அளவும் இடங்களும் குறைந்துபோயின.

வேலைகளைச் செய்தவாறோ, அல்லது உடனிருந்தவறோ வளர்ந்த காலம் போய், எதுவுமே செய்யாமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பது இப்போதுதான். அடுத்தவர் விளையாடுவதை, அடுத்தவர் காதல் செய்வதை, அடுத்தவர் காமத்தை, அடுத்தவர் மரணத்தை. இன்று எல்லாமே ஒருவகையில் வேடிக்கை. கற்றலின் கூறுகளுள் ஒன்று, செய்து கற்றல். மனித இனம் வளர்ந்ததே அவ்விதம்தான். இன்று செய்து கற்றல் என்ற அம்சம் இல்லை. அலைந்து திரிந்து உழைத்துக் களைத்து ஒன்றை அறிந்து கொள்வதில் கிடைக்கின்ற அனுபவமும், சிரமமே இல்லாமல் ஒன்றைப் பெறுவதில் கிடைக்கிற அனுபவமும் ஒன்றல்ல. இன்றைய தலைமுறையினருக்கு எதுவும் கடினமில்லை. எல்லாமே எளிதாகக் கிடைத்துவிடுகின்றன. அவர்களின் வரமும் சாபமும் இதுதான்.

அப்போது தண்ணீருக்கு அலைய வேண்டும். உணவுக்கு அலைய வேண்டும். விறகுக்கு அலைய வேண்டும். பொருளுக்கு அலைய வேண்டும். கல்விக்கு அலைய வேண்டும். அப்படி அலைந்து திரிந்து தேடிப்பெறுவதில் ஒரு இன்பம் இருந்தது. அப்படிப் பெற்றதனால் அவற்றின் மதிப்பும் தெரிந்தது. இன்றிருப்பதைப் போல எல்லாமும் கிடைத்துவிடுகின்ற வாய்ப்போ, உடனே கிடைத்துவிடுகின்ற வேகமோ அப்போது இல்லை. எல்லாவற்றிலும் ஒரு நிதானம், பொறுமை, கவனம், என்ன செய்யலாம் என்ற சின்ன யோசனை எல்லாமே இருந்தன. இன்று அவை விடைபெற்றுக் கொண்டன. இன்ஸ்டன்ட் ஆசைகளுக்கு இன்ஸ்டன்ட் சேவைகள்.

இப்போது சிறப்புக்குரியதென்று எதுவுமே இல்லையா? ஏனில்லை? அன்று பொம்பள சிரிச்சா போச்சி, புகையிலை விரிச்சா போச்சி என்று எழுதப்பட்ட காகிதங்கள் இன்று குப்பைக் கூடைக்குள் விழுந்து மக்கிப்போயின. ஆண் பெண் காதலைத் தாண்டி, நட்பென்ற அழகிய உறவொன்று மலர்ந்திருக்கிறது. கோகுல்ராஜ் போன்றோரின் ரத்தத்தைச் சிந்தி இந்தத் தலைமுறை வளர்த்த நட்பு இது. வளர்க்கின்ற நட்பு இது. ஆண் பெண் இன்பாச்சுவேஷன், காஃப் லவ் எல்லாம் கடந்து அத்தனை அழகான முதிர்ச்சி இளையோரின் நட்பில் தெரிகிறது. முன்பை விடவும் சுதந்திரம் பெருகியிருக்கிறது. புழங்கு வெளிகள் அதிகரித்திருக்கின்றன். நிறைய தெரிந்துகொள்கின்றனர். `வாட்ஸ் ஆப் யுனிவர்சிடி’ யிலிருந்து பார்வேர்டு செய்யப்படும் பொய்ச் செய்திகளையெல்லாம் கடந்து உலக இயங்கு முறையை இளையோர் புரிந்து கொள்கின்றனர்!

தகவல் தொழில்நுட்பப் பெருக்கம் இளையோரிடத்தில் குழப்பத்தையும் மலைப்பையும் அயர்ச்சியையும் ஏற்படுத்தி யிருக்கின்றன. எல்லாத் துறைகளிலும் கடுமையான சவால்களும் போட்டிகளும் நிறைந்திருப்பதால் எதைச் செய்யலாம் எனத்தேர்வதில் அவர்களுக்கு உறுதியின்மையும், தெளிவின்மையும் இருக்கிறது. பழைமையும் புதுமையும் பிணைந்த இந்தக் காலம் இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஓர் அரைவேக்காட்டுக் காலம். பழைமையின் பெயரால் இன்றைய இளையோர் முந்தைய தலைமுறையினரால் கடும் நெருக்கடிக்குள்ளாக்கப் படுகின்றனர். சாதிவெறியோடும், போலிப் பெருமிதக் கருத்துகளோடும் இருட்டறைகளிலிருந்து கிளம்பிவரும் பெரியோர்கள் இளைஞர்களை முட்டுச்சந்துக்கு இழுத்துக்கொண்டு போய் சாதி வர்ணக் கயிறுகளைக் கட்டிவிடுகிறார்கள்.

எதுவும் கடந்து போகும்! - 10 - அன்லிமிட்டெட் காலம்!

தலைமுறைகளுக்கு இடையே இடைவெளி இருந்துகொண்டேதான் இருக்கும். இந்த இடைவெளி வயதால் ஆனதல்ல. காலத்தால் ஆனது. அனுபவம், பட்டறிவு, முதலில் அறிந்தது, முதலில் அனுபவித்தது போன்றவையே இந்த இடைவெளியை நிரப்புகின்றன. இதற்கு மாறான விர்ச்சுவல் அனுபவம் கட்டமைத்துக் கொடுக்கப்படுகிறது. அது நேரடி அனுபவமோ, தனி அனுபவமோ அல்ல. எல்லோரும் பெறும் அனுபவத்தின் துண்டான அது, ஒரு பெரிய கேக்கிலிருந்து கிடைத்திடும் விள்ளலைப் போன்றது.

காலம், தலைமுறை, இடைவெளி என்ற சொற்களுக்கெல்லாம் எப்போதும் ஒரே பொருள்கள் கிடையாது. சமூக அடுக்குகளில் வெவ்வேறு வகையான வாழ்க்கைகளை வாழ்ந்து வருகின்ற மனிதர்களுக்கு இவை வேறு வேறு அர்த்தங்களைக் கொடுக்கின்றன. சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களையும் பலன்களையும் ஒரே நேரத்தில் எல்லோரும் அனுபவித்துவிடுவதில்லை. அவை மேலிருந்து கீழே இறங்கி வருவதற்குள் காலம் வெகுவாகக் கடந்துவிடுகிறது. எல்லாருக்கும் காலம் ஒன்றாயில்லை. அதனால் தான் `யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்’ என்பது போன்ற சொல்வழக்குகளில் எளிய மனிதர்கள் தமது நம்பிக்கைகளைப் பொதிந்து வைத்திருக்கின்றனர்!

வாய்ப்புகளும் வசதிகளும் பெருகப் பெருக காலம் புதுமையாகிவருவதாக எண்ணத் தலைப்படுகிறோம். புதுமை என்பது வசதிகளில் இல்லை. மதிப்பீட்டில் இருக்கிறது. நீண்டகாலம் குடிசையில் வாழ்ந்த ஒரு மனிதனுக்கு எந்தக்காலத்தில் ஒழுகாத நல்ல வீடு கிடைக்கிறதோ அந்தக்காலம்தான் நவீன காலம். கூழும் கஞ்சியும் குடித்துக்கொண்டிருந்த மனிதர்களுக்கு எந்தக்காலம் சோற்றை வழங்குகிறதோ அந்தக் காலமே சிறந்த காலம்!

எதுவும் கடந்து போகும்! - 10 - அன்லிமிட்டெட் காலம்!

நாம் சொல்லும் நவீனங்கள் எவையுமே எட்டிப்பார்க்காத மலைக் கிராமங்களில் உறைந்திருக்கும் காலங்கள் எப்போது உடைப்பெடுக்கின்றனவோ அதுவே அவர்களுக்குப் புதிய காலம். காலங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பது முக்கியமல்ல. காலம் தோறும் மனிதர்கள் எவ்வாறு இருக்கின்றனர் என்பதே முக்கியம். அவ்வாறாயின் மனிதர்களே காலத்துக்கு குணத்தைத் தருகின்றனர்! காலத்திற்கு உயிர் இல்லை, அதை உயிர்ப்பிப்பவர் மனிதரே. காலத்திற்கு மதிப்பில்லை, அது சுழியம் போன்றது. தமது செயற்பாடுகளால் மனிதர்களே அதற்கு மதிப்பை உண்டாக்குகின்றனர். மனிதர்கள் காலத்தை எவ்விதம் பயன்படுத்துகிறார்களோ அவ்விதமே அதற்குப் பெயர் கிட்டுகிறது.

- இடைவெளி இணைப்போம்