சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“மைக்ல பேசினா சாதி ஒழியாது!”

பூமணி
பிரீமியம் ஸ்டோரி
News
பூமணி

“என்னோட சுபாவத்துக்கும் சினிமாச் சூழலுக்கும் ஒத்துவரலை. அங்க பல விஷயங்கள் ரொம்பச் செயற்கையா தெரிஞ்சுது.

‘சிதம்பரம் நினைத்தது அப்படியில்லை. வலது கையை மட்டும் துண்டிக்கத் திட்டமிட்டிருந்தான்...’ என்றுதான் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவல் தொடங்கும். தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் பூமணி. அவரின் ரத்தமும் சதையுமான ‘வெக்கை’ நாவல் மனிதர்கள் இன்னும் சில நாள்களில் ‘அசுரன்’ கதாபாத்திரங்களாகத் திரையில் வெளிப்படப்போகிறார்கள்.

“`கருவேலம்பூக்கள்’ திரைப்படத்தை இயக்கியதோடு, சினிமாவிலிருந்து ஏன் ஒதுங்கிக்கொண்டீர்கள்?”

“என்னோட சுபாவத்துக்கும் சினிமாச் சூழலுக்கும் ஒத்துவரலை. அங்க பல விஷயங்கள் ரொம்பச் செயற்கையா தெரிஞ்சுது. நான் யதார்த்தமா எழுதிட்டு இருக்கிறவன். ரெண்டுக்கும் பெரிய இடைவெளி இருந்துச்சு. அதான், வேணாம்னு ஒதுங்கிட்டேன். ஆனா, எழுத்தைக் காட்சிபூர்வமா மாத்துற அனுபவம் அங்கே கெடைச்சுது. அதை எல்லா எழுத்தாளர்களுமே கத்துக்கிடணும். எழுத்தாளர்களுக்குக் காட்சிபூர்வமான பார்வை கம்மியா இருக்கிறதாலதான் தமிழ் இலக்கியத்துல அழகியல் அருகிப்போச்சு.”

“ `வெக்கை’ நாவல் என்றதுமே உங்களின் நினைவில் வரும் மனிதர் அல்லது சம்பவம்?”

“நாவல்ல வரும் சின்னப் பையன் சிதம்பரத்தின் முகம்தான் ஞாபகத்துக்கு வரும். அவனோட இளமைக் கால வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கு, வன்முறை செய்யற அளவுக்கு சமூகம் அவனை எத்தன தூரம் மாத்தியிருக்கு, பாசம், உறவுன்னு கிடந்த பையனுக்கு இப்படி ஒரு நெலமை வந்துடுச்சேன்னு எல்லோருமே கவலைப்படற விஷயமா இருக்கும்னு நம்பறேன்”

“ `வெக்கை’ நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சி எப்படித் தொடங்கியது?”

“சி.சு.செல்லப்பா எழுதின ‘வாடிவாசல்’ நாவலைப் படமாக்குறதுக்காக, இயக்குநர் வெற்றிமாறன் வெச்சிருக்கார்னு கேள்விப்பட்டேன். அவரோட ‘விசாரணை’ படம் பார்த்தேன். மனிதர்கள்மீது வன்முறை எப்படிச் செலுத்தப்படுதுன்னு துல்லியமா எடுத்திருந்தார். சமூகத்துல வன்முறை எப்படி இயங்குதுன்னு ‘வெக்கை’ நாவல்ல எழுதியிருப்பேன். அதை சினிமாவுல அப்படியே சொல்வார்ன்னு ஒரு நம்பிக்கை அவர் மேல வந்துச்சு. நாங்க ரெண்டு பேரும் சந்திச்சப்ப, ‘வெக்கை’ நாவலைக் கொடுத்தேன். ‘இதைப் படமாக்கணும்னு ஏற்கெனவே எடுத்து வெச்சிருக்கேன் சார்’னு சொன்னார். ‘அப்ப சரி, நீங்களே எடுங்க’ன்னு சொன்னேன். அதுக்குப் பிறகு, ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம். நாவல் திரைக்கதையாவே இருக்கு. நானே மத்ததெல்லாம் பார்த்துக்கிறேன்னு சொன்னார். அது அவருக்கான சுதந்திரம் இல்லையா? அவரை நான் முழுக்க முழுக்க நம்பறேன். பெறகு, படத்துக்குப் பூஜை போடறதுக்குக் கூப்பிடறதுக்காக வீட்டுக்கு வந்தார். குடும்பத்தோட போய்ட்டு வந்தோம். ‘எனக்கு ஃபேமிலி டிராமா இதுதான் முதல் முறை’ன்னு சொன்னார் வெற்றிமாறன். அசுரன் எப்படி வந்திருக்குன்னு பார்க்க ஆவலா இருக்கேன்.”

“எழுத்தைக் காட்சியாக்கும்போது சில விமர்சனங்கள் வருவது இயல்பு. அசுரனில் உங்களின் எதிர்பார்ப்பு என்னென்ன?”

“அந்தச் சின்னப் பையனோட உணர்வுகள் பிரதிபலிச்சிட்டா போதும். அப்பா, அம்மா மத்தியில விளையாடிட்டு வாழ வேண்டிய பையன். தோழி இறந்துபோயிடுறா, அண்ணனைக் கொன்னுடுறானுங்க. அதனால, இவன் மனசு உறைகலமா ஆயிடுது. அது பெருஞ்சோகம். அவனோட பல கேள்விகளுக்கு பதிலே கிடையாது. இந்தக் கதை பழிக்குப் பழி வாங்குற கதை மட்டும் இல்ல.”

“மைக்ல பேசினா சாதி ஒழியாது!”

“1982-ல் எழுதப்பட்ட நாவல், 2019-ல் படமாக்கும்போது என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என நினைத்தீர்கள்?”

“அந்தச் சின்னப் பையனோட மனநிலை அப்ப இருந்த மாதிரிதான் இப்பவும் இருக்குது. ஆட்சி, நிர்வாகமும் அப்படித்தான் இருக்கு. ஆணவக்கொலைகளும் அதிகரிச்சுதான் இருக்கு. எந்த மாற்றமும் தேவையில்ல.’’

“உங்கள் நாவலின் நாயகனாக நடிக்கும் தனுஷ் நடித்த படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?’’

“அவர் நடிச்ச ‘ஆடுகளம்’ பார்த்திருக்கேன். ரொம்ப இயல்பா நடிச்சிருந்தார். பூஜை போடற அன்னிக்கு இதைச் சொன்னேன்.”

“தமிழ்ச் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலி, வாழ்க்கை நெருக்கமாகப் பதிவுசெய்யப்படுகிறதா?”

“ஒட்டுமொத்தமாகவே தமிழ் சினிமாவுக்கும் நிஜத்துக்கும் பெரிய இடைவெளி இருக்கு. ‘செம்மீன்’ நாவலை எப்படி சந்தோஷமா படிக்கிறமோ அதுபோலவே அந்த சினிமாவையும் பார்க்க முடியுது. அந்தத் தன்மை மலையாளத்துல இருக்கு. தமிழ்நாட்டுல நிறைய இடைவெளி இருக்கு. பாரதிராஜா அதைக் குறைக்கிறதுக்கு முயற்சி எடுத்தார். வணிகச்சூழல்னு ஒண்ணு இருக்கு இல்லையா... அதுவும் ஒரு காரணம்.”

சாதியப் படிநிலையில் ஆரோக்கியமான மாற்றம் ஏதேனும் நடந்திருப்பதாக நினைக்கிறீர்களா?

“ஆரோக்கியமான மாற்றம் எந்தச் சமூகத்துலேயும் இல்ல. உணர்ச்சியைத் தூண்டிவிடற போக்குதான் இருக்கு. சாதி ஒழிப்புங்கிறது மைக்ல பேசற பேச்சுதான். அது ஒழியாது. ஒவ்வொருத்தவங்களும் அவங்களோட பலாபலன்களை அங்கீகரிச்சுட்டு சந்தோஷமா இருக்கத்தான் இந்தக் காலகட்டத்துல முடியும்னு தோணுது.”

“மைக்ல பேசினா சாதி ஒழியாது!”

“தற்போதைய படைப்புகளைப் படித்துவருகிறீர்களா?”

“நாவல்களைப் பெரும்பாலும் வாசிக்கிறதில்லை. சிறுகதைகள் கொஞ்சம் வாசிக்கிறேன். அதுங்களும் ரொம்ப இடைவெளியோடு இருக்கிற மாதிரி தோணுது. என்னோட நாப்பது வருஷத்துல ஐம்பது சிறுகதைகள்தான் எழுதியிருக்கேன். இப்ப உள்ள சிறுகதைகளைப் படிக்கும்போது வாழ்க்கை அனுபவங்கள் இல்லாம, பேச்சு மொழி யதார்த்தம் இல்லாமன்னு சில விஷயங்கள் நெருடுது. அப்புறம் இன்னும் சில விஷயங்களைச் சீக்கிரம் முடிக்கணும் என்பதால எழுத்துல தீவிரம் காட்டறேன்.

“அடுத்து என்ன எழுதிட்டிருக்கீங்க?”

“ஆண்டாள் பற்றிய நாவல் எழுதிட்டிருக்கேன்.”