
கடந்த வாரம் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷே இப்படியொரு நிலைமையைக் கணக்குப் போட்டுதான் நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்தாரா என்ற கேள்வியும் உள்ளது.
1987-ல் இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து வடகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் வரதராஜ பெருமாள். பிறகு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்தியாவில் தஞ்சமடைந்து வசித்துவருகிறார். இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து ஒரு புத்தகத்தை வெளியிடப்போவதாக அவர் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததைத் தொடர்ந்து அவரைத் தொடர்புகொண்டு இலங்கையின் இன்றைய சூழல் உட்பட பல்வேறு விஷயங்களைப் பேசினேன்.
``வெளிவரவுள்ளதாக நீங்கள் கூறியுள்ள உங்கள் புத்தகம் பற்றிச் சொல்லுங்கள்.’’
“கடந்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து ஏறத்தாழ வாரம்தோறும் இலங்கையின் பொருளாதாரம் பற்றிக் கட்டுரைகள் எழுதினேன். 23 பகுதிகளாக அரங்கம், சூத்திரம் ஆகிய இணையதளங்களில் அவை வெளிவந்தன. இலங்கையின் பொருளாதாரம் இன்றைய நெருக்கடி நிலைமைகளை அடைவதற்கான காரணிகள் எவ்வாறு இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து செயற்பட்டுவந்தன என்பது பற்றியும், இலங்கையின் பொருளாதாரம் எந்தெந்த வகைகளிலெல்லாம் பலவீனமாக உள்ளது என்பது பற்றியும் மற்றும் இலங்கை மக்களின் வாழ்க்கை நிலை பற்றியும் அவை விவரித்தன. அவற்றின் தொகுப்பே விரைவில் ஒரு புத்தகமாக வெளிவரவுள்ளது.”
``இலங்கை முழுவதும் வன்முறை பரவியுள்ளது. மகிந்த ராஜபக்ஷே உட்பட ஆட்சியாளர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. இந்த நிலைமைகள் இலங்கையின் அரசியல் பொருளாதார நிலைமைகளை அடுத்த கட்டமாக எங்கு கொண்டு செல்லும் எனக் கருதுகிறீர்கள்?’’
“கடந்த வாரம் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷே இப்படியொரு நிலைமையைக் கணக்குப் போட்டுதான் நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்தாரா என்ற கேள்வியும் உள்ளது. பிரதமர் மஹிந்த பதவியை ராஜினாமா செய்வது என்றும் எதிர்க்கட்சி உட்பட பல கட்சிகளையும் இணைத்த ஒரு அமைச்சரவையை உருவாக்குவது எனவும் அனைத்துக் கட்சிகளிடையேயும் ஓர் இணக்கப்பாடு இருந்தது. அப்படியிருந்தும் எதற்காக ஆளும் கட்சியைச் சேர்ந்த வன்முறைக் கும்பல் ஒன்று பிரதமரின் இல்லத்துக்கு அழைக்கப்பட்டது? போலீஸார் மற்றும் ராணுவத்தினர் பார்வையாளர்களாக இருக்க, அமைதியாகப் போராடிக்கொண்டிருந்தவர்கள் மீது எவ்வாறு அந்த குண்டர்கள் வன்முறைகளைப் பாவிக்க அனுமதிக்கப்பட்டார்கள்?
இலங்கையில் மாற்றத்தை விரும்புபவர்களின் எதிர்பார்ப்புகள் இவைதான். ராஜபக்ஷேக்கள் எவருமில்லாத, அதேவேளை அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால ஆட்சி ஒன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளபடி ஜனாதிபதியின் அதிகாரங்களை முடிந்த அளவுக்குக் குறைக்கின்ற அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். பொருளாதார நெருக்கடிகளுக்கு உடனடித் தீர்வுகளைக் காண வேண்டும். மிக விரைவாக நாடாளுமன்றத் தேர்தல், மாகாண ஆட்சிகளுக்கான தேர்தல்கள், உள்ளூராட்சித் தேர்தல்கள் ஆகியவற்றை ஒரேயடியாகவோ கட்டம் கட்டமாகவோ நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிகள் அமைய வேண்டும்.

அனைத்துக் கட்சிகளும் இணையாவிட்டாலும் ஓர் இடைக்கால அல்லது காபந்து அரசாங்கம் அமைப்பது சாத்தியமே. ஆனால் ஏனைய விடயங்கள் அவ்வளவு சுலபமானவை அல்ல. ராஜபக்ஷேக்களுக்கு இன்னமும் நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 100 பேர் இருக்கிறார்கள். எனவே ராஜபக்ஷேக்கள் விரும்பாமல் அரசியல் சட்டத் திருத்தம் சாத்தியமில்லை. அதேபோல, மக்கள் இப்போது முகம் கொடுக்கும் பொருளாதார நெருக்கடிகள் வெறுமனே பெட்ரோல், டீசல், எரிவாயு, உணவுப்பொருள்கள் தட்டுப்பாடு என்பவை மட்டுமல்ல. வேலையில்லாப் பிரச்னை, பொருள்களின் பல மடங்கு விலை உயர்வு, அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் மிகக்குறைந்துள்ளமை, உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள் மற்றும் இடைநிலைப் பொருள்களை இறக்குமதி செய்ய அந்நியச் செலாவணி இல்லை எனப் பல பிரச்னைகள் உள்ளன.
வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இதனை எவ்வளவு காலத்துக்குத் தொடர முடியும்? தொடர்ந்தும் அரசாங்கம் வெளிநாடுகளிடமே கடன் வாங்கிக் கொண்டிருக்கின்றது. உள்நாட்டு நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தினால் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அரசிடம் பணம் இருக்காது. கடன் வாங்கிய உள்நாட்டு நிதி நிறுவனங்களுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லையென்றால் அவை திவாலாகி விடும். பணத்தை எவ்வளவுக்கு அச்சடிக்க முடியும்? அடித்தால் மேலும் பணவீக்கம் அதிகரிக்கும்; பணமதிப்பு குறையும்.
ஆக இவ்வாறாக உள்ள பொருளாதார நெருக்கடிகளைத் தற்காலிகமாகத் தீர்ப்பதற்கு குறைந்தது 1,000 கோடி டாலர் பெறுமதியான சர்வதேச நாணயங் களையோ பொருள்களையோ வெளிநாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் கொடையாக வழங்க வேண்டும். யார் ஆட்சி அமைத்தாலும் இது சாத்தியமே இல்லை.
இலங்கையின் பொருளாதாரம் அவிழ்க்க முடியாத ஒரு பெரும் சிக்கலுக்குள் அகப்பட்டுப் போயிருக்கிறது. இப்போது ‘ராஜபக்ஷேக்களே வீட்டுக்குப் போங்கள்’ என்பது அடுத்து ஆட்சி அமைப்பவர்களுக்கு எதிராகவும் திரும்ப வாய்ப்புகள் உள்ளன.”
``30 ஆண்டுக்காலப் போர்தான் இலங்கையின் நெருக்கடிக்குக் காரணமா?’’
“இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே நெருக்கடி களுக்கான காரணிகள் திரளத் தொடங்கிவிட்டன. போரைக் காரணம் காட்டி ராணுவத்தையும் ராணுவச் செலவுகளையும் அதிகரித்தமை ஒரு பிரதானமான காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் யுத்தத்தின் பின்னரும் அதே பாணியை அரசாங்கங்கள் கடைப்பிடித்தன. மேலும், இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு ஊழல் மோசடிகள் மிக முதன்மையான காரணமாகும். யுத்தம் முடிகிற பொழுது அரசுக் கடனின் அளவு தேசிய வருமானத்தோடு ஒப்பிடுகையில் மூன்றில் ஒன்றாகவே இருந்தது. இப்போது அதனை 125 சதவிகிதம் ஆக்கிவிட்டார்கள்.”
``இலங்கையின் நெருக்கடியைத் தீர்க்க இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’’
“இந்திய அரசு என்கிற போது ஈழத்தவர்களின் நலன்களைப் பொறுத்தவரையில் அது தமிழக அரசையும் உள்ளடக்கியதாகவே நான் பார்க்கிறேன். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இந்திய அரசு மிகப்பெரிய அளவில் இலங்கைக்கு உதவிகளைச் செய்து வருகின்றது. தமிழக அரசு இலங்கை மக்களுக்கு உதவி செய்வது தொடர்பாக மேற்கொண்டுள்ள முடிவும் முயற்சிகளும் மிகவும் பாராட்டத்தக்கவை. இலங்கை அரசுடனும், இலங்கையின் பிரதானமான கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர் களுடனும், இலங்கையின் அனைத்து இனங்களினதும் சமூகத் தலைவர்களோடும் நெருக்கமான நல்லிணக்கமான, உதவிகரமான உறவுகளை இந்திய நடுவண் அரசு மட்டுமல்ல தமிழக அரசும், தமிழக அரசியற் தலைவர்களும் பேண வேண்டும் எனக் கருதுகிறேன்.”
ஆயுதப்போராட்டம் ஓய்ந்தபிறகு தமிழர்கள் தரப்பில் பேசுவதற்கு யாருமே இல்லையே?
“அப்படிச் சொல்ல முடியாது. புலிகளின் ஆதிக்கம் இருந்த காலத்தில் ஜனநாயகரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை சுதந்திரமாகப் பேசுவதற்கோ செயற்படுவதற்கோ புலிகள் அனுமதிக்கவில்லை. ஆனால் நிலைமை இப்போது அப்படியில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே மக்களுக்காக பேசும் கடமையும், பொறுப்பும் உள்ளது, அவர்கள் எப்போதும் அரசியற் களத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்”
தமிழர் - சிங்களர் பிரச்னை, போருக்குப் பிறகு சிங்களர் - முஸ்லிம் என்று மாறியதற்கு என்ன காரணம்?
“தமிழர்களின் முதுகெலும்புகளை முறித்தாயிற்று, இனி அடுத்ததாக வல்லமையுடைய சிறுபான்மைத் தேசிய இனமான முஸ்லிம் சமூகத்தின் முதுகெலும்பை உடைத்து விடவேண்டுமென்று சிங்கள பௌத்த பேரினவாதிகள் முயற்சிக்கிறார்கள்”

மலையகத் தமிழர்களை ஈழத்தமிழர்கள் நீண்டகாலமாகப் புறக்கணித்தனர் என்ற குற்றச்சாட்டு பற்றி...?
“அப்படி ஒட்டுமொத்தமாகக் கூறி விட முடியாது. மலையகத் தமிழர்கள் வாக்குரிமை உட்பட குடியுரிமைகள் பறிக்கப்பட்டபோது வடக்கு –கிழக்கு தமிழ்த் தலைவர்களும் குரலெழுப்பினார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தில் மலையகத்து மக்களும் கணிசமான பங்களிப்பை செலுத்தினார்கள். இன்றைக்கு மலையகத்து தமிழ்ச் சமூகம் அரசியல்ரீதியில் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களுக்கு சற்றும் குறையாத அரசியல் வல்லமை கொண்டிருக்கிறார்கள். அதேவேளை, மலையகத்திலிருந்து புலம் பெயர்ந்து வடக்கு கிழக்கை நம்பி வந்த மலையக மக்கள் வடக்கு கிழக்கின் பாரம்பரிய தமிழ்த் தலைமைகளாலும் அரச அதிகாரிகளாலும் சமூக பிரமுகர்களாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள், பாரபட்சமாகவும் இழிவாகவும் நடத்தப்படுகிறார்கள்.”
``ஈழத்தமிழர்கள் மத்தியில் சாதியுணர்வு எப்படியிருக்கிறது?’’
“இந்தியாவில் இருப்பதைப் போல ஈழத்தமிழர்கள் மத்தியிலும் சாதி உணர்வு ஒட்டிப் பிறந்ததாகவே உள்ளது. சாதி பார்ப்பதை வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். ஆனால், அதனை எல்லா வகையிலும் செயற்படுத்துவார்கள். புறக்கணிப்பு, பாரபட்சம், இழிவுபடுத்தல், ஏன் வன்முறைகளைப் பயன்படுத்துதல் வரை எல்லாமே நடக்கிறது. இங்கும் இந்தியாவில் இருப்பது போல சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வந்தால்தான் சரியாகுமோ என்று சிந்திக்கத்தோன்றுகிறது. இலங்கைக்குள் இருக்கும் வரைதான் தமிழர்கள் சாதி உணர்வோடு இருக்கிறார்கள் என்றில்லை. பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் கடந்து அகதிகளாக இருந்து, மேலைநாடுகளின் கருணையினால் அந்த நாடுகளின் குடிமக்கள் ஆன ஈழத் தமிழர்கள் மத்தியிலும் மிக மோசமாக சாதிப்பிரிவினை, ஏற்றத்தாழ்வு, புறக்கணிப்புகள், இழிவுபடுத்தல்கள் உள்ளன. ஈழத் தமிழர்களின் அரசியலில் பெரியாரோ அம்பேத்கரோ அயோத்திதாசரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக சாதிக் கட்டமைப்பைப் பெருமைப்படுத்திய ஆறுமுக நாவலரே உள்ளார்.”