கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

“எலே... பண்டிகைய கொண்டாடுங்கலே!” - அதிரி புதிரி சிரிப்பு வெடி!

அதிரி புதிரி சிரிப்பு வெடி!
பிரீமியம் ஸ்டோரி
News
அதிரி புதிரி சிரிப்பு வெடி!

ஓவியம்: சுரேஷ்

நகைச்சுவை

பண்டிகைன்னாலே உற்சாகம்தான். அதிலும் தீபாவளின்னாலே தனிக் குதூகலம்தான்!

தீபாவளி அன்னிக்கு நம்ம மக்கள் பண்ணுற அட்ராசிட்டிஸ் என்னன்னு கொஞ்சம் சொல்லட்டுமா..?

* `தீவளிக்கு தீவளி எண்ணெய் தேய்ச்சு நீ குளி!' - இப்படியொரு பாட்டைக் கேட்டு வளர்ந்தவங்க நாம. அதனாலேயே புல் தடுக்கி பயில்வானோ, `தொப்பை தொப்லானோ' பாடி கண்டிஷன் எப்படி இருந்தாலும் அன்னிக்கு ஒருநாள் WWF சாம்பியன்போலவோ, `ஐ' பட விக்ரம் போலவோ பீல் பண்ணி எண்ணெய் தேய்ச்ச உடம்போட மொட்டை மாடில பிலிம் காட்டுவாங்க. மாடி வீடு இல்லாட்டினாலும் இருக்கவே இருக்கு சோஷியல் மீடியா. #RandomClicks #TraditionalDiwali #OilPath #OilyMuscles #DevilLook #MuscleManiac #InsaneClick #MyBody #MyRule -இப்படி கண்ட ஹேஸ்டேக்குகளை இன்ஸ்டாவில் தட்டி எண்ணெய் வழிய போட்டோஸ் போட்டு லைக்ஸ் அள்ளுவாங்க. அவங்களைக் கலாய்க்க நான்கைந்து பிரெண்ட்ஸ் `ஹாஹா' ஸ்மைலி போட்டு வெறுப்பேற்றி வைப்பார்கள். யாராச்சும் ஏமாந்த சோனகிரி மட்டும் படையப்பா அப்பாஸ் போல, `வாவ்! வாட்டே மேன்!' கமென்ட் போடுவானுங்க. ஜென்ம சாபல்யம் அடைவாங்க நம்ம ஆயில் ஆப்பாயில் பாய்ஸ்!

* அப்போ பொண்ணுங்க? அதே #MyLife #MyRules #TrendyDiwali #FeelingAwesome தான். இன்ஸ்டாவில் பூமராங் வீடியோக்களாக சேலை, சுடிதார், காக்ரா சோளிகளைக் காட்டி நாக்கை வெளியே நீட்டிய கொடூரப் பேய் போஸ்களில் பயமுறுத்துவாங்க.

பொண்ணைப் பெத்த மகராசன்களா..! உங்கவீட்டு லிட்டில் பிரின்சஸ் கம்பி மத்தாப்பு விடுறதை ஏரியா விட்டு ஏரியா சைட் அடிக்கிறதுக்காகவே பைக்கில வலம்வர்ற ரோமியோக்களை வாட்ச் பண்ணுறதெல்லாம் இருக்கட்டும். கொஞ்சம் உங்க பொண்ணுங்க இன்ஸ்டா கமென்ட்ல நூல்விடும் பாய்ஸ்களைக் கவனிச்சு அப்டேட்டா அலர்ட் ஆகிக்கோங்க!

* வெடி போடலைனா சாமிக்குத்தம் ஆகிடும்ல? வெடிக்கிறானுகளோ இல்லையோ நிறைய கிப்ட் பாக்ஸ் வெடிகளை வாங்கிட்டு வந்து கெத்து காட்டுவானுக டீன் டிக்கெட்ஸ். உள்ளே இருக்கும் சவுண்ட் சரோஜா ரக வெடிகளைப் பார்த்து அடிவயிற்றுக்குள் அமிலம் சுரப்பதை உணர்வார்கள். `இதெல்லாம் வெடிச்சா நாய்ஸ் பொல்யூஷன்ல அங்கிள்?', `பீயிங் எ சோஷியல் சிட்டிசன் ஓசோன் லேயர்ல ஓட்டை விழாம பார்த்துக்க வேண்டியது நம்ம கடமைல்ல அண்ணா?' என நல்லபிள்ளையாய் வெடி வெடிக்க பயந்து சாக்கு சொல்வார்கள். சிலரோ, `நல்லவேளை ஜம்போ சைஸ் ஊதுபத்தியைக் கண்டுபிடிச்சானுவோ!' என ஆறடி நீள ஊதுபத்தியைக் கையிலேந்தி நமுத்துப்போன ஊசிவெடியை பயந்தபடியே வெடிப்பானுக. `பயந்தா தொழில் பண்ண முடியுமா? இந்தா பாருங்க' என சில பாய்ஸ் மட்டும் ஏரியா பொண்ணுங்ககிட்ட சீன்போட பாகுபலி போல களத்தில் இறங்கி காது டமாரம் ஆகும் அளவுக்கு `டமார் டமார்' என மெகா சைஸ் அணுகுண்டுகளாய் வெடிப்பார்கள். இன்னும் சில பசங்க, சயின்டிஸ்ட் செல்லூர் ராஜுவுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு, நான்கைந்து வெடிகளைத் திரி கிள்ளி ஒன்றாக்கி வெடிப்பார்கள். கொட்டாச்சிக்குள் ஆட்டம் பாம், பீர் பாட்டிலுக்குள் டபுள் ஷாட் என கிரியேட்டிவாய் கிலி உண்டாக்கி ஏரியா சீஸர், ஜிம்மி, ஜூலிக்களைப் பதற வைப்பார்கள்.

`அந்தக் காலத்துல நாங்கெல்லாம் கையிலேயே லட்சுமி வெடி வெடிப்போம்!' என அங்கிள்ஸ் உசுப்பேத்திவிட... கையில் வெங்காய வெடியை விட்டு `வன்'காயம் ஏற்பட்டு வலிக்காத மாதிரியே நடிப்பார்கள் இந்த ரொமாண்டிக் பாய்ஸ்!

பின்குறிப்பு: சாகச விரும்பிகளே... நீங்க வெடிவெடிக்கிறப்போ இப்படி வித்தை காட்டி காயம் ஏற்பட்டா ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிவரும். கொரோனா நேரத்துல ஆஸ்பத்திரிக்குப் போகணுமான்னு ஒருவாட்டி யோசிச்சு சீன் போடுங்க!

*தீபாவளிக்குப் பட்டிமன்றம் பார்த்தால்தானே தமிழனுக்கு அந்த நாள் முழுமை பெறும். ஏற்கெனவே பார்த்த வாட்ஸ்-அப் பார்வேர்டு ஜோக் தான் என்றாலும் சிரிப்பு வரும்.

`நடுவர் அவர்களே... இப்படித்தான் எங்க ஊருல ஒருத்தர் தும்முனாரு... மூக்கு கழண்டு விழுந்துருச்சு...!' என ஏற்ற இறக்கத்தோடு பட்டிமன்ற பிரபலங்கள் பேசுவதைக் கேட்கும்போதே சிரித்துவிடுவோம். `கோவிட் 19-க்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா நடுவர் அவர்களே... முன்னது நம்மை மட்டும் தனிமைப்படுத்தும், பின்னது கணவன் வீட்டு ஆட்களை மட்டும் தனிமைப் படுத்தும்!' என்று பட்டிமன்றம் ராஜா போன்ற ஆட்கள் சொல்லும்போது, வெடித்துச் சிரித்து மனைவியிடம் கிள்ளு வாங்கும் சுகமே தனிதான் அய்யா!

அதிலும் சாலமன் பாப்பையா என்றால், `அருமைய்ய்யா!', 'வந்தாய்ங்கல்லே', 'போனாய்ங்கல்லே..' என அவர் திருச்சிக்கும் தின்னவேலிக்குமாய் ரெண்டு இழுவை இழுக்கும்போதே சிரிப்பு பொத்துக்கொண்டு வருமுல்லே..!

பட்டிமன்ற நேரத்துல தல-தளபதி படங்களே போட்டாலும் மிடில் ஏஜ் மிலிந்த் சோமன்கள்கிட்ட நம்ம வீட்டு குட்டீஸ்களின் பாச்சா பலிக்காது. பாப்பையா தீர்ப்பு சொல்லும்வரை பாயைப் போட்டு டிவிமுன் படுத்தே விடுவார்கள். சிரிப்பு முக்கியம்ல்லே!

* முன்னெல்லாம் பலகாரங்கள் செய்ய தீபாவளிக்கு முந்திய நாள் வீடே சிவராத்திரி மோடுக்கு மாறிவிடும். முறுக்கு என்ன, அதிரசம் என்ன, ரவா லட்டு என்ன எனப் பார்த்துப்பார்த்து பட்சணங்கள் செய்வார்கள். இப்பல்லாம் எல்லாமே கடைத்தீனியாகிவிட்டது. இதுக்கும்கூட தீபாவளிச் சீட்டு போட்டுப் பலகாரங்களை வாங்கி தேக்ஸாக்களில் அடுக்கி வைத்து, பொங்கல் பண்டிகைவரை `வெச்சு' சாப்பிடப் பழகிவிட்டான் தமிழன்.

`காஜு கத்திலி,' `ரச மலாய்,' `சோன் பப்டி', `பெங்காலி பாதுஷா' என டிரெண்டியாய் பேக்கரிகளில் வாங்கப் பழகிவிட்டான்

சென்னை அப்பார்ட்மென்ட் வாழ்க்கையில் பக்கத்து வீட்டில் தீப்பிடித்து எரிந்தாலும் மூக்கைப் பொத்திக்கொண்டு ஜன்னலைச் சாத்தும் ஆசாமிங்க தீபாவளி அன்னிக்கு மட்டும் நல்லவங்களா மாறிடுவாங்க.

நாலு ரவா லட்டு, ரெண்டு முறுக்கை ஒரு தட்டில் வைத்து குட்டீஸ்களை விட்டுக் கொடுத்துவிடுவாங்க. பரவாயில்லையே ஸ்வீட்லாம் கொடுக்குறாங்க என நாம அந்த ஸ்வீட்டை ஆர்வத்தோடு வாங்கிப் பார்த்தால்தான் தெரியும். அதே டெய்லர், அதே வாடகை... அதே சீட்டு, அதே ஸ்வீட்டு!

ஆனாலும், சில நல்ல உள்ளங்கள் மைசூர்ப் பாக்கையும் அல்வாவையும் வீட்டிலேயே செஞ்சு நம்மை பரிசோதனை எலி ஆக்கி பல்லோடு பல்லாங்குழி ஆட வருவாங்க. அவய்ங்ககிட்ட மட்டும் உஷாரா இருந்துக்கோங்க!

“எலே... பண்டிகைய கொண்டாடுங்கலே!” - அதிரி புதிரி சிரிப்பு வெடி!

* `வெடி வெடிக்கிறோமோ இல்லையோ நம்ம வீட்டு வாசல்ல பேப்பர் குப்பைகள் கிடந்தாதானே கெத்து!' என வாண்டுகள் பக்கத்து வீட்டுல வெடிச்ச வெடிகளைக்கூட அள்ளிட்டு வந்து கெத்து காட்டுவாங்க. ஒருவேளை நீங்களே அப்படி நினைச்சா இன்னும் உங்களுக்கு இளமை ஊஞ்சலாடுதுன்னு அர்த்தம்.

`நைட்டு விடுற வாணவேடிக்கை வெடிகளைக் கண்டுபிடிச்சவன் எவன்டா?' எனப் பல்லைக் கடிக்கிறீங்களா... கையைக் கொடுங்க, 40 வயசை வெற்றிகரமா தொட்டுட்டீங்கன்னு அர்த்தம். `என்னது பாராச்சூட் வெடி 1000 ரூபாயா... மெர்க்குரி 5000 ரூபாயா..? காசைக் கரியாக்கணுமா..? இந்த வெடி வாங்குற காசுல போஸ்ட் ஆபீஸ்ல ஆர்டி போட்டுவெச்சாலாவது பின்னாடி உபயோகப்படும்!' என நினைக்குற ஆள் நீங்கன்னா கன்பார்ம் ஈ.எம்.ஐ கட்டுற சின்ஸியர் சிவமணி, மிடில் கிளாஸ் மாதவன் அங்கிள் நீங்களேதான்!

* `இந்தியத்த்த்த்த்த் தொலைக்க்க்க்க்க்காட்சிகளில்ல்ல்ல்ல் முதன்ன்ன்ன்ன்முறையாக... திர்ர்ர்ரைக்கு வந்ந்ந்ந்து சில நிமிடங்களே ஆன...' என டிவிக்கள் புதுப்படங்கள் ஒளிபரப்பும் அட்ராசிட்டி தனி ரகம். டிவி மியூச்சுவல் பண்ட் விளம்பரத்தில் `கண்டிஷன்ஸ் அப்ளை' சொல்லும்போது வேகமாய் சொல்லுவதைப்போல ஸ்பான்ஸர் லிஸ்ட்டைக் கடகடவெனச் சொல்லி முடிப்பதற்குள் ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்திரிக்கலாம். மதுரையில் கிளம்பும்போது டைட்டில் சாங் ஓடினால், சென்னை வந்து சேரும்போது க்ளைமாக்ஸ் பார்த்துவிடலாம். பொறுமைக்கே பெருமை சேர்க்கும் விஷயம் இந்த நீ...ளமான படத்தைப் பார்ப்பதாகவே இருக்கும். அதிலும் சில சேனல்களில் தீபாவளி சிறப்புத் திரைப்படங்களாக மாட்டுக்கார வேலனையும், புதிய பறவையையும் ஒளிபரப்புவார்கள். பார்த்து மெதுவா ஊதுங்க கோப்ப்பால் எனச் சொல்லத் தோன்றும்!

* தீபாவளி அன்னிக்கு இருட்ட ஆரம்பித்ததும் வானத்துல கலர்கலராக வாண வேடிக்கைகள் வெடிப்பதைவிட அதை ரசிப்பது தனி சுகம். நம் பர்ஸுக்கும் இதயத்துக்கும் அதுவே இதம். இரண்டு கைகளிலும் இரண்டு மத்தாப்புகளைக் கொளுத்தி வட்டமாய் சுற்றுவதும், அப்படியே புஸ்வானத்தை வீட்டின் உயரத்துக்குக் கொளுத்தி மகிழ்வதெல்லாம் சரி... அதையும் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போடணுமா? வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைக்கணுமா? அன்று ஒருநாளாவது மெய்நிகர் உலகு சோஷியல் மீடியாவுக்கு லீவு விட்டு நிஜமான உலகத்தில் வாழ்வோமே மக்களே! செல்பி எடுக்காமல், ஸ்டேட்டஸ் வைக்காமல் அந்த சந்தோஷ தருணங்களை ஆழ்ந்து அனுபவிப்போமா?

ம்க்க்கும்... சொல்றது ஈஸி. செய்யுறது சால கஷ்டம். இந்தக் கட்டுரையவே நான் தீபாவளி அன்னிக்கு சோஷியல் மீடியால #MyVikatanDeepavaliMalarArticle ஹேஸ்டேக்ல ஷேர் செஞ்சு லைக்ஸ் வாங்கப் போறேன்... போங்க போயி பிள்ளைகுட்டிங்களோட சந்தோஷமா தீபாவளி கொண்டாடுங்க!

#HappyDiwaliFolks