Published:Updated:

FUNNY தீவு!

FUNNY தீவு!
பிரீமியம் ஸ்டோரி
FUNNY தீவு!

எல்லா ரியாலிட்டி ஷோக்களிலும் கஷ்டமான டாஸ்க் இருக்கும். ஆனால் இந்த ரியாலிட்டி ஷோவில் இருப்பதில் கஷ்டமான டாஸ்க்கே சீமான் சொல்லும் கதைகளை சிரிக்காமல் கேட்பதுதான்.

FUNNY தீவு!

எல்லா ரியாலிட்டி ஷோக்களிலும் கஷ்டமான டாஸ்க் இருக்கும். ஆனால் இந்த ரியாலிட்டி ஷோவில் இருப்பதில் கஷ்டமான டாஸ்க்கே சீமான் சொல்லும் கதைகளை சிரிக்காமல் கேட்பதுதான்.

Published:Updated:
FUNNY தீவு!
பிரீமியம் ஸ்டோரி
FUNNY தீவு!
சேனலுக்கு ஒரு ரியாலிட்டி ஷோ. ஆளாளுக்கு ஆங்கர் எனத் தமிழ் சினிமாவே இப்போது சின்னத்திரையின் பக்கம். அவர்களைப் பார்ப்பதற்காகவே அந்த ஏரியாக்களில் கூட்டமும் கும்முகிறது. கூட்டம் இருக்கும் இடங்களில் அரசியல்வாதிகள் இருப்பதுதானே வாழ்க்கை ரியாலிட்டி. நம் தலைவர்கள் ஒருவேளை லேட்டஸ்ட் வரவான சர்வைவரில் கலந்துகொண்டால் எப்படி இருக்கும்? சின்னதாய் ஒரு கற்பனை...

மோடி

சும்மாவே எப்படா எஸ்கேப் ஆகுறது எனக் காத்துக்கொண்டிருக்கும் மோடி, ரியாலிட்டி ஷோ சான்ஸ் கிடைத்தால் விடுவாரா என்ன? அவர் போய் இறங்கும் முன்பே ஒரு பெரிய போட்டோகிராபர் படை போய் இறங்கிவிடும். ‘ஆழ்மனப் பீடை ஒழிய பீச் யோகா’, ‘ஜி.டி.பி உயர டீமானிட்டைசேஷன் தியானம்’ எனக் காலை முதல் முகூர்த்தத்திலேயே வேலையைக் காண்பிப்பார்.

மேற்கு வங்காளம், கேரளா, தமிழக முதல்வர்களை வீடியோ கான்ப்ரன்ஸில் அழைத்து, ‘இங்க பாத்தீங்களா, இதான் மலை, இதான் காடு’ என சந்திரமுகி மாடுலேஷனில் வெறுப்பேற்றுவார். அவர்கள் கால் கட் செய்துவிட்டுப் போகவும், ‘கேமராவை கட் பண்ணிடாதீங்க, அப்படியே மன் கி பாத் ஷூட் பண்ணிடலாம்’ என கேமராமேன்களைப் பணிப்பார். ‘சார் அந்தப்பக்கம் யாருமே கேட்குறதுக்கு இல்லையே’ என பதிலுக்கு அவர்கள் கேட்டால், ‘தம்பி. ஏழு வருஷமா நான் தனியாதாம்பா பேசிட்ருக்கேன். இப்ப புதுசா கேக்குற?’ என அவர்களை அடக்குவார்.

அவர் இருப்பது உற்ற நண்பர் அதானியின் தீவென்பதால் அவரை நாம் ரூல்ஸ் போட்டெல்லாம் வெளியேற்றுவது கடினம். ஆனால், ஒரே ஒரு வழி உண்டு. தீவுக்கு மேலே ஃப்ளைட்டைத் தாழ்வாகப் பறக்க வைத்தால் போதும். ‘அடுத்து எங்கேயோ ட்ரிப் போறாய்ங்க போலயே’ என அழுது அடம்பிடித்து லிப்ட் கேட்பார். ஈஸியாக அவுட் ஆக்கி வெளியேற்றலாம். அம்புட்டு ஃப்ளையிங் வெறி!

FUNNY தீவு!

ஸ்டாலின்

தீவுக்குள் வரும்போதே ‘ஸ்டாலின்தான் வர்றாரு, தீவைத் திருத்தப்போறாரு’ என எட்டுத்திக்கும் ஸ்பீக்கர் கட்டி தீம் மியூசிக் அலறும். இசைக்கு நடுநடுவே, ‘ஐலேண்டுக்குள் வரும் அண்டர்டேக்கரே, கட்சிக்கு நீதான் என்றென்றும் கேர்டேக்கரே - பவர்டு பை சபரீசன் அண்ட் கோ’ என ஸ்பான்சர் விளம்பரங்களும் ஒலிக்கும்.

தீவில் இருக்கும் ஆதிகுடிகளுக்குக் குழு அமைப்பது, கடற்கரை முழுக்க சைக்கிளில் வலம் வருவது என ஆக்டிவாக பகலில் சுற்றி வருபவர் சாயங்காலம் போல, ‘இது தனித்தீவில்லை, இதுவும் தமிழகம்தான்’ எனப் பேட்டி தட்டுவார். அவர் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே அங்கே ஹெச்.ராஜா, ‘பாத்தீங்களா தமிழ்நாட்டைத் தனித்தீவாக்குவாராம்’ என ட்வீட் தட்ட, ‘நீங்க காரைக்குடில வீட்டையே தனித்தீவு மாதிரி கட்டினீங்களே, அந்த மாதிரியா?’ என பி.டி.ஆர் பாய, டி.ஆர்.பி எகிறும். அப்புறமென்ன, ‘பாசத்தளபதிக்குப் பாராட்டு விழா’தான்.

‘பேப்பர் துணையில்லாமல் பேச வேண்டும்’ விளையாட்டை ஃபைனல் டாஸ்க்காக வைத்தால் வேண்டுமானால் இவர் தோற்க வாய்ப்பிருக்கிறது.

எடப்பாடி


‘தத்தித் தாவும் தங்கமனசே... ரெய்டு, கேஸால் நொந்தமனுசே’ எனக் கணீர்க் குரலோன் ஜெயக்குமார் பாட, ஜான்சன் அண்ட் ஜான்சன் விளம்பரத்தில் வரும் கள்ளங்கபடமற்ற குழந்தை போலத் தவழ்ந்து வருவார் எடப்பாடியார். ‘நமக்கு ஹில் ஸ்டேஷன்னா மட்டும்தான் ஆகாது, மத்தபடி ஆல் ஏரியாவுல ஐயா கில்லி. தெரியும்ல’ எனத் தொடை தட்டுவார். ‘சார் இதே தீவுலதான் ஜியும் இருக்காரு’ என கேமராமேன்கள் சொன்னால், ‘கடற்காத்து குளுருதுல. அதான் கால் எல்லாம் நடுங்குது’ என சமாளிப்பிகேஷன் தட்டுவார்.

‘சார் உங்களுக்குப் பிடிச்சது புலிச் சின்னமா, சிங்கச் சின்னமா, சட்டுனு சொல்லுங்க’ எனத் தொகுப்பாளர் கேட்டால், ‘ஏது சின்னம்மாவா? ஏங்க இதெல்லாம் ரொம்பத் தப்புங்க’ என பம்மிப் பதுங்குவார். ஒவ்வொரு வாரமும் ஒன்றுமே செய்யாமல் எலிமினேஷன் வரை போய் புயல், மழை என இயற்கைப் பேரிடர் காரணமாகத் தப்பித்துத் தீவிலேயே திரிவார். இவரை வீட்டிற்கு அனுப்ப ஒரே வழிதான். ‘பாண்டியநாடு’ எந்தப் பேரரசின் ஆளுகைக்குக் கீழ் இருந்தது?’ போன்ற கேள்விகளைக் கேட்டால், ‘விஷாலுக்குக் கீழதான். பாவம் நல்ல தம்பி. என்னமோ அந்தப்பக்கம் சேர்ந்துடுச்சு’ எனப் பரிதாபமாய் பதில் சொல்லி வெளியே கிளம்புவார்.

கமல்

ஏற்கெனவே பிக்பாஸுக்காகப் பிரிப்பேர் பண்ணிக்கொண்டிருப்பரை இந்த ரியாலிட்டி ஷோவுக்கு அள்ளிக்கொண்டுவந்தால் ‘துடிக்குது புஜம்... ஜெயிப்பது நிஜம்’ என்று ‘விக்ரம்’ பாட்டை ரீமேக் செய்வார்.

‘இந்த ரியாலிட்டி ஷோவுக்கு இப்படித்தான் டிரஸ் பண்ணணும்’ என்று சொன்னாலும் கேட்காமல் வேட்டிக்கு மேலே ரெயின்கோட் போட்டு “இது கதர்” என்று சத்தியம் செய்து கதறவைப்பார். ஏதாவது தவறு செய்தார் என்று அர்ஜுன் குற்றம் சாட்டினால் ‘`தப்பு... அது சரியா செய்யாத மாதிரி நடிக்கிறது” என்று ‘குருதிப்புனல்’ டயலாக்கைப் பட்டி டிங்கரிங் பார்த்துச் சொல்வார். கேட்ட அர்ஜுன் காதில் குருதிப்புனல். “இல்லைன்னா நான் என்ன தப்பு பண்ணினேன்னு குறும்படம் போட்டுக்காட்டுங்க” என்று அடம்பிடிப்பார். “ஆரம்பிச்சப்ப கட்சி ஆசியா கண்டம் மாதிரி இருந்துச்சு. இப்போ உங்க கட்சியே தனித்தீவாத்தானே தத்தளிக்குது” என்று யாராவது கவுன்ட்டர் கொடுத்துத்தான் கமலை அடக்கவேண்டும்.

FUNNY தீவு!

ராகுல் காந்தி

“மொத்தம் ரெண்டு அணி” என்று போட்டியின் விதிமுறைகளைச் சொல்ல ஆரம்பிக்கும்போதே, “என்னது, ரெண்டே அணியா? எங்க கட்சியில் அணியா, தனியா 64 கோஷ்டி இருக்குமே, இதெல்லாம் சரிப்படாது” என்று ஜகா வாங்க ஆரம்பிப்பார். ஆனாலும் குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் கொடுத்து சமாதானப்படுத்தி விளையாட வைக்க வேண்டும். கிடைப்பதை வைத்துத்தான் சமைக்க வேண்டும் என்றாலும் “காளான் பிரியாணியும் கத்திரிக்காய்த் தொக்கும் கண்டிப்பா வேண்டும்” என்று கேட்டாலும் கேட்பார் ராகுல். “நீங்கதான் ஜி டீம் கேப்டன்” என்று மட்டும் சொல்லிவிடக்கூடாது. யாரும் பார்க்காத நேரத்தில் தொபுக்கடீர் என்று கடலில் குதித்து நீச்சலடித்தே வேறொரு தீவுக்கு ராகுல் கிரேட் எஸ்கேப்!

சீமான்

எல்லா ரியாலிட்டி ஷோக்களிலும் கஷ்டமான டாஸ்க் இருக்கும். ஆனால் இந்த ரியாலிட்டி ஷோவில் இருப்பதில் கஷ்டமான டாஸ்க்கே சீமான் சொல்லும் கதைகளை சிரிக்காமல் கேட்பதுதான். இரண்டு டீமும் என்ன செய்வது என்று சிரிப்பை அடக்கியே சித்திரவதைக்கு உள்ளாகும். கடலுக்குப் பக்கத்தில் இருப்பதால் ஆமை வறுவல், கடல் குதிரை கட்லெட், நத்தை 65 என்று விதவிதமான மெனு கொடுத்து மொத்த டீமையும் டரியலாக்கிடுவார். “நான் மட்டும் இந்தத் தீவு அதிபரானா ஜே.சி.பி எந்திரத்தை வெச்சு கடலையே தூர் வாரிடுவேன்” என்று சீமான் உருட்டும் உருட்டுக்கு மொத்த டீமும் “சாகாமக் காப்பாத்து சர்வேசா” என்று பிரே பண்ணும்.

“அங்கே பாருங்க அரிசிக்கப்பல். இதைத்தான் அண்ணையும் நானும் சுட்டு வீழ்த்தினோம்” என்று கடலைக் காட்டிக் கைநீட்டுவார். “ஒண்ணுமே தெரியலையே?” என்று சொன்னால் “உண்மையான தமிழன் கண்ணுக்கு அரிசிக்கப்பல் தெரியும்” என்று அணுகுண்டை வீசுவார். சாதாரண நிலப்பரப்பிலேயே தினுசு தினுசாக தீவுக்கதை சொல்பவரை தீவிலேயே கொண்டுபோய் விட்டால்... புஹாஹாஹா புயல்தான்!