Published:Updated:

சிரிச்சா சிக்ஸர்!

முதல்வர் வேட்பாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
முதல்வர் வேட்பாளர்கள்

நம் முதல்வர் வேட்பாளர்கள் ஒருவேளை ஐ.பி.எல் கேப்டன்களாக இருந்தால் எப்படியெல்லாம் வியூகம் அமைப்பார்கள்

சிரிச்சா சிக்ஸர்!

நம் முதல்வர் வேட்பாளர்கள் ஒருவேளை ஐ.பி.எல் கேப்டன்களாக இருந்தால் எப்படியெல்லாம் வியூகம் அமைப்பார்கள்

Published:Updated:
முதல்வர் வேட்பாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
முதல்வர் வேட்பாளர்கள்
தேர்தல் சீசன் முடிஞ்சாச்சு. அதற்காக நித்தமும் நாட்டுக்காகவே உழைக்கும் நம் தங்கத் தலைவர்களை மறந்துவிட முடியுமா என்ன? இப்போது ஐ.பி.எல் சீசன் ஆரம்பம். நம் முதல்வர் வேட்பாளர்கள் ஒருவேளை ஐ.பி.எல் கேப்டன்களாக இருந்தால் எப்படியெல்லாம் வியூகம் அமைப்பார்கள், களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் என ஜாலி கற்பனை செய்தபோது!
சிரிச்சா சிக்ஸர்!

சென்னை சூப்பர் கிங்ஸ்:

சென்னைக்கு கேப்டனாக ஸ்டாலின் இருப்பார். அது ஏன்னு அவர் வாய்ஸ்லயே கேட்போமா? ‘‘ஆக... உளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நறுமலரே’ எனத் தமிழில் கவிதை பாடிய நான் இருக்கக் கூடாதா? மெட்ராஸ் என்ற பெயரிலிருந்து சென்னை என மாற்றிய கலைஞரின் மகனாகக் கேட்கிறேன். நான்தான் சென்னை அணிக்கு கேப்டனாக இருக்க முடியும். இதையும் கலைஞர் மகனாகச் சொல்கிறேன்’’ என்பார்.

கள வியூகம் அமைக்க பிரசாந்த் கிஷோரை அழைப்பார். அவரும், ‘‘நீங்க உடனே உங்கள் சென்னை உடன்பிறப்புகளுக்கு அறைகூவல் விடுங்கோ!’’ எனச் சொல்லியிருப்பார். ஸ்கிரிப்ட் தூள் பறந்திருக்கும். ‘‘தொடர்ந்து இரண்டுமுறையாகத் தொடரும் கொடூர பல்டான் மும்பை இந்தியன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, விசில் போட்டு, மீண்டும் கோப்பையை சி.எஸ்.கே கைப்பற்ற ஒத்துழைப்போம். உரிமை மீட்க வா, உடன்பிறப்பே...!’’ என நாளிதழில் விளம்பரங்கள் கொடுப்பார். ஏனென்றால் அவர் தந்தை சொன்னதுபோல திமுக என்பது மூன்றெழுத்து, கடமை என்பது மூன்றெழுத்து, CSK என்பது மூன்றெழுத்து, விசில் என்பதும் மூன்றெழுத்து!

துணைக் கேப்டனாக உதயநிதி ஏலத்தில் எடுக்கப்படாமலேயே அறிவிக்கப்படுவார். கேட்டால், ‘‘ ‘லகான்’ படத்துல அமீர் கான் எடுத்தவுடனே கேப்டன் ஆகி படமும் ஹிட் ஆகலையா? நாங்க துணை கேப்டன்தானே ஆக்குறோம்’’ என சமாளிப்பு தட்டுவார்கள். ‘ஸ்டாலின்தான் வாராரு... சிக்ஸ் அடிக்கப் போறாரு’ என கேலரியிலிருந்து வாய்ஸ் கொடுத்தால்தான் விளையாடவே செய்வார். ‘சுட்டெரிக்கும் வெயிலில் உதயசூரியன் வெல்வதைத் தடுக்கலாமா? இரண்டு வருஷமா கப் வாங்கலை. எங்களுக்கு அன்னபோஸ்ட்டாக ஒரு வாய்ப்பு வழங்கலாமே?’ என உருக்கமாக லெக்-அம்பயரிடம் கோரிக்கை வைப்பார். எதிரணியினர் ஃபுல்டாஸ்களாக, யார்க்கர்களாகப் பந்து வீசினால் டீசர்ட்டைக் கிழித்தபடி கிரவுண்டை விட்டு வெளிநடப்பு செய்வார்.

‘ஆக...நான் வெற்றிக் கேப்டனாகக் கேட்கிறேன். காட்டுத்தனமாகப் பந்து வீசும் எதிரணியை ஐ.பி.எல் ஆட்டத்திலிருந்து கலைக்குமாறு ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்து கவர்னர் இல்லத்துக்கு மனு கொடுக்கப் போறேன்!’ என வாலாஜா சாலையை நோக்கி வாக்கிங் போவார்!

சிரிச்சா சிக்ஸர்!

டெல்லி கேப்பிடல்ஸ்:

எடப்பாடி கே. பழனிசாமியைவிட டெல்லியோடு தொடர்பில் இருப்பவர் யாராக இருக்க முடியும்? அதனால் அவரே டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டனாக இருப்பார். அணியின் கோச்சும் மென்டாரும் குஜராத்தைச் சேர்ந் தவர்கள் என்பதால் ஹோம் கிரவுண்டே புதிதாகக் கட்டப் பட்ட குஜராத் ஸ்டேடியம்தான். ‘‘பளபளன்னு இருக்கே. பெயின்டிங் கான்ட்ராக்ட்டு நம்ம சம்பந்திக்குத் தர்றது’’ என எடப்பாடி கோச்சிடம் சொல்ல, ‘‘அப்போ என் பையன் என்ன பண்ணுவான்?’’ என பதிலுக்கு எகிறுவார் கோச். அதென்ன கேப்பிடலோடு ‘ஸ்’ என்கிறீர்களா? எப்போதும் சப்ஸ்டிடியூட்டோடு கேப்டனாகக் களமிறங்குவார். பன்னீர் தான் அந்த வைஸ் கேப்டன்... அதனால் தான்! ஒரு காலத்தில் சிறந்த விக்கெட் கீப்பராக விக்கெட் ஸ்டெம்புக்குக் கீழே படுத்தெல்லாம் பெர்ஃபாமென்ஸ் பண்ணியவர்தான் இப்போது விக்கெட் கீப்பிங்கை மறந்துவிட்டு முழு நேர பேட்ஸ்மேனாகிவிட்டார். எதிரணியினர் திட்டிவிட்டாலோ அல்லது கடுகடுத்தாலோ, ‘நான் சாதாரண விவசாயக் குடும்பத்திலிருந்து கேப்டனானவன். அதனால் என்னை எல்லோரும் கேவலமாகப் பேசுகிறார்கள். இதே சின்னசாமி ஸ்டேடியத்தில் கவாஸ்கரும் டெண்டுல் கரும் சேர்ந்து விளையாடியபோது ஆடியன்ஸாக விசிலடித்தவன் இந்தப் பழனிசாமி’ என கண்ணில் ஜலம் வைப்பார். மேட்ச் ஆரம்பிக்கும் போதுதான், ‘இதென்ன பந்து வெள்ளைக் கலரில் இருக்கிறது. கறுப்பு சிவப்பைப் பந்தில் பூசச் சொல்லுங்கள். அப்போதுதான் அடித்து விளையாடுவேன்!’ என அடம்பிடிப்பார். கடைசிவரை பந்தை அடிக்கவே மாட்டார். ஆனாலும், ஆடாமலே மேட்ச் ஜெயிப்பார். அதெப்படி என்கிறீர்களா? அதிர்ஷ்டக்காரர் கடைசிவரை அவுட் ஆகாமல் க்ரீஸுக்குள் நிற்கக் காரணமே, எதிரணியினர் போட்ட பந்துகள் எல்லாமே வைடு என்பதுதான்!

சிரிச்சா சிக்ஸர்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

`விவசாயத்துக்குப் பேர்போன பஞ்சாப் அணியைத்தானே இந்த எளிய தமிழ்ப்பிள்ளைக்குக் கொடுக்கணும். அவன் கோதுமை விவசாயி... நான் கரும்பு விவசாயி... புஹுஹாபுஹுஹா!’ எனச் சிரிப்பார் சீமான். ‘கோப்பை ஜெயித்தால் அடுத்தமுறை ஐ.பி.எல்லை ஆதித்தமிழன் வாழ்ந்த அட்லாண்டிஸ் இருக்கும் கடலுக்குள் நடத்தச் செய்வோம், அக்வாமேன்தான் அம்பயர்’ என ரகளை செய்வார். வழக்கம்போல, ‘சென்னை, மும்பைன்னு ரெண்டு டீமுக்கே நீங்க வாய்ப்பு கொடுத்தது போதும். எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்க’ என பார்வையாளர்களிடம் ஆவேசமாய் முறையிடுவார். ‘அண்ணே அதுக்கு நீங்கதான் ஆடி ஜெயிக்கணும்’ என அவர்கள் சொன்னால், ‘அண்ணனையே எதிர்த்துப் பேசுறீயா? என கிரவுண்டை விட்டு அவர்களை விரட்டுவார்.

கிரவுண்டுக்குள் இவர் பேட்டிங் இறங்கும்போதே தண்டால், பஸ்கி எடுத்து வார்ம்-அப் எல்லாம் செய்வார். பாலை அடிக்கிறாரோ இல்லையோ ‘கதை’ பேசிக்கொண்டே இருப்பார்.

``பஞ்சாப்காரனும் தமிழனும்தான் சுதந்திரத்துக்காகப் போராடினான். ‘எங்கெல்லாம் உரிமை மறுக்கப்படுதோ அங்கெல்லாம் மீறு!’ எனச் சொன்னான் என் அண்ணன் பகத் சிங். மானமிகு பகத் சிங் வழிநடந்து கப்பை அடிப்பேன். இது முப்பாட்டன் முருகன்மீது ஆணை. ‘வேலே... வேலே...’ எனத் தமிழன் சொன்னதுதான் ‘பல்லே... பல்லே...’ எனப் பஞ்சாப்பில் மாறியதுங்கிறதைப் புரிஞ்சுக்கணும் சின்னப்பய மக்களே’’ - இப்படி இவர் பேசிக்கொண்டே கூலாகச் சிரித்தபடி விளையாடுவார்.

எதிரணியினர் பந்து வீசுகிறார்களோ இல்லையோ, இவர் அணியைச் சேர்ந்த தம்பிகளே இவர்மீது பந்தை எறிவார்கள், ரன் அவுட் செய்வார்கள், ‘ஹௌஸாட்’ கேட்பார்கள். ‘எனக்குன்னே வருவீங்களாய்யா?’ எனத் தம்பிகளைத் திட்டியவாறே பச்சை மட்டையில் களமாடத் தொடங்குவார் அண்ணன் எளிய தமிழ்ப்பிள்ளை!

சிரிச்சா சிக்ஸர்!

மும்பை இந்தியன்ஸ்:

‘‘இந்தியன் பாகம் ரெண்டில் நடித்துக் கொண்டிருக்கும் என்னைவிட இந்த டீமை வழிநடத்த யாரால் முடியும் சொல்லுங்கள். சென்னை என் அன்னை காட்டிய ஊர். மும்பை என் ஞானத் தகப்பன் பாலசந்தர் காட்டிய ஊர்... ‘ஏக் துஜே கேலியே’வில் நான் மும்பைக்கு முன்பே பரிச்சயமானவன். இங்கு களம் ஒன்றுதான். அது நன்றுதான். வான்கடே என்றாலும் சிதம்பரம் என்றாலும் பகலிரவு ஆட்டத்தில் லைட் இல்லாமல் ஆட முடியாது. டார்ச் லைட்டைக் கோத்து இதுக்கு மேல் பேச முடியாது. ஆங்... வெல்! நானே ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் ரன்னராகவும் களம் இறங்குகிறேன்! தேவைப்பட்டால் எதிரணி என்னை பௌலராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ எனப் பெருமை பேசி, ‘‘ஆரம்பிக்கலாங்களா?’’ என, போய் அம்பயரிடம் கேட்பார்.

‘‘மேட்ச் ஆரம்பிச்சு அரை மணி நேரம் ஆச்சு... நீங்க கமென்ட்ரி பண்றவர்னு நினைச்சு நாங்க டிஸ்டர்ப் பண்ணல. சரி அப்படி கிரவுண்டைச் சுத்தி நடந்துக்கிட்டே பேசிட்டு வாங்க. நாங்க மேட்ச்சை முடிச்சு வைக்கிறோம்’’ என வீம்பாக அவுட் காட்டுவார் அம்பயர்.

டிஜே பொருத்தமாய் ‘தென்பாண்டி சீமையிலே’ பி.ஜி.எம் போட, ‘நான் பிளேயரா, இல்லையா’ எனக் கண்ணைக் கசக்கி தனக்குத்தானே கேட்டபடி பெவிலியனுக்கு நடையைக் கட்டுவார்.

சிரிச்சா சிக்ஸர்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

டி.டி.வி.தினகரனுக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கும் உள்ள தொடர்புதான், அவருக்கும் இந்த டீமுக்குமான தொடர்பு. ‘மன்னன்’ படத்தில் தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கும் ரஜினிபோல ஓட்டைக் கண்ணாடியிலும் சிரித்தபடி இருப்பார்.

``நான் நல்லா சிக்ஸ் அடிப்பேன், நல்லா பௌலிங் போடுவேன், நல்லா ஃபீல்டிங் பண்ணுவேன்! ஆனால் என்னமோ நான் விளையாடப்போனாலே அன்னிக்கு மழை பெய்யுது, இடி இடிக்குது. இந்த சதிகளுக்கெல்லாம் அஞ்சுற ஆள் நான் கிடையாது. சாதாரண டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனெல்லாம் ஒரு காலத்தில் எங்கிட்ட கோச்சிங் எடுத்தவர்தான். இன்னிக்கு அவர்கிட்ட ஒரு டீம் இருக்குங்கிற அதிகார போதையில போங்காட்டம் ஆடுறாரு. என்னைப் பொறுத்தவரை எல்லோருக்கும் சேலஞ்ச் கொடுக்குற ராயல் மன்னார்குடி ஃபேமிலி நாங்கதான். இப்ப மட்டும் இல்லை, எப்பவும் குடும்பம் காட்டுற கால்வாய் வழியிலதான் நடப்போம்’’ என்று பேட்டிங்குக்கு முன் பேட்டி தட்டுவார்.

கூட இருக்கும் ஆட்களெல்லாம் அடுத்த டீமுக்கு நெட் பௌலராய்ப் போவது, கடைசி நேரத்தில் கோச் அம்மா கோபித்துக்கொண்டு போவது எனப் பல சிக்கல்களைக் கடந்துதான் கிரவுண்டுக்குள்ளே நுழைவார். ‘சரி வந்ததுக்கு டெல்லி டீமோட மட்டும் ஆடிட்டுப் போங்க’ எனத் தள்ளிவிடும் ஐ.பி.எல் நிர்வாகம். ‘அட இது போதுமே எனக்கு!’ எனத் தொடையைத் தட்டி கெத்தாய் இவர் உள்ளே நுழைவதில் டெல்லி அணிக்குக் குலை நடுங்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism