சினிமா
தொடர்கள்
Published:Updated:

தாங்க முடியாது குருநாதா!

தாங்க முடியாது குருநாதா!
பிரீமியம் ஸ்டோரி
News
தாங்க முடியாது குருநாதா!

ஓவியம்: ஜீவா

‘தொண்டையில ஆபரேஷன்... காசு கொடு!’

‘சந்தைக்குப் போகணும்... ஆத்தா வையும்...காசு கொடு!’

- இந்த டயலாக்குகளின் ஆங்கில வெர்ஷன்தான் ‘புளூ டிக் வேணுமா... எட்டு டாலர் கொடு!’

போறபோக்குல இனி எல்லாத்துக்கும் காசு கேட்டா யார் யாரெல்லாம் காசு கேட்பாங்க...எதுக்காகக் கேட்பாங்கன்னு சின்னதா ஒரு கற்பனை!

முதலில் கழுகுக்கு மூக்கு வியர்த்த மாதிரி மார்க் சகர்பர்க்குக்குத்தான் வியர்க்கும். நாட்டுல பாதிப்பேரு குத்த வெச்சிருக்குற ஃபேஸ்புக்கோட ஓனராச்சே..!

“280 கேரக்டர்கள்ல எழுத வைக்கிற ட்விட்டர் பொடிப்பயலே அம்புட்டுக் கேட்டா... நான்லாம் உங்க சொந்தக் கதை சோகக் கதைய எழுத வெக்கிறேனே எனக்கு எம்புட்டுத் தரணும் நீங்க! உங்க போஸ்ட்டுக்கு வர்ற ஹார்ட்டின், லைக்ஸ் கமெண்ட்ஸ் வெச்சே உங்களை எழுத்தாளரா ஃபீல் பண்ண வைக்கிறேன். பலபேரு அப்பிடியே நிஜ சந்திரமுகியா உருமாறி ஃபேஸ்புக்ல எழுதுனதை பட்டி டிங்கரிங் பண்ணி புக்ஃபேர்ல புத்தகம் போட்டு சம்பாதிக்கிறீங்க.

‘ஹாய், நீங்கதானே பானபத்திர ஓணாண்டி...நான் உங்க ஃபாலோயர் சார்... போன மாசம் நீங்க போட்ட அத்தனை ஸ்டேட்டஸுக்கும் லைக் போட்டேன். உங்களை இங்கே சந்திப்பேன்னு நினைக்கல சார். ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா சார்?’னு டெல்லி அப்பளம் வாங்குற இடத்துல வந்து சில்லறையைச் சிதறவிடுற பாக்கியம்லாம் என்னாலதானே உங்களுக்குக் கிடைச்சது. அதுக்கே நீங்க எனக்கு நியாயமா ராயல்டில பாதிய கொடுக்கணும்.

இது பத்தாதுன்னு ரீல்ஸ்னு நீங்க போடுற குத்தாட்ட கும்மாளத்துக்குத் தனி ரேட்டே ஃபிக்ஸ் பண்ணணும்..! அதனால 1,000 டாலர் கொடுக்க முடியாட்டியும் பரவாயில்லை. என் ஃப்ரெண்ட் எலன் கேட்ட 8 டாலரைவிட ஒரு டாலர் அதிகமா கேட்கலாம். ஆனா, அதெல்லாம் பாவம். அதனால சிம்பிளா 8-க்குப் பக்கத்துல ஒரு சைபர் சேர்த்துக்கலாம்னு இருக்கேன். அதனால 80 டாலர் மாசம் தந்தா போதும்!” என்று பெருசாய் கல்லா கட்டுவார்!

இனி அப்படியே வாட்ஸப், இன்ஸ்டாகிராம், டிண்டர், ஸ்னாப் சாட், ஷேர் சாட் என ஒவ்வொரு ஆப்புக்குமாய் ‘காசு கொடு’ எனக் கேட்டு ஆப்படிக்க ஆரம்பித்தால் என்னாகும்?

“உங்கள்ல பல பேரு காலை எழுந்ததும் காலைக் கடனை முடிக்கிறீங்களோ இல்லையோ ‘காலை வணக்கம்’ என ஒரு பத்து குரூப்புக்கு ஃபார்வர்டு மெசேஜ் அனுப்பினால்தான் அன்றைய நாள் இனிய நாளாகி மனச்சிக்கல் இல்லாமல் போகும். அப்படிப்பட்ட ஆட்களுக்கு மட்டும் ஒரு ஃபார்வர்டு மெசேஜுக்கு ஒரு டாலர் வீதம் வசூலிக்கலாம்னு முடிவெடுத்திருக்கோம்” என்று அமர்க்களமாய் ஆரம்பிக்கும் வாட்ஸப்.

தாங்க முடியாது குருநாதா!

“இதை ஷேர் செய்தால் இன்று இரவுக்குள் நல்ல செய்தி வரும்!’’ என்று எதையாவது ஃபார்வர்டு செய்யும் புளிசாத புருஷோத்தமன்களுக்கும் லெமன் ரைஸ் லெட்சுமணன்களுக்கும் அக்கவுன்ட்டிலிருந்து ஒரு டாலர் ஆட்டோ டிடெக்ட் ஆகும்படி செய்ய உத்தேசித்திருக்கிறோம்.

குடும்ப குரூப்புகளில் பூமர் அங்கிள்கள் போடும் மொக்கைப் போஸ்ட்டுகளுக்கு இனி மாசம் 100 ரூபாய் கட்டணம் பாஸ்...

புளூ டிக் வெச்சுக்கிறதுக்குக் காசு கொடுக்கணும்னா வாட்ஸப்பில் மெசேஜுகளுக்கு டபுள் புளூ டிக் கொடுக்கும் எங்களுக்கு 16 டாலர் ஒவ்வொரு மெசேஜுக்கும் கொடுப்பதே பொருத்தமா இருக்கும்.

இன்னிக்குப் பல காதல்கள் உருவாகுறதுக்குக் காரணமே நாங்கதான். எத்தனை எத்தனை Hi-கள், Saaptiyaa, Thoongitiya, Good morning ammu, Miss you, Love you, Pujju kuttyyy, Chellakkuttyyy, mama kuttyyy... இதையெல்லாம் மௌன சாட்சியா உட்கார்ந்து பார்க்குற எங்களுக்கு எவ்வளவு வீரம், விவேகம், வலிமை, துணிவு வேணும்!

சுருக்கமா சொல்லணும்னா இந்தக் காலக் காதலுக்கு, பிரேக்-அப்புக்கு நாங்கதான் பாஸ் அத்தாரிட்டி..! ஒருநாள் வாட்ஸப்ல பிரச்னைனா நாடே அல்லோலகல்லோலம்ல படுது. எனவே மாசாமாசம் பார்த்து மொய் செய்யுங்க பாசக்கார பங்காளிஸ்!

“எங்களோட ஸ்னாப் சாட்ல பயலுக சாட்டிங்ல குத்தவெச்சு கடலைய வறுக்க வசதியா, ஸ்க்ரீன் ஷாட் எடுத்தா காட்டிக் கொடுக்குற வசதியெல்லாம் பண்ணியிருக்கோம். இதுக்கு மீட்டருக்கு மேல நீங்கதான் போட்டுக் கொடுக்கணும். இதையெல்லாம் சமூக சேவையா செய்ற எங்களைக் கொஞ்சம் பார்த்து கவனிச்சுக்கங்க மக்கா’ என்பார்களே ஸ்னாப் சாட் வகையறா, ஐயகோ!

இன்ஸ்டாவில் கண்களில் பூச்சி பறக்க வைக்கும் போட்டோஸ் போடும் மகராசிகளுக்கும், பேர் பாடியைக் காட்டி மாஸ் காட்டுவதாய் நினைத்து கண்ணை ஃபியூஸ் ஆக்கும் பாடி சோடாக்களுக்கும் கட்டணம் விதிக்கலாம். இனி இதுபோன்ற ஆப்களுக்குத் தனிக் கட்டணம் கட்டச் சொல்ல வேண்டும். இப்படி போட்டோ ஆப்களின் உதவியால் போட்டோக்களாகப் போட்டுத் தாக்கும் இரு பாலினத்தவரிடமும் போட்டோவுக்கு ஒரு ரூபாய் வீதம் வசூலிக்கலாம்.

சொல்ல மறந்துட்டேன்... யூடியூபில் கண்டது கழியதுகளை அப்லோடு பண்ணும் கொலவெறி கிரியேட்டர்களிடமிருந்து அவர்கள் வீடியோக்களுக்கு வரும் கமெண்ட்டுகளை வெச்சு கலெக்‌ஷனைப் போடலாம். எந்த வீடியோவுக்கு மோசமான கமெண்ட்டுகள் வருதோ... ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் பத்து ரூபாய் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் நடத்துபவர்களிடமிருந்து மீட்டரைப் போடலாம். இதனால கன்டென்ட்டில் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள்.

கமெண்ட்டில் சம்பந்தமில்லாமல் ‘குப்புறப்படுத்து யோசித்துக்கொண்டே வீடியோ பார்ப்போர் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துகள்’ என மொக்கை போடும் ஆட்களின் கமெண்ட்டுகளுக்கு ஸ்பெஷல் ரேட் போடுமாறு செட்டிங்ஸ் வைக்கலாம்.

பெரும்பாலான யூடியூபர்ஸ் ‘ஃபுட் போர்ன்’ சேனல் நடத்துறேன்னு காசு வாங்கிட்டு மொக்கையான ஓட்டல்களை நம்ம தலையில கட்டுறாங்கில்ல... அவங்ககிட்ட யூடியூப் மூலம் புகார் கொடுத்தா நிவாரண நிதியா ஒரு மன உளைச்சலுக்கும் வயித்து உளைச்சலுக்கும் நூறு ரூபாய் கிடைக்குமாறு பண்ணலாம். காமெடிங்கிற பேர்ல கழுத்தறுக்குறதும், ரிவ்யூங்கிற பேர்ல மோசமான படத்துக்கு முட்டுக்கொடுக்கிறதும் இதன்மூலம் நிறுத்தப்படும்.

அப்புறம் முக்கியமா தம்ப்ல சம்பந்தமே இல்லாம டைட்டில் வைத்து அதிர்ச்சி கொடுக்கும் அட்ராசிட்டி ஆட்களிடம் வலுக்கட்டாயமாக காசைப் புடுங்கலாம்.

‘போதும்... போதும்... லிஸ்ட் ரொம்ப நீளமாப் போகுது’ என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் இங்கே கேட்குது. புளூ டிக்குக்குக் காசு வாங்குவதால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் நபர்களில் நம்மிடம் வாலிண்டியர்களாக யாரெல்லாம் காசு கேட்பார்கள் எனப் பார்க்கலாமா?

முதலில் நம்ம மோடிஜி.

“மான் கி பாத்தைக் கேட்குறீங்க... அதுல உங்க ஊரு ரெஃபரென்ஸ் எடுத்துப் பேச நான் படுற பாடு இருக்கே. அதுக்கே நீங்க எனக்கு ஜி.எஸ்.டியோட 100 ரூபாய் தரலாம் மித்ரோன்ஸ்!

ட்விட்டர்ல இஷ்டத்துக்கு #GoBackModi ட்ரெண்ட் பண்றீங்க... அதனால எவ்ளோ மன உளைச்சல். ஒவ்வொரு ஊருக்குப் போறப்பவும் இப்படி ட்ரெண்ட் பண்ணினா நான் பாவம் இல்லையா... பதிலுக்கு #WelcomeModi ட்ரெண்ட் பண்றதுக்குள்ள நாக்கு தள்ளிருது மித்ரோன்ஸ்... இந்த எலன் மஸ்க் வேற புளூ டிக்குக்குக் காசு கேட்டதால டாலரோட மதிப்பு கூடிடுச்சு. அதனால ஏழைத்தாயின் மகனான எனக்கு இனிமேல் நீங்க ‘மான் கி பாத் பிரதான் மந்திரி யோஜனா’ திட்டத்துல இந்த பி.எம்-மை கேர் பண்ணி நிதி கொடுத்தீங்கன்னா நான் புளூ டிக்கை வாங்கி கெத்தா ட்விட்டரில் தொடர முடியும். இது நிகழவில்லை என்றால் இந்தியாவின் பெருமை உலக அரங்கில் குறையும். நம் பெருமையை சர்வதேச அரங்கத்துல உயர்த்துறதுக்கு இது உங்களுக்கு நல் வாய்ப்பாக அமையும்!”

“அட்மின்கள் வெச்சு போஸ்ட் போட்டாலும் என்னைத் திட்டும் ஆன்ட்டி இண்டியன்ஸிடமிருந்து என்னைக் காப்பாற்ற உங்களுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இருந்தா எனக்கு அட்மின் ரிஹாபிலிடேஷன் ஃபீஸ் தௌசண்ட் ருப்பீஸ் ஒரு மாசத்துக்குக் கொடுங்கங்குறேன். இல்லைனா யு ஆர் ஆன் ஆன்ட்டி இந்தியன்!” என்பார் ஹெச்.ராஜா.

“குளிக்கிறியோ இல்லையோ, அம்சமா சிவகடாட்சமா இருக்கேடா நாராயணா மாதிரி படத்துல நடிக்கிறமோ இல்லையோ ஆபத்தான வளைவு நெளிவுகளோட இன்ஸ்டாவில் போட்டோஸ் போட்டு பல வெப்சைட்டுகளை வெட்சைட்டுகளாக மாற்றி வெச்சிருக்கேன். அது போதும் எனக்கு! ஆனா, படம் இல்லாம மும்பையில குத்த வெச்சிருக்குற எனக்கு போட்டோஸுக்கு காசு தரலாமே ஃப்ரெண்ட்ஸ்!” எனச் சொல்லும் மாளவிகா மோகனன் ஒரு போட்டோக்கு நிவாரண நிதியாக நூறு ரூபாய் நம் பர்ஸிலிருந்து கேட்பாரா இல்லையா..!

கொஞ்சம் லோக்கலாக ஃபேஸ்புக்கில் சாரு நிவேதிதா போன்ற செலிபிரிட்டிகள் ஓப்பனாகவே இனி காசு கேட்கலாம். “தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளராக வாழ்வது என்பது எவ்வளவு பெரிய துயரம். நான் எனக்காக பைசா கேட்கவில்லை. அதுக்கு அவசியமும் இல்லை. ஃபேஸ்புக் என்னிடம் கேட்கும்போது என்னைப் போன்ற எழுத்தாளர்கள் எப்படி கருத்துரிமையைப் போற்றிப் பாதுகாப்பது? ஆகவே பக்கத்து ஸ்டேட் கேரளாவில் தருவது போல நிதிமிகுந்தோர் பொற்குவை தாரீர். நிதிகுறைந்தோர் நோட்டாய் தாரீர்!” என்று நேரடியாகவே கேட்டும்விடுவார்.

தடை செய்யப்பட்ட டிக்டாக்கில் ஆரம்பித்து, தடை செய்யப்படாத ஸ்மூல், மோஜி, ஜோஷ் என இருக்கும் பல டான்ஸிங் ரீல்ஸ் ஆப்கள், அதில் வரும் ஒவ்வொரு வீடியோவுக்கும் காசு வாங்க ஆரம்பித்தால்...

தாங்க முடியாது குருநாதா!