Published:Updated:

சானிடைசரும் மாஸ்க்கும் போல பல்லாண்டு வாழ்க!

நியூ நார்மல் வாழ்க்கை
பிரீமியம் ஸ்டோரி
நியூ நார்மல் வாழ்க்கை

ஆஹகா... மாப்பிள்ளை கோவாக்சின் கோத்ரம்... பொண்ணு ஸ்புட்னிக் நட்சத்திரம்... கோடியில ஒரு ஜோடிக்கு அமையிற அமோகமான ஜாதகப் பொருத்தம்.

சானிடைசரும் மாஸ்க்கும் போல பல்லாண்டு வாழ்க!

ஆஹகா... மாப்பிள்ளை கோவாக்சின் கோத்ரம்... பொண்ணு ஸ்புட்னிக் நட்சத்திரம்... கோடியில ஒரு ஜோடிக்கு அமையிற அமோகமான ஜாதகப் பொருத்தம்.

Published:Updated:
நியூ நார்மல் வாழ்க்கை
பிரீமியம் ஸ்டோரி
நியூ நார்மல் வாழ்க்கை

’கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்ணுக்கு ரெண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட கோவிஷீல்டு மணமகன் தேவை’ என்ற விளம்பரம் கடந்த வாரம் வைரல். இந்த நியூஸ் ஒரு வாரமாக என் மண்டைக்குள் ஓடி, நியூ நார்மல் வாழ்க்கை இப்படி இருக்குமோ எனக் கற்பனைக்குதிரை தறிகெட்டு ஓடியது. இதோ இப்படித்தான்...

முதலில் கல்யாண புரோக்கர்கள் வித்தியாசமாக உருமாறியிருப்பார்கள். கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி என தனித்தனி ஆல்பங்கள் கைவசம் வைத்திருப்பார்கள்.

“பையன் வீடு இந்தியால கொரோனா இரண்டாவது அலை உச்சத்துல இருந்தப்போ ஸ்புட்னிக் வி-க்காக வெயிட் பண்ணிப் போட்டுக்கிட்ட வசதியான குடும்பம். அதனால அவங்க எதிர்பார்க்குறதை செஞ்சிடுங்கோ!” என்று டிமாண்ட் பண்ணுவார்கள்.

“ஆஹகா... மாப்பிள்ளை கோவாக்சின் கோத்ரம்... பொண்ணு ஸ்புட்னிக் நட்சத்திரம்... கோடியில ஒரு ஜோடிக்கு அமையிற அமோகமான ஜாதகப் பொருத்தம்..!” என்பார் பிரபல ஜோதிடர்.

“எங்க வைஷு முதல் அலையில கொரோனா அறிகுறி இருந்தப்போ வீட்லயே பத்து நாள் குவாரன்டீன்ல நல்லா சமைக்கக் கத்துக்கிட்டா. பத்துக்குப் பத்துல சிம்பிளான ரூம்ல ஓ.டி.டி-ல மட்டும் படம் பார்த்து சிக்கனமா வாழப் பழகிட்டா. நம்பிக் கொடுத்தீங்கன்னா ஹேண்ட் சானிட்டைசர் மாதிரி உங்க பையனைப் பார்த்துக்குவா!” என்று பெண் வீட்டாரே மாப்பிள்ளை வீட்டாரிடம் நிச்சயதார்த்தத்தின் போது சொல்வார்கள்.

சானிடைசரும் மாஸ்க்கும் போல பல்லாண்டு வாழ்க!

“என்னது, மாப்பிள்ளை கேரம் போர்டுல மராத்தான் ப்ளேயரா..? புரியலையே...” என ஒரு குரூப் குழம்பும்.

“ஆமா... முதல் அலை வந்தப்போ ஊரடங்குல தைரியமா விளையாண்டவர். போலீஸ் டிரோனை வெச்சு துரத்துறப்போ கேரம் போர்டோட ஓடுனாரே ஞாபகம் இருக்கா... அவரேதான் மாப்பிள்ளை!” என்பார்கள்.

காதலிகளுக்குப் பிரிவதற்கு இன்னொரு காரணம் கிடைத்திருக்கும். “கோபி... எங்க குடும்பமே ஸ்புட்னிக்-வி. கோவாக்சினுக்கு வேணும்னா செட் ஆகும். ஆனா, நீங்க கோவி ஷீல்டு... நிச்சயமா எங்க அப்பா நம்ம காதலுக்கு ஒத்துக்க மாட்டாரு. என்னை மறந்துடுங்க ப்ளீஸ்!” என கண்ணீரோடு குட்பை சொல்வாள். கோவிஷீல்டு கோபி கேவிக் கேவி அழுவான்.

சீர்வரிசையில் அரை அண்டா ஹேண்ட் சானிட்டைசர், பீரோவில் ஐந்நூறு பண்டல் சர்ஜிக்கல் மாஸ்க் வைத்து கெத்து காட்டுவார்கள். தாய் மாமன் சீராக ஊருக்கே தடுப்பூசி போட்டு தாம்பூலப் பையில் N95 மாஸ்க் போட்டுக் கொடுப்பார். திருமண நிகழ்வுக்கு யார் வந்தா, யார் போனா என்று கண்டுபிடிக்கவே முடியாது. கல்யாணத்துக்கு வராத மாமணி மாமா மணிகூட, “என்ன ஒரு தடபுடல் செஞ்சீட்டீங்க போங்க. மாஸ்க் போட்டிருந்ததால நீங்க என்னை கவனிக்கல. கல்யாணம்னா இப்படித்தான் நடத்தணும்!” என போனில் கப்சா விடுவார்.

வீட்டின் ஷோகேஸ்களில் ஷீல்டுக்குப் பக்கத்தில் கோவிஷீல்டு போடும்போது எடுத்த குடும்ப உறுப்பினர்களின் தடுப்பூசிப் புகைப்படங்களை ஃபிரேம் பண்ணி அடுக்கி வைத்திருப்பார்கள். “நாங்க கோவிஷீல்டு பரம்பரை!” என தூக்குத்துரை கணக்காக மீசையை நீவிவிட்டுக் கொள்வார்கள் பெருசுகள்.

காதல் கிரிஞ்ச் டயலாக்கே எதிர்காலத்தில் மாறிப்போகும்.

“கூழோ கஞ்சியோ கால்வயிறு குடிச்சாலும் சந்தோஷமா உங்கூட வாழ்வேன் மாமா. நீ கழட்டி வீசுன சர்ஜிக்கல் மாஸ்க்கை மாட்டிக் கிட்டே மிச்ச வாழ்க்கைய வாழ்ந்துடுவேன்!” என்பாள் இவள்.

காதலன் மட்டும் சும்மா இருக்க முடியுமா?

“அம்மு, நீ போட்டுருக்குற N95 மாஸ்க்கோட வீட்டை விட்டு வா... காலம்பூரா உன்னைக் கண்கலங்காம வெச்சுக் காப்பாத்துறேன்!” என்று உருகுவான்.

“முதல் அலையில் கோவிட் வந்தப்போ முடிவெடுத்தேன் பாஸு. வாழ்க்கையில சீக்கிரமே செட்டில் ஆகிடணும்னு. அதனால ரெண்டாவது அலை வந்தப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! அதுக்கப்புறம் அலைகள் ஓய்வதில்லைன்னு எத்தனை அலை வந்தாலும் தாங்கிக்கிற சக்தி வந்திருச்சு நண்பா!” என்று ஜாலியாகக் கலாய்ப்பார்கள். உருமாறிய கொரோனாவைவிட திருமணம் பயங்கர அனுபவமாக இருக்குமோ என்னவோ!

உருமாறிய கொரோனான்னதும் முக்கியமான ஒண்ணு ஞாபகத்துக்கு வருகிறது. எதிர்காலத்தில் எல்லோரும் கொரோனா ‘வேரியண்ட்’டை அசால்ட்டாக டீல் செய்யப் பழகியிருப்பார்கள். ஏனென்றால் எல்லோரும் தடுப்பூசி போட்டு எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டிருப்பார்கள்.

பத்து வருஷம் கழிச்சு, ‘‘ஹால்மார்க் தங்க நகை போல என் மனைவி B.1.617.2னு ஒரு வேரியண்ட்! நான்லாம் B.1.1.7னு ஃபேன்ஸி நம்பர்... கெமிஸ்ட்ரி பீரியாடிக்கல் டேபிள் மாதிரி செமையான வேரியண்ட். இதெல்லாத்தையும்விட காமா வேரியண்ட்னு ஒண்ணு மாமாவுக்கு இருந்துச்சு. சிம்பிளா P1னு ஏதோ பி1 போலீஸ் ஸ்டேஷன்னு சொல்ற மாதிரி ஒரு வேரியண்ட்! ஆங்... அதுலாம் ஒரு காலம்! கை வீசம்மா கைவீசு... தடுப்பூசி போடலாம் கைவீசு!” என 70s, 80s கிட்ஸ் அப்போது நாஸ்டால்ஜியா படம் ஓட்டுவார்கள்.

“நான் தஞ்சாவூர்க்காரன். டெல்டா வேரியண்ட் வந்துட்டுப்போன பொண்ணுனா நல்லா இருக்கும்!” என்று சுயம்வர நிகழ்ச்சிகளில் சொன்னாலும் ஆச்சர்யமில்லை.

கல்யாண ஆல்பத்தைப் புரட்டினால் எல்லோரும் மாஸ்க் மயமாக இருப்பார்கள். “மாப்பிள்ளை ஏன் கல்யாண ஆல்பத்துல கோச்சுட்டு ஒதுங்கி நிக்கிறாரு?” என்று புரியாமல் கேட்டால், “கோவிக்கலைங்க. சமூக இடைவெளிய அத்தனை துல்லியமா ஃபாலோ பண்ணியிருக்காரு..!” என்று விளக்கம் சொல்ல வேண்டி யிருக்கும்.

சானிடைசரும் மாஸ்க்கும் போல பல்லாண்டு வாழ்க!

“என்னய்யா தடுப்பூசித் திருவிழால காணாமப்போன குழந்தை மாதிரி முழிக்குறே?” என்றுதான் எதிர்காலத்தில் கேட்பார்கள். அந்த அளவுக்கு மோடி அரசு விமரிசையாக பல தடுப்பூசித் திருவிழாக்களை நடத்தியிருக்கும்.

வளைகாப்பு வைபோகத்தில் கூட கன்னத்தில் தடவாமல் சந்தனத்துக்குப் பதில் சானிட்டைசரை எடுத்துக் கைகளில் தடவி வாழ்த்திவிட்டு வருவதை வாடிக்கை ஆக்கியிருப்பார்கள்.

‘‘நான் ப்ளஸ் டூல ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுக்கணும்னு கனவு கண்டு கடுமையா படிச்சேன். என் நேரம்... நான் கொரோனா பேட்ச் ஸ்டூடண்ட் ஆகிட்டேன் ப்ரோ!” என்று வாழ்நாள் முழுவதும் ஒரே கம்பி கட்டுற கதையைச்சொல்லி அலுத்துக் கொள்வார்கள் 2021 ப்ளஸ் டூ பாஸ்-அவுட் பாய்ஸ்.

இரண்டுபேர் எதிர்காலத்தில் சந்திக்கும்போது,

“நான் முதல் அலைல கொரோனா வந்த பேட்ச்... நீங்க?”

“ஓ... கபசுரக்குடிநீரா? நான்லாம் இரண்டாம் அலை சர்வைவர்..! வேக்சின் வேணுகோபால்னு பேரை மாத்திக்கிட்டேன்!” எனப் பேசிக் கொள்வார்கள்.

ப்ப்பா... பயங்கரம்!