தொடர்கள்
சினிமா
Published:Updated:

கைலாசா கிராபிக்ஸ் நோட்டு! - ஆதித்த சிரிகாலன், கிராஃபிக்ஸ்: ஜீவா

கைலாசா கிராபிக்ஸ் நோட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
கைலாசா கிராபிக்ஸ் நோட்டு

எந்த ரூபாய் நோட்டுக்கு யார் படத்தைப் போட்டால் என்ன, 20 ரூபாய் நோட்டு என்றால் டி.டி.வி.தினகரனை விட்டால் வேற யார்?

``இந்திய ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுக்க வேண்டும், இந்தியப் பொருளாதாரம் உயர வேண்டும் என்றால் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிட வேண்டும்’’ - அரவிந்த் கெஜ்ரிவால் உதிர்த்த அரிய சிந்தனை இது. மப்ளர் கட்டும்போது அவருக்கு இந்த மகோன்னதச் சிந்தனை உதிர்த்தது. ரூம் போட்டு யோசிக்கலாம் என்றால் ஆபீஸ் பட்ஜெட் இடிக்க, எதிரில் இருந்த கம்ப்யூட்டரை முறைத்துப் பார்த்தபோது எனக்குத் தோன்றிய எசகுபிசகு யோசனைகள். வாங்க, ‘சில்லறைப் பிரச்னைதானே'ன்னு அலட்சியப்படுத்தாம இந்த ரூபாய் நோட்டுப் பிரச்னையை அலசுவோம்!

கைலாசா கிராபிக்ஸ் நோட்டு! - ஆதித்த சிரிகாலன், கிராஃபிக்ஸ்: ஜீவா

* ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கே அல்வா கொடுத்து விமானம் ஏறி வெளிநாடு பறந்த விஜய்மல்லையா படத்தை ரூபாய் நோட்டில் அச்சடித்தால், நம்ம பொருளாதாரமும் ச்சும்மா கிர்ருன்னு பறக்கும்!

* மலைக்குப் பெயின்ட் அடிப்பது, நூற்றுக்கணக்கில் கார்களை அசால்ட்டாக அடித்து நொறுக்குவது என்று பட்ஜெட்டைப் பற்றிக் கவலைப்படாதவர் இயக்குநர் ஷங்கர்தானே? எனவே ஷங்கர் படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிடலாம். அப்பளக் கம்பெனி நடத்தி பணத்தை அபேஸ் செய்த ‘ஜென்டில்மேன்’ அர்ஜுன், ஒத்த ரூபாயைச் சுண்டிவிடும் ‘சிவாஜி' ரஜினி படத்தையும் சேர்த்து அச்சடித்தால் பாதாளத்தில் இருக்கும் பொருளாதாரம் பல்லேலக்கா என்று பல்லக்கில் ஏறும்.

கைலாசா கிராபிக்ஸ் நோட்டு! - ஆதித்த சிரிகாலன், கிராஃபிக்ஸ்: ஜீவா

* முப்பது கோடி ரூபாயை அநாமத்தாக வாங்கி அசால்ட்டாகச் செலவு செய்த ‘அருணாச்சலம்' ரஜினி படத்தை அச்சடிக்கலாம்.

* நாம் எல்லாம் ஆசைப்பட்டால் செல்ஃபி எடுப்போம். கொஞ்சம் காசு இருந்தா ப்ரீ வெட்டிங் வீடியோ, போட்டோஷூட் எடுப்போம். ஆனா பணம் போனாப் போகட்டும்னு ஹீரோவா நடிச்சு ஒரு சினிமாவே எடுத்தாரே ‘லெஜண்ட்' சரவணன், அவர் படத்தை ரூபாய் நோட்டில் அச்சடித்தால் அது வேற லெவலு! அவரைச் சுத்தி ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, மாளவிகா மோகனன், தமன்னா போன்ற ஹீரோயின்கள் படத்தையும் அச்சடித்தால் அண்ணாச்சியே ஹேப்பி அண்ணாச்சி!

கைலாசா கிராபிக்ஸ் நோட்டு! - ஆதித்த சிரிகாலன், கிராஃபிக்ஸ்: ஜீவா

* எந்த ரூபாய் நோட்டுக்கு யார் படத்தைப் போட்டால் என்ன, 20 ரூபாய் நோட்டு என்றால் டி.டி.வி.தினகரனை விட்டால் வேற யார்?

* ‘கைலாசா' என்று ஒரு தீவையே வாங்கி விருப்பத்துக்கு விருதுகளை விட்டெறியும் நித்யானந்தா படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடித்தால், ‘கதவைத் திற காசு வரட்டும்' என்று பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். நித்தி படத்தை கிராபிக்ஸில் அச்சடித்தால், உலகின் முதல் கிராபிக்ஸ் ரூபாய் நோட்டு என்ற சாதனையும் படைக்கலாம்.

கைலாசா கிராபிக்ஸ் நோட்டு! - ஆதித்த சிரிகாலன், கிராஃபிக்ஸ்: ஜீவா

* மானாவாரியாக மங்காத்தா ஆடி பணத்தை அள்ளிய அஜித் படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கலாம். நாணயங்களில் வேண்டுமானால் ஒருபக்கம் தலை, இன்னொரு பக்கம் பூ இருக்கலாம். ஆனால் ரூபாய் நோட்டுகளில் ரெண்டுபக்கமும் ‘தல' படத்தை அச்சடித்து, ‘ரெட்டைத் தலடா' என்று சொல்லலாம்.

* ‘புதுசா வந்த 2000 ரூபாய் நோட்டில் சிப் இருக்கு, ஜன்னல் வெச்ச ஜாக்கெட் இருக்கு' என்று இஷ்டத்துக்கு அடித்துவிட்ட எஸ்.வி.சேகர் படத்தையும் அச்சடிக்கலாம். பால் பாக்கெட் வாங்குவதற்கு மட்டும் அந்தப் பணத்தைப் பயன்படுத்தச் சொல்லலாம்.

* ‘திண்ணையில் இருந்தவருக்குத் திடுக்குன்னு அதிர்ஷ்டம் வந்ததைப் போல' என்ற பழமொழிக்கு நடமாடும், ஸாரி, நடமாடாத உதாரணமாக இருப்பவர் ஜெ.தீபா. அவரே நினைக்காதபடி போயஸ் கார்டனுக்கு உரிமையாளர் ஆனவர் என்பதால் ஜெ.தீபா படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கலாம்.

* கோபால் பல்பொடி கலர் வரை விதவிதமான கலர்களில் ரூபாய் நோட்டு அடித்தாலும் இந்தியப் பொருளாதாரம் உயராததற்குக் காரணம், காவி கலரில் கரன்சி நோட்டு அடிக்காததுதான். இந்த ‘தெய்வக்குத்தத்தை' சரிசெய்ய காவி கலரில் ரூபாய் நோட்டு அடிக்கலாம்.

கைலாசா கிராபிக்ஸ் நோட்டு! - ஆதித்த சிரிகாலன், கிராஃபிக்ஸ்: ஜீவா

* ‘காசு பணம் துட்டு மணி மணி' என்று பாடிய கானா பாலா படத்தைக் கண்டிப்பாக ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கலாம்.

* அமெரிக்க அதிபர் ஜோ பைடன் படத்தையே ரூபாய் நோட்டுகளில் அச்சடித்தால், 'என்ன இருந்தாலும் நம்ம படம் போட்ட நோட்டு, அதன் மதிப்பை இறங்க விடலாமா?'ன்னு பைடனே பயங்கரமா ஃபீல் பண்ணி, டாலர் மதிப்பைத் தட்டி இறங்க வைப்பார்.

* எதுக்குங்க இவ்ளோ யோசனை, அதானி போட்டோவை ரூபாய் நோட்டில் அச்சடித்தால் பொருளாதாரம் பொசுக்குன்னு உயராதா? நம்ம எல்லாப் பணமும் கடைசியில் சேரப்போறது அங்கேதானே? நிர் உய்ர நேலு உய்ரும்... அதானி உயர இந்தியப் பொருளாதாரம் உயரும்!