கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

மொபைல் மாறினா அகாதுகா அட்ராசிட்டி!

மொபைல் மாறினா அகாதுகா அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
மொபைல் மாறினா அகாதுகா அட்ராசிட்டி!

சார்... அண்ணா நகர் கூட்டத்துல கலந்துகிட்ட கட்சி நிர்வாகிங்க அடுத்து எப்போ மீட்டிங்னு கேட்குறாங்க சார்...குத்துமதிப்பா ‘இந்தியன் 2’-க்கு அப்புறம்னு சொல்லிட்டேன்.

‘லவ் டுடே' படத்தின் மொபைல் போனை மாற்றி வெச்சுக்கிற கேம் இப்போ புது டிரெண்ட் ஆகிப்போச்சு. நம்ம சி.எம் கிட்ட விளையாட்டாய் அவர் வீட்டம்மா சொன்னதை வெச்சு பிரஸ்மீட் புகழ் அண்ணாமலைல ஆரம்பிச்சு, கிக் பாக்ஸிங் புகழ் ஜெயக்குமார் வரை விதவிதமா ஸ்கோர் பண்ணி சோஷியல் மீடியால `இதுதான் விடியலா?'ன்னு ஜாங்கிரி சுட ஆரம்பிச்சிட்டாங்க. ஒருவேளை நாமளே இந்த அரசியல்வாதிகளோட மொபைல் போனை மாத்தி வெச்சிருந்தா என்னென்ன அகாதுகா அட்ராசிட்டிகள் நடந்திருக்கும்னு சின்னதா ஒரு கற்பனை பாஸ்...

மோடி <-> ராகுல்:

பாரத் ஜோடோ யாத்திரையில் ஓடிக்கொண்டும் நடந்துகொண்டும் இருக்கும் ராகுலின் கையில் இருக்கும் மோடியின் போனில் Soulmate-1 என்று சேவ் செய்த நம்பரில் இருந்து வாய்ஸ் மெசேஜ் வந்து விழுகிறது. அதை ராகுல் புளூடூத் மூலம் ரன்னிங்கிலேயே ஓப்பன் பண்ணிக் கேட்கிறார்.

‘‘'குட்மார்னிங் நண்பா... சாப்பிட்டியா? ரொம்பவாட்டி கால் பண்ணினேன். நீ போனை எடுக்கவே இல்லை. அப்புறமாத்தான் தெரிஞ்சது ஜி20 மாநாட்டுக்கு பாலித்தீவு போயிருக்கேன்னு. டி.வி-ல ஜி20 மாநாட்டுல உன்னைப் பார்த்தேன். உன்னோட காஸ்ட்யூம் சூப்பர். வரும்போது எனக்கும் அதுபோல ஒண்ணு வாங்கிட்டு வா. 50வது சுரங்கம் வாங்கும் விழா அலாஸ்காவில் வெச்சிருக்கேன். வழக்கம்போல் ஏதாவது கதை சொல்லிட்டு அங்கே வந்து சேர்ந்துடு. உனக்காகவே 14 கேமராமேன்ஸ் ரெடி பண்ணி வெச்சிருக்கேன். டேக் கேர் நண்பா!’’ என்றிருக்கிறது.

மொபைல் மாறினா அகாதுகா அட்ராசிட்டி!

‘ஓ... இது அதானியோட குரலாச்சே..!’ என ராகுல் ஜெர்க் ஆகும்போதே Soulmate-2விடமிருந்து காலே வருகிறது.

யார்னு யூகிக்க முடியாதா என்ன? அம்பானியேதான். கட் செய்துவிட்டு நடையைக் கட்டுகிறார் ராகுல். நடுநடுவே அமித்ஷாவிடமிருந்து ஃபார்வர்டு மெசேஜ்களாய் வந்து வாட்ஸப்பின் இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறது. இதற்கிடையில் குறும்புக்கார காவி ஒருவர் கே.டி.ராகவன் வீடியோ அனுப்பி ‘டிஜிட்டல் இண்டியா ஜெய்ஹோ' என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறார். Script team Mann ki baat என்ற வாட்ஸப் குரூப்பிலிருந்து மாநிலவாரியாக மெசேஜ்கள் வருகின்றன. நிறைய மெசேஜ்களை மோடி படிக்காமல் வைத்திருப்பதைப் பார்த்து, ‘‘ஏழைத்தாயின் மகனுக்குப் பணக்கார நண்பர்கள் மீதுதான் பாசம்!'' என்று சொல்லிச் சிரிக்கிறார் ராகுல்.

அதே நேரம்... மோடி கையில் இருக்கும் ராகுலின் போனில் Jothimani MP என்று கால் வருகிறது. போனை மோடி அட்டெண்ட் செய்தவுடன்,

மொபைல் மாறினா அகாதுகா அட்ராசிட்டி!

‘‘ஹலோ ராகுல் ஜி... என்ன உங்க குரல் தகரத்தைத் தண்டவாளத்துல தேய்ச்ச மாதிரி இருக்கு. ஓ, மோடி மாதிரி மிமிக்ரி பண்ணி கூட்டத்துல பேச பிராக்டீஸ் எடுக்குறீங்களா? கண்ட இடத்துல தண்ணீர் குடிக்காதீங்க ஜி. வெங்காயம், கல் உப்பு, தயிர் எடுத்துக்கங்க. தொண்டைக்கு மிளகு சூப் குடிங்க. மகாராஷ்டிரா மகோத்சவ் எப்படிப் போயிட்டிருக்கு? நான் நல்லா இருக்கேன் ஜி. அப்புறம் தமிழ்நாட்டு நிலவரம் கலவரமா இருக்குஜி. இதுல பயப்படுறதுக்கு ஒண்ணுமில்லை ஜி. நாம ஜெயிச்சிட்டோம் ஜி... தமிழ்நாட்டுல காங்கிரஸ்னு ஒண்ணு அழிஞ்சுபோயிடுச்சுன்னு நான் விரக்தில சொல்லியிருந்தேன்ல... அந்த மெசேஜை அழிச்சிடுங்க. நேத்து சென்னை சத்தியமூர்த்தி பவன்ல பெரிய சண்டை நடந்திருக்கு. மண்டை மூக்கு மொகரையெல்லாம் பேர்த்துக்கிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்கள் நம்மோட டி.என்.ஏவைக் காப்பாத்திருக்காங்க. இங்கே டி.வி மீடியால காங்கிரஸ் சண்டைதான் டாப் நியூஸ். பெரிய சம்பவமே பண்ணியிருக்காங்க. வழக்கமா சத்தியமூர்த்தி பவன் பூத் பங்களா மாதிரி இருக்குனு ஆறு மணிக்கு மேல யாருமே அந்தப் பக்கமா போக மாட்டாங்க. இன்னிக்கு ஃப்ளாஷ் நியூஸுக்காக எல்லா மீடியாவும் வளைச்சு வளைச்சு கவரேஜ் பண்ணினாங்க. காங்கிரஸின் பாரம்பர்ய விளையாட்டான வேட்டி கிழிப்பு மீண்டும் நிகழ்ந்தேறியிருக்கு. ‘உயிர்த்தெழுகிறதா காங்கிரஸ்?'ன்னு மீடியா டிபேட்லாம் போறாங்க. நீங்க இங்கே அடுத்தவாட்டி வர்றப்போ காளான் பிரியாணியும் காலிபிளவர் பக்கோடாவும் சாப்பிட்டுட்டே சமாதானப்படுத்துங்க ஜி... நன்றி!’’ எனப் பேசிவிட்டு வைக்கிறார்.

‘‘'ஓ.கே ஜி!’' என்று நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு போனை வைக்கிறார் மோடிஜி!

ஸ்டாலின் <-> ஆர்.என்.ரவி:

எப்போதும் சாவகாசமாகவே இருக்கும் சனாதனி எக்ஸ்பிரஸ் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் ஸ்டாலினின் செல்போன் கிடைத்ததும், முதல் வேலையாக ஸ்டாலினின் பிரௌஸ் ஹிஸ்டரி, வாட்ஸப் இன்பாக்ஸ்களை அலசி ஆராய்கிறார். மசோதாக்களில் கையெழுத்துப் போடுவதற்காக பேனாவை எடுக்காத அந்தக் கை, பரபரப்பாக நோட்பேடில் பேனா வைத்துக் குறிப்பெடுக்கிறது. ஸ்டாலின் மருமகன் சபரீசனின் வாய்ஸ் மெசேஜ்களைத் திரும்பத் திரும்பக் கேட்கிறார். உதயநிதியின் மெசேஜ்களை வெறிகொண்டு வாசிக்கிறார். ஸ்டாலின் தன் கட்சிப் பெருந்தலைகளுக்கு அனுப்பிய வாட்ஸப் வாய்ஸ் மெசேஜ்களில் எத்தனைமுறை ‘ஒன்றிய அரசு' என்று சொல்லியிருக்கிறார் என நோட்பேடில் குறிப்பெடுக்கிறார். ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலின் வைத்திருக்கும் வாட்ஸப் ஸ்டேட்டஸில் திருப்பதி வெங்கடாசலபதி படம் இருப்பதைப் பார்த்து ஸ்க்ரீன்ஷாட் எடுத்துவிட்டு பவ்யமாய் கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்.

மொபைல் மாறினா அகாதுகா அட்ராசிட்டி!

டி.ஜி.பி சைலேந்திரபாபு, சீஃப் செக்ரட்டரி இறையன்புவின் மெசேஜ்களைத் தன் போனுக்கு ஃபார்வர்டு செய்கிறார். அப்போது துர்கா ஸ்டாலினிடமிருந்து வாட்ஸப்பில் வாய்ஸ் மெசேஜ் வந்து விழுகிறது. உடனடியாக ஆடியோவைக் காது கொடுத்துக் கேட்கிறார்.

‘‘என்னங்க, சாப்டீங்களா... உதய் தம்பி இப்படி பண்ணிருச்சுங்களே. கலகத் தலைவனை புரொமோட் பண்ண வேண்டியதுதான்... அதுக்காக இப்படியா? ஓப்பனா பேசுறேன்னு போற இடம் பூரா ஓப்பனாவே பேசிக்கிட்டிருக்கு. வெறும் வாய்ல மெல்றவங்களுக்கு அவல் கிடைச்ச மாதிரி ஆகிடுச்சு நாம படம் பார்த்தது. பரவாயில்லை... அண்ணாமலையாருக்கு ஒரு மண்டலம் துஷ்டகிரி விரதம் இருந்து, ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்தினா தீய சக்தி அண்டாது. ‘நித்தம் ஒரு வானம்' படத்துக்கு நாலு டிக்கெட் சொல்லிடுங்க. நீங்க அவசியம் படத்துக்கு வரணும்... அப்புறம் டூர் முடிச்சிட்டு வரும்போது திருவையாறு அசோகா அல்வா வாங்கிட்டு வாங்க. சாப்பிட்டு நாளாச்சு! அப்புறம் எங்கிட்ட மொபைலை மாத்திக்கவே மாட்டீங்களா..?’ என்று மெசேஜ் இருக்கிறது.

‘ஓஹோ... படம் நல்லாருக்கா. இந்தா போறேன் சொசைட்டிக்கு!' என நினைத்தபடி லக்ஸ் சினிமாவில் டிக்கெட் புக் பண்ண, வேறொரு விண்டோவை மொபைலில் ஓப்பன் பண்ணுகிறார் கவர்னர் ரவி.

மொபைல் மாறினா அகாதுகா அட்ராசிட்டி!

ஆர்.என்.ரவியின் போனில் டயல்டு நம்பர்களை ஸ்டாலின் பார்க்கிறார். அதில் அமித் ஷா, மோடி, அண்ணாமலை-1, அண்ணாமலை-2 என்று வரிசையாக மாறி மாறி இதே நம்பர்கள்தான் ரிப்பீட்டில் வருகின்றன. வாட்ஸப் குரூப்களின் பெயர்களைப் பார்த்தால் டெரராய் இருக்கின்றன. ‘சனாதன அங்கிள்ஸ் சர்க்கிள்', ‘பூர்ஷ்வா பூமர் அங்கிள்ஸ் குரூப்', ‘வெட்டி வேரு வாசம்...வெட்டித்தனமா பேசுவோம்', ‘போப்புக்கு ஆப்பு', ‘இந்து மதமெனும் அற்புதம்', ‘Terror Temple Guys' என பல வாட்ஸப் குரூப்புகளில் ஆக்ட்டிவ்வாக போனை மாற்றிய கடைசி நிமிடம் வரை ஃபார்வர்டு மெசேஜ்களாய் அனுப்பியிருப்பதைப் பார்க்கிறார் ஸ்டாலின்.

‘இந்த ஆப்பை டவுன்லோடு பண்ணுனா இருபதாயிரம் புத்தகம் படிச்சமாதிரி' என்று அண்ணாமலையின் மெசேஜைப் பார்த்து ‘ஒரு பயனும் இல்ல' என்று சிரித்துக்கொள்கிறார். கடைசியாய், டயல்டு காலில் தன் நம்பரை பிளாக் செய்து வைத்திருப்பதைப் பார்த்து போனைத் தூக்கி எறிகிறார் ஸ்டாலின்.

சீமான் <-> கமல்:

‘‘'என்ன இருந்தாலும் இளையான்குடிக்கும் பரமக்குடிக்கும் 11 கி.மீ தூரம்தான். அண்ணனோட போனை இந்தத் தம்பி பார்க்குறதுல தப்பே இல்லை'' என்று சொல்லியபடி கமல் போனில் வாட்ஸப்பை ஓப்பன் பண்ணுகிறார் சீமான். பிக்பாஸ் டீம், விக்ரம்1 டீம், விக்ரம் 2 டீம், உலகநாயகன் குரூப், இந்தியன் 1 டீம், இந்தியன் 2 டீம் என எக்கச்சக்க சினிமா குரூப்கள் இருக்கின்றன. ‘‘அண்ணன் கலைத் தாகமெடுத்து திரியுறார். கட்சி குரூப்பையே காணோம்'' என்று குழம்புகிறார். சாட்டிங்கில் கடைசியில் MNM Core என்ற வாட்ஸப் குரூப் இருக்கிறது. 1,200 மெசேஜ்கள் பல மாதங்களாக படிக்கப்படாமல் கிடக்கின்றன. மௌரியா 12 மிஸ்டு கால், சினேகன் 20 மிஸ்டு கால், செந்தில் ஆறுமுகம் 25 மிஸ்டு கால், முரளி அப்பாஸ் 33 மிஸ்டு கால் என கால் ஹிஸ்டரி முழுக்க மிஸ்டு கால்களாய் இருக்க, டயல்டு கால்களில், உதயநிதி, லோகேஷ் கனகராஜ், ஹெச்.வினோத் என ஒரே சினிமா பிரபலங்கள் பட்டியலாய் இருக்கிறது. ‘‘அடேங்கப்பா... அண்ணன் சினிமான்னு வந்துட்டா சிங்கத்தமிழன்தான் போல!'' என்று தன் டிரேட்மார்க் சிரிப்பை உதிர்க்கிறார்.

மொபைல் மாறினா அகாதுகா அட்ராசிட்டி!

அப்போது முரளி அப்பாஸின் கால் வருகிறது. அட்டெண்ட் செய்கிறார் சீமான்.

‘‘சார்... அண்ணா நகர் கூட்டத்துல கலந்துகிட்ட கட்சி நிர்வாகிங்க அடுத்து எப்போ மீட்டிங்னு கேட்குறாங்க சார்...குத்துமதிப்பா ‘இந்தியன் 2’-க்கு அப்புறம்னு சொல்லிட்டேன். அப்புறம் ‘கூட்டணி வைக்கிறதுதான் வைக்கிறீங்க... பெரிய கட்சியோட வையுங்க'ன்னு சொல்றாங்க சார்! மய்யமா பேசியே குழப்பாம நேரடியா கூட்டணி இருக்கா இல்லையான்னு சொல்லச் சொல்றாங்க சார்!'' என்று பேசிக் கொண்டிருக்கும்போதே, சிரிப்பை அடக்க முடியாமல் கட் செய்கிறார் சீமான். ‘‘'அண்ணன் ரொம்ப பாவம்!'' என்றபடி மீண்டும் ‘புகுகுகுகா' என்று அதிர்ந்து சிரிக்கிறார்.

மொபைல் மாறினா அகாதுகா அட்ராசிட்டி!

சீமானின் போனில் யூடியூப் ஓப்பன் பண்ணினால் ‘ஆமைக்கறி டிக்கா செய்வது எப்படி?' ‘அரிசிக்கப்பலைக் குறிதவறாமல் வீழ்த்தும் வீரக்கலை' என்று விதவித வினோதத் தலைப்புகளில் தேடிய வரலாறு தெரிகிறது. கூகுள் மேப் ஹிஸ்டரியிலோ ராடிசன் புளூ ஹோட்டல், யாழ்ப்பாணம் என்று கலந்துகட்டி இருக்கிறது.

எடப்பாடி<-> ஓ.பி.எஸ்:

சிலுவம்பாளையத்தில் சிலுப்பிக்கொண்டிருக்கும் எடப்பாடியின் கையில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் போனில், ‘பழைய பன்னீர்செல்வமா வரணும்' டயலாக் ரிங்டோனாக ஒலிக்கிறது. ‘‘இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை!’' என்று பொருமியவர், my son என்ற நம்பரிலிருந்து வரும் காலை அட்டெண்ட் செய்து கேட்கிறார்.

‘‘டாடி... சிறுத்தை செத்த வழக்குல என்னைய சிக்க வெச்சிட்டாங்க டாடி. ஒரு லேடி ஐ.எஃப்.எஸ் அதிகாரி என்னை 2 மணி நேரம் ஆபீஸ்ல உட்கார வெச்சிட்டாங்க. நீ மட்டும் பவர்ல இருந்திருந்தேன்னா அந்தர் பண்ணியிருப்பேன். சீக்கிரமா ஏதாச்சும் பண்ணு டாடி!'' என்று சொல்லிவிட்டு, ‘‘பெரியகோழி கட்டுன ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழாவுக்கு என்னைக் கூப்பிடலை. கோபத்தில் நாட்டுக்கோழி ரசம் நாலு டம்ளர் குடிச்சேன் டாடி’’ - எதிர்முனையில் பேசிக் கொண்டிருக்கும்போதே கோபமடைந்த எடப்பாடி, லைனைக் கட் செய்கிறார்.

மொபைல் மாறினா அகாதுகா அட்ராசிட்டி!

Unknown number-லிருந்து வந்த மெசேஜைப் படித்துப் பார்த்து ஷாக் ஆகிறார் எடப்ஸ். ‘கொடநாடு கேஸில் எடப்பாடி', ‘மருத்துவக்கல்லூரி கட்டுமான ஊழல். கைது செய்யப்படுவாரா எடப்பாடி?', ‘எடப்பாடிக்குக் காத்திருக்கும் நெருக்கடி', ‘எடப்பாடியைக் கவிழ்க்க சதி!' என்ற பல தலைப்புகளில் வந்த புலனாய்வுக் கட்டுரைகளின் இமேஜ்களை அனுப்பி ‘சூப்பரப்பு' என்று சொல்லியிருந்தது. ‘யாரா இருக்கும்’ எனக் குழம்பிப் போகிறார் எடப்ஸ்.

கால் ஹிஸ்டரியை நோண்டிப்பார்த்தபோது பன்னீர் எவ்வளவு முறை போன் செய்தும் மோடி பி.ஏ அட்டெண்ட் செய்யாததை நினைத்து ஆனந்தத்தில் அண்டர் டேபிள் யோகாசனம் செய்து மகிழ்கிறார்.

இந்தப்பக்கம் பன்னீரின் கையில் எடப்பாடியின் போன். எடப்பாடியார் பாசறை என்ற வாட்ஸப் குரூப்பில் இருக்கும் வாய்ஸ் மெசேஜ்களைக் கேட்கிறார் பன்னீர். அநியாயத்துக்கு கெட்ட வார்த்தையில் தன்னைத் திட்டிப் பதிவிட்டிருப்பதைப் பார்த்து பாதியில் ஓடி வெளியே வருகிறார் பன்னீர். ‘எவ்ளோ டீப்பா திட்டுறானுக?' என்று நொந்துகொள்கிறார்.

மொபைல் மாறினா அகாதுகா அட்ராசிட்டி!

Visuvaasi-1, Visuvaasi-2, Visuvaasi-3 என முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் எல்லாம் நம்பர் போட்டு சேவ் செய்யப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து மிஸ்டு கால் வருகிறது. Raja visuvaasi என்ற நம்பரில் இருந்து வரும் ஆர்.பி.உதயகுமாரின் காலை அட்டெண்ட் பண்ணினால், ‘‘அண்ணே... நல்லாருக்கியலா..? ரெய்டு வரப் போறதா சொல்றாங்களே... உண்மையா? செல்லூரார் வேற இஷ்டத்துக்கு கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்புன்னு பேட்டி கொடுத்திட்டு இருக்காரு. பயமா இருக்கு. வேலுமணிகிட்ட பணம் இருக்கு. அவர் நாட்டுக்கோழி பிரியாணியே போடுவார். நான்லாம் லெமன் ரைஸுக்கே தண்ணி குடிக்கணும்னே... ஓ.பி.எஸ்ஸுக்கு எதிரா 110-வது அறிக்கை ரெடி பண்ணிட்டேன். ரஃப் டிராஃப்ட் அனுப்பியிருக்கேன். படிச்சிட்டுச் சொல்லுங்க. அப்புறம், மீசை தாடியை எடுத்துட்டு ஒரு கெட்-அப் மாத்தியிருக்கேன். எப்படி இருக்கேன்னு சொல்லுங்க’’ என்று சொல்லிவிட்டு கட் செய்கிறார்.