Published:Updated:

செய்தீர்களா நீங்கள் செய்தீர்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செய்தீர்களா நீங்கள் செய்தீர்களா?
செய்தீர்களா நீங்கள் செய்தீர்களா?

‘பெட்ரோல் விலையை தீபாவளிப் பரிசாய் மாண்புமிகு பாரதப்பிரதமர் மோடிஜி அவர்கள் குறைச்சாங்க... ஆனால் தி.மு.க இப்போ குறைக்கல பார்த்தீங்களா..?

பிரீமியம் ஸ்டோரி

நடக்கும் விஷயங்களையெல்லாம் தங்களுக்கானதா மாற்றி, ‘உங்க ஆட்சிலதான் வெள்ளம் வந்துச்சு’, ‘எங்க ஆட்சிதான் முல்லைப் பெரியாற்றைத் திறந்து விட்டுச்சு’, ‘நாங்க அதைச் செஞ்சோம்... நீங்க அதைச் செஞ்சீங்களா’ எனச் சண்டை போடும் நம்மூர் அரசியல்வாதிகள், இங்கே நடக்கிறதை வெச்சு இப்படியும் சொல்லலாம் எனச் சில யோசனைகள்... (சொன்னாலும் சொல்வாங்க!)

செய்தீர்களா நீங்கள் செய்தீர்களா?

* ‘பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா'ன்னு எத்தனையோ விழாக்களை நடத்துன நீங்க தோனிக்கு ஒரு பாராட்டுவிழாவை நடத்துனீங்களா..? ஐ.பி.எல்ல கப் அடிச்ச சி.எஸ்கேக்கு ஒரு பாராட்டுவிழாவை அன்னிக்கே நடத்தியிருந்தா உலகக் கோப்பைல நாம தோல்வி அடைஞ்சிருக்க மாட்டோம். எனது தலைமையிலான மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியிலதான் தோனிக்கு ஐ.பி.எல் வெற்றிக்கு முன்பே வெண்கலச் சிலை வைக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூலம் டெண்டர் விடப்பட்டது. ஆட்சி மாறியவுடன் புயலிலே ஒரு தோணியாய் கரை ஒதுங்கிய தோனிக்கு இன்றைக்கு மகத்தான தோல்வி கண்டபிறகு பாராட்டுவிழா நடத்துகிறார் மு.க.ஸ்டாலின். இதெல்லாம் ரொம்பத் தவறுங்க' என்று அறிக்கை விடலாம் எடப்பாடி. விளையாட்டுப்புள்ளையாச்சே!

செய்தீர்களா நீங்கள் செய்தீர்களா?

* ‘பெட்ரோல் விலையை தீபாவளிப் பரிசாய் மாண்புமிகு பாரதப்பிரதமர் மோடிஜி அவர்கள் குறைச்சாங்க... ஆனால் தி.மு.க இப்போ குறைக்கல பார்த்தீங்களா..? முன்னாடிலாம் ட்விட்டர்லயும் மீடியாலயும் ஆக்டிவா இருந்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை இப்பல்லாம் பார்க்க முடியிறதில்லை பார்த்தீங்களா? அத்தனை வாட்ச் கட்டியிருந்தும் வெளில வர நேரமில்லையா? ஆக, தி.மு.க அரசு பெட்ரோல் விலையைக் குறைக்கச் சொல்லிப் போராட்டம் வெடிக்கும். ஒருவேளை போராட்டக் காலத்தில் மத்திய அரசு பெட்ரோல் கேஸ் விலையை ஏற்றும் பட்சத்தில் ட்ரில்லியன் எக்கானமி... எம்.ஏ... பிலாசபி பிலாசபி என விதம்விதமா முட்டுக்கொடுக்கப்படும்!' என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கை தட்டலாம்..! கிடுகிடுத்துப் போகும் தி.மு.க.

செய்தீர்களா நீங்கள் செய்தீர்களா?

* ‘உங்க ஆட்சியில சந்தானத்தோடு ஈவ்டீசிங் படங்கள்ல நடிச்சு விளையாட்டு ஹீரோவா மாறி இருந்தார் தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளராகிய திரு உதயநிதி ஸ்டாலின். ஆனால், விடியல் ஆட்சியில்தான் ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற சமூக அக்கறையுள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆட்சி மாறியவுடன்தான் சமூக நீதிப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது. இது விடியல் ஆட்சியின் மகத்தான சாதனை!' என்று தி.மு.கவின் ஐ.டி விங் செய்தி வெளியிடவும் வாய்ப்பிருக்கு! ‘எங்க ஆட்சியிலதான் டாக்டர் படம் 100 கோடி வசூலிச்சிருக்கு!', ‘விடியல் ஆட்சியில்தான் வலிமை அப்டேட்டும் கிடைச்சிருக்கு!' என கடைத்தேங்காயை எடுத்தும் உடைக்கலாம்.

செய்தீர்களா நீங்கள் செய்தீர்களா?

* ‘வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு...’ என மாநாடு டிரைலரில் சொல்லும் நண்பர் எஸ்.ஜே.சூர்யாவைப் பார்த்தபோது ஈழத்தில் நான் போர்க்களத்தில் பயிற்சி பெற்ற சம்பவங்கள் நிழலாடுகின்றன. போர்முனையில் தம்பிமார்கள் உயிரைக் கொடுத்துப் போர் புரியும் முன் முல்லைக் காட்டினில் மான் வேட்டையாடிப் பயிற்சியெடுத்தார்கள். என் தினவெடுத்த தோள்களில் நானும் துப்பாக்கி ஏந்தினேன். விளையாட்டாய் நான் சிங்களவனை மனதில் நினைத்து மானுக்குக் குறிவைத்துச் சுடுவதைப் பார்த்து வியந்த அண்ணன் எனக்கு அந்த மானையே விருந்து கொடுத்து மகிழ்ந்தார். பதிலுக்கு `நல்லி எலும்பை அப்படி சாப்பிடக்கூடாதுண்ணே!' என மாவீரனுக்கே எலும்பு கடிக்கச் சொல்லிக் கொடுத்தேன். ‘வந்தான் தின்றான் சென்றான் வென்றான்!' என பொட்டு அம்மான் என்னை மாவீரர் முன் பகடி செய்வார். ‘அப்புறம் கடைசில என்னாச்சு?' என்று நாம் கேட்டால், ‘கடைசில பிரியாணி!' என்று சொல்லி டிரேட் மார்க் ‘புஹுஹா' சிரிப்பைச் சிரிப்பார் சீமான். நடக்க வாய்ப்பிருக்கு ராஜா!

* ‘எங்கள் ஆட்சியில் மழைநீர் வடிகால் சரியாக அமைக்கவில்லை என்று குறைப்பட்டுக் கொள்ளுகிறது தி.மு.க அரசு. சென்னையில் மட்டுமா மழை கொட்டுகிறது? கன்னியாகுமரிவரை மழை பொளந்து கட்டுகிறதே..! இதற்கெல்லாம் யார் காரணம் தெரியுமா? நாங்களேதான். ஆம். பத்தாண்டுகளுக்கு முன் தி.மு.கவின் கற்கால ஆட்சியில் மின்சாரமும் இல்லை... பல இடங்களில் குடிநீரும் இல்லை. சென்னைக்கே பக்கத்து ஊர்களில் இருந்து நீரைக் கொண்டுவந்து கொடுக்க வேண்டியிருந்தது. எங்கள் பொற்கால ஆட்சியான கடந்த பத்தாண்டுகளில் பத்துக் கோடி மரங்களை மாண்புமிகு அம்மாவின் ஆட்சியிலே நட்டு வளர்த்திருக்கிறோம். அத்தனையும் வளர்ந்தபிறகு தமிழ்நாடே பசுமைக்காடாய் மாறிவிட்டது. மரங்கள் அதிகமானால் மேகக்கூட்டங்கள் வரத்தானே செய்யும். மழை அங்கு பெய்யத்தானே செய்யும். எங்கள் ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்ததைப்போல கானகமிகை மாநிலமாக மாறிவிட்டது. அதனால்தான் காட்டுக்குள் இருப்பதாய் நினைத்து ஊருக்குள் வந்தது T23 புலி. இத்தனை மழை பெய்யும் எனத் தெரிந்திருந்தால் அளவோடு நட்டிருப்போம். இப்போதாவது இந்தத் தூங்குமூஞ்சி அரசு விழித்துக்கொண்டு மழைநீரைச் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்வார்களா?' என்று ஓ.பி.எஸ் ஒரு அறிக்கையைத் தட்டி விடலாம். இது நல்லாருக்கே!

செய்தீர்களா நீங்கள் செய்தீர்களா?

* ‘எங்களுக்கு வடக்கே மாட்டுச் சாணத்தைத் தின்னும் டாக்டரைக் கலாய்ப்பதும் புரிகிறது. அண்ணாமலை அவர்களின் படகுச் சவாரியைக் கேலி செய்வதும் புரிகிறது. ஆனால் அந்த வீடியோக்களை எதில் பார்த்தீர்கள், செல்போனில்தானே?! தங்கு தடையில்லா இணையவசதியும், செல்போன் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும்தான் மோடிஜியின் ஆட்சியில் அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது. கடந்த 6 வருடங்களில் செல்போன் விற்பனையை யோசித்துப் பாருங்கள். ஓ.டி.டியின் வளர்ச்சியினை நினைத்துப் பாருங்கள். பெரும்பாலான திரைப்படங்களை மொபைலில் பார்த்துவிடுகிறீர்கள். இதைவிட ஒரு புரட்சியை யார் தருவார்? சீரியல்களையேகூட ஆப்களில் பார்த்துவிடலாம்தானே! உள்ளங்கையில் உலக சினிமா. கீபோர்டில் உய்யலாலா..!எனவே மோடிஜி கொண்டுவரும் ‘யோஜனா'க்களைக் கண்களை மூடிக் கைதட்டி வரவேற்போம்!' - இப்படி நாராயணன் திருப்பதிக்கள், கரு.நாகராஜன்கள் சேனல்களில் அனத்தலாம். ஒரே சிரிப்பா இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு