சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஒண்ணு கூடிட்டாய்ங்கய்யா!

ஒண்ணு கூடிட்டாய்ங்கய்யா!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒண்ணு கூடிட்டாய்ங்கய்யா!

ஓவியங்கள்: செந்து

கோயில் குடமுழுக்கோ, கொண்டாட்டமான கல்யாணமோ, புதுப்பட அறிவிப்போ, பழைய பட ரீமிக்ஸோ, வைகைப்புயல் ரெஃபரென்ஸ் இல்லாத ஐட்டங்களே தமிழர்களின் நாட்காட்டியில் இல்லை என்கிற நிலைமைதான். இந்தப் பேரிடர்க் காலத்தில் வடிவேலுவின் பெஞ்ச்மார்க் கேரக்டர்கள் எங்கெங்கே என்னென்ன செய்துகொண்டிருப்பார்கள்?

கைப்புள்ள: சும்மாவே கதவுக்கு முட்டுக்கொடுத்து விட்டத்தை வெறித்தபடி படுத்துக்கிடக்கும் இவருக்கு லாக்டௌன் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? என்ன, வம்பிழுக்க ஆளில்லாமல் பழக்கதோஷத்தில் திருவிழா நடக்கும் மந்தைப்பக்கம் நடையைப் போட்டிருப்பார். ட்ரோன் கேமராவில் அதைப் படம்பிடிக்கும் மாண்புமிகு காவல்துறை அவரைப் போட்டுப் பொரட்டி எடுத்திருக்கும். வெளியே போய்வந்த பாவத்துக்கு கட்டத்துரையின் மாட்டுத் தொழுவத்திலேயே அவரைக் க்வாரன்டீன் செய்திருப்பார்கள்.

வக்கீல் வண்டுமுருகன்: அத்தியாசியத் தேவை என ஸ்டிக்கர் ஒட்டியபடி வானகரம், மெரினா, காசிமேடு, புழல் என மீன் வாங்க வெளியே சுற்றிக்கொண்டிருந்தவரை கப்பெனப் பிடித்திருப்பார்கள் ட்ராபிக் போலீஸார். ‘‘மீன் பிடி தடைக்காலமாம் பாஸ். இந்தத் தடவையும் ஜாமீன் கஷ்டம்தான்’’ எனப் பொறுப்பாக வந்து பதில் சொல்லியிருப்பார் அல்வா வாசு.

ஒண்ணு கூடிட்டாய்ங்கய்யா!

கான்ட்ராக்டர் நேசமணி: பல்லாண்டுக் காலமாக உருட்டிக்கொண்டிருக்கும் வேளச்சேரிப் பாலத்துக்கு வெள்ளையடிப்பது, நேரு ஸ்டேடியத்தில் லைட் செட் மாட்டுவது உள்ளிட்ட கான்ட்ராக்ட்டுகளைக் கையில் காலில் விழுந்து வாங்கியிருப்பார் நேசமணி. ‘இவரு கான்ட்ராக்டரா பார்ம் ஆனதே பா.ஜ.க-ல இருக்குற ராதாரவி வீட்டுக்கு வெள்ளையடிச்சுதான்’ என கூடவே இருக்கும் கோவாலு கொளுத்திப்போட இப்போதைய அரசு அத்தனை கான்ட்ராக்டுகளையும் கேன்சல் செய்திருக்கும்.

வீரபாகு: கணபதி ஐயரிடம் எழுதி வாங்கிய பேக்கரி இந்த லாக்டௌனில் மூடியே கிடந்ததால் கொஞ்சம் பணமுடையில் இருக்கிறார். அதனால் கணபதி ஐயரிடமே போய் அக்கா கழுத்தில் போட்டிருக்கும் ரெண்டு பவுன் சங்கிலியையோ தருமாறு டீலிங் பேசியிருக்கிறார். `நீ பேக்கரி நடத்துற லட்சணத்துக்கு ஒழுங்கா அதை நான்தான் திரும்ப வாங்கணும்’ என கணபதி கட் அண்ட் ரைட்டாய் சொல்லிவிட்டார். பட் அந்த டீலிங் வீரபாகுக்குப் பிடிக்கவில்லை!

ஒண்ணு கூடிட்டாய்ங்கய்யா!

படித்துறை பாண்டி: ஊரடங்கில் பூட்டிய யாரோ ஒருவரின் டீக்கடை முன் கடை விரித்து ‘தம் டீ கும் டீ... தம் டீ கும் டீ’ என டோக்கன் போட்டுக்கொண்டிருந்தார். ‘யோவ்... டோக்கன் மட்டுமே போட்டுக்கிட்டு இருக்க, டீயைக் கொடுய்யா!’ என்பவர்களிடம், ‘அட சட்டு சட்டுன்னு கேக்காதீங்க. டோக்கனைக் கணக்குப் போட்டுத்தானே டீ போடணும்’ எனச் சொல்லி ஷட்டரைத் திறந்து பின்வாசல் வழியாக எஸ்கேப் ஆகிவிடுவார். ‘ஒயின்ஷாப்ல ஏமாந்தா பரவாயில்ல, டீக்கடைல எல்லாம் ஏமாந்ததா சொன்னா கேவலமாச்சே’ எனப் புலம்பியபடி யாரும் கேஸ் கொடுக்காததால் ஒவ்வொரு டீக்கடையாக ஜாகை மாற்றி கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் பாண்டி.

பிச்சுமணி: அம்மா ஆட்சியின் போது அரசு வேலை பெற்ற பிச்சுமணிக்கு இப்போது 18 வருட சர்வீஸ். ஒரு சின்னக் கூட்டத்திற்கு நடுவே மணியடித்துக் கொண்டிருந்தவருக்கு தளபதி ஆட்சியில் பதவியுயர்வு கிடைத்திருக்கும்.

ஒண்ணு கூடிட்டாய்ங்கய்யா!

தீப்பொறி திருமுகம்: வேக்சின் வடிவேலு, சானிட்டைசர் சண்முகம், கோவாக்‌சின் கோவாலு, பேண்டமிக் பழனிசாமி, கோவிட் கோவிந்தன் என ரைமிங்காய் பெயரையும் கெட்டப்பையும் மாற்றிக்கொண்டு ‘லாலே லாலல லாலா...ஓ..!’ என புள்ளிங்களோடு டியோ பைக்கில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஊர்சுற்றிய நேரம்போக அக்கா மகளின் குழந்தைகளுக்கு பொறுப்பான தாய்மாமாவாக ஆன்லைன் க்ளாசுக்கு டேட்டா ரீசார்ஜ் பண்ணிக்கொடுக்கிறார்.

நாய் சேகர்: ‘எனக்கு எண்டு கார்டே இல்லைடா!’ என எகத்தாளமாய் சென்னையில் வந்து இறங்கியவர், அக்கம்பக்கம் விசாரித்து பொடிநடையாய் நடந்தே ஈ.வி.பி ஸ்டூடியோ வரை வந்துவிட்டார். அவர் நேரத்திற்கு சரியாய் லாக்டௌன் போட்டுவிட, த்ரிஷாவும் நயன்தாராவுமே வேலை இல்லாமல் வீட்டில் முடங்கிவிட்டார்கள். ‘சரி எப்படியும் ஒருநாள் லாக்டௌன் எடுத்துத்தானே ஆகணும், அன்னிக்கு அவங்க இந்தப்பக்கம் வந்துதானே ஆகணும்’ என ஸ்டூடியோ வாசலிலேயே பட்டறையைப் போட்டு அமர்ந்திருக்கிறார் மிஸ்டர் நாய் சேகர்.

ஸ்டைல் பாண்டி: ஊரடங்கிலும் அடங்காமல் திருடக் கிளம்பிவிட்டார். பூட்டிய வீட்டுக்குள் ஆட்டையைப் போடலாம் என நினைத்து, ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கியவரை லாக்டௌனில் WWF அண்டர்டேக்கராய் உருமாறிக்கொண்டிருந்த குடும்பத்திடம் சிக்கிவிட்டார். ஃபேமிலியே சேர்ந்து அவரிடம் ரெஸ்லிங் பழகியதால், இப்போது சித்தம் கலங்கித் திரிகிறார்.

ஒண்ணு கூடிட்டாய்ங்கய்யா!

ஸ்நேக் பாபு: கடைசியாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவர் வார்டில் மட்டும் தேர்தல் நடக்காததால் வேறுவழியே இல்லாமல் ‘மக்களின் கவுன்சிலர்’ என்கிற அடைமொழியோடு கொரோனாத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். ‘பாய்சனே எனக்குப் பாயசம் மாதிரி!’ என முகக்கவசமே அணியாமல் ஊர்சுற்றும் ஸ்நேக் பாபுவைப் பார்த்து உருமாறிய கொரோனாவே குழம்பிப்போயிருக்கிறதாம். அப்படியே தப்பித் தவறி அவரை கொரோனா பிடித்தாலும், ‘அப்படி எதுடா செல்லம் உன்னை ஹெவியா லைக் பண்ண வச்சது?’ எனக் கேள்விகேட்டே சாவடிப்பதால் தெறித்து ஓடுகிறது கொரோனா.

பாடிசோடா: கொரோனாவில் கராத்தே க்ளாஸ் மூடப்பட்டதால் நொந்து நூடுல்ஸ் ஆனவர் ஸ்விக்கி டெலிவரி பாயாய் மாறியிருக்கிறார். ஜூடோ தெரிந்தவரை ஜூஸ் டெலிவரி செய்யவைத்து சத்திய சோதனை செய்கிறது கொரோனா. ‘ஸ்டேட் கவர்ன்மென்ட், சென்ட்ரல் கவர்ன்மென்ட்... போத் ப்ளேயிடு பேஸ்கட்பால் இன் மை லைஃப்... சங்கி மங்கி...அடங்கோ!’ எனத் திட்டிக்கொண்டே சிக்கன் ஃப்ரைடு ரைஸ், சிக்கன் நூடுல்ஸ்களை சின்ஸியராய் ஹோம் டெலிவரி பண்ணிக் கொண்டிருக்கிறார்.

சூனா பானா: ஊரடங்கில் ஆல்கஹால் கிடைக்காமல் நாக்கு நமநமத்து அல்லாடி கடைசியில், ‘இந்த சூனாபானாவுக்கு எதுவும் பண்ணாது’ என சானிட் டைசரை எடுத்துக் குடித்தி ருக்கிறார். போன லாக்டௌ னிலிருந்தே இதை நியூ நார்மலாக வைத்திருப்பதால் உடம்பு அதற்கும் பழகி போதை தராமல் ஏமாற்றியிருக்கிறது. கைநடுக்கம் தாங்காமல் சென்ட் பாட்டிலை எல்லாம் எடுத்து வாய்க்குள் ஸ்பிரே செய்து ‘என்னடா தொண்டையக் கவ்வுது?’ எனப் பதறி இப்போது ஐ.சி.யூவில் வாயும் வயித்தாலயுமாக அட்மிட் ஆகியிருக்கிறார்.