Published:Updated:

பராசக்தி பன்னீர்செல்வம்!

பன்னீர்செல்வம்!
பிரீமியம் ஸ்டோரி
பன்னீர்செல்வம்!

நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்! ‘ஒருங்கிணைப்பாளர் பதவி போய்விடும்' என்ற சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருக்கிறது.

பராசக்தி பன்னீர்செல்வம்!

நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்! ‘ஒருங்கிணைப்பாளர் பதவி போய்விடும்' என்ற சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருக்கிறது.

Published:Updated:
பன்னீர்செல்வம்!
பிரீமியம் ஸ்டோரி
பன்னீர்செல்வம்!

`இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. புதுமையான ஒருங்கிணைப்பாளர்களைக் கண்டிருக்கிறது.

ஆனால், இந்த வழக்கு விசித்திரமும் அல்ல, வழக்காடும் நானும் புதுமையான ஒருங்கிணைப்பாளர் அல்ல! மெரினா பீச் பாதையிலே சர்வ சாதாரணமாகத் தென்படக்கூடிய ஒரு தியானப்பிரியன்தான் நான்.

அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலே கலவரத்தை விளைவித்தேன்... ஈ.பி.எஸ் ஆதரவாளர்களைத் தாக்கினேன்... குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்!

நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேனென்று! இல்லை, நிச்சயமாக இல்லை.

அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலே கலவரத்தை விளைவித்தேன்... அ.தி.மு.க தலைமை அலுவலகம் கூடாது என்பதற்காக அல்ல, தலைமை அலுவலகம் கொடியவரின் கூடாரமாய் இருக்கக்கூடாதென்பதற்காக!

இ.பி.எஸ் ஆதரவாளர்களைத் தாக்கினேன்... அவர்கள் இ.பி.எஸ் அணி என்பதற்காக அல்ல, நிரந்தரப் பொதுச்செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு, புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மாமீதான பக்தி பகல் வேஷமாய் ஆகிவிட்டதைக் கண்டிப்பதற்காக!

‘உனக்கேன் இவ்வளவு அக்கறை... அ.தி.மு.க-விலே யாருக்கும் இல்லாத அக்கறை!' என்று கேட்பீர்கள்.

நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்! ‘ஒருங்கிணைப்பாளர் பதவி போய்விடும்' என்ற சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருக்கிறது. அடிக்கடி யார் காலிலாவது விழுந்து தரையைச் சுத்தப்படுத்துகிறோமே, அதைப்போல!

பராசக்தி பன்னீர்செல்வம்!

என்னை ‘துரோகி’, ‘துரோகி' என்கிறார்களே, இந்த துரோகியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்நோக்கி 90 டிகிரியில் குனிந்து வணக்கம் வைத்தபடியே நடந்து பார்த்தால்... அவன் விழுந்து வணங்கிக் கடந்து வந்துள்ள (சின்ன) அம்மாக்களின் கால்கள் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க முடியும்.

நத்தம் விஸ்வநாதன்களும் கே.பி.முனுசாமிகளும் சி.வி.சண்முகங்களும் இல்லை என் பாதையில்! பாக்சிங் செய்யும் ஜெயக்குமார்கள் நெளிந்திருக்கிறார்கள்.

‘ஒற்றைத் தலைமை'யைத் தீண்டியதில்லை நான்... முதலமைச்சர் பதவியைத் தாண்டியிருக்கிறேன்!

கேளுங்கள் என் கதையை... தீர்ப்பெழுதுவதற்கு முன் தயவுசெய்து கேளுங்கள்!

தமிழ்நாட்டிலே, இந்தத் தேனியிலே பிறந்தவன் நான். டீ விற்றவர்கள் ஆட்சியைப் பிடிக்கும் வழக்கத்திற்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா?

பெரியகுளம் என்னை நகரமன்றத் தலைவராக்கியது... எம்.எல்.ஏ ஆக்கியது... சிறிது காலம் முதலமைச்சராகக்கூட ஆக்கியது.

நெடுஞ்சாலைத் துறை ஊழல் வழக்கிலே குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக் கூண்டிலே உங்கள் முன்னால் நிற்கிறாரே இதோ இந்தச் சேலத்து எடப்பாடி... இவரின் வலையிலே வீழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.

முதலமைச்சர் பதவியைப் பறிகொடுத்தேன்... எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிகொடுத்தேன்... ஒருங்கிணைப்பாளர் பதவியைப் பறிகொடுத்தேன்... பொருளாளர் பதவியையும் பறிக்கொடுத்தேன்!

பதவியே இல்லாமல் திரிந்தேன்... மெலிந்தேன்... கடைசியில் சின்னம்மாவின் முழுநேர ஆதரவாளராக மாறினேன்!

காண வந்த சின்னம்மாவைக் கண்டேன், கண்ணற்ற ஓவியமாக! ஆம், ஒரு A2-வாக! சின்னம்மாவின் பெயரோ சசிகலா... தலைமைகரமான பெயர். ஆனால், தலைமை தாங்கவோ கட்சி இல்லை!

செழித்து வாழ்ந்த மாஃபியா சீரழிந்துவிட்டது. கையிலே தினகரன், கண்ணிலே திவாகரன்... சின்னம்மா அலைந்தார். சின்னம்மாவுக்காக நான் அலைந்தேன்.

சின்னம்மா அணிக்குக் கருணை காட்டினார்கள் பலர். அவர்களிலே இ.பி.எஸ் ஆதரவாளர்கள் சிலர், கைம்மாறாக ஒற்றைத் தலைமையையே மீண்டும் கேட்டனர்.

தி.மு.க தொண்டரைத் தாக்கிய வழக்கிலே கைதானாரே இதோ இந்த பாக்சர் ஜெயக்குமார். இவர், ‘‘சசிகலாவுக்கு அ.தி.மு.க-வில் எப்போதுமே இடம் கிடையாது'' என்றார். நான் தடுத்திராவிட்டால் எங்கள் சின்னம்மா அப்போதே அ.தி.மு.க-வைப் பிரித்துத் தனிக்கட்சி ஆரம்பித்திருப்பார்.

மெரினாவிலிருந்து திரும்பிய ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு ஒருங்கிணைப்பாளராக வாழ வழியில்லை. மன்னார்குடியிலே பிறந்த ஒரு பெண்ணுக்கு கட்சியில் சேரக்கூட ஒரு ஆதரவில்லை.

எங்கள் சசிகலா ஆதரவு அணி மட்டும் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஒரு நாள்... இரட்டைத் தலைமையை விலை கூறியிருந்தால், துணைப் பொதுச்செயலாளராக ஒரு நாள்... இப்படி ஓட்டியிருக்கலாம் நாள்களை! இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?

‘ஒற்றைத் தலைமைதான் ஒரே தீர்வு' என்ற பகட்டு எங்கள் சின்னம்மா அணியைத் துரத்தியது... பயந்து ஓடினோம்.

‘துரோகி’ பட்டம், ‘தி.மு.க பி-டீம்’ பட்டம் எங்களைத் துரத்தியது... மீண்டும் ஓடினோம்.

பொதுக்குழுத் தீர்மானங்கள் எங்களை பயமுறுத்தின... ஓடினோம்... ஓடினோம்... கமலாலயம் இருக்கும் தெருவின் கடைசி வரை ஓடினோம்.

அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும், எங்களின் பதவி வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும். எங்கள் ஆட்டத்தைத் தீர்மானிக்கும் கமலாலயவாசிகள் செய்தார்களா? ஆள விட்டார்களா எங்கள் சின்னம்மாவை?

வக்கீல் (குறுக்கிட்டு): குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகின்றார்.

இல்லை, யார் வழக்கிற்கும் இல்லை. அதுவும் என் வழக்குதான். எங்கள் சின்னம்மாவின் வழக்கு. சின்னம்மாவின் அதிகாரத்தை அழிக்க எண்ணிய மாபாவிகளுக்கு புத்தி புகட்ட இந்த உண்மைத் தொண்டன் ஓடுவதிலே என்ன தவறு?

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை அ.தி.மு.க இழந்தது ஒரு குற்றம்... இரட்டைத் தலைமை இருக்கும்போது, ‘அ.தி.மு.க மீண்டும் எழ ஒற்றைத் தலைமைதான் தீர்வு' என போஸ்டர்கள் அடித்தது ஒரு குற்றம்... என் அனுமதியை மீறிப் பொதுக்குழுவைக் கூட்டியது ஒரு குற்றம்... இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற பதவியை உருவாக்கியது ஒரு குற்றம்...

இத்தனை குற்றங்களுக்கும் யார் காரணம்? சின்னம்மாவைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிற்குக்கூட வழியில்லாதவராக அலையவிட்டது யார் குற்றம்?

கட்சி விதியின் குற்றமா? அல்லது கட்சி விதியைச் சொல்லி மொத்த மாவட்டச் செயலாளர்களையும் வளைத்த வீணர்களின் குற்றமா?

இப்போது அதிகாரபூர்வ எதிர்க்கட்சிபோலச் செயல்படும் பா.ஜ.க-வை சட்டப்பேரவையில் வளரவிட்டது யார் குற்றம்?

தேர்தல் நேரக் கூட்டணி தர்மத்தின் குற்றமா? அல்லது கொள்கை மறந்து கமலாலயத்தோடு கொஞ்சிக் குலாவிய தலைக் கட்டுகளின் குற்றமா?

ஒற்றைத் தலைமை என்ற துரோகத்தின் பெயரால் அதிகார வேட்டை நடத்தும் போலியான இடைக்காலப் பொதுச் செயலாளரைக் கட்சியிலே நடமாட விட்டது யார் குற்றம்?

இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் குற்றமா? அல்லது இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பெயரைச்சொல்லி அவரின் ‘நிரந்தர பொதுச் செயலாளர்' என்ற பதவியையே நீக்கியவர்களின் குற்றமா?

இந்தக் குற்றங்கள் களையப்படும் வரை பன்னீர்செல்வங்களும் சின்னம்மாக்களும் குறையப் போவதில்லை.

இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.