Published:Updated:

ரி... ரி... ரிப்பீட்டு!

ரி... ரி... ரிப்பீட்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
ரி... ரி... ரிப்பீட்டு!

சினிமால புதுசுபுதுசா நம்ம டைரக்டருங்க கருத்து சொல்லியே ஆகணும்னு கூட்டம்கூட்டமா கான்செப்ட்டோட வர்றாங்க.

நம்ம ஒட்டுமொத்த வாழ்க்கையே ‘வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு!’னு மாநாடு எஸ்.ஜே.சூர்யா டைம் லூப் மோடுலதான் போய்க்கிட்டிருக்கு. ஆகவே மக்களே, இந்த மொத்தக் கட்டுரையையும் அவர் மாடுலேஷன்லயே படித்தால் சிறப்பாக இருக்கும்.

தட்றோம்... தூங்குறோம்... ரிப்பீட்டு!

தினமும் நாம எந்திரிக்கிறோம். அவசர அவசரமா வேலைக்குப் போறோம். ஆபீஸ்ல கம்ப்யூட்டரைத் தட்றோம். சாயங்காலம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுத் தூங்குறோம்...ரிப்பீட்டு! பலவருஷமா இப்படித்தான் டைம் லூப்ல மாட்டினது கணக்கா ஒரே மாதிரி போய்க்கிட்டிருக்கு! இல்லைன்னு சொல்றீங்களா...அப்போ 2கே கிட்ஸ்னா இப்படி மாத்திப் படிங்க... லவ் பண்றான். சண்டை போடறான். பிரேக் அப் ஆகுது. ரிப்பீட்டு. என்னைப்போல ‘90ஸ் கிட்’னா ஆபீஸ்ல திட்டு வாங்குறான். மனைவிகிட்ட திட்டு வாங்குறான். கனவுல திட்டு வாங்குறான். ரிப்பீட்டு... இது ஓகேவா?

ரி... ரி... ரிப்பீட்டு!

வர்றாங்க... அள்ளிவிடுறாங்க...ஜெயிக்கிறாங்க... ரிப்பீட்டு!

அப்புறம் நம்ம அரசியல்வாதிங்க, ‘நாங்க ஆட்சிக்கு வந்தா பெட்ரோல், டீசல், கேஸ் விலையைக் குறைப்போம்’னு தேர்தல் நேரத்துல மைக்போட்டுச் சொல்வாங்க. வீடுதேடி ஓட்டு கேட்டு வருவாங்க. நாமளும் நம்பி ஓட்டு போடுவோம். பெப்பே காட்டிட்டு 5 வருஷத்தை ஓட்டிட்டு மறுபடி வாக்கு கேட்டு நம்ம வீட்டு வாசலுக்கு ‘அம்மா தாயே’ன்னு வந்து நிப்பாங்க...ரிப்பீட்டு இல்ல... நமக்கு ரிவீட்டு!

மறுபடி நியூஸைப் பார்ப்போம். ரத்தம் கொதிப்போம். அப்புறம் சாவகாசமா கொதிக்கலாம்னு சாப்பிட்டுத் தூங்கி எந்திரிச்சா எல்லாம் மறந்துருவோம்.

ரி... ரி... ரிப்பீட்டு!

கருத்து சொல்றான்... காப்பி அடிக்கிறான்...மொக்கை கொடுக்குறான்... ரிப்பீட்டு!

சினிமால புதுசுபுதுசா நம்ம டைரக்டருங்க கருத்து சொல்லியே ஆகணும்னு கூட்டம்கூட்டமா கான்செப்ட்டோட வர்றாங்க. ஒருத்தர் கார்ப்பரேட் அரசியலுக்கு எதிரா விவசாயத்துக்கு ஆதரவா பேச ஆரம்பிச்சார்னா, படமும் சுமாரா ஓடுச்சுனா அம்புட்டுத்தான். பூரா கோடம்பாக்கமும் அதே கான்செப்ட்டோட கதை சொல்ல தண்டவாளத்துல ஏறி கூட்ஸ் வண்டி ஓட்டும். அடிச்சுத் துவைச்சு ‘எங்களை விட்ருங்கடா’ன்னு நாலைஞ்சு ஃப்ளாப் கொடுத்தாதான் அடுத்த கான்செப்ட்டுக்கே போவாங்க. ஒரு சதுரங்க வேட்டை வந்தா போதும், திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் வரை டூத் பேஸ்ட்டைப் பிதுக்குற மாதிரி எடுத்துட்டுதான் ஓய்வாங்க. திரும்ப கோர்ட் டிராமா, ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு ஆதரவுக்குரல்னு இப்ப ஆரம்பிச்சிருக்காங்க. நல்ல விஷயம்தான். ஆனா, கார்ப்பரேட்-விவசாயம்-சீட்டிங்... ரிப்பீட்டுனு மொக்கை பண்ணாம விடமாட்டாங்க!

கம்பேக் கொடுக்குறாங்க... கம்பு சுத்துறாங்க... காணாமப்போறாங்க!

சினிமால சிம்புவும் யுவனும் அடிக்கடி கம்பேக் கொடுக்குறாங்க. அது என்ன மாயமோ மந்திரமோ, ஆனா, கொஞ்சநாள்ல காணாமப்போவாங்க. மறுபடி கம்பேக் கொடுப்பாங்க. ரிப்பீட்டு! அவங்க ஃபேன்ஸுக்கு மட்டும் தட் செத்து செத்து விளையாடுவோமா மொமன்ட் தான்!

ரி... ரி... ரிப்பீட்டு!

ட்வீட் போடுறாரு... ஷூட்டிங் போறாரு... பிரசாரம் பண்றாரு... ரிப்பீட்டு!

வேற யாரு, நம்ம உலக நாயகன்தான். கட்சி ஆரம்பிச்சாரு. ட்விட்டர்ல களமாடுறாரு. ஊர் ஊரா டிராவல் பண்றாரு. பிக்பாஸோ... விக்ரமோ ஈவிபி பிலிம் சிட்டில நாலு நாள் ஷூட்டிங் போறாரு. ரெண்டு நாள் அரசியல் பண்றாரு. ஒருநாள் ரெஸ்ட்டைப் போட்டு ரிப்பீட்டேய்ங்கிறாரு.

அப்புறம் திரும்பவும் முதல்ல இருந்துதான் ட்வீட்டு ரிப்பீட்டு. பாவம் நம்ம ஆண்டவரு, ‘பதினாறு வயதினிலே’ படத்துலயே ‘சந்தைக்குப் போகணும் ஆத்தா வையும் காசு கொடு’ன்னு பரட்டைகிட்ட டைம் லூப் டயலாக் விட்டவராச்சே!

மழை... வெள்ளம்... நிவாரணம்... ரிப்பீட்டு!

தமிழ்நாடே இப்போ மழை வெள்ளத்துல தத்தளிக்குது. ஆளாளுக்குக் கூட்டம் கூட்டமா வெள்ள நிவாரண உதவின்னு கிளம்பி வர்றாங்க. போட்டோ எடுக்குறாங்க. வீடியோ எடுக்குறாங்க. வெள்ளம் வடியுது. அப்புறம் மறுபடி மழை பெய்யுது. வெள்ளம் வருது. அரசியல்வாதிங்க கிளம்பி வர்றாங்க. போட்டோ புடிக்கிறாங்க. வீடியோ எடுக்குறாங்க. மழை நிக்குது. வெள்ளம் வடியுது. ரிப்பீட்டு!

கொரோனா... லாக்டௌன்...தளர்வுகள்... ரிப்பீட்டு!

கொரோனாங்கிற வைரஸ் சீனாவிலிருந்து உலகம்பூரா பரவுது. கொத்துக்கொத்தா சாகுறாங்க. லாக்டௌன் போடுறோம். ஆட்குறைப்பு நடக்குது. சம்பளம் குறையுது. தடுப்பூசி போடுறோம். கொரோனா நிக்குது. மறுபடி கூட்டம்கூட்டமா கடைகளுக்குப் போறோம். திரும்ப இரண்டாம் அலை வருது. ஊரடங்கு போடுறோம். தடுப்பூசி போடுறோம். நம்பர்ஸ் குறையுது. மறுபடி கொரோனா வருது. ரிப்பீட்டு!

ரி... ரி... ரிப்பீட்டு!

சொல்றாங்க... மறக்குறாங்க...

சரி, நம்ம விவிஐபி-கள் என்னெல்லாம் ரிப்பீட்டா பண்றாங்கன்னு பார்ப்போம். மாசாமாசம் கடைசி ஞாயிற்றுக்கிழமைல மோடி வர்றாரு... மன் கி பாத்னு ஒண்ணு பேசுறாரு. காஞ்சிப்பட்டு, திண்டுக்கல் பூட்டு, பாரதியார் பாட்டுன்னு தமிழ்நாட்டு ரெஃபரென்ஸ் எடுத்து உருட்டுறாரு. திரும்ப வேற ரெஃபரென்ஸ்...வேற பாட்டு. வேற உருட்டு. முடியல தலைவரே!

பார்லிமென்ட் பக்கம் போகமாட்டாரு. புதுசா படம் வந்தா கடிதம் எழுதுவாரு. அப்புறம் கவுந்து படுத்துக்குவாரு. ரிப்பீட்டுன்னு விடுகதையாவே வாழ்றாரு நம்ம மாற்றம் ஏமாற்றம் அன்புமணி.

அவங்க அப்பா மருத்துவர் ராமதாஸ் மட்டும் எப்போதும், ‘அன்புமணிக்கு சி.எம் மேக்கப் போட்டு அழகு பாருங்க ஷத்திரிய மக்கா’ன்னு ஆரம்பிப்பார். எலெக்‌ஷன் வந்தா போதும், கூட்டணிக்கு வெய்ட் பண்ணுவார். பேரம் படியுற பக்கம் சாய்வார். கூட்டணியில இருந்துகிட்டே குருவிக்கூட்டுல கல் எறிவார். திரும்ப அன்புமணியை அழகு பார்க்க அறைகூவல் விடுப்பார். இலவச இணைப்பா கட்சிக்காரங்களை மேடைபோட்டுக் கழுவி ஊத்துவார். எத்தன வாட்டி!

அ.தி.மு.க-ல ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் சண்டை இல்லைன்னு சொல்வாங்க. ஆனா, வெளிநடப்பு செய்வாங்க. மறுபடி ஒற்றுமையா கடிதம் எழுதுவாங்க. ராயப்பேட்டை ஆபீஸ்ல ராவடியா சண்டை போட்டுக்குவாங்க. மறுபடி சண்டை இல்லைன்னு சொல்வாங்க. கூட்டு அறிக்கை விடுவாங்க. ரிப்பீட்டு. நடுவுல கூட்டணிக் கட்சியிலிருந்து ஒருத்தர் ஒவ்வொரு செங்கல்லா உருவிட்டு இருக்காரு. அதைக் கண்டுக்கவே மாட்டாங்க!

தி.மு.க-வுல வாரிசு அரசியல் இல்லைன்னு சொல்வாங்க. ஆனா உதயநிதியை அண்ணன்னு சொல்லுவாரு தலைக்கு டை அடிச்ச பருத்த பார்ட்டி ஒருவர். கட்சியில ஜனநாயகம் இருக்குன்னு சொல்வாங்க. ஆனா, உதயநிதிக்கு இப்பவே சலாம் அடிப்பாங்க.

ஆக மொத்தத்துல, அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை ‘வருவோம்... வாயால் வடை சுடுவோம்... வாரிச் சுருட்டுவோம்... ரிப்பீட்டு!’தான் மக்களே!