அரசியல்
அலசல்
Published:Updated:

சிரிப்பு மத்தாப்பு... பொலிட்டீஷியன்ஸ் ‘கலகல’ தீபாவளி!

சிரிப்பு மத்தாப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
சிரிப்பு மத்தாப்பு

இப்போ உனக்கு வெடிச் சத்தம்தானே வேணும்... இந்தா காற்று மாசில்லா இயற்கை வெடிச் சத்தம்..

கொரோனா பேரிடருக்குப் பிறகு, இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடியிருக்கிறார்கள் மக்கள். தற்போதைய அரசியல் சூழலில், நம்முடைய தமிழ்நாடு அரசியல்வாதிகள், அவர்களின் அலுவலகத்தில் வெடி வெடித்துக் தீபாவளி கொண்டாடியிருந்தால் என்னென்ன களேபரங்கள் நடந்திருக்கும்... ஒரு கற்பனை கலகல!

சிரிப்பு மத்தாப்பு... பொலிட்டீஷியன்ஸ் ‘கலகல’ தீபாவளி!

கமலாலயம்

அண்ணாமலை: ‘...ண்ணா இது என்னங்ணா. ஆட்டுப் புழுக்கை மாதிரி இருக்குது. வாடையும் ஒரு மாதிரியா தூக்கலா இருக்கு...

பொன்னார்: சின்ன ஜி... அது பாம்பு மாத்திரை... அதுவும் உங்கள மாதிரிதான்... பத்தவெச்சா புகையா கிளம்பும்... ஆனா கடிக்காது... வெடிக்காது.

கரு.நாகராஜன்: அட சும்மா இருங்க தம்பி... உங்களுக்காக என்ன கொண்டு வந்துருக்கேன் பாருங்க.

அண்ணாமலை: என்னங்ணா சூட்கேஸ் ஷேப்ல இருக்கு?

கரு.நாகராஜன்: அதேதான். அடிக்கடி வெளிநாடு போற உங்களுக்குத் தேவையானதெல்லாம் இந்தப் பெட்டிக்குள்ள இருக்கு. நீங்க ஊர்ல இல்லைன்னாத்தானே எங்களுக்கு தீபாவளி?

அண்ணாமலை: ஓஹோ... கதை அப்படிப் போகுதா!

ஹெச்.ராஜா: தம்பி... வீசுனதுபோக மீதம் இருக்குற இந்த பெட்ரோல் வெடியையெல்லாம் என்ன பண்றது?

அண்ணாமலை: நம்மளோட ஜில்லா நிர்வாகிகளுக்கு கிஃப்டா கொடுத்துடுங்கண்ணே.

வானதி சீனிவாசன்: அப்போ, தேசிய நிர்வாகிகளான எங்களுக்குப் பரிசு இல்லையா?

அண்ணாமலை: கோச்சுக்காதீங்கக்கா, எல்லாருக்குமே தமிழக பா.ஜ.க சார்புல கிஃப்ட் பேக் பண்ணிக்கிட்டு இருக்கோம். மதுவந்திக்கா, அந்த லிஸ்ட்டைப் படிங்க...

மதுவந்தி: மோடி ஜிக்கு - தொட்டதுமே பாதாளத்துக்குப் பாயுற `ரூபாய் வெடி!’ அமித்ஷா ஜிக்கு - ரெண்டா பொளக்குற ஜண்டா வெடி. நிர்மலா ஜிக்கு சிலிண்டர் பாம்... யோகி ஜிக்கு புல்டோசர் பட்டாசு...

சி.பி.ராதாகிருஷ்ணன்: எல்லாரும் வெடிக்குறதை நிப்பாட்டுங்க... ஜி கிட்டருந்து ஒரு அவசரச் செய்தி!

அண்ணாமலை: என்னான்னு...

சி.பி.ராதாகிருஷ்ணன்: இனிமே நாம எல்லாரும் ஒரே மாதிரியான வெடிதான் வெடிக்கணுமாம்.

எம்.ஆர்.காந்தி: ஏனாம்?

சி.பி.ராதாகிருஷ்ணன்: `ஒரே நாடு ஒரே வெடி’ திட்டமாம்!

சிரிப்பு மத்தாப்பு... பொலிட்டீஷியன்ஸ் ‘கலகல’ தீபாவளி!

அறிவாலயம்

ஸ்டாலின்: இது என்னய்யா... இவ்ளோ பெரிய வெடியை சுருட்டிவெச்சுருக்கீங்க?

துரைமுருகன்: பயப்படாதீங்க தலைவரே... சவுண்டு ஒண்ணும் பெருசா கேக்காது. எல்லாம் கடந்தகாலத்துல நீங்க பேசுன துண்டுச்சீட்டுக் குறிப்புகள்தான். எல்லாத்தையும் சேர்த்து சுருட்டி, இந்த வெடியை நானே உங்களுக்காக ஸ்பெஷலா பண்ணினேன். நீங்க மீண்டும் கட்சித் தலைவரானதுக்கு என்னோட சர்ப்ரைஸ் கிஃப்ட்.... ஹிஹி!

பொன்முடி: தளபதி நானும் உங்களுக்காக ஒரு வெடி ரெடி பண்ணியிருக்கேன்.

ஸ்டாலின்: ஐயய்யோ... நீங்க ஏற்கெனவே வெடிச்ச `ஓசி’ ஓலைப்பட்டாசு சத்தமே இன்னும் காதுக்குள்ள குய்யிங்குது... போதும் சாமி, முதல்ல இடத்தைக் காலி பண்ணுங்க.

மாப்பிள்ளை: மாமா... இந்தாங்க மத்தாப்பு. நம்பிப் பிடிங்க... `பவரா’ எரியும்.

ஸ்டாலின்: மத்தவங்க கொடுக்குற அணுகுண்டைக்கூட வெடிச்சுடுவேன். ஆனா, நீங்க கொடுக்குற மத்-ஆப்புதான் கையைச் சுட்டுக்குமோன்னு பயமா இருக்கு மாப்ளை!

எ.வ. வேலு: எதிர்பார்த்த பதவியத்தான் கொடுக்கல, எனக்கொரு வெடியாச்சும் கிடைக்குமா தலைவரே?

டி.ஆர்.பாலு: இந்தாங்க `பல்டி வெடி’. நீங்க கொளுத்துனா எட்டுவழிச் சாலையில அந்தர் பல்டியே அடிக்கும்!

கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ஆ.ராசா, கே.என்.நேரு ஆகியோர் போட்டி போட்டு விட்ட ராக்கெட் வெடிகள் தன் நாற்காலியை நோக்கிப் பாய பதற்றமாகிறார் ஸ்டாலின். இன்னொரு பக்கம் சின்னவர் உதயநிதி `செங்கல் வெடி வெடிக்க’, மா.சு ஊசிவெடி ரெடி பண்ண, தங்கம் தென்னரசு `பேனா வெடி’ வைக்க இடம் தேட... அறிவாலயத்தில் புலம்பலும் புகையுமாக `விடுமுறை’ தினக் கொண்டாட்டம் களைகட்டியது!

சிரிப்பு மத்தாப்பு... பொலிட்டீஷியன்ஸ் ‘கலகல’ தீபாவளி!

எம்.ஜி.ஆர் மாளிகை

இ.பி.எஸ் அணி:

இ.பி.எஸ்: கட்சியில எல்லாரும் இனி `சிங்கிள் ஷாட்’தான் வெடிக்கணும். நோ ‘டபிள் ஷாட்.’

கே.பி.முனுசாமி: எடப்பாடியாரே... துணைக்கு ஊதுவத்தியை நானும் ஒரு கை பிடிச்சுக்கவா?

இ.பி.எஸ்: ஒண்ணும் வேணாம் `ஒற்றை’ ஆளா நானே வெடிச்சுக்குறேன்... நீங்க போய் திரியைக் கிள்ளுங்க.

ஆர்.பி.உதயகுமார்: ராஜூ அண்ணே... ஏன் ராக்கெட்ல தெர்மாகோலை கட்டிக்கிட்டு இருக்கீங்க?

செல்லூர் ராஜூ: ஏற்கெனவே `அமேசான்’ படலத்துல ஓட்டை விழுந்துடுச்சாம். அதை அடைக்கத்தான் தெர்மாகோலை அனுப்புறேன்... எப்புடி நம்ம ஐடியா!

இ.பி.எஸ்: ஒங்களையெல்லாம் கூட வெச்சுக்கிட்டு...

சிரிப்பு மத்தாப்பு... பொலிட்டீஷியன்ஸ் ‘கலகல’ தீபாவளி!

ஓ.பி.எஸ் அணி

வைத்திலிங்கம்: ஏன் தலைவரே, ஒத்தையா வெடிக்கிற பிஜிலி வெடியெல்லாம் ரெண்டு ரெண்டா கட்டிவெச்சு வெடிச்சுக்கிட்டு இருக்கீங்க?

ஓ.பி.எஸ்: நமது சின்னம் `இரட்டை இலை’; நமது நோக்கம் `இரட்டைத் தலைமை’ அதனால ஒட்டவெக்க முடியாததை கட்டிவெச்சு வெடிக்கிறேன் அண்ணே.

மைத்ரேயன்: ஆனா, நமக்கு `மத்தியில்’ ஒரே தலைமைதானே தலைவரே..!

மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் இருவரும் ஓடி ஓடி ஓ.பி.எஸ் -ஸுக்கு உதவ, பண்ருட்டி ராமச்சந்திரன், மைத்ரேயன் போன்றோர், ’எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு வெடி போடணும்?’ என்று சும்மா வேடிக்கை பார்க்கிறார்கள்.

சிரிப்பு மத்தாப்பு... பொலிட்டீஷியன்ஸ் ‘கலகல’ தீபாவளி!

மன்னார்குடி அணி

சசிகலா: நாம யாருக்கு, என்ன தீங்கு செய்தோம். நமக்கு மட்டும் ஏன் கால்வெக்கிற இடமெல்லாம் கண்ணி வெடியாக வெடிக்குது?

டிடிவி: சித்தி, அந்தக் காலத்துல நாம பத்த வெச்ச வேட்டெல்லாம் நம்ம பக்கமே திரும்பி வருது.

திவாகரன்: அந்தக் கண்ணிவெடியே டிடிவி-தானேக்கா.... நீங்க ஆன்மிக யாத்திரை போயும்கூட மேல இருக்குற `ஆண்டவன்’ மனசுவெக்கலையேக்கா.

சசிகலா: நேரம் ஆச்சு... உள்ள போறதுக்குள்ள ஏதாவது நல்ல வெடியா கொடுங்கப்பா...

டிடிவி: `கம்பிக்கட்டு’ வேணுமா... `புஸ்வாணம்’ வேணுமா சித்தி?

சசிகலா: நான் வாசல்லருந்து வீட்டுக்குள்ள போறதைப் பத்திச் சொன்னேன். எப்போடானு காத்திருக்க... நரிகள் சூழ் உலகு!

சிரிப்பு மத்தாப்பு... பொலிட்டீஷியன்ஸ் ‘கலகல’ தீபாவளி!

சத்தியமூர்த்தி பவன்

திருநாவுக்கரசர்: என்னங்க... வாசல்ல இவ்ளோ பெரிய கன்டெய்னர் லாரி நிக்குது?

கே.எஸ்.அழகிரி: நம்ம ராகுல் தம்பி, பாரத் ஜோடோ நடைப்பயணம் போகுறாருல்ல... போற இடமெல்லாம் நடந்துக்கிட்டே வெடிக்க 10,000 கோடி வாலா பட்டாசு தயார் பண்ணி கொண்டுபோகப்போறோம்.

ஜோதிமணி: நானும் எம்.பி., ராகுல் ஜியும் எம்.பி. சோ... ஊதுவத்தி நான் கொடுத்தாத்தான் நல்லாருக்கும்.

கார்த்தி சிதம்பரம்: அப்போ நாங்க மட்டும் யாராம்?

ஜோதிமணி: நீங்கல்லாம் ஜி-23 அதிருப்தி அணி... வேணும்னா சசி தரூருக்குப் போய்க் கொடுங்க!

கே.எஸ்.அழகிரி: நான்தான் மாநிலத் தலைவர், நான்தான் கொடுப்பேன்.

இறுதியில், 10,000 கோடி வாலா, `பிஜிலி’ வெடியாக ஆளுக்கொன்றை கையில் தூக்கிக்கொண்டு ராகுல் ஜியை நோக்கி ஓட்டமெடுக்கிறார்கள்.

சிரிப்பு மத்தாப்பு... பொலிட்டீஷியன்ஸ் ‘கலகல’ தீபாவளி!

இராவணன் குடில்

இடும்பாவனம்: அண்ணே... ‘இன்னைக்கு நம்ம முப்பாட்டன் நரகாசூரனோட நினைவுநாள்... துக்க நாளை வெடி வெடிச்சு கொண்டாட வேண்டாம்’னு நீங்க பாட்டுக்கு சொல்லிட்டீங்க? ஆனா, `எல்லா கட்சி அலுவலகத்துலயும் ஜோரா வேட்டுச் சத்தம் கேட்குது, நம்ம அலுவலகம் மட்டும்தான் வெறிச் சோடிக் கிடக்குது’னு தம்பி, தங்கைங்க வருத்தப்படுறாங்க.

சீமான்: அதுக்கு..?

இடும்பாவனம்: இந்த தடவையாவது உங்களோட ஏ.கே 74 எடுத்து கொஞ்சம் சுட்டீங் கன்னா..? வேட்டுச் சத்தம் கேட்டு எல்லாரும் குஷி ஆகிடுவாங்க.

சீமான்: அது நம்ம சுற்றுச்சூழலுக்கு கேடு தரும்னுதானப்பா `சரக்கு அறை’யில போட்டு பூட்டி வெச்சிருக்கேன்.

ஹூமாயூன்: எதே சரக்கா..?

சாட்டை துரைமுருகன்: `ஸ்டோர் ரூமை’த்தான் அண்ணன் தூய தமிழ்ல சரக்கு அறைனு சொல்றாப்டி...

இடும்பாவனம்: சரி... அதை விடுங்கண்ணே... இப்போ வெடிச் சத்தத்துக்கு என்னதான் பண்றது?

சீமான்: இப்போ உனக்கு வெடிச் சத்தம்தானே வேணும்... இந்தா காற்று மாசில்லா இயற்கை வெடிச் சத்தம்...

``புஹாஹாஹா... புஹாஹாஹா..! புஹாஹாஹா...புஹாஹாஹா..!”

அலுவலகம் அதிர்ந்தது; தம்பிகள் மகிழ்ந்தனர்.