Published:Updated:

இடியட் பாக்ஸ் - 13 | படிக்காத மாமியார்... சமைக்கவே தெரியாத மருமகள்... கலகல கதைகள் ரெடி!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 13 | படிக்காத மாமியார்... சமைக்கவே தெரியாத மருமகள்... கலகல கதைகள் ரெடி!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

லீலா பேலஸ்... கடற்கரையை ஒட்டி இருக்கும் நட்சத்திர ஹோட்டல். அங்குதான் புரோகிராமிங் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரிய ஹாலை மீட்டிங் ரூமாக மாற்றி இருந்தார்கள். 'ப' வடிவத்தில் மேஜைகளும் அதன் பின்னால் இரண்டு வரிசையாக நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. நடுவே வீடியோ ப்ரொஜெக்டர் ஒன்றும் அதை திரையிடுவதற்காக எதிரே மிகப் பெரிய வெண்திரையும் இருந்தன. ஒவ்வொரு இருக்கைக்கும் எதிரே வாட்டர் பாட்டில், நோட்பேடு, பேனா வைக்கப்படிருந்தன. ஏசி குளிர் முகத்தில் அறைந்தது.

இது போன்ற மீட்டிங்குகளை அலுவலகத்திலேயே நடத்திவிட முடியும். ஆனாலும் பொருட்செலவுடன் இது போன்ற ஹோட்டல்களில் அவை நடத்தப்படுவதன் நோக்கம் அது மிக முக்கியமான மீட்டிங் என்கிற உணர்வை ஊழியர்களுக்குத் தந்து பயம் காட்டுவதற்குத்தான்.

ஒரு புறம் மார்க்ஸும் அவனது அணியினரும் அமர்ந்திருந்தனர். எதிர்புறம் திவ்யாவும் அவளது அணியினரும் அமர்ந்திருந்தார்கள். நடுவில் தாட்சா, மேனன் அவர்களோடு சேல்ஸ் மேனேஜர் மற்றும் சேல்ஸ் டீமும் அமர்ந்திருந்தனர். முதல் மீட்டிங் என்பதால் மும்பையில் இருந்து சில பெருந்தலைகளும் வந்திருந்தன. அவர்கள் திவ்யாவுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்பதால் அவளிடம் சகஜமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

மார்க்ஸ் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான். பாண்டியனுக்கு திக்திக் என இருந்தது. இத்தனை பெரிய மீட்டிங்கிற்கு எந்த ஒரு ப்ரசன்டேஷனும் இல்லாமல் வெறுங்கையுடன் அமர்ந்திருப்பது குற்ற உணர்வாகவும், அதே சமயம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

மார்க்ஸ் அருகில் கிராஃபிக் ஆர்டிஸ்ட் டார்லிங் அமர்ந்திருந்தான். அவன் மேல் எவ்வளவு கோபம் இருந்தாலும் நீங்கள் அவனை டார்லிங் என அன்போடுதான் கூப்பிட்டாக வேண்டும். ஏனெனில் அதுதான் அவனது பெயர். மார்க்ஸ் டார்லிங் காதில் ஏதோ சொல்ல அவன் தலையாட்டியபடி கேட்டுக் கொண்டிருந்தான். பாண்டியன் மெதுவாக டார்லிங்கின் லேப்டாப்பை எட்டிப் பார்க்க டார்லிங் யு-டியூப்பில் ஏதோ வீடியோக்களை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அது பாண்டியனை இன்னும் கலவரப்படுத்தியது.

ப்ரசன்டேஷனுக்கு பாண்டியன்தான் பொறுப்பெடுத்திருந்தான். அதை சிறப்பாகவும் செய்து முடித்திருந்தான். அதைக்காட்டி மார்க்ஸிடம் பாராட்டு வாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் இப்படியாகி விட்டது. பாண்டியன் மெதுவாக நிமிர்ந்து ஏஞ்சலைப் பார்த்தான். அவள் எதுவும் தெரியாத முகபாவனையில் அமர்ந்திருந்தாள். கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் ப்ரசன்டேஷனை இப்படி டெலீட் செய்துவிட்டாளே என்ற ஆதங்கம் பாண்டியனை அலைக்கழித்தது.

நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் புரோகிராமிங் டீம் ஒரு சேனலுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமான இன்னொரு டீம் அந்த நிகழ்ச்சிகளுக்கு விளம்பரங்கள் கொண்டு வரும் சேல்ஸ் டீம். பொருளைத் தயாரித்தால் மட்டும் போதுமா? விற்றால்தானே நிறுவனம் நடத்த முடியும். அப்படி விற்பனை செய்வதில் ஆரஞ்ச் டிவியின் சேல்ஸ் டீமை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

சேல்ஸ் மேனேஜர் சீயோன் உதவி மேனேஜர்கள் மணி, ஐயப்பன், அப்பாராவ். இந்த நால்வர் அணியை சென்னையில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர்களோடு 5 நிமிடம் பேசிக்கொண்டிருந்தால் ஆரஞ்சு டிவி-தான் உலகத்தின் நம்பர் 1 டிவி என உங்களை நம்பவைத்து விடுவார்கள். நிகழ்ச்சிகளை அவர்கள் க்ளையன்ட்டுக்கு விற்பனை செய்யும் அழகே தனி. 'நம்ம ஷோவ ஒரு பெரிய ஸ்டார்தான் நடத்த போறாரு' என அவர்கள் கொடுக்கும் பில்டப்பை கேட்பவர்கள் யாரோ கமல்ஹாசனையோ ரஜினிகாந்தையோ பற்றித்தான் அவர்கள் பேசிக் கொண்டு இருப்பதாக நினைப்பார்கள். ஆனால் உண்மையில் அந்த ஸ்டார் ஒரு ரிலீஸ் ஆகாத படத்தின் நாலு நாயகர்களில் ஒருவராக இருப்பார்.

க்ளையன்ட்டுகளை விடாமல் துரத்தி அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு முதல் ஆளாக போய் நின்று அத்தனை வேலைகளையும் செய்து அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக மாறிவிடுவார்கள். அதன்பிறகு எந்த முகத்தை வைத்துக்கொண்டு விளம்பரம் இல்லை எனச் சொல்வது! ஏதாவது ஒரு சிறு தொகைக்காவது விளம்பரங்களைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

மார்க்ஸ் சேல்ஸ் டீம் விளம்பரம் பிடிக்கும் டெக்னிக்களை கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பான். அவர்கள் அலட்டிக் கொள்ளாமல் சொல்வார்கள். "ரேட்டிங் வர்ற ஷோவ நீ பண்ணு மச்சான். நாங்க உட்கார்ந்த இடத்துல இருந்து விளம்பரம் பிடிக்கிறோம். நீ ஒரு டிஆர்பி, ஒன்னரை டிஆர்பி ஷோ பண்ணா நாங்க என்ன பண்றது. அதைக் குட்டிக்கரணம் போட்டுதான் வித்தாகணும்" என்பார்கள். புரோகிராமிங் டீமுக்கு GRP டார்கெட் என்றால், சேல்ஸ் டீமுக்கு பணம் டார்கெட்டாக இருக்கும்!

நிகழ்ச்சிகளைத் திட்டமிடும்போது பொதுவாக சேல்ஸ் டீம் ஆட்களையும் அழைப்பார்கள். இப்படியெல்லாம் நிகழ்ச்சிகள் வரப்போகிறது எனத் தெரிந்து கொண்டால் அதை எப்படி எல்லாம் விற்க முடியும் என்பதை அவர்கள் திட்டமிட்டுக் கொள்ளலாம் என்பதற்காகத்தான் அது.

மேனன் அமர்ந்தபடியே கையில் இருக்கும் மைக்கை ஆன் செய்தவர் 'ஹலோ ஹலோ' எனச் சொல்ல அறை இறுக்கமானது. ஏசி ஓடும் ஓசை கூட பாண்டியனின் காதுகளுக்குப் பெரிய சத்தமாகக் கேட்டது.

“புது மேனேஜ்மென்ட் பொறுப்பு எடுத்ததுக்கு அப்புறம் நடக்கப்போற முதல் புரோகிராமிங் மீட்டிங் இது... நம்மளோட அடுத்த வருஷ டார்கெட் 400 GRP. திவ்யா டீமுக்கு 200 GRP, மார்க்ஸ் டீமுக்கு 200 GRP டார்கெட் ஃபிக்ஸ் பண்ணியிருக்கோம். அந்த 200 GRP டார்கெட்டை ரீச் பண்றதுக்கு ரெண்டு டீமும் என்னல்லாம் ஷோஸ் பண்ணலாம்னு அவங்க பிளானை ப்ரசன்ட் பண்ணப்போறாங்க...”

பாண்டியன் ஒரக் கண்ணால் மார்க்ஸைப் பார்த்தான். மார்க்ஸ் எந்த சலனமும் இல்லாமல் இருந்தான்.

“முதல்ல மார்க்ஸ் டீம்” என மேனன் சொல்ல பாண்டியனுக்கு தூக்கி வாரிப்போட்டது. மார்க்ஸ் மெதுவாக எழ... “நாங்க முதல்ல ப்ரசன்ட் பண்ணிடுறோம் சார்” என்றாள் திவ்யா.

மேனன் திரும்பி மார்க்ஸைப் பார்க்க “நோ பிராப்ளம் சார்” என அவன் மீண்டும் அமர்ந்தான். பாண்டியனுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது.

திவ்யா எழுந்து முன்னால் வந்து நின்றாள். அவளுடன் ஏஞ்சலும், மும்பையில் இருந்து வந்த மானஸும் சேர்ந்து கொள்ள நிரூபமா லேப்டாப்பை ப்ரொஜக்டரில் கனெக்ட் செய்தாள். பெரிய திரையில் `புரோகிராமிங் பிளான் D டீம்' என்ற எழுத்துகள் கொட்டை எழுத்தில் தோன்ற... திவ்யா மெலிதான ஆனால் உறுதியான குரலில் பேச ஆரம்பித்தாள்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

"2018 நம்ம பெங்காலி சேனலை ஆரம்பிச்சப்ப முதல் வாரத்தோட GRP 61. அடுத்த 8 மாசத்துல நம்ம சேனலோட GRP 502. ஏறக்குறைய 8 மடங்கு GRP அதிகமாச்சு. அதுக்கு நாம எடுத்துகிட்டது வெறும் எட்டே மாசம்தான். புதுசா ஆரம்பிக்கப்பட்ட ஒரு சேனல் 8 மாசத்துல நம்பர் ஒன் சேனலா மாறுச்சுன்றது பெரிய ரெகார்ட். இதுவரைக்கும் எங்கேயுமே நடந்ததில்லை. அந்த பிளானைத்தான் இந்த சேனலுக்கும் யூஸ் பண்ணப்போறேன். புரோகிராமிங் பிளானைப் பார்க்குறதுக்கு முன்னாடி நம்மளோட பெங்கால் சேனலோட நிகழ்ச்சிகளை பத்தின ஒரு ஆடியோ விஷுவல் பார்க்கலாம்” என திவ்யா கண்களைக்காட்ட நிரூபமா லேப்டாப்பை தட்ட அந்த சேனல் நிகழ்ச்சிகள் குறித்து விளக்கும் படம் திரையில் ஓடத்தொடங்கியது. அது பிரமாண்டமாக திரையில் ஓட அனைவரும் வாய் மூட மறந்து அதைப்பார்த்தபடி இருந்தார்கள்.

“ஏண்டா நம்மளோட ப்ரசன்டேஷன் இப்படி இருக்குமா” என பாண்டியனிடம் கிசுகிசுப்பாகக் கேட்டார் நெல்லையப்பன்.

“இல்ல” என்றான் பாண்டியன்.

“பிரமாண்டமா இல்லையா?”

“ப்ரசன்டேஷனே இல்லை” என பாண்டியன் சொல்ல நெல்லையப்பன் அதிர்ச்சியானார்.

“என்னடா சொல்ற?”

“டெலீட் ஆயிருச்சு”

“அடப்பாவி டெலீட் ஆயிருச்சா” என அச்சமாகக் கேட்டார் நெல்லையப்பன். `ஆம்' என்பதுபோல தலையாட்டினான் பாண்டியன்.

“அப்புறம் எந்த தைரியத்துலடா இப்படி உட்கார்ந்து இருக்கீங்க?”

பாண்டியன் கண்களால் மார்க்ஸைக் காட்ட நெல்லையப்பன் திரும்பிப் பார்க்க மார்க்ஸ் கரங்களைக் கட்டியபடி சாதாரணமாக அமர்ந்திருந்தான்.

“ஓவர் கான்ஃபிடன்ஸ்டா உங்களுக்கு” என சொன்ன நெல்லையப்பனுக்கு அந்த ஏசியிலும் வியர்த்தது.

ஆடியோ விஷுவல் முடிவடைய திவ்யா பேச்சைத் தொடர்ந்தாள்.

“பெங்காலி மார்க்கெட்டையே மாத்தி போட்ட நாலு சீரியல்ஸை நாம இங்க அப்படியே ரீமேக் பண்ணப் போறோம். அதைப்பத்தி ஏஞ்சல் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுவாங்க” என மைக்கை ஏஞ்சலிடம் தந்தாள். அதை வாங்கியபடி ஏஞ்சல்,

“தேங்க் யூ திவ்யா.... நாம பண்ணப்போற முதல் சீரியல் பேரு 'வேரைத் தாங்கும் விழுதுகள்'. கதை ரொம்ப சிம்ப்பிள். ஒரு பெரிய ஃபேமிலியைச் சேர்ந்த பையன் காதல் திருமணம் செஞ்சிக்கிறான். அந்த வீட்டுக்குப்போற மருமகள் அந்த வீட்ல இருக்கிற யாரும் தன்னோட மாமியாரை மதிக்கலன்றதை பாக்குறா. ஏன்னா அவங்க படிக்கல... அந்த மருமகள் மாமியாரைப் படிக்க வச்சு பட்டதாரி ஆக்குறா!”

“சூப்பர்” என சொல்லி கை தட்டினான் சீயோன். "ஒரு பெரிய நடிகையை மாமியார் ரோல்ல போட்டீங்கன்னா பெரிய ஹிட் ஆகும்" என்றான் அப்பாராவ். நிகழ்ச்சிகள் குறித்த கருத்துகளை சந்தேகங்களை யார் வேண்டுமானாலும் இது போன்ற மீட்டிங்கில் எழுப்பலாம். அதற்கு புரோகிராமிங் டீம் விளக்கம் தர வேண்டும்.

“இரண்டாவது சீரியல்” என ஏஞ்சல் சொல்ல நிரூபமா லேப்டாப்பைத் தட்ட அடுத்த காட்சி திரையில் விரிந்தது. "`வல்லினம் மெல்லினம்'. கல்யாண மேடையில பொண்ணு ஓடிப்போறதால பையனோட அம்மா அவங்க வீட்ல இருக்கிற வேலைக்காரியையே பையனுக்கு கட்டி வெச்சிடுறாங்க... அவ படிக்கலைன்றதால பையனுக்கு அவளைப் பிடிக்கல. மாமியார் எப்படி மகனுக்கு பிடிச்ச மாதிரி மருமகளைப் படிக்க வச்சி பட்டதாரி ஆக்குறாங்கன்றதுதான் கதை.”

தன்னையறியாமல் வாய் விட்டு சிரித்துவிட்டார் நெல்லைப்பன். அனைவரும் திரும்பி பார்க்க...

“என்ன நெல்லையப்பன்?” எனக் கேட்டார் மேனன்.

“ஒண்ணும் இல்ல சார்” என்றார் அவர்.

“கருத்துகளைத் தைரியமா சொல்லுங்க நெல்லையப்பன்... இந்த மீட்டிங்கே அதுக்காகத்தான்...” என்றார் மேனன்.

“ஒரு கதையில மாமியாரை மருமக படிக்க வைக்கிறா... இன்னொன்னுல மருமகளை மாமியார் படிக்க வைக்கிறா... என்ன சார் இது” என நெல்லையப்பன் சொல்ல, மேனன் புன்னகைக்க அனைவரும் சிரித்தனர்.

“இந்த ரெண்டு சீரியல்தான் பெங்கால்ல முதல் இரண்டு இடத்தில இருக்கு” எனக் கோபமாகச் சொன்னாள் திவ்யா.

“நல்லது... நல்லது பண்ணுங்க... நல்ல வேளை இதெல்லாம் பார்க்க ரவீந்திரநாத் தாகூர் இல்ல” என நெல்லையப்பன் சொல்ல அனைவரும் மீண்டும் சிரித்தனர்.

“அவரோட ஒப்பினீயன் அது. நீ கன்டின்யூ பண்ணு ஏஞ்சல்” என்றாள் தாட்சா.

“மூணாவது சீரியல் பேரு 'அஞ்சறை பெட்டி'. சூப்பரா சமைக்கிற ஒரு மாமியார் தனக்கு வரப்போற மருமகள் படிக்கலைன்னா கூட பரவாயில்ல, நல்லா சமைக்க தெரிஞ்சவளாத்தான் இருக்கணும்னு உறுதியா இருக்காங்க” என ஏஞ்சல் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “மீதி கதையை நான் சொல்றேன்” என நெல்லையப்பன் கையைத் தூக்கினார். “சமைக்கவே தெரியாத ஒரு பொண்ணு மருமகளா வந்துடுறா... எப்படி மாமனாரும் ஹீரோவும் சேர்ந்து அவளுக்கு சமைக்க கத்து கொடுத்து மாமியார் மனசுல இடம் புடிக்க வைக்கிறாங்க... இதுதான கதை?” என நெல்லையப்பன் சொல்ல அனைவரும் மீண்டும் சிரித்தனர். ஏஞ்சல், திவ்யா இருவரின் முகமும் மாறியது.

“இப்ப இந்த சீரியல்ல என்ன குறை?” எனக் கோபமாக ஏஞ்சல் கேட்க... “அப்ப நிஜமாவே இதுதான் கதையா” என நெல்லையப்பன் கேட்க அறையின் சிரிப்பொலி முன்பை விட அதிகமாக இருந்தது.

“சார் வேணும்னு கிண்டல் பண்றாங்க சார்” என ஏஞ்சல் கோபமாக சொல்ல மார்க்ஸ் அவளை இடைமறித்தான்.

“வேணும்னு எல்லாம் சொல்லல... எல்லா சீரியலும் ஒரே மாதிரி இருக்குன்றாரு... மாமியார் படிக்கிறாங்க... மருமகள் படிக்கிறா.... மருமகள் சமைக்கிறா... இதை விட்டா வேற ஏதும் இல்லையான்னு கேள்வி வருது சார். அதான்...'' என்றான்.

“இந்த ஷோ நம்மளோட டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்ல ட்ரெண்டிங்ல நம்பர் ஒன் சார்” என திவ்யா சொல்ல மேனன் இரு கைகளையும் உயர்த்தி “டன் திவ்யா... உன்னோட கால் தான்... கருத்துகளை கேட்டுக்கோ... ஆனா நீ ஃபைனலா முடிவு பண்ணு” என அந்த விவாதத்துக்கு முற்று புள்ளி வைத்தார். ஏஞ்சல் தொடர்ந்தாள்.

"அடுத்த சீரியல் `மகாநதி'. கொஞ்சம் கறுப்பா இருக்கப் பொண்ணு அவளோட நிறத்துனால புகுந்த வீட்ல நிறைய அவமானங்களை சந்திக்கிறா. எப்படி பொறுமையா அதை எல்லாம் சமாளிச்சு அவங்க மாமியார், புருஷன் மனசை ஜெயிக்கிறான்றதுதான் சார் கதை.”

“இது 'நானும் ஒரு பெண்' கதைப்பா... விஜயகுமாரி, ரங்காராவ் நடிச்ச பிளாக் அண்ட் வொயிட் படம்” என்றார் நெல்லையப்பன்.

“அவ ஏதாவது பியூட்டி கிரீம் எல்லாம் யூஸ் பண்ணி கடைசியில கலரா ஆகுற மாதிரி காட்டினோம்னா பியூட்டி ப்ராடக்ட்ஸ் விளம்பரத்தை எல்லாம் அள்ளிடலாம்” என்றான் சியோன்... அவன் கவலை அவனுக்கு!

“எதுக்காக அவ கலராகணும்?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“இல்லப்பா அவசியம் இல்ல... பொதுவா சொன்னேன்” என உடனே பின் வாங்கினான் சீயோன்.

“அங்க வேணா கறுப்பு தாழ்ந்த நிறமா இருக்கலாம். இங்கேயெல்லாம் கறுப்புதான் சார் அழகே... நம்மளும் எதுக்காக கறுப்புன்னா அழகில்லைன்னு ஒரு இமேஜ தரணும். நம்ம ஹீரோயின் கறுப்புதான் ஆனா, கான்ஃபிடன்ஸான ஒரு பொண்ணு. யாராச்சும் அவளை கறுப்புன்னு சொன்னா அவ போடான்னு சொல்லுவா. பாசிட்டிவா காட்டலாம் சார். நாம கறுப்பா இருக்கோம்னு இன்ஃபீரியரா யோசிக்கிற பொண்ணுங்களுக்கு எல்லாம் கான்ஃபிடன்ஸ் வர்ற மாதிரி இந்தக் கதையைப் பண்ணுவோம் சார்!”

“நல்ல ஐடியா மார்க்ஸ்” என்றார் மேனன். “திவ்யா இந்த ஷோவை மார்க்ஸ் டீம் பண்ணட்டும். நாம வேற ஒரு கதை பிடிக்கலாம்” என அவளைப் பார்த்து கேட்க கோபத்தை மறைத்தபடி “யெஸ் சார்” என்றாள் திவ்யா. மைக் மானஸிற்கு கை மாறியது.

“யாருப்பா இந்த அமெரிக்க மாப்பிள்ளை?” என்றார் நெல்லையப்பன்.

“அவங்களோட நான் ஃபிக்‌ஷன் ஹெட். இம்போர்டட் ஃப்ரம் மும்பாய்...'' என்றான் வினோ.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“எங்களோட நான் ஃபிக்‌ஷன் பிளான் ரொம்ப சிம்பிள் சார். ஒரு சிங்கிங் ஷோ, ஒரு டான்ஸ் ஷோ, ஒரு கேம் ஷோ, ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ... ஆனா இது வரைக்கும் இந்த மார்கெட் பார்க்காத மாதிரி பெரிய செட், பாப்புலர் ஜட்ஜஸ், நிறைய ஆடியன்ஸ்ன்னு பெரிய ஸ்கேல்ல பண்றோம். நாம மும்பைல பண்ற அந்த ஷோஸ்கான ஏவி பார்க்கலாம். இத விட இன்னும் பிரமாண்டமா பண்ணப்போறோம்...” எனச் சொல்லி அவன் திரையைக் காட்ட அதில் நிகழ்ச்சிகள் குறித்த படம் விரிகிறது.

சாதாரண நிகழ்ச்சிகள்தான். ஆனால் மிகப் பெரிய அரங்கில்... ஆடியோ விஷுவல் முடிய அனைவரும் கை தட்டினர். திவ்யா ப்ரசன்ட் செய்த நிகழ்ச்சிகள் குறித்த வியப்பு அனைவரது முகத்திலும் தெரிந்தது. இது தமிழ் மார்க்கெட்டை அசைத்துப் பார்க்கும் என்கிற நம்பிக்கையும் அனைவருக்கும் வந்தது.

"மார்க்ஸ், நீங்க உங்க ப்ரசன்டேஷனை ஆரம்பிக்கலாம்" என்றார் மேனன்.

பாண்டியன் பயமாகப் பார்க்க... நெல்லையப்பன் கர்சீஃப்பால் முகத்தைத் துடைக்க மார்க்ஸ் திரைக்கு நடுவில் வந்து நின்றான். அனைவரும் அவனைப் பார்த்தனர். ஒரு கையை தனது பேன்ட் பாக்கெட்டில் விட்டபடி அவன் ஆரம்பித்தான்.

“என்கிட்ட பவர் பாயின்ட் ப்ரசன்டேஷன்லாம் இல்ல... ஆனா பவர்ஃபுல் பாயின்ட்ஸ் இருக்கு ப்ரசன்ட் பண்ண” என மார்க்ஸ் சொல்ல டார்லிங் தனது லேப்டாப்பை தட்ட மார்க்ஸுக்குப் பின்னால் இருக்கும் திரையில் வடிவேலு தனது இரண்டு பாக்கெட்களிலும் ஒன்றும் இல்லை என வெளியில் காட்டியபடி இருக்கும் புகைப்படம் தோன்ற அறையில் இருக்கும் அனைவரும் சிரிக்கத் தொடங்கினர். திவ்யாவாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. மார்க்ஸின் ஸ்டைல் முதன் முறையாக அவளுக்குப் பிடித்தது.

“முதல் பால்லயே சிக்ஸ்ப்பா“ என்றார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் அனைவரையும் புன்னகையுடன் பார்த்தான். அறையில் சிரிப்பு அடங்காமல் தொடர்ந்தது.

- Stay Tuned...