Published:Updated:

இடியட் பாக்ஸ் - 14 | மார்க்ஸின் முதல் ஷோ SORRY!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 14 | மார்க்ஸின் முதல் ஷோ SORRY!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

"என்கிட்ட பவர் பாயின்ட் ப்ரசன்டேஷன் எல்லாம் இல்ல... ஆனா, பவர்ஃபுல் பாயின்ட்ஸ் இருக்கு பிரசன்ட் பண்ண” என மார்க்ஸ் சொல்ல அறையில் இருந்த அனைவரும் சிரித்தனர். மார்க்ஸ் எதுவும் பேசாமல் புன்னகையுடன் பார்த்தபடியே இருக்க கொஞ்சம் கொஞ்சமாக சிரிப்பொலி அடங்கியது.

"எங்க டீமோட முதல் நான் ஃபிக்‌ஷன் ஷோ..." என்றதும் டார்லிங் லேப்டாப்பை தட்ட பெரிய எழுத்துகளில் 'Sorry' என்ற வார்த்தை திரையை ஆக்கிரமித்தது.

“என்னடா எடுத்ததுமே ஸாரி சொல்றான்” எனக் கேட்டார் நெல்லையப்பன்.

“அது ஷோ பேரு மாமா... வாயை மூடிட்டு கவனி” என்றான் பாண்டியன்.

“சார், நீங்க கொஞ்சம் வர முடியுமா'' என மார்க்ஸ் அழைக்க மும்பையில் இருந்து வந்தவர் சற்று ஆச்சர்யத்துடன் “நானா” எனக் கேட்க “யெஸ் சார்” என்றான் மார்க்ஸ்.

“என்னடா பிரசன்டேஷன் பண்ண சொன்னா மேஜிக் பண்றான்” எனக் கிசுகிசுத்தார் நெல்லையப்பன்.

“இல்லாத ப்ரசன்டேஷனை பண்றதுக்கு பேர் மேஜிக்தான் மாமா” என உற்சாகமாகச் சொன்னான்.

“சார், நீங்க வாழ்க்கையில ஸாரி சொல்ல நினைச்சு சொல்ல முடியாம போன ஒருத்தருக்கு இந்த இடத்தில ஸாரி சொல்லலாம். ஏன் ஸாரி சொல்றீங்கன்னு காரணமும் சொல்லணும்...”

அனைவரும் பார்க்க அவர் ஒரு கணம் யோசித்துவிட்டு பேசத் துவங்கினார் மும்பைக்காரர். “1989... நான் புனே ஃபிலிம் இன்ஸ்டியூட்ல படிச்சிட்டு இருந்தப்ப ஒரு ஃபர்ஸ்ட் இயர் பையன் பேரு சாஸ்திரி. ரொம்ப

பயந்த பையன். அவனை ரேக்கிங் பண்ற மாதிரி சூழல் அமைச்சிடுச்சு. சாதாரணமா எல்லோரும் பண்ற மாதிரிதான் 'பாடு... ஆடு' இப்படிலாம்... அவன் முடியாதுன்னு சொன்னப்ப எனக்கு கொஞ்சம் கோபம் வந்திருச்சு. அவனை லேசா மண்டையில தட்டிட்டேன்.''

மொத்த அறையும் அவரது கதையில் ஆர்வமானது.

“அவன் ரொம்ப அவமானமா ஃபீல் பண்ணிட்டான்னு நினைக்கிறேன். மறுநாள்ல இருந்து அவன் இன்ஸ்டிட்யூட்டுக்கு வரலை. டிஸ்கன்ட்டின்யு பண்ணிட்டு போயிட்டான். எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு... எவ்வளவோ கனவுகளோட வந்த அந்தப் பையன் ஒரே நாள்ல இன்ஸ்டிட்யூட்ட விட்டு போறதுக்கு நான் காரணமாயிட்டேன். அவனைத் தேட நிறைய முயற்சி பண்ணேன். கண்டுபிடிக்க முடியல... இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு அந்த குற்ற உணர்ச்சி இருக்கு...” என சொல்லும்போதே அவர் குரல் தழுதழுத்தது.

“அவனை நேர்ல பார்க்குற வாய்ப்பு கிடைச்சா நான் அவனுக்கு ஸாரி சொல்லணும்” என்றார் அவர்.

அறை அவரது வார்த்தைகளால் இறுக்கமானது.

“நீங்க ஸாரி சொல்லிட்டீங்க சார்... அவன் ஒருத்தன்கிட்ட சொல்ல யோசிச்ச ஸாரியை இந்த ஷோ மூலமா கோடி பேர் கிட்ட சொல்லிட்டீங்க. உங்க சாஸ்திரி இதைப் பார்க்கலாம், இல்ல பார்க்காமப் போகலாம். ஆனா, நீங்க உங்க தப்பை உலகமறிய ஒத்துகிட்டீங்க. உங்க பாரத்தை இறக்கி வச்சிட்டீங்க. நீங்க ஃபீரியா இருங்க சார்.''

அவர் தலையாட்டி நகர மார்க்ஸ் அனைவரையும் பார்த்து சொன்னான். “இதுதான் நம்மளோட முதல் ஷோ... Sorry..."

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

ஹாலில் இருந்த அனைவரும் தங்களை அறியாமல் கரவொலி எழுப்ப மார்க்ஸ் புன்னகையுடன் தலையாட்டியபடி திவ்யாவைப் பார்த்தான். அவளுக்கும் அவனது ஐடியா பிடித்திருந்தது. டிஆர்பி வருமா தெரியவில்லை. ஆனால் இந்த ஷோ மூலம் சேனலுக்கு நல்ல பெயர் வருவது நிச்சயம் எனச் சொன்னது அவள் மனது.

“நம்மளோட இரண்டாவது ஷோ... மேம் நீங்க கொஞ்சம் இங்க வர முடியுமா?'' என மார்க்ஸ் கை நீட்டி அழைக்க சிரிப்புடன் மும்பையில் இருந்து வந்த அந்தப் பெண் திரைக்கு அருகில் வந்தாள்.

“அடுத்து டான்ஸ் ஷோன்னா எல்லோரையும் கூப்பிட்டு ஆடச் சொல்லுவான் போல” என்றார் நெல்லையப்பன்.

“தியரியே கிடையாது மாமா... தல ஃபுல் பிராக்டிக்கல்ஸ்தான்!”

“ப்ரசன்டேஷனை கோட்டை விட்டுட்டு சூப்பரா ஒப்பேத்துறீங்கடா...”

“வொர்க் அவுட் ஆவுதா இல்லையா” என பாண்டியன் கேட்க...

“வேற லெவல்ல” எனச் சொல்லி சிரித்தார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் ஒரு பானையை எடுத்து அவளிடம் தந்தவன், “இதை தலையில வெச்சிக்கிட்டு கீழ விழாம ஒரு பத்தடி தூரம் நடக்கணும்” என மார்க்ஸ் சொன்னதும் அனைவரது முகத்திலும் புன்னகை. அந்தப் பெண் சிரிப்புடன் பானையை எடுத்து வைத்துக் கொண்டு நடக்க முயற்சி செய்ய அவளால் இரண்டடி கூட நடக்க முடியவில்லை. பானை தரையில் விழ ஹாலில் இருந்த அனைவரும் ரசித்து சிரிக்க, மார்க்ஸ் சொன்னான்...

“சிட்டியில பிறந்து வளர்ந்த 10 தமிழ் பெண்களை ஒரு கிராமத்துக்கு கூட்டிட்டு போயி அந்த வாழ்க்கையை வாழ சொல்லப்போறோம். நம்ம பண்பாடு கலாசாரம், மொழி அதோட கிராமத்து வாழ்க்கையில இருக்கிற கஷ்டம் நஷ்டம் எல்லாத்தையும் சொல்லித் தரப் போறோம். அதைக் கத்துகிட்டு போட்டியில ஜெயிக்கணும். இதுதான் எங்க டீமோட இரண்டாவது ஷோ.... இந்த ஷோவோட காப்பி ரைட்ஸ் நம்ம கம்பெனிகிட்டதான் இருக்கு... தமிழ் ரைட்ஸ் மட்டும் நமக்கு வாங்கணும் சார்!”

“டன்” என தம்ஸ் அப் காட்டினார் சித்தார்த் மேனன்.

அப்பாராவ் மெதுவாக குனிந்து, "அழகான பத்து பொண்ணுங்கள பிடிச்சா போதும் ஷோ பெரிய சக்ஸஸ் ஆயிடும்” என சீயோனிடம் சொன்னான்.

“எல்லா பொண்ணுங்களும் பார்ப்பாங்க இல்ல” எனக் கேட்டான் சீயோன்.

“எல்லா ஆம்பிளைங்களும் பார்ப்பாங்க” என சிரித்தான் அப்பாராவ்.

“சத்தமா பேசாத மார்க்ஸ் காதுல விழுந்துடப் போகுது...”

அப்பாராவ் வாயைப் பொத்திக் கொண்டான்.

மார்க்ஸ் புன்னகையுடன் “மூணாவது ஷோ” என்றதும் டார்லிங் லேப்டாப்பை தட்ட `காமெடி அடிதடி' எனத் திரையில் வந்தது.

“ரொம்ப சிம்ப்பிள்... தமிழ்நாடு முழுக்க நிறைய நகைச்சுவை குழுக்கள் இருக்கு. அதுல பெஸ்ட் டீம் எதுன்னு செலக்ட் பண்ற ஷோ சார் இது. காமெடிக்கு காமெடி. அதோட நிறைய புது திறமைசாலிகளை நம்ம உலகத்துக்கு அடையாளம் காட்ட முடியும்.”

“வழக்கமான ஸ்டாண்ட் அப் காமெடிதான் திவ்யா” என எரிச்சலாக சொன்னாள் ஏஞ்சல்.

“ஆனாலும் அவனோட ஷோஸ்க்கு பின்னாடி ஒரு நல்ல நோக்கம் இருக்கு” எனச் சொன்னாள் திவ்யா.

“நாலாவது ஷோ பட்டிமன்றம். வாழ்க்கைக்கு முக்கியம் இதுவா, அதுவான்னு இரண்டு பக்கமும் இரண்டு டீம் ஆதரவாவும், எதிர்ப்பாவும் பேசுவாங்க...”

“வழக்கமான பட்டிமன்றம்தான இதுல என்ன புதுசா இருக்கு” என குருமூர்த்தி கேட்டான். ஏஞ்சல் மார்க்ஸின் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

“பட்டிமன்றத்துல எத்தனைப் பேர் இருப்பாங்க” என மார்க்ஸ் கேட்டான்.

“ஒரு பக்கத்துக்கு மூணு பேர் இருப்பாங்க...”

“இதுல ஒரு பக்கத்துக்கு 100 பேர் இருப்பாங்க” என மார்க்ஸ் சொல்லி வாய் மூடும் முன் “பயங்கரமா இருக்குமே” எனச் சத்தமாகச் சொன்னான் சீயோன்.

“இது சண்டை கிடையாது யுத்தம்” என்றார் நெல்லையப்பன்.

அனைவரும் வாய் மூடிக் கொள்ள... அடுத்து சீரியல்...

“நம்ம பண்ண போற முதல் சீரியல்” என அவன் டார்லிங்கை பார்க்க... “டமக்கு டமக்கு டம்... டமக்கு டமக்கு டம்” என்ற 'அழகி' படத்தின் பாடல் திரையில் விரிய... அனைவரும் திரையைப் பார்த்தனர்.

“ஒரு ஸ்கூல் ஸ்டோரி முழுக்க முழுக்க ப்ளஸ் ஒன், பிளஸ் டூ பசங்களைப் பத்தின கதை... அடலசன்ட் லைஃப் பத்தி பேச போற சீரியல் இது'' என்றான் மார்க்ஸ்.

“சீரியல் பாக்குறது பூரா ஹவுஸ் வொய்ஃப்ஸ்... அவங்க எப்படி சின்ன பசங்க கதையைப் பார்ப்பாங்க?” என ஏஞ்சல் குறுக்கிட்டாள்.

“பார்ப்பாங்க... அவங்க பசங்க ஸ்கூல்ல என்ன பண்றாங்கன்னு பார்ப்பாங்க.... அதோட அவங்க பசங்களா இருந்தப்ப என்னல்லாம் பண்ணாங்கன்னும் நினைச்சுப் பார்ப்பாங்க...”

“எனக்கு இந்த சீரியல் வொர்க் அவுட் ஆகும்னு தோணல சார்” என திவ்யா சொல்ல...

“முயற்சி பண்ணிப் பார்க்கிறது தப்பில்லயே” என்றான் மார்க்ஸ்.

அனைவரும் மேனனின் பதிலுக்காக காத்திருக்க... “எனக்கு இதை ட்ரை பண்ணிப் பார்க்கலாம்னு தோணுது” என்றார் மேனன்.

“மால்குடி டேஸ்ன்னு ஆர்.கே நாராயணன் கதையை சீரியலா பண்ணாங்க... அப்ப அது பெரிய ஹிட். நிச்சயமா ட்ரை பண்ணலாம்'' என்றாள் தாட்சா.

“இரண்டாவது சீரியல் நீங்க சொன்ன அழகான கறுப்பழகியைப் பற்றியது'' என மார்க்ஸ் சொல்ல திரையில் நந்திதா சிரித்தபடி இருக்கும் புகைப்படமும் அதன் கீழே 'கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு' என சீரியலின் டைட்டிலும் தோன்ற அனைவரும் புன்னகையுடன் திரும்பி நந்திதாவை பார்க்க... அவள் வெட்கத்துடன் கையை உயர்த்தி நான்தான் என்பதுபோல சிரித்தாள்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“என்னடி அதுக்குள்ள அவன் டீமுக்கு சப்போர்ட் பண்றியா” என கோபத்தை மறைத்தபடி கேட்டாள் திவ்யா.

“என் போட்டோவை இன்ஸ்டால இருந்து எடுத்திருக்காங்க... எனக்கே தெரியாது!”

“அப்ப கோபப்படு... கம்ப்ளெய்ன்ட் பண்ணு!”

“எதுக்கு... அதெல்லாம் தேவையில்ல... நல்ல ரசனையாதான் ஒரு போட்டோ தேடி பிடிச்சிருக்காணுங்க” எனத் திரையில் தன்னையே நந்திதா ரசித்தாள்.

மார்க்ஸ் மூன்றாவது கான்செப்ட் என சொல்ல திரையில் 'காஞ்சனா' போஸ்டர் வந்தது. “ஒரு பேய்கதை ஆனா பயப்படுற மாதிரி இல்ல... முழுக்க காமெடியா காஞ்சனா மாதிரி...”

“கடைசி கான்செப்ட் முழுக்க முழுக்க ஒரு ஆண் பெண் சம்பந்தப்பட்ட கதை. கதையில் வில்லனே கிடையாது அவங்களோட ஈகோதான் வில்லன். சிங்கிள் ட்ராக் லவ் ஸ்டோரி... காலேஜ்ல ஆரம்பிச்சு காதல் கல்யாணம் குழந்தைங்கன்னு போகும். ஒவ்வொரு சமயத்துலயும் வரக்கூடிய பிரச்னைகள்... அதை எப்படி அவங்க சமாளிக்கிறாங்கன்றதுதான் கதை... இவ்ளோதான் எங்களோட கான்செப்ட்ஸ்... தேங்க் யூ” எனச்சொல்லிவிட்டு மார்க்ஸ் தன் இடத்தில் போய் உட்கார்ந்தன்.

“மார்க்ஸ்... ஒண்ணும் இல்லாத விஷயத்தை ஊது ஊதுன்னு ஊதிட்டியய்யா” என நெல்லையப்பன் கை கொடுக்க...

“வேற வழி இல்லையே மாமா”

“பின்னிடப்பா நல்லா இருக்கு கான்செப்ட் எல்லாம்...'' என்றார் அவர்.

மேனன் எழுந்து நின்றார். அனைவரும் அவரைப் பார்க்க... அவர் சின்ன புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

“நாலு நாளைக்கு முன்னால என் முன்னாடி ஒரு கேள்வி இருந்திச்சு.... சேனலுக்கு தேவை திவ்யாவா, மார்க்ஸா? நான் இரண்டு பேருன்னு ஒரு முடிவு எடுத்தேன். எல்லோரும் தலைமைன்றது ஒண்ணாதான் இருக்கணும்னு ரெண்டு பேர்ல ஒருத்தரை சூஸ் பண்ணுங்கன்னு சொன்னாங்க. ஆனா, நான்

இரண்டு பேரும் வேணும்னு உறுதியா இருந்தேன். அதோட ரிசல்ட்தான் இன்னிக்கு நாம பார்த்த இந்த இரண்டு ப்ரசன்டேஷன்ஸ். மாஸுக்குத் தேவையான நிகழ்ச்சிகளும் இருக்கு... கிளாஸ்க்குத் தேவையான நிகழ்ச்சிகளும் நம்மகிட்ட இருக்கு. இதுல மக்கள் எதை ஏத்துக்குறாங்களோ அந்த நிகழ்ச்சிகளை நாம கன்ட்டின்யூ பண்ணலாம். இந்த சேலஞ்ல ஜனங்களோட மனசை யார் அதிகமா புரிஞ்சுகிட்டு இருக்காங்கன்னு நமக்குத் தெரியப் போகுது. இங்க இருந்து இன்னும் 60 நாள்ல நம்ம சேனலோட ரீலான்ச். இந்த புது ஷோக்களை ரெண்டு டீமும் அதுக்குள்ள ரெடி பண்ணனும். அதுக்கான வேலைகளை

நாம பார்க்கலாம். ஆல் தி பெஸ்ட் மார்க்ஸ் அண்ட் டீம்... ஆல் த பெஸ்ட் திவ்யா அண்ட் டீம்.”

“அடுத்து என்ன?” என்றார் நெல்லையப்பன்.

“பார்ட்டிதான்” என்றான் பாண்டியன்.

இது போன்ற ஹோட்டல் மீட்டிங்களில் முடிவில் ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு செய்வது வழக்கம். மீட்டிங்கில் அடித்துக் கொள்ளும் இரண்டு குழுக்களும் இந்த பார்ட்டியில் சமாதானமாகி விடும்.

அனைவரும் கையில் கோப்பைகளுடன் நின்று கொண்டிருந்தார்கள்.

மார்க்ஸ் தன்னுடைய கோப்பையுடன் திரும்பினான். ஏஞ்சலும், மானஸும் அவன் கண்களில் பட்டார்கள்.

அவர்கள் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். மார்க்ஸ் அவளை கவனிப்பதை பார்த்த ஏஞ்சல் வேண்டுமென்றே மானஸின் காதருகே ரகசியம் சொல்வது போல நெருக்கமாக குனிந்தாள். மீண்டும் அவர்கள் சிரித்தார்கள்.

மார்க்ஸ் தன் செல்போனை எடுத்து டயல் செய்ய.... ஏஞ்சலின் போன் அடித்தது... அவன் பெயரைப் பார்த்தவள் திரும்பி அவனைப் பார்த்தபடி போனை எடுத்தாள்.

“என்ன?”

“என்ன வெறுப்பேத்துறேன்னு அந்த சேட்டு கிட்ட ஓவரா பேசணும்னு அவசியம் இல்ல!”

“நான் மானசோட பேசுனா உனக்கு ஏன் வயிறு எரியுது!”

“ஏற்கெனவே ஒருத்தனை தப்பா செலக்ட் பண்ணிட்ட... அடுத்ததாவது கரெக்டா செலக்ட் பண்ணனும்ல அதான்!”

“எங்களுக்குத் தெரியும் நான் பார்த்துகிறேன்”

“கார் ஓட்டாத... கணேஷ் இருக்காரு... உன்னை டிராப் பண்ணுவாரு!”

“நீ என்ன...” என ஏஞ்சல் ஏதோ பேச போக மார்க்ஸ் போனை கட் செய்து விட்டு நகர்ந்தான்.

“என்னாச்சு?” என மானஸ் கேட்க “நத்திங்” என சிரித்து சமாளித்தாள் ஏஞ்சல்.

கவுன்ட்டரில் நிற்பவனிடம் “ஆப்பிள் ஜீஸ்” என்றாள் தாட்சா.

“எனக்கும்” என்றார் மேனன்...

“ஏன் வேற எதுவும் குடிக்கலையா?”

“ஆப்பிள் ஜூஸ்க்கு கம்பெனி கொடுக்கலாம்னுதான்” எனப் புன்னகைத்தார் மேனன்.

“இல்ல பரவாயில்ல எனக்கு ஒண்ணும் இல்ல” என்றாள் தாட்சா.

“இல்ல தாட்சா ஐ'ம் ஓகே'' என ஆப்பிள் ஜூசை அவர் கையில் வாங்கிக் கொண்டார். தாட்சாவுக்கு அது பிடித்திருந்தது.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

திவ்யாவும் நந்திதாவும் நின்று கொண்டிருந்தனர்.

“திவ்யா நான் கொஞ்சம் நகர்றேன்” என்றாள் நந்திதா.

“ஏன்?”

“ஒரு ஆள் உன்கிட்ட வந்து பேசனும்னு ரொம்ப நேரமா யோசிச்சுகிட்டு இருக்காரு... நான் அப்படி போனா அவர் இப்படி வருவாரு”

“யாரு?”

“தெரிஞ்சுகிட்டே நடிக்காத... நீயும் ரொம்ப நேரமா என்ன எப்படிடா கழட்டி விடுறதுன்னுதான யோசிச்சுகிட்டு இருக்க... நான் கிளம்பறேன்” என சிரித்தபடி நந்திதா நகர்ந்தாள்.

திவ்யா ஓரக் கண்ணால் மார்க்ஸைத் தேட மார்க்ஸ் மெதுவாக திவ்யாவின் அருகில் வந்தான்.

“ஹாய்”

“ஹாய்” என்றாள் திவ்யா.

“கான்செப்ட்ஸ் எல்லாம் நல்லா இருந்துச்சு” என்றான் மார்க்ஸ்.

“பொய்!”

“இல்ல நிஜமா” எனச் சிரித்தான் மார்க்ஸ்.

“நீ பிரசன்ட் பண்ணது நல்லா இருந்துச்சு” என்றாள் திவ்யா.

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“உண்மையை சொல்லு பிரசன்டேஷன் ரெடி பண்ணவே இல்லைதான?”

“பண்ணோம்... டெலீட் ஆயிடுச்சு!”

“டெலிட் ஆயிருச்சா?”

ஆம் என்பது போல மார்க்ஸ் தலையாட்ட...

“அதான் ப்ரசன்டேஷனே இல்லாம மீட்டிங்ல அசத்திட்டீங்களே!”

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“ஆமா குடிக்கிற பொண்ணுங்களைப் பத்தி உன்னோட ஒப்பீனியன் என்ன?” என சம்பந்தமில்லாமல் கேட்டாள் திவ்யா. மார்க்ஸ் அவளை நிமிர்ந்து பார்க்க...

அவள் கண்களால் சொல்லு எனக் கேட்க...

“குடிக்கிறவங்களைப் பத்தி என் ஒப்பீனியன் என்னன்னு கேட்டா நான் சொல்றேன்... அது என்ன குடிக்கிற ஆம்பிளை குடிக்கிற பொம்பளைன்னு... குடிக்கிற பாண்டியன், நெல்லையப்பனைப் பத்தி நான் என்ன நினைப்பனோ அதுதான் உன்ன பத்தியும் நினைப்பேன்!”

“என்ன நினைப்ப?”

“கொஞ்சமா குடிச்சிட்டு பத்திரமா வீட்டுக்கு போய் சேரணுன்னுதான்”

திவ்யா சிரித்தாள். மார்க்ஸும் சிரித்தான்.

“என்ன பாண்டியா ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் ஒண்ணா நிக்குது” எனக் கேட்டார் நெல்லையப்பன்.

“இது நாலாவது ரவுண்ட்... இதோட நிறுத்திக்கோ... இல்லன்னா ... மிஸ்டர் மேனன்னு அவர கூப்புட்டு எப்படி ஒரு சேனலை நடத்தணும்னு கிளாஸ் எடுப்ப” என்றான் பாண்டியன்.

“நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்ற?”

“வாயை மூடிக்கிட்டு உன் வேலைய பாருன்றேன்!”

“பாக்குறேன்... அதுக்கு முன்னால ஒண்ணு சொல்லணும்”

பாண்டியன் நெல்லையப்பனை முறைக்க...

“இன்னொரு பத்து நிமிசம் கழிச்சு சொன்னா நான் குடிச்சிட்டு உளர்றேன்னு சொல்லுவ.... அதனால இப்பவே சொல்லிடுறேன்!”

“சொல்லு”

“மார்க்ஸ் திவ்யா நிறைய சண்டை போட போறாங்க... ஆனா பயங்கரமா லவ் பண்ணுவாங்க!”

“பெரிய ஜோசியக்காரரு... ஆருடம் சொல்றாரு!”

“நடக்குதா இல்லையானு மட்டும் பாரு'' என சொல்லியபடி அவர் திரும்பி பார்க்க... பாண்டியனும் திரும்பி பார்க்க... சிரித்துக்கொண்டிருந்த திவ்யா முகம் மாறியது.

கண்கள் லேசாக சொருக... கையில் இருந்த கிளாஸ் நழுவ அப்படியே மயங்கி மார்க்ஸின் மேல் சாய்ந்தாள்.

“நான் சொன்னேன்ல” என்றார் நெல்லையப்பன்.

அனைவரும் பதறியபடி அவர்களை நோக்கி ஓடினார்கள்.