திவ்யா தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள். எல்லோர் முன்பும் அப்படி மயங்கி விழுந்தது அவளுக்கு அவமானமாக இருந்தது. மார்க்ஸ் சின்ன புன்னகையுடன் அவள் அருகே நின்று கொண்டிருந்தான். ஹோட்டலின் இரண்டாவது தளத்தில் இருந்த பெரிய பால்கனியில் அவர்கள் இருவர் மட்டும் தனித்திருந்தார்கள். கடலின் ஓசை கேட்டபடி இருந்தது. குளிர்ந்த கடல் காற்று அவர்களின் தலை முடியை கலைக்க போராடிக் கொண்டிருந்தது.
“வாங்க உள்ள போலாம்” என்றான் மார்க்ஸ்.
“எதுக்கு எல்லாரும் என்ன வேடிக்கை பார்க்கவா?” என எரிச்சலும் ஆதங்கமுமாக கேட்டாள் திவ்யா.
மார்க்ஸ் பதில் சொல்லாமல் புன்னகைத்தான்.
“நான் மயங்கி விழுந்ததை எல்லோரும் பார்த்திருப்பாங்க இல்ல?”
“ஆமா”
“நான் ஓவரா குடிச்சிட்டு மயங்கிட்டேன்னுதான எல்லோரும் நினைச்சிருப்பாங்க!”
“வாய்ப்பிருக்கு...”
“ராத்திரி எல்லாம் தூங்காம பிரசன்டேஷன் பார்த்துக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு முழுக்க சாப்பிடவும் இல்ல... அதான் டக்குன்னு பிளாக் அவுட் ஆயிருச்சு!”
“புரியுது!”
“உன் மேலதான் சாய்ஞ்சு விழுந்தேன் இல்ல!”
மார்க்ஸ் சிரித்தான்!
“சிரிக்காதே...” எனக் கோபமாகச் சொன்னாள் திவ்யா.
“அவ்வளவு எல்லாம் ஒண்ணும் சீன் இல்லைங்க... நெல்லையப்பன் எல்லாம் ஃபுல் ஃபார்ம்ல இருக்கார்... அவரோட கலாட்டாவுக்கு முன்னால நீங்க மயங்கி விழுந்தது எல்லாம் பெரிய விஷயமே இல்லை!”
அவள் நம்பிக்கை இன்றி அவனைப் பார்த்தாள்.
“டின்னர் ஓப்பன் பண்ணியாச்சு... எல்லோரும் சாப்பிட்டுட்டு கிளம்புறாங்க... வாங்க போய் சாப்பிடலாம்!“
“எனக்கு சாப்பாடு எல்லாம் வேணாம்... டிரிங்க் வேணும்!”
“சரி நான் போய் எடுத்துட்டு வரேன்!”
“ஆமா... எதுக்கு நீ என் பின்னாலயே சுத்திக்கிட்டு இருக்க?!”
“உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதான்!” என மார்க்ஸ் கிண்டலாக சொல்லிவிட்டு செல்ல... “திமிரு பிடிச்சவன்” என முணுமுணுத்தாள் திவ்யா.

ஹோட்டலின் நுழைவு வாயில் அருகே அனைவரும் தங்களின் கார்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
நெல்லையப்பன் நிதானத்தில் இல்லை என்பது அவர் தூணில் சாய்ந்திருந்த தோரணையில் இருந்தே தெரிந்தது. பாண்டியன் அவருக்கு அருகே நின்று கொண்டிருந்தான்.
“மார்க்ஸ் இங்க வா” என அதிகாரமாக அழைத்தார் நெல்லையப்பன். “சொல்லுங்கன்ணே” என மார்க்ஸ் அவர் அருகில் வந்தான்.
“மிஸ்டர் மேனன்” என அதிகார தோரணையில் அவரையும் கூப்பிட... “யோவ் மாமா இப்ப எதுக்குய்யா அவர கூப்புடுற” என மார்க்ஸ் மெதுவாக அவரிடம் கிசுகிசுக்க... பொறு என்பதாக அவர் கையைக் காட்டினார்.
மேனன் புன்னகையுடன் நெல்லையப்பன் அருகில் வர... “இந்த மார்க்ஸ் இருக்கானே இவன் உங்கள விட புத்திசாலி... இங்க இருக்கிற எல்லோரையும் விடவும் புத்திசாலி... உங்க பதவியை நியாயமா இவனுக்குத்தான் கொடுத்திருக்கணும்!”
நெல்லையப்பன் எப்போதும் இப்படித்தான். அவர் நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் எதையும் செய்வார். ஆனால் அது பெரும்பாலும் அருகில் இருப்பவனுக்கு பாதகமாகத்தான் போய் முடியும்.
மேனன் புன்னகையுடன், “என்னோட பதவிதானே... தாராளமா எடுத்துக்க சொல்லுங்க!”
“கிண்டல் இல்லடா சீரியஸா சொல்றேன்” என அவர் மேனனை பார்த்து சொல்ல அனைவரும் பதற... “பாண்டியா முதல்ல அவரைக் கூட்டிட்டு கிளம்பு” என்றான் மார்க்ஸ்.
“பொறுங்கடா ஏன் டென்ஷனாவுறீங்க... அவரைவிட வயசுல பெரியவன் நான். என் தம்பி மாதிரிடா அவரு... வாடா போடான்னு கூப்பிட்டா தப்பா... மேனன் என்னடா சொல்ற?”
மேனன் அதை ரசித்து சிரித்தபடி “சே...சே... இதுல என்ன தப்பு இருக்கு” என்றார்.
“பாருடா... அவனே சொல்றான் ஒண்ணும் இல்லன்னு”
“நெல்லையப்பன்...” என்றபடி தாட்சா அருகில் வந்தாள்.
“மேடம் மேடம்” என்றபடி வாயைப் பொத்திக் கொண்டார் நெல்லையப்பன். அவரை கன்ட்ரோல் பண்ணும் சக்தி அந்த அலுவலகத்தில் தாட்சாவுக்கு மட்டுமே உண்டு.
“என்ன நெல்லையப்பன் என்ன விஷயம்!”
“ஒண்ணும் இல்ல மேடம். சார்கிட்ட கிளம்புறேன்னு சொல்லிட்டு இருந்தேன். குட்நைட் சார்... மேடம் குட் நைட்” என்றபடி மீண்டும் அவர் ஹோட்டலுக்குள் நுழைய... “யோவ் மாமா அப்படி போனாதான் வீடு வரும்... இப்படி போனா திரும்பவும் பார் வந்திரும்” என்றான் பாண்டியன். அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
“எல்லாம் எனக்கு தெரியும்... அப்படி போயி பீச் ஓரமா நடந்து போயிரலாம்னு” என அவர் உளற...
“மாமாவுக்கு வண்டி வந்திருச்சு” என்றான் வினோ.
அவர் அவசரமாக வண்டியில் ஏறினார்....
“பாண்டியா” என மார்க்ஸ் கண்ணைக் காட்ட... “நான் பார்த்துக்கிறேன் தல” என பாண்டியனும் காரில் ஏறினான். காரின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த நெல்லையப்பன், “மேனன் இதை மனசுல வெச்சிக்கிட்டு என்ன வேலைய விட்டு அனுப்பிடாதே... இரண்டு புள்ளைங்க காலேஜ் படிக்குது... என் குடும்பத்த தெருவில நிறுத்துன பாவம் உனக்கு வர வேண்டாம்... நல்லவன் நீ அதெல்லாம் செய்ய மாட்டேன்னு தெரியும்... இருந்தாலும் சொல்றேன்!”
அனைவரும் சிரிக்க...
“இல்ல நெல்லையப்பன்... எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு” என சிரித்தார் மேனன். கார் கிளம்பியது.
தாட்சாவின் கார் வந்து நின்றது.
“நீங்க எப்படி போறீங்க?” என கேட்டாள் தாட்சா.
“ஆப்பிள் ஜூஸ் தானே... நானே ஓட்டிட்டு போயிடுவேன்!”
“உங்க வீட்டுக்கு எப்படி போகணும் ரைட்டா லெஃப்டா?”
“அது...” என யோசித்தவர், “கூகுளைத்தான் கேக்கணும்” என சிரித்தார் மேனன்.
“வாங்க உங்களை நானே டிராப் பண்ணிடுறேன்!”
“உங்களுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லையே...”
“பரவாயில்லயே உங்களுக்குக்கூட ஃபார்மலா பேச வருதே” என்றாள் தாட்சா.
மேனன் இரு கையையும் சரண்டர் என்பது போல தூக்கிக் காட்டியவர் தாட்சாவின் காரில் ஏறிக்கொண்டார்.
ஆபிஸ் கார் வந்து நிற்க... மார்க்ஸ் ஏஞ்சலைப் பார்த்தவன் “ஏறு” எனக் கதவைத் திறந்தான். அவள் அவனை முறைத்தவள் மானஸை பார்த்து திரும்பி ”பை மானஸ்... குட்நைட் டேக் கேர்” என அவனை அணைத்துவிட்டு விடைகொடுத்தாள். அவள் முகத்தில் மார்க்ஸை வெறுப்பேற்றிய சந்தோஷம் தெரிந்தது. மார்க்ஸ் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தான்.
அடுத்த கார் வர நந்திதாவும் மானஸும் காரில் ஏறினார்கள். மார்க்ஸ் திரும்பி திவ்யாவைப் பார்த்தான். அவள் கை கட்டி நின்று கொண்டிருந்த தோரணை அவள் அந்த காரில் போகப் போவதில்லை என்பதைச் சொல்லாமல் சொன்னது.
“திவ்யா வரலையா?” என நந்திதா கேட்டாள்.
“நீங்க போங்க நான் வரேன்!”
“எல்லோரும் ஒரே ஹோட்டலுக்குத்தானே போகணும்... வா திவ்யா ஒண்ணா போகலாம்” என்றான் மானஸ்.
“இல்ல மானஸ் நீங்க போங்க நான் வரேன்!”
மார்க்ஸையும் திவ்யாவையும் மாறி மாறி பார்த்தவன் "போலாம்” என்றான்... கார் கிளம்பியது.
நந்திதா கண்ணாடி வழியாக எட்டிப்பார்த்தவள் ”மார்க்ஸ் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்குங்க” எனச் சொல்லி சிரிக்க... மார்க்ஸ் புன்னகையுடன் தலையாட்ட... கார் நகர்ந்தது.
மார்க்ஸ் திரும்பி திவ்யாவின் அருகில் வந்து நின்றான்.
திவ்யாவும் அவனைப் பார்த்தபடியே நின்றாள்.
என்ன பேசுவது எனத் தெரியாமல் “டைம் ஆயிடுச்சு” என மார்க்ஸ் ஆரம்பிக்க...
“ஆமா ஆயிடுச்சு” எனச் சொன்ன திவ்யாவின் குரலில் கிண்டல் இருந்தது.
“அவங்களை டிராப் பண்ணிட்டு ஆஃபிஸ் வண்டியைத் திருப்பி வர சொல்லவா!”
“ப்ச்சு” என திவ்யா வேண்டாம் என்பதாகத் தலையாட்டினாள்.
“அப்புறம் எப்படி ஹோட்டலுக்கு... நான் வேணா டிராப் பண்ணவா?"
“உன் புல்லட்லயா?”
ஆமென மார்க்ஸ் தலையாட்டினான்...
“குடிச்சிட்டு வண்டி எப்படி ஓட்டுவ?”
“ஸ்... ஆமா... மறந்துட்டேன்...”
“நான் நடந்து போலாம்ன்னு யோசிக்கிறேன்” என்றாள் திவ்யா.
“இந்த நேரத்தில எப்படி தனியா போவீங்க?”
“அப்ப கூட வா” என அவள் நடக்கத் துவங்க....
“திவ்யா... திவ்யா” என மார்க்ஸ் அவள் பின்னால் ஓடி வந்தான்.

தாட்சாவின் கார் சாலையில் ஓடிக் கொண்டிருக்க... மேனனும் தாட்சாவும் மெளனமாக இருந்தார்கள்.
“மியூஸிக் ஏதாவது போடவா?” என மெளனத்தை உடைத்தாள் தாட்சா.
“நானே கேக்கலாம்னு நினைச்சேன்” என்றார் மேனன்.
தாட்சா சிஸ்டமை ஆன் செய்ய... சட்டென “மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ” என்ற பாடல் ஒலிக்க... ஒரு நொடியில் அந்த பாடல் மொத்த சூழலையும் மாற்றியது போல தோன்றியது தாட்சாவுக்கு!
என்ன உணர்வு இது என அவளுக்கு எரிச்சலாகவும் இருந்தது. ஆனால் அதைத் தூக்கி போட முடியாமல் பிடித்தும் இருந்தது.
“தாட்சா...”
“சொல்லுங்க...”
“தேங்க்ஸ்”
“எதுக்கு?”
“இந்த டிரைவ்... இந்த சாங்... ஆள் இல்லாத இந்த ரோடு... ரொம்ப நாள் கழிச்சு ஒரு மாதிரி சந்தோஷமா இருக்கு”
தாட்சா பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.
“நான் கூட சேர்ந்து பாடுனா உங்களுக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே!”
தாட்சா சிரித்தபடி இல்லை எனத் தலையாட்ட... மேனன் மளையாளம் கலந்த தமிழில் பாடலுடன் சேர்ந்து மெதுவாகப் பாட ஆரம்பித்தார். அவர் கண்ணை மூடி கைகளை உயர்த்தி பாடும் பாவனை ஏதோ ஒரு பெரிய பாடகரைப் போல் இருந்தது. ஆனால் அவர் பாடியது அப்படி இல்லை.
மேனனின் இந்தப் புதிய முகம் தாட்சாவுக்குள் மீண்டும் வியப்பை ஏற்படுத்தியது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றி கவலைப்படாமல் யாரையும் தொந்தரவு செய்யாமல் நாம் நினைக்கிற மாதிரி வாழ முடிவது பெரிய வரம். தாட்சாவுக்கு எஸ்.பி.பி-யின் குரலை விட மேனனின் குரல் பிடித்திருந்தது.
திவ்யாவும் மார்க்ஸும் ராதாகிருஷ்ணன் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். இரவு நேர சென்னை பேரழகு. மார்க்ஸுக்கு அது ரொம்பவும் பழக்கப்பட்ட ஒன்று.
பாரிமுனையில் இருந்து புல்லட்டை எடுத்து கொண்டு பெசன்ட் நகர் வரை வருவான். மோர் தாத்தாவை பார்த்து ஒரு மோர் குடித்துவிட்டு திரும்பி வந்து வேலையைத் தொடர்வான். அந்த பைக் பயணம், இரவு 2 மணிக்கு குடிக்கிற மோர் என அது வேறு மாதிரியான அனுபவம். எப்போதும் பரபரப்பாய் ஓடி விளையாடிக் கொண்டு இருக்கும் குழந்தை, அசதியாய் ஃபேன் காற்றில் தலைமுடி பறக்க படுத்து உறங்கும் அழகுதான் இரவு நேர சென்னை.
“என்னடா நடக்க வச்சிட்டாளேன்னு கடுப்பா இருக்கா?” என்றாள் திவ்யா.
“இல்லல்ல...”
“ஏன் டென்ஷனா இருக்கே...”
“டென்ஷன் எல்லாம் இல்ல... பாம்பே பொண்ண பத்திரமா கொண்டு போய் சேர்க்கணும்ல!”
“நிலா வெளிச்சத்தில இப்படி நடந்து போறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு... அதை அனுபவிக்கிறதை விட்டுட்டு எவனாவது பிரச்னை பண்ணுவானான்னு பயந்துகிட்டே வர்றயே”
“பயமெல்லாம் இல்ல... அக்கறைதான்!”
திவ்யா சிரித்தபடி “மார்க்ஸ்...”
“ம்”
“கர்ல் மார்க்ஸ்”
“சொல்லுங்க...”
“யாரு நீ”
“தெரியலயே?”
“நான் சொல்லவா... நீ ஒரு மந்திரவாதி!”
மார்க்ஸ் சிரித்தான்... “அப்படி என்ன மந்திரம் போட்டேன்!”
“ஒரு வாரத்துக்கு முன்னாடி நீ இருந்தா நான் வேலை செய்ய மாட்டேன்னு சார்கிட்ட சண்டை போட்டேன்... இப்ப உன் கூட தனியா நடந்து வந்துட்டு இருக்கேன்!”
மார்க்ஸ் அவளைப் புன்னகையுடன் பார்க்க... “இதுக்கு பேர் மேஜிக்கா இல்லையா?!”
"இல்லை" எனத் தலையாட்டியபடி சொன்னான் மார்க்ஸ்... “இதுக்கு பேர்தான் டெஸ்ட்டினி!”
“ஓ... அதுல எல்லாம் உனக்கு நம்பிக்கை இருக்கா?”
“பொதுவா கிடையாது... ஆனா உங்களைப் பார்த்த பிறகு இப்ப கொஞ்சம் நம்பிக்கை வருது...”
“என்னை முதல் தடவை கான்ஃபரன்ஸ் ரூம்ல பார்த்தப்பவே உத்து உத்து பார்த்தேல்ல?”
மார்க்ஸ் சிரித்தான்.
“பதில் சொல்லு சிரிக்காத...”
“ஆமா”
“ஏன் அப்படிப் பார்த்த?!”
“பார்க்காம இருக்கணும்னுதான் நினைச்சேன்... முடியல!”
“அதான் ஏன்?”
“இவ்வளவு அழகா இருந்தா என்ன பண்றது!”
“அதுவும் என் தப்புதானா?”
மார்க்ஸ் புன்னகையுடன், “இப்ப என்ன வேணும் உங்களுக்கு?”
“உனக்கு ரொம்ப திமிர்தான் இல்ல... ஒத்துக்கோ”
“ஆமா!”
“என்ன இப்படி சட்டுன்னு ஒத்துகிட்ட!”
“உண்மைன்னு தெரிஞ்சா அத உடனே ஒத்துக்க வேண்டியதுதானே... அது என்ன அரைமணி நேரம் கழிச்சு ஒத்துக்கிறது. தன்னம்பிக்கை கொஞ்சம் ஜாஸ்தியாகுறப்ப திமிரும் கூடவே வந்திடும். அந்தத் திமிரை ஜெயிக்கிறவங்க மேனன் சார் மாதிரி பெரிய ஆளாகிடுறாங்க... முடியாதவங்க என்ன மாதிரி சின்ன பையனாவே இருந்திடுறாங்க”
“நீயும் பெரிய ஆள்தான்... அதான் ஆபிஸே மார்க்ஸ் மார்க்ஸ்ன்னு உன்னைக் கொண்டாடுதே”
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல!”
“எனக்கும் உன்னைப் பிடிக்கும்” என்றாள் திவ்யா.
மார்க்ஸ் திரும்பி அவளைப் பார்க்க...
“குடிச்சிட்டு பேசுறேன்னு நினைக்காத!”
“அப்படி எல்லாம் நினைக்கல திவ்யா... அப்படியே இருந்தாலும் குடிச்சவங்க பெரும்பாலும் உண்மைதான் பேசுவாங்க!”
“உன்னை எனக்கு பிடிக்காது... ஆனா பிடிக்கும்... புரியுதா உனக்கு?”
“நல்லா புரியுது” என சிரித்தான் மார்க்ஸ்.
“இந்த டிஆர்பி கேம்ல நீ தோத்திருவ... என்னோட ஷோஸ்தான் ரேட்டிங் பண்ணும்!”
“சான்ஸ் இருக்கு...”
“ஆனா நீ தோத்துடக்கூடாதுன்னு மனசு சொல்லுது... அது ஏன்னு தெரியல... என்ன மாதிரி ஒருத்தி ஜெயிக்கிறதுல என்ன இருக்கு? ஆனா உன்னை மாதிரி ஒருத்தன் ஜெயிக்கிறப்ப அது நிறைய பேருக்கு நம்பிக்கை கொடுக்கும்!”
திவ்யாவின் அன்பான மனது மார்க்ஸை நெகிழச்செய்தது.
“கொஞ்சம் ரேட்டிங்குக்காகவும் ஷோ பண்ணேன். ஏன் அடம் பிடிக்கிற?!”
“ரேட்டிங் வரக்கூடாதுன்னு யாராவது ஷோ பண்ணுவாங்களா, என்ன?”
“சொன்னா ஒத்துக்கோங்க மிஸ்டர் மார்க்ஸ்!”
“சரிங்க... ரேட்டிங் வர்ற ஷோ பண்றேன் போதுமா!”
“நீ தோத்துட்டேன்னா என்கிட்ட வேலை செய்வியா?”
“மாட்டேன்”
“ஏன் மாட்டே... அப்படி என்ன ஈகோ உனக்கு?”
“ஈகோ எல்லாம் இல்ல!”
“அப்புறம் அதுக்குப் பேர் என்ன?”
“நம்ம ரெண்டு பேரும் எப்பவும் சரிசமமா இருக்கணும்னு தோணுது. ஒருத்தர் உசத்தி ஒருத்தர் குறைச்சல்னா அது சரியா வராது!”
அவள் சட்டெனத் திரும்பி பார்க்க...
வேகமாக ஒரு கார் அவளை உரசுவது போல கடந்து சென்றது..
மார்க்ஸ் சட்டென அவளது கரத்தை பிடித்து தன்பக்கமாக இழுத்தான். அவள் அவன் மேல் விழுந்து தடுமாறி தன்னை சமாளித்துக் கொண்டு நின்றாள்.
இருவரும் பேசிக் கொள்ளாமல் நடந்தனர்...
“ஹோட்டல் வந்திருச்சு” என்றான் மார்க்ஸ்.
திவ்யா திரும்பி ஹோட்டலைப் பார்த்தவள் மார்க்ஸின் பக்கம் திரும்பி “நீ எப்படி வீட்டுக்குப் போவ!”
“ஒரு ஆட்டோ எடுத்துட்டு போயிடுவேன்!”
“பை”
“பை” என சொல்லி மார்க்ஸை ஃபார்மலாக அணைத்து விடை கொடுத்தவள், விலகும் நேரம்... இருவரது கண்களும் அருகருகே சந்தித்துக் கொள்ள... தன்னையறியாமல் திவ்யா மார்க்ஸின் கன்னத்தில் முத்தமிட்டாள்!