Published:Updated:

இடியட் பாக்ஸ் : 17 ஒரு முத்தம் மார்க்ஸை என்னவெல்லாம் செய்யும்?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் : 17 ஒரு முத்தம் மார்க்ஸை என்னவெல்லாம் செய்யும்?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

கான்ஃபரன்ஸ் ரூம்.... மார்க்ஸ் தனது அணியுடன் அமர்ந்திருந்தான்.

எதிரில் திவ்யா அவளது டீமுடன் அமர்ந்திருந்தாள். தாட்சா, மேனன்

வருகைக்காக அவர்கள் அனைவரும் காத்திருந்தார்கள். மார்க்ஸ் பாண்டியனிடம் பேசியபடி தற்செயலாக அவளை ஏறிட்டு பார்ப்பது போலப் பார்த்தான். அவள் அவன் பார்வையை தவிர்ப்பதற்காக தன் கையில் இருக்கும் செல்போனை பார்ப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தாள். மார்க்ஸின் உள்ளுணர்வு ஏதோ தவறாக இருக்கிறது என்றது.

திவ்யாவின் பார்வை செல்போனில் இருந்தாலும் மனம் மார்க்ஸிடம்

'ஏன் இப்படி செய்தாய்?' எனக் கேட்டு விடத் துடித்துக் கொண்டிருந்தது.

ஏஞ்சலிடம் சொன்னதுபோல தனது சகாக்கள் அனைவரிடமும் தான் முத்தம் கொடுத்ததை பற்றி நிச்சயம் மார்க்ஸ் சொல்லியிருப்பான் என்றே அவள் நம்பினாள்.

“அந்த மும்பைகாரிய ஒரே வாரத்தில தட்டி தூக்கிட்டேன் பாரு” என அவன் பெருமைபட்டிருக்க கூடும். “அவளுக எல்லாம் இப்படிதாண்டா... ஈஸியா வந்திருவாளுங்க” என அவன் தன்னை பற்றி தரக்குறைவாக பேசி சிரித்திருக்க கூடும் என்றெல்லாம் பல்வேறு உரையாடல்கள் அவள் மனதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

அவளுக்கு அவள் மேலேயே கோபம் வந்தது. நிமிர்ந்து அந்த அறையில் இருக்கும் யாருடைய முகத்தையும் பார்க்க தைரியமில்லாமல்

தலை குனிந்தபடியே இருந்தாள். அனைவரும் தன்னையே ஏளனமாக பார்த்துக் கொண்டிருப்பதுபோல அவளுக்குத் தோன்றியது. திவ்யா தர்மசங்கடமாக உணர்ந்தாள். மார்க்ஸைப் பார்க்கும்போதெல்லாம் தனக்குள் ஏற்பட்ட இனிய உணர்வு இத்தனை சீக்கிரம் கசப்பாக மாறும்

என அவள் எதிர்பார்க்கவில்லை.

ஏஞ்சல் குழப்பமாக அமர்ந்திருந்தாள். மார்க்ஸ் சொன்னதை திவ்யாவிடம் சொன்னபோது அவள் அதிர்ச்சியடைந்ததை

பார்த்தால் நிஜமாகவே அது நடந்திருக்குமோ என அவளுக்கு

சந்தேகமாக இருந்தது. அப்படி 'ஒருவேளை நடந்திருந்தால்'...

அந்த எண்ணமே அவளால் தாங்கிக் கொள்ள முடியாததாக

இருந்தது. திவ்யா எதிலும் ஒட்டாமல் மெல்லிய பதற்றத்துடன் அமர்ந்திருந்த விதம் மேலும் அவளது சந்தேகத்தை

வலுப்படுத்துவதாக இருந்தது.

மேனனும் தாட்சாவும் அறைக்குள் நுழைந்தனர்.

“குட்மார்னிங் கைஸ்” என்றபடி மேனன் அமர... அவர் பக்கத்தில்

தாட்சாவும் அமர்ந்தாள். அனைவரும் புன்னகையுடன் ''மார்னிங் சார்''

என்றார்கள்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“இன்னைக்கு மீட்டிங்ல நம்மளோட புது சீரியல்களை எந்த புரொடக்‌ஷன்

கம்பெனிகளுக்கு குடுக்கப் போறோம்.. அந்த புராஜக்ட்ஸோட லீட் ரோலுக்கு எந்த ஆர்ட்டிஸ்ட் எல்லாம் அப்ரோச் பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணலாம்'' என்றாள் தாட்சா...

“எங்க பிரசன்டேஷனை ஆரம்பிக்கலாமா மேடம்” என்றான் பாண்டியன்.

தாட்சா தலையாட்டினாள்...

பாண்டியன் லேப்டாப்பை தட்ட திரையில் அவர்கள் திட்டம் விரிந்தது.

அனைவரும் அதைப் பார்த்தனர்... ஏஞ்சல் அதிர்ச்சியாகி அவரசமாக எழுந்தாள்.

“சார் இது நாங்க பிளான் பண்ணது.... எங்க பிரசன்டேஷனைத் திருடி

அவங்களோடதுன்னு பிரசன்ட் பண்றாங்க சார்... இது சீட்டிங் சார்” என அவள் கோபமாக மார்க்ஸை பார்த்தபடி சொன்னாள்.

திவ்யாவுக்கும் அது ஆச்சரியமாக இருந்தது... யாருக்கெல்லாம் சீரியல்

கொடுக்கலாம், யாரை எல்லாம் நடிக்க வைக்கலாம் என ஏஞ்சல்

தன்னிடம் காட்டிய பிரசன்டேஷன் அப்படியே திரையில் இருந்தது.

திவ்யா திரும்பி மார்க்ஸைப் பார்த்தாள். அவன் புன்னகைத்தான்.

திவ்யா கோபமாக அவனை முறைத்தாள்.

“சார் இது எங்க பிளான் சார்” என மீண்டும் கோபமாக ஏஞ்சல்

ஆரம்பித்தாள்.

“ ஏஞ்சல் ஒரு நிமிஷம்.... ஒரு நிமிஷம்... இந்த புரொடியூசர்ஸ்க்கு எல்லாம் சீரியல் குடுக்கலாம்னு நீங்க யோசிக்கிறீங்க அதான” எனக் கேட்டார் மேனன்.

“யெஸ் சார்”

“இந்த ஹீரோயின்ஸை எல்லாம் உங்க சீரியல் லீட்காக அப்ரோச்

பண்ணப் போறீங்க”

“யெஸ் ஸார்”

“தாராளமா நீங்க பண்ணலாமே”

“சார்” எனப் புரியாமல் ஏஞ்சல் கேட்க...

“இந்த புரொடியூசர்ஸ்... இந்த ஹீரோயின்ஸ் எல்லாம் எங்களுக்கு

வேணாம்னுதான் அவங்க சொல்றாங்க... அந்த ஸ்லைடை நல்லா பாருங்க”

மார்க்ஸ் டீமில் அனைவரும் சிரித்தனர்.

திவ்யாவும் ஏஞ்சலும் கவனிக்க...

மேனன் சொன்னதைப்போல நாங்கள் இவர்களைப் பயன்படுத்த

போவதில்லை என்பது சற்று சின்ன எழுத்துக்களில் அந்த

ஸ்லைடில் இருந்தது. தங்களுடைய ஸ்லைடை அப்படியே

திருடி அதில் இவர்கள் தேவையில்லை என்பதை மட்டும்

அவர்கள் சேர்த்திருந்தார்கள். கோபத்தில் ஏஞ்சல் அதை

கவனிக்கவில்லை.

“எங்கௐளைப் பத்தி தப்பா நினைக்கிறதே ஏஞ்சலுக்கு வேலையா

போச்சு சார்” என்றான் பாண்டியான்.

ஏஞ்சல் பதில் சொல்ல முடியாமல் தடுமாற...

“பாண்டியன் நீங்க யார யூஸ் பண்றீங்கன்னு தான் பிரசன்ட்பண்ணணும்... யார் வேணாம்கிற ஸ்லைட் தேவையில்லை” என அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் தாட்சா.

“யெஸ் மேடம்” எனப் பாண்டியன் அடுத்த ஸ்லைடை மாற்றப்போக

“ஒரு நிமிஷம்” என மேனன் குறுக்கிட்டார்.

“ஏஞ்சல் இதுதான் நீங்க செலக்ட் பண்ண புரொடியூசர் லிஸ்ட் இல்லையா?''

“யெஸ் சார்”

“எதுக்காக இவங்களை நீங்க சூஸ் பண்ணீங்க”

“சார் அதுல 2 பேர் லீடிங் டெலிவிஷன் ப்ரொடியூசர்ஸ்.. இன்னொரு மூணு

பேர் பெரிய சினிமா ப்ரொடியூசர்ஸ்... நிறைய சக்சஸ்ஃபுல் படமெல்லாம்

பண்ணியிருக்காங்க சார். அவங்க டிவிக்கு பண்றதுக்குத்தயாரா இருக்காங்க” என்றாள் ஏஞ்சல்...

“நல்ல சாய்ஸ்...”

“தேங்ஸ் சார்”

“இவங்களை ஏன் நீங்க வேணாம்ன்னு சொல்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என மார்க்ஸைப் பார்த்து மேனன் கேட்டார்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“சார் அவங்க சொல்ற டிவி ப்ரொடியூசர்ல முதல் ஆள்

ஏற்கெனவே நமக்கு ப்ரொடியூஸ் பண்ண ஆள்தான் சார். அடுத்த

சேனல்ல நம்மளைவிட பட்ஜெட் ஜாஸ்தியா தரேன்னு சொன்னதும்

அங்க ஓடிட்டாரு... இப்ப திரும்பவும் அந்த சேனல்ல பிரச்னைன்னு

இங்க வரேன்றாரு!”

மார்க்ஸின் மேல் கோபம் இருந்தாலும் அவனைப் பார்த்து ஆச்சர்யமாகவும் இருந்தது திவ்யாவுக்கு. அவனது வார்த்தைகள்

எதுவும் அவசரத்தில் கொட்டப்படுவதில்லை. அதற்கு பின்னால்

தெளிவான ஒரு பார்வை இருப்பதை திவ்யா பல தருணங்களில்

உணர்ந்திருக்கிறாள். இப்போதும் அப்படித்தான்.

“அடுத்த ப்ரொடியூசர் அவரோட கம்பெனி பேர்ல பண்ண மாட்டாரு...

ஏன்னா அப்படி பண்ணா அவருக்கு அந்த சேனல்ல பிரச்னை வரும்”

என்று சொல்லிவிட்டு மார்க்ஸ் ஏஞ்சலைப் பார்த்தான்.

“அப்படியா ஏஞ்சல்” என மேனன் கேட்டார்.

“பேர்ல என்ன சார் இருக்கு... அதே டீம்தான் பண்ண போறாங்க”

என ஏஞ்சல் சமாளிக்க முயல...

“பேர்ல தான் சார் எல்லாம் இருக்கு... அது தான் பிராண்ட். ஏதோ ஒரு பேர்ல பண்ணும்போது அது ஜெயிச்சா என்ன தோத்தா என்ன என்ற யோசனைதான் அவருக்கு இருக்கும். அவரோட பேர்ல பண்ணாதான் அது சரியா வரும். பணத்தை ஒரே நாள்ல கூட சம்பாதிக்க முடியும் ஆனா, பேரை அப்படி சம்பாதிக்க முடியாது. அதனாலதான் பெரிய நிறுவனங்கள் லாபத்தை விட பேர முக்கியமா நினைக்கிறாங்க!”

“கரெக்ட்” என்றார் மேனன்...

“சார் நம்மளோட பட்ஜெட் ரொம்ப சின்னது... பல கோடிகள்ல படங்கள எடுத்த ப்ரொடியூசர்ஸ்க்கு இதுல வர்ற லாபம் ரொம்ப சின்னதாதான் தெரியும்... அது அவங்களை மோட்டிவேட் பண்ணாது. சும்மா இருக்கிறதுக்கு டிவியில ஒண்ணு ட்ரை பண்ணி பாக்கலாம்னு ட்ரை பண்ணுவாங்க... இல்ல ப்ராஜெக்ட்டை வாங்கிட்டு ஒரு சின்ன லாபத்தை எடுத்துக்கிட்டு வேற யார் கிட்டயாவது கைமாத்தி குடுத்து ப்ரொடியூஸ் பண்ணுவாங்க. அவங்களுக்கு லாபம்தான் நோக்கமா இருக்கும். இதுக்கு மேல அவங்க ப்ரூவ் பண்றதுக்கு எதுவும் இருக்காது” என்றான் மார்க்ஸ்.

அவன் பேச்சில் நியாயம் இருப்பதாக திவ்யாவுக்குத் தோன்றியது. “இவன் பேச்சு வேற... ஆனா நடந்துக்கிறது வேற” என்ற எண்ணமும் அவளுக்குக் கூடவே வந்தது.

“மார்க்ஸ் எனக்கு தெரிஞ்சு சில நல்ல ஃபிலிம் புரடியூசர்ஸ் இருக்காங்க... அவங்க டிவியை ஃபியூச்சரா பார்க்குறாங்க...

சின்சியரா பண்ணனும்னு ஆசைப்படுறாங்க.... அதுமாதிரி

ஆளுங்களும் இந்த லிஸ்ட்ல இருக்கலாம் இல்லையா” என மேனன் கேட்டார்

“இருக்கலாம் சார்” என்றான் மார்க்ஸ்.

“அது இருக்கட்டும் ஏன் ஃபிலிம் ஹீரோயின்ஸ் வேணாம்ன்னு

சொல்றீங்க... அவங்க டிவிக்கு வர்றாங்கன்றதே நமக்கு

பெரிய ப்ரமோஷன் இல்லையா”

“ரொம்ப சிம்பிள் சார்... பட்ஜெட்.... நம்ம பட்ஜெட்ல பாதிக்கு

மேல அவங்களுக்கு கொடுக்க வேண்டியது இருக்கும். மீதி

பணத்துலதான் சீரியலுக்கான செலவு எல்லாம் பண்ண வேண்டியிருக்கும். குவாலிட்டியா பண்ண முடியாது சார்.

ஹீரோயின் மட்டும்தான் நம்ம சீரியல்ல இருப்பாங்க... சீரியல் ரொம்ப பாவமா இருக்கும் சார்!”

மேனன் சிரித்தார்.... அது மார்க்ஸின் கருத்தை ஆமோதிப்பதாக

இருந்தது.

“அப்ப யார் தான் நமக்கு ப்ரொடியூஸ் பண்ணுவாங்க” என்றாள்

தாட்சா.

“நல்ல டெக்னீஷியன்ஸ்க்கு நம்ம வாய்ப்பு கொடுக்கலாம் தாட்சா.

வெறும் காசு போடுற ப்ரொடியூசரா இல்லாம இதைக் கனவா

நினைக்கிறவங்களுக்கு வாய்ப்பு குடுக்கலாம். கிரியேட்டிவா

தங்களை இன்வால்வ் பண்ணிக்கிற ஆளுங்களா இருந்தா பெட்டர்!”

“அவங்க மட்டும் பணம் சம்பாதிக்கணும்ன்னு ஆசைப்படமாட்டாங்களா”

என்றாள் ஏஞ்சல்.

“நிச்சயமா ஆசைப்படுவாங்க... ஆனா அவங்களோட பேரை

கெடுத்து பணம் பண்ணனும்னு ஆசைப்பட மாட்டாங்க.

பெரிய நிறுவனங்களுக்கு

இது பத்துல ஒண்ணு. இவங்களுக்கு இது தான் அவங்களோட

லைஃபாவே இருக்கும். புது ஆர்ட்டிஸ்ட் யூஸ் பண்றப்ப அவங்க கேரக்டரா இருப்பாங்க

எங்கேயும் ஆர்ட்டிஸ்டா தெரிய மாட்டாங்க” என்றான் மார்க்ஸ்.

“இதை நான் ஒத்துக்க மாட்டேன்” என கோபமாக ஏஞ்சல் ஆரம்பிக்க,

“ஒத்துக்க வேணாம்” என்றார் மேனன்.

இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

“திவ்யா நீங்க நம்புற விஷயங்களை நீங்க பண்ணுங்க... மார்க்ஸ்

நம்புறதை அவர் பண்ணட்டும்... ரெண்டுலயுமே ப்ளஸ் மைனஸ் இருக்கு...

பண்ணி பார்த்து கத்துக்கலாம்... என்ன நெல்லையப்பன்?!” என மேனன் கேட்க அவர் பவ்யமாக எழுந்து கும்பிட்டபடி

“முதலாளி சொன்னா சரிதான்” என்றார்.

அனைவரும் சிரித்தனர். தாட்சாவாலும் மேனனாலும் கூட சிரிப்பை

அடக்கமுடியவில்லை. இறுக்கமான அந்த சூழல் நெல்லையப்பனால்

சிரிப்போடு இயல்புக்கு மாறியது.

திவ்யா தனது அறைக்குள் நுழைந்தாள். கையிலிருந்த நோட்டை

தூக்கி மேஜையில் போட்டுவிட்டு எரிச்சலாக சேரில் அமர்ந்தாள்.

கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. அவள் திரும்பிப்பார்க்க

நெல்லையப்பன் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்.

எதற்கு இந்த ஆள் வந்திருக்கிறான் என யோசனையுடன்

அவள் அவரை உள்ளே வருமாறு சைகை காட்ட நெல்லையப்பன்

உள்ளே நுழைந்தார்.

“தப்பா எடுத்துக்க கூடாது... உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்”

என தயக்கமாக அவர் கேட்க...

“என்ன”

“இத போய் நாலு பேர் கிட்ட எதுக்கு விசாரிச்சிக்கிட்டு... அதான்

உங்ககிட்டயே நேர்லயே கேட்டுக்கலாம்னுதான்”

என நெல்லையப்பன் பேசிக் கொண்டிருக்கும் போதே கோபமாக

குறுக்கிட்ட திவ்யா “ஆமா... நேத்து ராத்திரி நான் மார்க்ஸூக்கு

முத்தம் குடுத்தேன் போதுமா” என சொல்ல அதிர்ந்து போனார்

நெல்லையப்பன். அவர் கேட்க வந்தது அவளது நட்சத்திரம், ராசி

என்ன என்பதை. ஆனால் அவருக்கு கிடைத்த பதிலோ கோடி

ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று...

“கன்பார்ம் பண்ணியாச்சில்ல... இடத்த காலி பண்ணுங்க” என

கோபமாக அவள் பேச நெல்லையப்பன் அதிர்ச்சி மாறாமல்

அங்கிருந்து நகர்ந்தார்.

இதை யாரிடம் சொல்லலாம் என அவர் மனசு பரபரத்தது.

அவர் அவசரமாக பாத்ரூமுக்குள் நுழைய அங்கு ஏற்கனவே

பாண்டியன் சுவரை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

“ஏய் பாண்டியா நேத்து ராத்திரி எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு… அது பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம நீ

ஒண்ணுக்கு போயிட்டு இருக்க!”

“ஓவரா பில்டப் பண்ணாம என்னன்னு சொல்லு மாமா”

“பார்ட்டி முடிஞ்சு திவ்யாவோட மார்க்ஸ் போனான் இல்ல”

“ஆமா அதுக்கென்ன இப்ப”

“அவன் திவ்யாவை கிஸ் அடிச்சிட்டான்பா!”

“தலய பத்தி தப்பா பேசாத மாமா” என பாண்டியன் கோபமானான்.

“தப்பு தப்பு... மார்க்ஸ் கிஸ் அடிக்கல அந்த திவ்யாதான்

மார்க்ஸை கிஸ் அடிச்சிருச்சு!”

“இந்த மாதிரி புரளியெல்லாம் யார் உனக்கு சொல்றது”

“திவ்யாவே சொல்லிச்சுப்பா”

பாண்டியன் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக நெல்லையப்பனைப் பார்க்க...

“அப்படியா” என்ற குரல் மூடியிருந்த கழிவறையில் இருந்து வர... இருவரும் அதிர்ச்சியாக சத்தம் வந்த கழிவறையை திரும்பிப் பார்க்க.... மற்றொரு கழிவறையில் இருந்து “மார்க்ஸூக்கு மச்சம்ப்பா” என்றது இன்னொரு குரல். பாண்டியனும் நெல்லையப்பனும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றார்கள்...

அலுவலக பாத்ரூம்களில்தான் பெரும்பாலும் ரகசியங்கள்

பேசிக் கொள்ளப்படும். ஆதங்கங்கள் வெறுப்புகள், 'அப்படியாமே இப்படியாமே' என்ற ஊகங்கள் எல்லாமே பரிமாறிக்

கொள்ளப்படும் இடம் அதுதான். சிறுநீர் கழிப்பதற்காக நின்றபடி

அருகில் இருப்பவர்களிடம் பேசுவது என்பது இயல்பான ஒன்று.

ஆனால் ஏன் அப்போது மட்டும் இது மாதிரியான விஷயங்களை

பேசத் தோன்றுகிறது என்பது யாருக்கும் புரியாத விஷயம்தான்.

ஆள் இல்லாத ஒரு சின்ன அறையில் இரண்டு பேர் தனித்து இருக்க நேரும் போது மூன்றாவதாக ஒருவரை பற்றித்தான் பேசிக்கொள்ளத் தோன்றும் போல...

அப்படி ரகசியம் பேசுவதற்க்கு முன்னால் எப்போதுமே மூடியிருக்கும்

கழிவறைகளை ஒரு தடவை தள்ளிப் பார்த்து அதில் யாரும்

இல்லை என்பதை ஊர்ஜிதம் பண்ணிக் கொண்டு பேசத் தொடங்குவது என்பது பெரும்பாலனவர்களின் வழக்கம். நெல்லையப்பனுக்கு கூட

அது பழகிப்போன ஒன்றுதான். ஆனால் அவசரத்தில் அவர் கவனிக்க தவறியதன் விளைவு செய்தி இன்னும் இரண்டு பேருக்கு போய் சேர்ந்துவிட்டது. நெல்லையப்பனுக்கு தெரியும் மதியத்திற்க்குள் அது மொத்த அலுவலகத்திற்க்கும் போய் சேர்ந்து விடும் என்று.

மொட்டைமாடியில் மார்க்ஸ் சிகரெட் பிடித்தபடி நின்று கொண்டிருக்க

அவனைத் தேடி டார்லிங் வந்தான். படியேறியதில் மூச்சு வாங்கியது

அவனுக்கு...

மார்க்ஸ் சிகிரெட் பெட்டியை அவனை பார்த்து நீட்டினான்.

அவன் வேண்டாம் என தலையாட்டியபடி “உன் கிட்ட

ஒண்ணு சொல்லணும் தல”

“என்னடா?”

“நீயும் திவ்யாவும் கிஸ் பண்ணிக்கிட்டீங்கன்னு ஆபிஸ் முழுக்க

பேச்சா இருக்கு”

சட்டெனத் தூக்கி வாரிப்போட்டது மார்க்ஸுக்கு....

டார்லிங்கிடம் ஒரு நல்ல குணம் உண்டு. ஒருவரைப்பற்றி

ஏதாவது கேள்விப்பட்டால் அடுத்து அவன் பேசக் கூடியது

நேரடியாக சம்பந்தப்பட்ட நபரிடம் மட்டும்தான். “உங்களைப்பத்தி இப்படி

ஒரு பேச்சு ஓடுது... பார்த்துக்குங்க” என சொல்லிவிட்டு

சென்று விடுவான். இதனால் அவன் பலபேரை பகைத்துக்

கொண்டதுண்டு. ஆனால், அவன் அவனை மாற்றிக் கொள்ளவில்லை

ஒருவரை பற்றி அவரிடம் மட்டுமே பேச வேண்டும் என்பதை

அவன் கொள்கையாகவே வைத்திருந்தான்.

“உன்கிட்ட சொன்னது யாரு?” என மார்க்ஸ் கேட்டான்...

“வத்திக்குச்சிதான்”

வத்திக்குத்தி சண்முகத்துக்கு தெரிந்துவிட்டது என்றால்

அது மொத்த அலுவலகத்திற்கும் தெரிந்து விட்டது என்றுதான் அர்த்தம். இதை வேறுயாரும் திவ்யாவிடம் சென்று சொல்வதற்கு முன்னால் ஒரு முறை திவ்யாவை சந்தித்து

விட வேண்டும் எனத் தோன்றியது மார்க்ஸுக்கு...

“தேங்ஸ்டா” என டார்லிங்கின் தோளைத் தட்டிவிட்டி அங்கிருந்து

அவசரமாக நகர்ந்தான் மார்க்ஸ்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

திவ்யா தனது அறையில் கோபமும் வெறுப்புமாக அமர்ந்திருக்க,

நந்திதா உள்ளே நுழைந்தாள்...

“ஏய் ஃபிராடு சொல்லவே இல்லை”

“என்ன சொல்லல” என முகம் மாறி திவ்யா கேட்டாள்.

“மார்க்ஸூம் நீயும் இச் இச்சாமே”

பல்லைக் கடித்தபடி “யாருடி சொன்னாங்க அப்படி”

“ப்ரமோ டீம்ல பேசிக்கிட்டாங்க.... ஆமாவா இல்லையான்னு

மட்டும் சொல்லு நான் போய்கிட்டே இருக்கேன்!”

திவ்யா பதில் சொல்ல வாயைத்திறக்கப் போகும் சமயம் மார்க்ஸ் அவசரமாக கதவை தள்ளியபடி உள்ளே

நுழைந்தான். திவ்யாவை மார்க்ஸை கோபமாக பார்க்க

மார்க்ஸ் தயங்கி நிற்க...

இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு “நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்” என நந்திதா அங்கிருந்து நகர்ந்தாள்

மார்க்ஸும், திவ்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.