திவ்யா தனது அணியுடன் கான்ஃபரன்ஸ் அறையில் அமர்ந்திருந்தாள். இரவு மணி பத்தை கடந்திருந்தது. மொத்த அலுவலகமும் இருளில் இருக்க, கான்ஃபரன்ஸ் அறை மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
திவ்யாவுக்கு எதிரே ஏஞ்சல், மானஸ், தனபால் என அவளது அணியினர் மொத்தமும் அமர்ந்திருந்தார்கள்.
“இன்னும் 45 நாள்தான் இருக்கு நம்மளோட ஷோஸை லான்ச் பண்றதுக்கு” என்றாள் திவ்யா.
“இன்னும் ஒரு டூ வீக்ஸ் எக்ஸ்டென்ஷன் கேட்டுப் பார்க்க முடியாதா?” எனத் தயக்கமாகக் கேட்டாள் ஏஞ்சல்.
“சான்சே இல்லை!” என்றாள் திவ்யா
“நம்ம மேனன் சார் தானே திவ்யா.... சொன்னா புரிஞ்சுக்க மாட்டாரா?” என்றாள் ஏஞ்சல்
“இந்தத் தேதிக்குள்ள லான்ச் பண்ணுன்னு அவர் எப்பவுமே ஆர்டர் போட்டதில்ல. நம்மகிட்டதான் உனக்கு எவ்வளவு டைம் வேணும்னு கேட்பாரு. நாம எவ்வளவு தள்ளி வேணா ஒரு டேட் சொல்லலாம். பிரச்னையில்லை... ஆனா சொன்ன நேரத்தில அந்த வேலைய முடிக்கலைன்னா...” என திவ்யா நிறுத்த...
“என்ன பண்ணுவாரு?” என்றாள் ஏஞ்சல்.
“எனக்குத் தெரியல... ஏன்னா ப்ராமிஸ் பண்ண டேட்டை நான் எப்பவும் மிஸ் பண்ணதில்லை!”
அறையில் அமைதி நிலவியது.
“45 நாள் இருக்குல்ல பண்ணிரலாம் திவ்யா” என்றான் மானஸ்.
”ஆமா டே அண்ட் நைட் வொர்க் பண்ணியாவது சொன்ன டேட்ல ஷோஸை லான்ச் பண்ணிடலாம் ” என்றாள் ஏஞ்சல்.
“எனக்குப் புரியுது... கஷ்டமான டார்கெட்தான். ஆனா பண்ணிட முடியும்!” என திவ்யா சொல்லி முடிக்க அறைக் கதவு தட்டப்பட்டது. அனைவரும் திரும்பிப் பார்க்க, கண்ணாடி கதவுகளை தள்ளிக் கொண்டு கையில் தட்டுகள் மற்றும் உணவு பொருட்களுடன் ஹவுஸ் கீப்பிங் ஆட்கள் உள்ளே நுழைந்தார்கள்.
“ஆச்சர்யமா இருக்கு... நம்ம ஆபிஸ்ல டின்னர் எல்லாம் அரேஞ்ச் பண்ணியிருக்காங்க” என்றார் தனபால்.
“அதானே... வழக்கமா நம்மள கண்டுக்கவே மாட்டாங்களே” என்றான் குரு.
“என்ன திவ்யா உங்க ஏற்பாடா” என ஏஞ்சல் கேட்டாள்.
“இல்ல... இல்ல எனக்கு எதுவும் தெரியாது”
“அட்மின் ஆளுங்களுக்கு ஏதாவது மெயில் வந்திருக்கும்... ஆராயறதை விட்டுட்டு அனுபவிப்போம்!” என்றான் தனபால்.
அனைவரும் ப்ளேட்டுகளை எடுத்து கொண்டு சாப்பிடத் தயாரானார்கள். அனைவருக்குமே நல்ல பசி... வாசம் வேறு பசியை இன்னும் அதிகமாக்கியது. திவ்யாவும் பசியோடுதானிருந்தாள். 8 மணிக்கு முடியும் என நினைத்த மீட்டிங் பத்தை தாண்டிவிட்டது. அவள் தட்டை கையில் எடுக்க, “மேடம் உங்களோட சாப்பாடு இங்க இருக்கு” என தனியாக ஒரு கவரை நீட்டினான் ஹவுஸ் கீப்பிங் பையன்.
அவள் சற்று ஆச்சர்யத்துடன் அதைப் பிரித்தாள். ஆப்பம் எக் மசாலா, பொரிச்ச கோழி, பருப்பு... அதோடு இளநீர் புட்டிங் ஒன்றும் இருக்க அவளது ஆச்சர்யம் இன்னும் அதிகமானது. அவளது ஃபேவரைட்!
டின்னர் என்றால் அது இதுதான்.
“இது யார் ஆர்டர் பண்ணாங்க?” என திவ்யா கேட்க “தெரியல மேடம்” என்றான் பையன்.
அவள் யோசனையுடன் சாப்பிடத் தொடங்கினாள். உணவு இதமாகத் தொண்டையில் இறங்கியது. உணவின் சுவை என்பது உணவில் மட்டுமில்லை. பசியிலும் இருக்கிறது. பசியோடு இருக்கும் போது பரிமாறப்படும் உணவு அமிர்தம்.
சாப்பிட்டு முடித்து அனைவரும் கிளம்பத் தயாரானார்கள்.
“திவ்யா நான் கீழ வெயிட் பண்றேன். ஒரே கார்ல போயிடலாம்” எனச் சொல்லி நகர்ந்தான் மானஸ்.
சென்னை வந்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. வீடு கிடைக்கும்வரை கம்பெனி அவர்களுக்கு ஹோட்டல் வசதியை அளித்திருந்தது. “சீக்கிரமே வீடு பார்த்து மாற வேண்டும்” என நினைத்துக் கொண்டாள் திவ்யா. பெசன்ட் நகரில் கடலைப் பார்த்த வீடுதான் வேண்டும் என நந்திதா தேடிக் கொண்டிருக்கிறாள். எப்போது கிடைக்குமோ தெரியவில்லை.
திவ்யா தனது அறையில் இருந்து லேப்டாப் பேக்கை எடுத்தபடி வெளியவர அருகில் இருக்கும் மார்க்ஸின் அறை கண்ணில் பட்டது. மெதுவாக நடந்து அவன் அறைக்கு அருகில் வந்து நின்றாள். கண்ணாடி அறைதான் என்றாலும் உள்ளே இருப்பது தெரியாமல் இருளில் மூழ்கி இருந்தது.
அந்த அறையை கடந்து செல்லும் போதெல்லாம் ஓரக்கண்ணால் மார்க்ஸ் இருக்கிறானா எனப் பார்த்தபடி கடந்து போது அவளது வழக்கம். அப்போதெல்லாம் மனசு காரணமில்லாமல் படபடவென அடித்துக் கொள்வதை உணர்ந்திருக்கிறாள் அவள். அறைக்குள் அவன் இருக்கிறானா எனப் பார்க்கவே கூடாது என ஒவ்வொரு முறை நினைத்துக் கொண்டாலும் அவளை அறியாமல் பார்வை திரும்புவதை அவளால் தவிர்க்க முடிவதில்லை.
அவளது இதழில் புன்னகை மலர்ந்தது. அவள் மெதுவாக அந்த அறையின் கண்ணாடி கதவில் கை வைக்கப்போக சட்டென அறையின் உள்ளே பளிச் என விளக்கு எரிந்தது. அதை கொஞ்சமும் எதிர்பார்க்காத திவ்யா ஒரு கணம் திடுக்கிட்டவள் சுதாரித்துக் கொண்டு அறையின் உட்புறம் பார்க்க... கண்ணாடி கதவின் மறுபுறம் மார்க்ஸ் நின்று கொண்டிருந்தான்.
திவ்யா கோபமாக அறைக்கதவை திறந்தவள், “நான் பயந்தே போயிட்டேன் என்ன இதெல்லாம்?” எனக் கேட்க மார்க்ஸ் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தான்.
“என்ன என்னை வேவு பாக்குறயா?”
“ஏங்க நான் என் ரூம்ல உட்கார்ந்துகிட்டு இருக்கேன். என்ன போயி இப்படிச் சொன்னா எப்படி?”
“எதுக்கு இப்படி இருட்டுல பேய் மாதிரி உட்கார்ந்துகிட்டு இருக்க?”
“சும்மா உட்கார்ந்து யோசிச்சிக்கிட்டு இருந்தேன். இப்படி நீங்க வந்து நிப்பீங்கன்னு நான் நினைக்கல” எனப் புன்னகையுடன் மார்க்ஸ் சொல்ல திவ்யாவை வெட்கம் பிடுங்கித் தின்றது. அதை கோபத்தால் மறைக்க முயன்றாள் அவள்.
“அப்படி என்னங்க பார்த்துக்கிட்டு இருந்தீங்க?” என மார்க்ஸ் கேட்டான்.
“நம்ம உயிருக்கு உயிரா நேசிக்கிற ஒரு இதயம் இந்த ரூம்லதான வாழ்ந்துகிட்டு இருக்குன்னு ஃபீலிங்கா பார்த்துகிட்டு இருந்தேன் போதுமா?!” என கிண்டலும் கோபமுமாக திவ்யா சொன்னாள்.
“நீங்க கிண்டலா சொல்ற மாதிரி உண்மையை சொல்லிட்டீங்க...” என்றபடி மார்க்ஸ் சிரித்தான்.
திவ்யா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாற அங்கு வந்த ஹவுஸ் கீப்பிங் பையன், “அண்ணா மொத்தம் 2800 ரூபா ஆச்சுன்னா” என ஹோட்டல் பில்லையும் மீதி பணத்தையும் தர சட்டென திவ்யாவுக்கு அவன்தான் உணவு ஆர்டர் செய்திருக்கிறான் என்பது புரிந்தது.
அதை எதிர்பார்க்காத மார்க்ஸ், “பேலன்ஸ் நீயே வச்சுக்க... கிளம்பு” என அவசரமாக அவனைத் துரத்த திவ்யா அவனை பொய்கோபத்துடன் பார்த்தாள்.
மார்க்ஸ் மாட்டிக் கொண்ட பாவனையில் விழிக்க “நீ தான் ஃபுட் ஆர்டர் பண்ணதா?” என்றாள் திவ்யா.
“அது வந்து...”
“என் டீமுக்கு நீ ஏன் ஃபுட் ஆர்டர் பண்ணனும்?!”
“இல்லைங்க நாளைக்கு அட்மின்ல பில் க்ளெய்ம் பண்ணிக்கலாம்...”
“நான் அதைக் கேட்கல... என் டீமுக்கு நீ ஏன் ஃபுட் ஆர்டர் பண்ணேன்னு கேட்டேன்!”
“இல்லங்க உங்களுக்கு மட்டும் ஆர்டர் பண்ணா அது சரியா இருக்காதில்ல அதான்!”
திவ்யா அவனை முறைத்தாள்.
“விடுங்க... இனி பண்ணல போதுமா” என அவன் இரு கையையும் சரண்டர் என்பது போல தூக்கிக்காட்ட...
திவ்யா எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தவள் ஏதோ யோசித்து நின்று திரும்பி, “எனக்கு இந்த ஃபுட் தான் பிடிக்குன்னு உனக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டாள்.
“இல்லைங்க உங்க இன்ஸ்டா, ஃபேஸ்புக்கை எல்லாம் ஃபாலோ பண்ணி பார்த்ததுல” என மார்க்ஸ் இழுக்க...
திவ்யாவுக்கு அவளையறியாமல் சிரிப்பு வந்தது.
“அது வேற நடக்குதா?!”
“உங்களைத்தான் ஃபாலோ பண்ண முடியல. அட்லீஸ்ட் உங்க பேஜையாவது ஃபாலோ பண்ணலாம்னுதான்” என அவளது புன்னகை தந்த தைரியத்தில் சொன்னான் மார்க்ஸ்.
அவனது பதிலை ரசித்தபடி திவ்யா புன்னகையுடன் திரும்பி நடக்க அவள் போவதை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் மார்க்ஸ்.
மேனனின் அறையில் தாட்சா அமர்ந்திருந்தாள். “இதுதான் ரஃப் பட்ஜெட்” என அவள் லேப்டாப்பை மேனன் பக்கமாகத் திருப்ப அவர் நெற்றியில் இருந்த கண்ணாடியை கீழே இறக்கி அதைப் பார்த்தார்.
அறைக் கதவு தட்டப்பட்டது. இருவரும் திரும்பிப் பார்க்க...
அட்மின் மேனேஜர் செல்லப்பா உள்ளே நுழைந்தார். செல்லப்பாவுக்கு வயது 50-களில் இருக்கும். டைட்டான ஜீன்ஸ் அணிந்து சட்டையை இன் செய்திருந்தார். டைட்டான சட்டையில் வயிறு மட்டும் தனியாகத் தெரிந்தது.
“செல்லப்பா சட்டைக்குள்ள ஒளிச்சு வெச்சிருக்கிற அந்த பானையை குடுப்பா... வீட்ல தண்ணி பிடிச்சு வெச்சுப்பேன்” என நெல்லையப்பன் அடிக்கடி அவரை கேலி செய்வதுண்டு.
செல்லப்பாவுக்கு கவரிமேன் என்ற பட்டபெயரும் ஒன்று உண்டு. அந்தப் பெயர் காரணம் வேடிக்கையான ஒன்று. அவர் தலையில் கருகருவென பெரிய விக் வைத்திருப்பார். எப்போதும் அவரது கவனம் அந்த விக்கிலேயே இருக்கும். ஒரு நாளைக்கு 20 தடவை பாத்ரூம் சென்று விக்கை சரி பார்த்துக் கொள்வார். ஃபேனுக்கு எதிரே நிற்க மாட்டார். கூட்டமான இடங்களுக்குப் போக மாட்டார். அப்படிபட்டவர் ஒரு முறை ஆபிஸில் வழுக்கி விழ நேர்ந்த போது தன்னை பாதுகாத்த கொள்ள நினைக்கவே இல்லை. சட்டென இரண்டு கையால் விக்கைத்தான் முதலில் இறுகப் பிடித்துக் கொண்டார். முதுகுத்தண்டு சிலிப்பாகி மூன்று மாதம் அவர் பெட்ரெஸ்டில் இருக்க நேர்ந்தது. ஆனாலும் அவர் கவலைப்படவில்லை. விக்கைக் காப்பாற்றிய சந்தோஷம் அவருக்கு!
“சொல்லுங்க செல்லப்பா” என்றார் மேனன்.
“இந்த மார்க்ஸ் ஒரு ஃபுட் புல் க்ளெய்ம் பண்ணியிருக்காரு”
“சரி அதுக்கென்ன?” என மேனன் புரியாமல் கேட்டார்.
“இல்ல சார் புரோகிராமிங்ன்னா லேட் நைட் வேலை செஞ்சுதான ஆகனும். அதுக்காக தினம் ஃபுட் பில் க்ளெய்ம் பண்ண முடியுமா? அதுவும் இல்லாம ராத்திரி ஆட்டோ சார்ஜ்ன்னு வேற 5 பேருக்கு வவுச்சர் கொடுத்திருக்கான். இதெல்லாம் தர முடியாதுன்னு முன்னாடியே பேசி முடிவு பண்ணியிருக்கு சார். புது மேனேஜ்மென்ட் வந்ததும் நைசா போட்டு பாக்குறானுங்க.”
“ம்” என மேனன் யோசிக்க...
“புது ஜி.எம் நீங்க... ரூல்ஸ் தெரியாதுன்னு ஏமாத்த பாக்குறானுங்க சார். இதெல்லாம் நாம என்கரேஜ் பண்ணக் கூடாது!”
“நீங்க எத்தன மணிக்கு ஆபிஸ் வர்றீங்க?” எனக் கேட்டார் மேனன்.
“9.30 சார்” என பெருமையாகச் சொன்னார் செல்லப்பா...
“எப்ப கிளம்புவீங்க?”
“6 மணிக்கு சார்”
தாட்சா அதற்குள் மேனனை ரசிக்கத் துவங்கியிருந்தாள்.
“அவங்க தினம் எப்ப ஆபிஸ் வருவாங்க” என மேனன் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார்.
“பத்து... பத்தரை... லேட்டாதான் சார் வருவானுங்க...”
“எப்ப போவாங்க?”
“பன்னிரண்டு, ஒண்ணு, ரெண்டு... சில நாள் காலையில வரைக்கும் கூட இங்கதான் இருப்பாங்க”
“எதுக்கு அவனுங்க ராத்திரி எல்லாம் வேலை செய்யறானுங்க!”
“அப்படி வேலை செய்யலைன்னா புரோகிராம் ஏர்ல போகாதே...”
“நீங்க நேத்து ராத்திரி எங்க சாப்பிட்டீங்க?”
“சார்...” என சொன்ன செல்லப்பாவுக்கு மேனன் வேறு ரூட் எடுக்கிறார் என்பது புரிந்தது. ஆயிரம் ரெண்டாயிரத்தை மிச்சம் பண்ணி பேர் எடுக்கலாம் என்றுதான் அவர் மேனனை தேடிவந்தார். முதலுக்கே மோசமாகிவிடும் போலிருக்கிறதே என்ற பயம் செல்லப்பாவின் முகத்தில் தெரிந்தது. “பிரசாத் ஏற்கனவே சொன்னான். நாமதான் கேட்கல” என்றது அவர் மனது.
“நேத்து டின்னர் எங்க?” என கேட்ட மேனன் குரலில் ஒளிந்திருந்தது கோபமா, கிண்டலா என செல்லப்பாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“வீட்லதான் சார்”
“6 மணிக்கு வீட்டுக்கு போற நீங்க வீட்ல சாப்பிடுவீங்க.. 1 மணிக்கு வீட்டுக்குப்போற அவங்க என்ன பண்ணுவாங்க?”
செல்லப்பா அமைதியாக இருந்தார்.
“நீங்க எப்படி வீட்டுக்குப் போவீங்க?”
“ஷேர் ஆட்டோ சார்”
“ராத்திரி 1 மணிக்கு ஷேர் ஆட்டோ கிடைக்குமா?”
அவர் இல்லை எனத் தலையாட்டினார்.
மேனன் சிரித்தபடி, “அதுக்காக அவங்க இப்படி எல்லாம் பில் குடுக்க கூடாது” என்றார்.
செல்லப்பா புரியாமல் அவரைப் பார்க்க...
“அவங்களுக்கு தேவையான டின்னர் ஆபிஸ்ல இருந்தே வாங்கிக்குடுங்க...” லேட்டா யாரெல்லாம் வொர்க் பண்றாங்களோ அவங்க லிஸ்ட் 8 மணிக்கு எடுத்து 9 மணிக்கு அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கிக் குடுங்க”
செல்லப்பா சரி எனத் தலையாட்டினார்.
“அப்புறம் ஆட்டோ பில் கண்டிப்பா அப்ரூவ் பண்ணக்கூடாது”
இதையாவது சொன்னாரே என்ற ஆறுதலில் “யெஸ் ஸார்” என வேகமாகத் தலையாட்டினார் செல்லப்பா...
“ஆபிஸ் கார்லயே எல்லாரையும் டிராப் பண்ணிருங்க!”
தாட்சா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள். செல்லப்பா அவளைத் திரும்பி பார்க்க... அவசரமாக சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டவள் “சாரி செல்லப்பா இது வேற” என அவள் எழுந்து நகர்ந்து கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி நின்று கொண்டாள்.
“சார்... இதெல்லாம் சில பேர் மிஸ்யூஸ் பண்ண வாய்ப்பு இருக்கு சார்” என செல்லப்பா தயக்கமாகச் சொன்னார்.
“ரேசன் கடையில ரெண்டு வசதியானவனுங்க அரிசி வாங்கத்தான் செய்வாங்க... அதுக்காக மொத்தமா அதை மூடிட முடியுமா? அதனால எத்தனையோ கஷ்டப்படுறவங்களுக்கு பலன் கிடைக்குதுல்ல... அப்படித்தான் இதுவும். ஏமாத்துற இரண்டு பேரை விடுங்க. உண்மையா இருக்கிற 20 பேரை நினைங்க...”
“யெஸ் ஸார்” என்றார் செல்லப்பா...
“நான் ஃபைனான்ஸ்க்கு மெயில் போட்டுடுறேன்” என்றார் மேனன். செல்லப்பா அவசரமாகத் தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
மேனன் திரும்பிப் பார்க்க... தாட்சா புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்
மேனனும் புன்னகைக்க...
“இப்படி அசத்திகிட்டே போனீங்கன்னா எப்படி உங்கள லவ் பண்ணாம இருக்கறது?” என்றாள் தாட்சா...
மேனன் புன்னகைத்தார்.
“இல்ல மொத்த ஆபிஸும் உங்களை லவ் பண்ணுதுன்னு சொல்ல வந்தேன்...” என அவள் சமாளிக்க மேனனுக்கும் அது புரிந்தது.
“நிஜமாவே கேட்கிறேன்... உங்களால மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல தாட்சா. காலங்காலமா ஒரு விஷயம் பழக்கத்தில இருக்கிறதால அது சரியானதா இருக்கனும்னு எந்த அவசியமும் இல்ல... காலத்துக்கு ஏற்ப சில விஷயங்கள் மாறித்தான் ஆகணும். அதுவா மாறலைன்னா நாம மாத்தணும்”
தாட்சா அவரைப் பார்த்தாள்.
“சேனல்ன்றது ஃபைனான்ஸ் டிப்பார்மென்ட்டோ அட்மின், ஹெச்.ஆர் டிப்பார்ட்மென்ட்டோ இல்லை. ஜனங்களைப் பொறுத்தவரைக்கும் சேனல்ன்றது அதுல வர்ற புரோகிராம்ஸ்தான். அத பண்ற புரோகிராமிங் டீமுக்குதான் முதல் மரியாதை கொடுக்கணும். மத்த டிப்பார்மென்ட் எல்லாம் அதுக்கான சப்போர்ட்டிங் டிப்பார்ட்மென்ட்தான். இங்க என்னடான்னா புரோகிராமிங்கைதான் எல்லோரும் போட்டு மிதிப்பாங்க...” என்ற மேனனின் குரலில் மெல்லிய கோபம் இருந்தது.
“இந்த நாட்டோட பிரச்னையே அதுதான். உற்பத்தி பண்ற விவசாயி டிராக்டருக்கு டியூ கட்ட முடியாம தூக்குல தொங்குவான். அதை வாங்கி விக்குற ஸ்டோர்காரன் பென்ஸ்ல போவான். இவன் கஷ்டத்த தீர்க்க எல்லாரும் ஓடி வருவானுங்க. அவனைக் காப்பாத்த யாரும் இருக்க மாட்டாங்க!” எனப் படபடவென பேசிய மேனன் சம்பந்தமில்லாமல் பேசிவிட்டோமோ என நினைத்து ஒரு கணம் நிறுத்த... தாட்சா ஆச்சர்யமாக அவரைப் பார்த்தபடி எதிரில் வந்து அமர்ந்தாள்..
“சாரி” என மேனன் புன்னகைக்க...
“புரியுது”
“என்ன?” என மேனன் கேட்டார்.
“உங்க நியாயம் எனக்குப் புரியுது!”
மேனன் புன்னகைத்தார். நம்முடைய சிந்தாந்தங்களைப் புரிந்து கொள்கிற பெண் கிடைப்பது சிரமம் என்றால், அந்த சிந்தாந்தங்களுக்காகவே நம்மை நேசிக்கிற ஒருத்தி கிடைப்பதென்பது பாக்கியம்.
“இப்படி ஒருத்தரால எப்படி இந்த கார்ப்பரேட் செட்டப்புல இத்தனை நாள் இருக்க முடிஞ்சுது?” எனக் கேட்டாள் தாட்சா.
“நான் இதுவரைக்கும் வேலை செஞ்ச எந்த முதலாளியும் என்கிட்ட கோபப்பட்டதில்லை” என்றார் மேனன்.
“அவங்களுக்கு எதிரான விஷயங்களாதான பேசுறீங்க.. அப்புறம் எப்படி?” என வியப்பாக தாட்சா கேட்க....
“ஏன்னா நான் அவங்களோட மனசாட்சி” என சிரித்தார் மேனன்.
“மனசாட்சி பேசுறப்ப கோபப்பட முடியாது. வெட்கப்பட்டு தலை குனிஞ்சுக்க வேண்டியது தான்” என்றார் மேனன்.
தாட்சா வியப்பாக அவரைப் பார்த்தாள்.
“என்ன தாட்சா ஏதாவது தப்பா சொல்லிட்டனா?” என மேனன் கேட்க இல்லை எனth தலையாட்டியவள் தொடர்ந்தாள்.
“முடியுமான்னு தெரியல... ஆனா என்னைக்காவது ஒரு நாள் உங்களை மாதிரி ஒரு நல்ல பாஸா நான் இருக்கனும்னு ஆசைப்படுறேன் மேனன்” என்றாள் அவள். அவளது மனதில் இருந்து வந்த அந்த வார்த்தைகள் தன்னைத்தொட நெகிழ்ச்சியாக அவளைப் பார்த்தார் மேனன். இருவருக்குள்ளும் ஒரு இனம்புரியாத உணர்வு எழுவதை இருவருமே உணர்ந்தார்கள்.
பெசன்ட் நகர்...
ஆட்டோ அபார்ட்மென்ட் ஒன்றின் முன்னால் வந்து நிற்க, அதிலிருந்து திவ்யாவும் நந்திதாவும் இறங்கினார்கள். சுற்றிலும் மரங்களுடன் நான்கு தளங்கள் மட்டுமே இருக்கிற அபார்ட்மென்ட் அது.
“என்னடி ரொம்ப ப்ரீமியமான அபார்ட்மென்ட் மாதிரி தெரியுது. இங்க எப்படி வீடு கிடைச்சது?” என திவ்யா ஆச்சர்யமாகக் கேட்டாள்.
“அதான் நந்திதா... ஹவுஸ் ஓனர் கல்கத்தா... பெங்காலில பேசுனேன். ஆள் அவுட்!”
திவ்யா புன்னகைத்தாள்.
“நாலு ஃப்ளோர்... வெறும் எட்டே வீடு தான்... ஒவ்வொரு வீடும் 2400 ஸ்கொயர் ஃபீட். 3 பெட்ரூம். எல்லா பெட்ரூமும் சீ ஃபேஸிங்.. எல்லா பெட்ரூம்லயும் பால்கனி இருக்கு. பெரிய ஹால். அதுல ஒரு ப்ரைவேட் டெரஸ் வேற...”
“பில்டப் எல்லாம் போதும் வீட்டைப் பார்க்கலாம்” என்றாள் திவ்யா...
அவர்கள் லிப்ட் ஏறி அபார்ட்மென்டுக்குள் நுழைந்தனர். நந்திதா சொன்னதைப் போலவே இருந்தது அந்த அபார்ட்மென்ட். வெளிச்சமும், காற்றும், கடல் வியூவுமாக அசத்தலாக இருந்தது வீடு.
“எப்படி?” என்றாள் நந்திதா.
“சான்சே இல்லை” என அவளை அணைத்துக் கொண்டாள் திவ்யா.
“இது உன்னோட ரூம்...” என அறைக்கதவை திறந்து காட்டினாள் நந்திதா.
“ஐ ஜஸ்ட் லவ் திஸ் ப்ளேஸ்” என்றாள் திவ்யா.
“இது என்னோட ரூம்” என மற்றொரு அறையை அவள் திறந்து காட்ட
“சூப்பரா இருக்குடி...”
“இனிமே தான் செட் பண்ணனும். கல்கத்தால இருந்து திங்ஸ் எல்லாம் ஆன் த வே” என்றாள் நந்திதா...

“இந்த ரூம் மானஸ் எடுத்துக்குறானா” என மற்றொரு அறையை காட்டி திவ்யா கேட்டாள்.
“இல்லடி அந்த ராஸ்கல் கடைசி நேரத்தில காலை வாரிட்டான். ஏஞ்சல் வீட்டு மொட்டை மாடியில ஒரு இடம் இருக்கு. அங்கப் போறேன்னு சொல்லிட்டான்...”
“அய்யய்யோ ரெண்டு பேருக்கு ரென்ட்டல் கட்டுபடியாகாதே” என அதிர்ச்சியாக திவ்யா கேட்க...
“அந்த ரூமுக்கு இன்னொரு ஆள் பிடிச்சிட்டேன்”
“யாரு” என திவ்யா கேட்க...
“திறந்து பாரு உனக்கே தெரியும்!”
திவ்யா புரியாமல் அந்த அறைக் கதவை திறக்க அறை முழுவதும் புத்தகங்களால் நிறைந்து கிடக்க...
சுவரில் பாப் மார்லி புன்னகைத்தபடி தொங்கிக் கொண்டிருந்தார்.
மார்க்ஸின் அறையில் பார்த்த அதே மார்லி... அதே புன்னகை!