Published:Updated:

இடியட் பாக்ஸ்: 24 | லன்ச்... லஞ்சம்... திவ்யா - மார்க்ஸின் தஞ்சம்!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ்: 24 | லன்ச்... லஞ்சம்... திவ்யா - மார்க்ஸின் தஞ்சம்!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

இரவு நேரம்...

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த திவ்யா புரண்டு படுத்தாள். அவளது பூட்டிய அறைக் கதவின் இடுக்குகளின் வழியே வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது.

“வழக்கம் போல ஹால் லைட்டை அணைக்க மறந்துட்டாங்களா?” என்கிற யோசனை அவளுக்குள் ஓடியது. கண்களை மூடி மீண்டும் உறங்க முயன்றாள். அந்தச் சின்ன வெளிச்சம் அவளது எண்ணத்தில் பெரியதாகி அவளை உறங்க விடாமல் செய்தது. மெல்லிய எரிச்சலுடன் எழுந்தவள் ஹாலுக்கு வந்து விளக்கை அணைத்துவிட்டு திரும்ப... ஹாலில் இருந்த கண்ணாடி கதவு வழியாக பால்கனியில் மார்க்ஸ் நின்று கொண்டிருப்பது அவளுக்குப் புலப்பட்டது. அவன் கையில் இருந்த சிகரெட்டின் நெருப்பு இருளில் சிறு புள்ளியாய் தெரிந்தது. திவ்யா திரும்பி ஹாலில் இருந்த டிஜிட்டல் கடிகாரத்தை பார்த்தாள். அது அதிகாலை இரண்டரை மணி எனக் காட்டியது.

திவ்யா பால்கனி கதவை திறக்க சில்லென்ற காற்று அவள் முகத்தில் அறைந்தது. கதவு திறந்த சத்தம் கேட்டு மார்க்ஸ் திரும்பினான்.

“நீ இன்னும் தூங்கலயா?” என திவ்யா தனது இரு கைகளையும் தூக்கி தலைமுடியை சுழற்றிச் சொருகியபடி கேட்டாள். மார்க்ஸ் அவளை உற்றுப் பார்த்தான். நிலவு வெளிச்சத்தில் ஓவியமாய் அவள் தெரிந்தாள். வெள்ளை நிற டி-ஷர்ட் அதே நிறத்தில் டிராக் பேன்ட் அணிந்து கொஞ்சமும் உடைகள் கசங்காமல் அவள் நின்று கொண்டிருந்தாள். அழகாக விழிப்பது பெண்களுக்கு மட்டுமே சாத்தியம் என அவனுக்குத் தோன்றியது.

“தூங்கலயான்னு கேட்டேன்?!”

“தூங்கணும்” என பொதுவாகச் சொன்னான் மார்க்ஸ்.

“என்னாச்சு?”

“பட்ஜெட் அப்ரூவலுக்கு 5 மெயில் போட்டாச்சு... பதிலே இல்லை... அத கேக்க போயி கொஞ்சம் சீனாயிடுச்சு” என்று சொன்ன மார்க்ஸின் குரலில் மெல்லிய வருத்தமிருந்தது.

“யாரோ வருத்தப்படுற மாதிரி தெரியுது? வழக்கமா சண்டை போட்டுட்டு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு போறவங்களாச்சே நம்ம.... இப்படி எல்லாம் ஃபீல் பண்றது புதுசா இருக்கே” என்றபடி பால்கனியில் இருந்த பிரம்பு நாற்காலியில் திவ்யா அமர்ந்தாள். அவளின் உறக்கம் முற்றிலுமாகக் கலைந்துவிட்டிருந்தது.

“அப்படியில்ல... நம்ம மேல இருக்கிற கோபத்துல அவன் அப்ரூவல் தர மாட்றான். நம்மள நம்பி மூணு ப்ரொடியூசருங்க வேலைய ஆரம்பிச்சிட்டாங்க. அவங்ககிட்ட என்ன பதில் சொல்றதுன்னு தெரியல... அதான் கஷ்டமாயிருக்கு!”

திவ்யாவுக்கு அவனது கவலைப் புரிந்தது.

“மேனன் சார் கிட்ட பேச வேண்டியது தானே!”

“சின்ன புள்ளைங்க மாதிரி தொட்டதுக்கெல்லாம் போய் அவர் கிட்ட நிக்க வேண்டாம்னு பார்த்தேன்.”

“ம்” எனத் தலையாட்டிபடியே யோசித்த திவ்யா, “நாளைக்கு அவனுக்கு ஒரு மெயில் போடு. அதுல அப்ரூவல் இல்லாததால வேலை நிக்குது. லான்ச் தள்ளிப்போகுதுன்னு சொல்லு. அந்த மெயிலை சேல்ஸ் ஹெட், மேனன் சார் எல்லாருக்கும் சிசி போடு. அவன் பதில் சொல்லித்தான் ஆகணும்!”

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“என்ன சிரிக்கிற... ஹெல்ப் பண்ணா நக்கலா இருக்கா உனக்கு!”

“சே... சே... அதில்ல”

“வேற என்ன ?”

“அன்னைக்கு நான் அலோக் மேல பேப்பர எறிஞ்சப்ப நீ என்கிட்ட கோபப்பட்ட... இன்னைக்கு நீயே அலோக்க டீல் பண்றதுக்கு ஐடியா குடுக்குற... அதான் சிரிச்சேன்!”

“என்ன பண்றது ரூம் மேட்டாகி தொலைச்சிட்டியே” எனப் புன்னகையுடன் சொன்னாள் திவ்யா.

“திவ்யா உண்மைய சொல்லு என்ன பத்தி நீ என்ன நினைக்கிற?”

திவ்யா அவனை ஏறிட்டு பார்க்க...

“சட்டுன்னு உண்மையைச் சொல்லு. திமிர்பிடிச்சவன், முட்டாள், கோபக்காரன் எது வேணா சொல்லு. ஆனா நிஜம் சொல்லு!”

திவ்யா மார்க்ஸைப் பார்த்தாள். அவனது கேள்வி அவளுக்குள் மீண்டும் ஓடியது.

அவன் அவளை பார்த்தபடியே இருந்தான்.

“உண்மையை சொல்லவா?”

“உண்மையை மட்டும் சொல்லு”

“எல்லா பொண்ணுக்கும் மனசுக்குள்ள இப்படி ஒருத்தனை சந்திச்சிடமாட்டோமான்னு ஆசைப்படுற மாதிரியான ஒரு ஆள்தான் நீ!”

மார்க்ஸ் அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை.

“திவ்யா...” என மார்க்ஸ் சந்தோஷமும் நெகிழ்ச்சியுமாக அவளைப் பார்த்தான். நேசிக்கிற பெண்ணுக்கு தன்னை பிடித்துவிட்டாள் உலகம் மொத்தமும் வெறுத்தால்கூட அது பற்றி அக்கறைப்பட என்ன இருக்கிறது?

“என்ன திவ்யா டக்குன்னு இப்படி சொல்லிட்ட!”

“நீதான் உண்மையை சொல்லச் சொன்ன... அதான் சொன்னேன்!”

மார்க்ஸ் என்ன சொல்வது என தெரியாமல் அவளைப் பார்த்தான்.

“என்ன சத்தத்தையே காணோம்?”

“அன்னைக்கு இதுக்காக என்கிட்ட கோச்சுக்கிட்ட... இப்ப பிடிச்சிருக்குன்னு சொல்ற... எது நிஜம்னு யோசிக்கிறேன்!''

“அதுவும் நிஜம்... இதுவும் நிஜம்” எனச் சொல்லிவிட்டு திவ்யா சிரித்தாள்.

“ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் எல்லாம் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா சொல்லு... ஆனா அதுக்காக அவங்களோட குடும்பம் நடந்த முடியுமா... அது கஷ்டம்”

“நான் ஒன்ணும் சூப்பர் ஹீரோல்லாம் இல்ல....” என்றான் மார்க்ஸ்.

“சரி நீ ஹீரோ!”

“ஆமா... வாழ்க்கையில எப்படா ஒரு ஹீரோயின் வருவான்னு காத்துக்கிட்டு இருக்கிற ஹீரோ!”

திவ்யா சிரித்தாள்.

மார்க்ஸ் புன்னகையுடன் அவளைப் பார்த்தான். பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்குச் சிரிப்பை பதிலாகத் தருவது பெண்களின் வழக்கம்தானே.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா
இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

“திவ்யா...”

“என்ன?”

மார்க்ஸ் ஏதோ ஆரம்பிக்கப்போக.... அவள் கையை உயர்த்தி அவன் மேற்கொண்டு பேசாமல் அவனை நிறுத்தினாள்.

“இந்த பேச்சு எங்க போகும்னு எனக்குத் தெரியும்... வேண்டாம்!”

“சரி பேசல...”

“நேரமாகுது... தூங்க போலாமா” என்றாள் திவ்யா.

“ஒரு 5 நிமிஷம் குடேன்!”

“என்ன பண்ணனும்?”

“ஒண்ணும் பண்ண வேண்டாம். பேசக் கூட வேண்டாம். அப்படியே பக்கத்தில இரு போதும்.''

அவள் மெளனமானாள். மார்க்ஸ் அருகில் இருந்த மற்றொரு நாற்காலியில் அமர்ந்தான். இருவரும் அமைதியாக இருந்தார்கள். குளிர்ந்த காற்று அவர்களை வருடிச் சென்றது. வாய் மூடிக் கொண்ட போது மற்ற அனைத்து புலன்களும் விழித்துக் கொள்வதை மார்க்ஸால் உணர முடிந்தது. திவ்யா பூசியிருந்த பர்ஃபியூம் நறுமணம் மார்க்ஸை என்னவோ செய்தது. இலைகளின் அசைவும் இரவு நேர பறவைகளின் ஒலியும் தவிர வேறெந்த சத்தமும் இல்லாத அமைதி. இருவருமே அந்தத் தருணத்தை அனுபவித்தபடி அமைதியாக இருந்தார்கள்.

இருவரது மனதிலும் மற்றவரது மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் என்பதே யோசனையாக இருந்தது. காலம் ஒவ்வொரு நொடியாக கடந்து போவதை இருவரும் உணர்ந்தார்கள். படபடவென்று இலக்கில்லாமல் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவையாக மனசு பறந்து கொண்டிருந்தது. அந்த இரவின் மெளனத்தை லாரி சத்தம் ஒன்று உடைக்க இருவரும் சுயநினைவுக்கு வந்தார்கள்.

எதுவும் பேசாமல் திவ்யா எழுந்து கொள்ள... ஒருவருக்கொருவர் புன்னகைத்துக் கொள்ள...

“குட்நைட்” என்றான் மார்க்ஸ்.

''தூங்குறவளை எழுப்பிவிட்டுட்டு குட்நைட் சொல்றியா?''

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“போய் தூங்கு” என திவ்யா நகர்ந்தாள். மார்க்ஸ் அவளைப் பின் தொடர்ந்தான்.

இருவரது அறைக்கதவுகளும் அருகருகே இருக்க இருவரும் ஒரே சமயத்தில் தங்களது அறை கதவை திறந்து நுழையபோகும் சமயம் சட்டென நினைவுக்கு வந்தவளாக திவ்யா கேட்டாள்.

“நீ தப்பா நினைக்கலைன்னா நான் ஒண்ணு கேட்கலாமா?”

மார்க்ஸ் திரும்பி அவளை என்னவென்று பார்க்க...

“ஏஞ்சலுக்கும் உனக்கும் நடுவுல என்ன பிரச்னை?”

மார்க்ஸ் அந்தச் சமயத்தில் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை.

“சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் ஏஞ்சல் உன்னைப்பத்தி ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கா... அதான் கேட்டேன்.”

மார்க்ஸ் பதில் ஏதும் சொல்லாமல் யோசிக்க...

“இல்ல ரொம்ப பர்சனல்னா சொல்ல வேண்டாம்.”

“அப்படியில்ல... அதை நான் யார் கிட்டயும் சொன்னது இல்ல... யாராவது ஒரு பொண்ணு என்னை காதலிக்கிறேன்னு சொன்னா அவகிட்ட மட்டும் அதை சொல்லணும்னு நினைச்சிருக்கேன்.”

திவ்யாவின் முகம் மாறியது.

“என்ன பிரச்னைன்னு சொல்லவா” மார்க்ஸின் இதழில் குறும்பான புன்னகை ஒன்று மலர திவ்யாவும் உதட்டைக் கடித்தபடி புன்னகைத்தாள். 'நீ என்னை நேசிக்கிறாயா என்பதை எவ்வளவு சமார்த்தியமாக கேட்கிறான்' என திவ்யா மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

“சொல்லட்டுமா” மீண்டும் மார்க்ஸ் கேட்டான்.

“வேணாம்” எனப் புன்னகைத்தாள் திவ்யா.

“நிஜமாவே வேணாமா?”

“இப்ப வேணாம்...” என சொல்லிவிட்டு அவள் தனது அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல... ''இப்ப வேணாம் என்பது வேண்டாம் என்று இல்லைதானே!'' என மார்க்ஸ் மீண்டும் புன்னகைத்தான்.

மார்க்ஸ் கான்ஃபரன்ஸ் அறைக்குள் நுழைந்தபடி, “ஆனந்தி அந்த அலோக்குக்கு ஒரு மெயில் தட்டணும்” என்றான்.

“என்னப்பா நன்றி சொல்லப் போறியா” எனக் கேட்டார் நெல்லையப்பன்

“நன்றியா எதுக்கு?”

“ஒரே மெயில்ல ப்ரொடியூசர், பட்ஜெட், புராஜக்ட் மூணுக்கும் அப்ரூவல் குடுத்திட்டானே...”

“நிஜமாவா” என மார்க்ஸ் ஆச்சர்யமாக கேட்க...

“ஆமாப்பா கேன்டீன்ல நீ மிரட்டுனதுல பயந்துட்டான்னு நினைக்கிறேன்”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல... மார்க்ஸோட குல சாமி அலோக்கை கத்தியால குத்திருச்சு” எனச் சிரித்தாள் ஆனந்தி.

“யாரு மேனன் சாரா?” என வியப்பாக கேட்டான் மார்க்ஸ்.

“ஆமா... மும்பையில இருந்து எப்ப சேனல் ரீ லாஞ்சுன்னு கேட்டிருக்காங்க... அவரு அலோக்கோட ஸ்பீட்ல போனா இன்னும் 2 மாசம் ஆகும்னு சொல்லியிருக்கார். அவனுங்க மசாலா தடவி அலோக்கை தவா ஃபிரை பண்ணியிருக்காங்க... பயந்துட்டு அவன் ஒரே மெயில்ல மூணு அப்ரூவல கொடுத்துட்டான்” என ஆனந்தி சொல்ல அறையில் அனைவரும் சிரித்தனர்.

“மேனன் சார் கிட்ட இந்தப் பிரச்னைய நான் சொல்லவே இல்லையே!”

“அதனாலதாம்பா அவருக்கு குலசாமின்னு பேரு வச்சிருக்கோம். நீ கேக்கனும்னு எல்லாம் இல்ல... அதுக்கு தெரியும், எப்ப யாருக்கு என்ன டெலிவரி பண்ணனும்னு!” என நெல்லையப்பன் சொல்ல...

“அவர் ஒரு அதிசயம்தான் தல” என்றான் பாண்டியன்.

“அவரைப் போய் பார்த்துட்டு வந்துடுறேன்” என மார்க்ஸ் அங்கிருந்து நகர்ந்தான்.

மார்க்ஸ் வேகமாக சித்தார்த் மேனன் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய... அங்கு தாட்சா அமர்ந்திருந்தாள்.

“என் பேர் தாட்சா... உன்னோட எக்ஸ் பாஸ்... சாருக்கு ஞாபகம் இருக்கா?”

மார்க்ஸ் சிரித்தபடி, “அது என்ன எக்ஸ் பாஸ்... இப்பவும் நீங்கதான் என் பாஸ்!”

“சும்மா விடாதப்பா... மேனன் சார் வந்ததுல இருந்து என்னல்லாம் நீ கண்டுக்குறதே இல்லை!”

அவன் சிரித்தபடி சோஃபாவில் அமர்ந்தான்.

“என்ன பொறாமையா?”

“ஏன் படக்கூடாதா?”

“இந்த ஆபிஸ்ல மேனன் சாரை லவ் பண்ணாதவங்க யாராவது இருக்காங்களா” எனச் சொல்லிவிட்டு மார்க்ஸ் அர்த்தமாக புன்னகைக்க...

“என்னடா சொல்ல வர்ற?”

“பொதுவா சொன்னேன்.. நீங்களும் சாரை லவ் பண்றீங்கதானே?”

“மகனே, இப்ப நீ வாங்கப் போற” என்றாள் தாட்சா....

மார்க்ஸ் சிரித்தான்.

“அது இருக்கட்டும். நீ அந்த திவ்யாவோட லிவ்விங் டு கெதராமே” என தாட்சா கேட்க..

“அய்யய்யோ இது யாரு சொன்னது?!” என்றான் மார்க்ஸ்...

“தெரியும்டா எனக்கு எல்லாம்!”

“சே... சே... நந்திதாவும் அந்த ரூம்லதான் இருக்கு”

“ஓ... அப்ப லிவ்விங் TWO கெதர்னு சொல்லு” என தாட்சா சிரிக்க...

“என்ன தாட்சா இது?”

“சரிடா சரிடா... என்னமோ நல்லா இருந்தா சரி... நீ இருந்தா ஆபிஸ்லயே இருக்க மாட்டேன்னு சொன்ன திவ்யா இப்ப உன்கூட ஒரே வீட்ல இருக்கா... பெரிய மந்திரவாதிதான்டா நீ!”

“என் விஷயத்தை விடுங்க... உங்க லவ் எப்படிப் போகுது?” என மார்க்ஸ் பேச்சை மாற்ற...

இடியட் பாக்ஸ் | தாட்சா, மார்க்ஸ்
இடியட் பாக்ஸ் | தாட்சா, மார்க்ஸ்

“என் லவ்வா... இதென்ன புதுக்கதை?”

“இங்க பாருங்க... மேனன் சார் மாதிரி ஒரு ஆள் இந்த உலகம் பூரா தேடினாலும் கிடைக்காது... பேசாம ஓகேன்னு சொல்லுங்க!”

“டேய் வாய மூடுறா... அந்த மனுஷன் நல்லவர்தான் மத்தபடி எதுவும் கிடையாது!”

“எதுவும் இல்லாமதான் தினம் அவருக்கு லன்ச் கொண்டு வர்றீங்களா?”

“யாரு இந்த நான்ஸி சொன்னாளா?”

“யாரோ சொன்னாங்க... ஆமாவா இல்லையா?”

“பாவம்டா அந்தாளு... எனக்கு சமைக்கிறப்ப கொஞ்சம் சேர்த்து சமைச்சு அவருக்கும் கொண்டு வர்றேன்!”

“அதுதான் காதல்” என்றான் மார்க்ஸ்.

“காதல் வயிறு சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல... மனசு சம்பந்தப்பட்டது.”

“இங்க பாருங்க... நீங்க அவருக்காக சமைக்கிறது ஒரு லவ்வுதான்”

“வாயை மூடு” என தாட்சா பொய்கோபம் காட்ட... மேனன் உள்ளே நுழைந்தார்.

“குட் மார்னிங் சார்” என்றான் மார்க்ஸ்.

“குட் மார்னிங்” என்றபடி அமர்ந்தார் மேனன்.

“குட் ஆஃப்டர்நூன்” என்றாள் தாட்சா...

மேனன் சிரித்தபடி, “சாரி லேட்டாயிடுச்சு” என்றார்.

“மும்பையில இருக்கிற நேஷனல் ஹெட்டுக்கு 10 மணிக்கு கான்கால் பண்றதா சொல்லியிருந்தோம்... மணி 12 ஆச்சு” என தாட்சா சொல்ல...

“சாரி” என மீண்டும் சொன்னார் மேனன்.

தாட்சா உரிமையாகக் கோபப்படுவதையும் மேனன் அதற்கு அக்கறையாக பதில் சொல்வதையும் கண்டும் காணாதது போல ரசித்துக் கொண்டிருந்தான் மார்க்ஸ்.

“போன் அடிச்சா எடுக்கலாம்ல...”

“சாரி நான் சமைச்சுக்கிட்டு இருந்தேன்” என்றார் மேனன்

தாட்சாவும் மார்க்ஸும் ஒரே சமயத்தில் ஆச்சர்யமானார்கள்.

“சமையலா?” என தாட்சா வியப்பாக கேட்டாள்.

“இன்னைக்கு நீங்க சமைக்கலைன்னு சொன்னீங்க... தினம் எனக்கு லன்ச் கொண்டு வர்றீங்க... இன்னைக்கு நான் உங்களுக்கு லன்ச் தரலாம்னுதான் சமைச்சேன்!”

மார்க்ஸ் திரும்பி தாட்சாவைப் பார்த்தான். அவன் பார்வையில் இருந்த கிண்டலை கவனிக்காததுபோல தாட்சா மேனனைப் பார்த்து, “அனுவல் சேல்ஸ் மீட்டிங்கை விட சமையல் முக்கியமா?” எனப் பொய் கோபத்துடன் கேட்டாள்.

“ஆமாதானே... சேல்ஸ் மீட்டிங் வெயிட் பண்ணலாம்... பசி வெயிட் பண்ணாதில்ல” எனச் சொல்ல...

சிரிப்புடன் மார்க்ஸ் எழுந்தான். “சார் நான் வரேன் சார்..”

“ஏதாவது விஷயமா?” என மேனன் கேட்டார்.

“இல்ல சார் பட்ஜெட் அப்ரூவல் வந்திருச்சு அதுதான் தேங்ஸ் சொல்லலாம்னு வந்தேன்!”

“அதுக்கு நீ அலோக்குக்குத்தான் தேங்ஸ் சொல்லணும்” எனச் சிரித்தார் மேனன்.

“இல்ல சார் நீங்க தான் ப்ரஷர் போட்டு...” என மார்க்ஸ் முடிக்கும் முன்,

“ஏ அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல.. அலோக்கோட வேலை என்னன்னு ஜஸ்ட் ரிமைண்ட் பண்ணேன்... அவ்வளவுதான்” என்றார் மேனன்.

“தேங்ஸ் சார் வரேன்” என மார்க்ஸ் நகர...

மேனன் தாட்சாவை பார்த்து திரும்பியவர்... “நல்ல ஸ்பைஸியா கேரளா சிக்கன் கறியும் அவியலும் பண்ணியிருக்கேன். ரெட் ரைஸ் சாப்பாடு... ரெட் ரைஸ் சாப்பிடுவீங்க இல்ல... கொஞ்சம் குண்டு குண்டா இருக்குமே!” என மேனன் சொல்ல தாட்சா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள்.

“என்னாச்சு?” என அவளது சிரிப்பை ரசித்தபடி மேனன் கேட்டார்.

“ஒரு சேனல் ஹெட்... சிக்கன் கறி சமைக்கிறதா... அதுவும் ஆபிஸ்க்கு பெர்மிஷன் போட்டு!”

மேனன் பதில் ஏதும் பேசாமல் புன்னகைக்க...

“நீங்களும் நானும் ஒண்ணா தினம் லன்ச் சாப்பிடுறோம்னு மொத்த ஆபிஸுக்கும் தெரிஞ்சிருக்கு!”

“நாம ஒன்ணும் ஒளிச்சு சாப்பிடலையே...” என மேனன் சொல்ல... தாட்சா சின்ன புன்னகையுடன்...

“மிஸ்டர் மேனன் நான் சொல்றது புரியலையா?” அவர் புன்னகையுடன் புரிந்ததற்கு அடையாளமாகத் தலையாட்டினார்.

“என்ன பண்ணலாம்?”

“என்ன பண்ணனும்?” என மேனன் கேட்க பதில் சொல்ல முடியாமல் தடுமாறிய தாட்சா, “லன்சுக்கு மீட் பண்ணலாம்” எனச் சொல்லிவிட்டு நகர்ந்தாள். இருவரது மனதும் புன்னகைப்பது அவர்களது முகத்தில் தெரிந்தது.

பாண்டியன் தனது சீட்டில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தான். அவனது இன்டர்காம் அடித்தது. போனை எடுத்தவன் காதில் வைத்து “ஹலோ” என்றான்.

“உங்களைப் பார்க்க சூர்யா சார் ஆபிஸ்ல இருந்து வந்திருக்காங்க” என ரிசப்ஷனிஸ்ட் சொன்னாள்... “வரச் சொல்லுங்க” என்றான் பாண்டியன்.

சூர்யாவின் தம்பி குமார், பாண்டியனின் கேபின் அருகில் வந்து நின்றான்.

“சொல்லு குமாரு” என்றான் பாண்டியன்.

“காலையில நீங்க குடுத்த பணத்தை அண்ணன் திருப்பி கொடுத்திட்டு வர சொல்லிச்சு...”

“காலையிலதான குடுத்தேன். அதுக்குள்ள திருப்பி தர்றான்.”

“இல்ல சேனல்ல இருந்து அட்வான்ஸ் வந்திருச்சு... அதான் அண்ணன் உங்ககிட்ட வாங்குன பணத்தை உடனே குடுக்க சொல்லிச்சு” என அவன் கவரை நீட்ட பாண்டியன் வாங்கி அதை டேபிள் டிராவில் போட்டான்.

“டெஸ்ட் ஷூட் ஒழுங்கா போகுதா?” என்றான்.

“ஆமா சார்” என தலையாட்டினான் குமார்.

“உங்க அண்ணன் டைரக்டரா இருக்காரா, ப்ரொடியூசரா இருக்காரா” எனப் பாண்டியன் சிரித்தபடி கேட்க...

“எப்பவுமே அது டைரக்டர்தான்னா... அது வேணும் இது வேணும்னு எங்களைப்போட்டு வறுத்துகிட்டு இருக்கு!”

“சரி சரி கிளம்பு நீ இருந்தாதான் அவனை சமாளிக்க முடியும்” என பாண்டியன் சொல்ல வணக்கம் வைத்துவிட்டு குமார் நகர்ந்தான்.

பாண்டியன் மீண்டும் திரும்பி எழுதத் தொடங்கினான். சில நிமிடங்களில் அவன் அருகில் யாரோ வந்து நிற்பதை போல உணர்ந்து நிமிர்ந்து பார்க்க... செல்லப்பா, அலோக், பிரசாத் மூவரும் நின்று கொண்டிருந்தார்கள்.

“என்ன சார் என்ன வேணும்?” என அமர்ந்தபடி பாண்டியன் கேட்டான்.

“அந்த டிராயரைத் தி...ற”

“எதுக்கு?”

“திற சொல்றேன்” என்றான் பிரசாத்.

இடியட் பாக்ஸ் | அலோக்
இடியட் பாக்ஸ் | அலோக்

பாண்டியன் திறக்க... செல்லப்பா குமார் கொடுத்துவிட்டு போன பணக்கவரை அதிலிருந்து எடுத்தான்.

“என்னப்பா இது” என கேட்க...

“பணம் சார்” என்றான் பாண்டியன்.

“அது தெரியுது ஏது பணம்?”

“நீங்க என்ன இன்கம்டாக்ஸா? உங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என பாண்டியன் கோபமாகச் சொல்ல...

“என்ன லஞ்சம் வாங்குறயா?” என்றான் அலோக். பாண்டியன் பதறிப்போய் எழுந்தபடி “சார்... இது என் பணம் சார்” எனத் தடுமாறியபடி சொல்ல...

“என்ன தைரியம் இருந்தா ஆபிஸ்ல, அதுவும் சீட்லயே உட்கார்ந்துகிட்டு லஞ்சம் வாங்குவ... வாடா” என அவனது கரத்தை பிரசாத் பிடிக்க...

“சார் பொறுங்க சார்... இது என் பணம் சார்... காலையில கடனா கொடுத்தேன்... அவங்க திரும்பி குடுத்திட்டுப் போறாங்க...” எனக் கை கால்கள் படபடக்கச் சொன்னான் பாண்டியன். எத்தனை பெரிய பலத்துக்கு எதிராகவும் நெஞ்சை நிமிர்த்தி நின்றுவிட முடியும். ஆனால் சின்ன பழிக்கு எதிராக நிற்பதென்பது சிரமமான ஒன்று.

“யார்கிட்ட கதை விடுற... வாடா” என செல்லப்பாவும் பிரசாத்தும் இருபுறமும் அவனது கரத்தை பிடித்தபடி அவனை குற்றவாளியை அழைத்து கொண்டு செல்வது போல அழைத்து சென்றனர்.

மொத்த அலுவலகமும் அவனை குற்றவாளியைப் பார்ப்பது போல பார்க்க... பாண்டியன் தலை குனிந்து நடந்தான். அவமானத்தின் வலி தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. அவன் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது!

- Stay Tuned...