Published:Updated:

இடியட் பாக்ஸ் - 29 | மேனன் அடித்த சிக்ஸர்; ஏஞ்சல் பற்றவைத்த நெருப்பு... திவ்யாவின் தரப்பு?!

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் - 29 | மேனன் அடித்த சிக்ஸர்; ஏஞ்சல் பற்றவைத்த நெருப்பு... திவ்யாவின் தரப்பு?!

பொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்
News
இடியட் பாக்ஸ்

அறையில் இருந்த மொத்த பேரும் திரும்பி பார்க்க சித்தார்த் மேனன் சிறு புன்னகையுடன் அந்த அறைக்குள் நுழைந்தார்.

“மார்க்ஸ், நம்ம குலசாமி வந்திருச்சு... இனி அது பாத்துக்கும்” என்றார் நெல்லையப்பன்.

மும்பையிலிருந்து வந்த உயர் அதிகாரிகள், தாட்சா என அனைவரும் அமர்ந்திருக்கும் இடத்தில் மேனனுக்கு அவசரமாக சேர் ஒன்று ஏற்பாடு செய்யப்பட அதைத் தவிர்த்து அவர் மார்க்ஸின் அருகில் இருந்த நாற்காலியில் வந்தமர்ந்தார். கையில் இருந்த சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் டேபிளில் வைத்தார்.

அவர் யார் பக்கம் என்பதை அவர் அமர்ந்த இடமே அங்கிருப்பவர்களுக்குச் சொல்லாமல் சொல்லியது.

“மேனன் இப்படி வந்து உட்காருங்க” என்றார் நேஷனல் சேல்ஸ் ஹெட் மணீஷ்.

“இல்ல இது வசதியா இருக்கு... தரண் முகத்தைப் பார்த்து பேச இந்த இடம்தான் சரியா இருக்கும்” என்றார் மேனன்.

பாண்டியன், நெல்லையப்பன் என மார்க்ஸ் அணியில் இருக்கும் அனைவரும் சேரில் நிமிர்ந்து அமர்ந்தனர்.

“யெஸ் தரண்... ஆம் ஐ மிஸ் எனிதிங்?”

“நத்திங் மேனன்... எபிசோட்ஸ் எல்லாம் பார்த்தேன். அதை பத்திதான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தேன்!”

“அப்படியா... அதைப்பத்தி நாம தனியா டிஸ்கஸ் பண்ணலாமே?” என்றார் மேனன்.

“ஏன் டீமை வச்சுகிட்டு டிஸ்கஸ் பண்ணா என்ன தப்பு?” இது தரணின் கேள்வி.

“ம்க்கும்” என்ற நெல்லையப்பன் “அந்தாளு உன்னை ஓரமா கூட்டிட்டு போயி அடிக்கிறேன்றான். தனியா போய் சத்தமில்லாம வாங்கிட்டு போவியா அதை விட்டுட்டு...” என நெல்லையப்பன் கிசுகிசுக்க பாண்டியன் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தான்.

“நாம இன்னும் கொஞ்சம் ஓப்பனா டிஸ்கஸ் பண்ணலாம்” என்றார் மேனன்.

“அதை எல்லார் முன்னாடியும் பண்ணா அவங்களுக்கும் நம்ம என்ன நினைக்கிறோங்கிறது புரியுமே” என விடாமல் சொன்னான் தருண்.

மேனன் புன்னகைத்தார்.

“சனியனைத் தூக்கி பனியன்ல போடுறான்... விதி யார விட்டுச்சு” என்றார் நெல்லையப்பன்.

“என்னோட கருத்துகளைச் சொல்லலாமா” என தருண் கேட்க...

“யெஸ் ப்ளீஸ்” என்றார் மேனன்.

அறையில் இருக்கும் அனைவருக்கும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது புரிந்தது.

“அந்த ஸ்கூல் சீரியல் ரொம்ப குப்பையா இருக்கு மேனன்...”

“எந்த சீரியல்?”

“ஸ்கூல் பேக்கிரவுண்ட்ல ஒரு சீரியல் இப்ப பார்த்தேன்...”

“அதான்... அதோட டைட்டில் என்ன?”

“அது வந்து... அது...” என தருண் தடுமாற....

“பேரு... சீரியல் பேரு... என்ன?”

தருண் முகம் மாறியது...

“அவனோட ஏழரை ஸ்டார்டட்...” என்றார் நெல்லையப்பன்

“யோவ் மாமா வாய மூடிக்கிட்டு இருய்யா” என்றான் பாண்டியன்.

“அந்த சீரியல்ல ஏதாவது ஒரு கேரக்டர் பேர் சொல்லு தருண்”

“அது... அது ஏன் நான் சொல்லணும்?”

“சரி வேணாம்... உனக்கு அதுல என்ன புரிஞ்சுதுன்னு சொல்லு?” என்றார் மேனன்.

“என்ன மேனன் எனக்கு தமிழ் தெரியாதுன்னு சொல்ல வர்றியா?!”

“சீ... சீ... அந்தக் கதையோட இங்கிலீஷ் சினாப்சிஸ் உன் டேபிள்ல இருக்கு” என மேனன் கைகாட்ட தருணுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.

“அதைப் படிக்கலையா?” என்றார் மேனன்.

“இப்ப என்ன சொல்ல வர்ற?” என கடுகடுத்தான் தருண்.

“நான் எதுவும் சொல்ல வரல... நீ ஏதாவது சொல்றதுக்கு முன்னாடி அது என்னன்னு சரியா தெரிஞ்சுகிட்டு கருத்து சொல்லுன்னு சொல்றேன்.”

அனைவரும் தருணைப் பார்க்க... அவன் அவமானமாக உணர்ந்தான்.

“எனக்கு தெரியும் மேனன்... மார்க்ஸ் டீமை நீ சப்போர்ட் பண்ற”

“மார்க்ஸ் டீமா... அப்படி ஏதாவது டீம் இருக்கா என்ன?'' என மேனன் சுற்றி பார்த்தவர்... “இங்க இருக்கிறது ஆரஞ்ச் டிவியோட புரோகிராமிங் டீம் அவ்வளவுதான்.”

“அந்த சீரியல் ரேட்டிங் வராது மேனன்” என சட்டென பேச்சை மாற்றினான் தருண்.

“ஏன் வராதுன்னு ஒரு காரணம் சொல்லு!”

“இப்படி ஒரு சீரியல் இதுவரைக்கும் எந்த சேனல்லயாவது வந்திருக்கா?”

“வரல.... அதுதான் அதோட USP” என்றார் மேனன். USP ன்னதும் ரொம்ப யோசிக்க வேண்டாம் யுனிக் செல்லிங் ப்ரப்போசிஷன் அப்படின்றதைத்தான் சுருக்கமா USP-ன்னு சொல்லுவாங்க. அதாவது அந்த சீரியலோட சிறப்பம்சம்."

“அவன் வீசின பாம கேச் பிடிச்சு அவனுக்கே போட்டாரு பாரு” என்றார் நெல்லையப்பன்.

“இது ஒரு முட்டாள்தனமான முயற்சி மேனன்!”

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“எல்லா அதிசயமும் நடக்குறதுக்கு ஒரு செகண்ட் முன்னாடி வரைக்கும் முட்டாள்தனமான முயற்சிதான் தருண்'' என்றார் மேனன்.

“எல்லா சேனல்லயும் வொர்க் ஆகுற மாதிரி ஃபேமிலி டிராமா பண்ணா என்ன தப்பு?”

“அதை ஏன் மக்கள் என் சேனல்ல வந்து பார்க்கணும்? நம்பர் ஒன் சேனல்ல அதை சூப்பரா பண்றாங்களே. அங்கேயே அவங்க பார்த்துக்கப் போறாங்க... அவங்க அங்க இருந்து வந்து என் சேனல்ல பாக்கணும்னா அங்க இல்லாத ஒண்ணை நான் அவங்களுக்குக் கொடுக்க வேண்டாமா?”

“சக்சஸ்குன்னு ஒரு ஃபார்முலா இருக்கு... அதை ஃபாலோ பண்ண மாட்டேன்னு ஏன் அடம்பிடிக்கிற… எதுக்கு புதுசா பண்ணனும்?”

“நீ கோபத்துல பேசுற... நீ பேசுறது தப்புன்னு யோசிச்சா உனக்கே புரியும். கேண்டில் போதும்னு நினைச்சிருந்தா கரன்ட் கண்டுபிடிச்சிருக்கவே மாட்டோம் இல்ல... புதுசு புதுசா முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும்!”

“நான் சக்ஸஸ் பத்தி பேசுறேன்”

“நான் ஒரு ஸ்டெப் மேல போயி டிரெண்டை சேஞ்ச் பண்றது, ட்ரெண்ட் செட் பண்றது பத்தி பேசுறேன். வெற்றி நிரந்தரம் இல்ல... ஆனா புதுசா ஒரு விஷயத்த பண்ணா அதை மக்கள் லேசுல மறக்க மாட்டாங்க!”

“அது ரிஸ்க்...”

“ரிஸ்க் இல்லாம ரிசல்ட் இல்லையே தருண்!”

“இந்த மாதிரி ஷோஸ்தான் பண்ணணும்ன்னு நான் சொல்றேன்”

“அப்படி நீ சொல்ல முடியாதுன்னு நான் சொல்றேன்” என மேனன் பட்டெனச் சொன்னார். தருண் முகம் இருண்டது. அனைவரும் பதற்றமாக அவர்கள் இருவரையும் பார்த்தனர்.

“நான் சௌத் ஹெட். நான் சொன்ன நீ செய்யணும்!”

மேனன் சிரித்தார்.

“அறிவுபூர்வமா ஆர்க்யூ பண்ணிக்கிட்டு இருக்கோம். அதை அதிகாரத்தை வெச்சு நீ ஜெயிக்க பாக்குற!”

“உனக்கு TRP டார்கெட் இருக்கு மேனன்... 6 மாசத்துல அதை நீ அச்சீவ் பண்ணனும்!”

”ஆமா பண்ணனும்!”

“பண்ணலைன்னா?”

“அது 6 மாசம் கழிச்சு பேச வேண்டிய விஷயம்...”

“ஒரு சின்ன கருத்தைக்கூட ஏத்துக்க உன் ஈகோ விடமாட்டேங்குது இல்ல?”

“ஒரு விஷயத்த டிஸ்கஸ் பண்றப்ப இரண்டு பக்கமும் இருக்கிறவங்க ஒப்பன் மைண்ட்டோட ப்ளஸ் மைனஸ் என்னன்னு பேசி எது சரியோ அதை முடிவு பண்ணனும். அதுக்கு நான் தயார். ஏற்கெனவே ஒரு முடிவை எடுத்துட்டு அதை சத்தமா பேசி திணிக்கிறதுக்கு பேர் டிஸ்கஷன் இல்ல!”

“நான் இந்த சீரியல வேணாம்னு சொன்னா என்ன செய்வ?”

“அப்ப நீயே வந்து சீரியல் பண்ணுன்னு சொல்லுவேன்!”

தருண் மேனனை முறைத்துப் பார்த்தான்.

“உன்ன இந்த வேலைக்கு ரெக்கமண்ட் பண்ணது நான்தான் மேனன்... அதை மறந்துடாத!”

“நம்மளைவிட பெஸ்டா செய்வான்னு ஒருத்தன் கிட்ட வேலையை ஒப்படைச்சதுக்கு அப்புறம் அதை இப்படி பண்ணு அப்படி பண்ணுன்னு அவனுக்குச் சொல்லிக் கொடுக்குறது பெரிய முட்டாள்தனம் இல்லையா?”

“இப்ப என்ன சொல்ல வர்ற?”

“என்ன வேலைய செய்யவிடுன்றேன்.”

“ஒகே மேனன்... நான் எதுவும் சொல்லல... ஆனா நீதான் பொறுப்பு. 6 மாசத்துக்கு அப்புறம் நான் அவங்களை எதுவும் கேட்க மாட்டேன். உன்னதான் கேட்பேன்!”

“அதைதான் நானும் சொல்றேன்... என்னதான் நீ கேக்கணும்... வேற யாரையும் இல்ல!”

“டார்கெட்ட நீ அச்சீவ் பண்ணலன்னா இந்த வேலையில நீ கன்டின்யூ பண்ண முடியாது!”

“சரி...” என்றார் மேனன் புன்னகையுடன்.

“அப்ப நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல... வாட் நெக்ஸ்ட்?”

“லன்ச்தான்” என சிரித்தார் மேனன்...

“இங்க ஃபிஷ் ஃபிரை, மட்டன் பிரியாணி வேற லெவல்ல இருக்கும்... சாப்பிடலாம்” என மேனன் எழுந்தார்.

அனைவரும் மெதுவாக எழுந்து நகர்ந்தனர்.

மேனன் எழுந்து மார்க்ஸ் அணியினரைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“சார்... தெய்வம் மாதிரி வந்து காப்பாத்துனீங்க சார்” என்றார் நெல்லையப்பன்.

மேனன் சிரித்தபடி “தருண் ரொம்ப அருமையான பர்சன். அவன் வர்றதுக்கு முன்னாலயே யாரோ மார்க்ஸ் பத்தி தப்பு தப்பா சொல்லியிருக்காங்க... அதை மனசுல வெச்சிக்கிட்டுத்தான் அவன் அப்படி பேசுறான். மத்தபடி ரொம்ப நல்ல ஆள் அவன்” என்றார்.

அவர்கள் மேனனை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். “நானும் அவனும் கிளாஸ் மேட்... அதனால நான் அவனை எப்படி வேணா பேசுவேன். நீங்க அவர்கிட்ட மரியாதையா நடந்துக்கணும்!”

“யெஸ் சார்” என்றார்கள் அனைவரும்.

“சார் எங்களுக்காக நீங்க ஏன் சார் வேலையை விட்டு போகணும்?” என மார்க்ஸ் நெகிழ்ச்சியாகக் கேட்டான்.

“அது சும்மா சொல்றதுதான்... 6 மாசம் கழிச்சு கேட்டா அப்படி எல்லாம் நான் சொல்லவே இல்லையேன்னு சொல்லிடுவேன்” எனச் சிரித்தார் மேனன்.

அவரது பதிலில் மார்க்ஸ் திருப்தியடையவில்லை என்பது அவனது பார்வையில் தெரிந்தது.

“நான் சொல்லித்தான் ஒரு வேலைய நீங்க செய்யுறீங்க. அதைத் தப்புன்னு ஒருத்தன் சொன்னா நான்தானே அதுக்காக சண்டை போடணும். என் டீமை ப்ரொடெக்ட் பண்றது என்னோட முக்கியமான வேலை இல்லையா?”

“சார் இப்படிப்பட்ட மேட்டர் எல்லாம் எங்க சார் பிடிக்கிறீங்க?”

“இந்த மேட்டர்லாம் மார்க்ஸ்கிட்ட கத்துகிட்டதுதான். கம்பெனி டேக்ஓவர் பண்ணும் போது உங்களுக்காக அவன்தானே சண்டை போட்டான்” என மேனன் சிரித்தார்.

“இல்ல சார் நான்...” என மார்க்ஸ் ஏதோ சொல்ல வர...

“நெல்லையப்பன் இந்த சென்டிமென்ட் சீனை எடிட் பண்ணிரலாமே. பசிக்குது வாங்க சாப்பிடப் போகலாம்” எனப் புன்னகைத்துவிட்டு மேனன் அங்கிருந்து நகர்ந்தார்.

அவர்கள் நன்றியோடு அவரைப் பார்த்தபடி இருந்தார்கள்.

மேனன், ப்ளேட்டில் பிரியாணியை எடுத்து போட்டவர், அப்படியே திரும்பினார். தாட்சா கையில் தட்டுடன் அவரையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். மேனன் சின்ன புன்னகையுடன் அவள் அருகில் போனார்.

“உங்களைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்!”

“நானும்தான்... உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”

மேனன் அவளை ஏறிட்டுப் பார்த்தார்.

“எதுக்காக காய்ச்சல்ன்னு இன்னைக்கு லீவு போட்டீங்க?”

“அது வந்து” என மேனன் இழுக்க...

“நான் சொல்லட்டா... நான் தனியா இந்த மீட்டிங்கை ஹேண்டில் பண்ணணும்ன்னு நீங்க நினைச்சீங்க... பாம்பேல இருந்து வர்றவங்களுக்கு என் மேல ஒரு நல்ல இம்ப்ரஷன் வரணும்கிறதுக்காகத்தான் நீங்க இந்த மீட்டிங்கை அவாய்ட் பண்ணீங்க.... நான் சொல்றது சரியா?”

“அப்படி யோசிச்சது தப்பா?” என்றார் மேனன்.

“அது தப்பில்ல... ஆனா என் மேல நம்பிக்கையில்லாம பாதியில நீங்க இந்த மீட்டிங்குக்கு வந்தீங்க பாருங்க அது தப்பு!”

மேனன் மெளனமாக இருந்தார்.

“என்னால முடியும் மேனன். இந்த சேனலை 8 வருஷம் நடத்துனவ நான். நான் சொதப்பிட போறேன்னு நினைச்சு நீங்க மீட்டிங்குக்கு பாதியில வந்தது என்ன இன்சல்ட் பண்ணதா நான் ஃபீல் பண்றேன்!”

மேனன் மெளனமாக இருந்தார்.

“என்ன பேச்சே இல்லை?”

“ஒரு கோச் ஒரு பையனை ட்ரெய்ன் பண்றான். பையன் தடுமாறி கீழ விழுந்தா அவன் என்ன செய்யணும்?” என மேனன் கேட்டார்.

“நின்ன இடத்தில இருந்தே... எந்திரிச்சு ஓடுறான்னு சொல்லனும். அதுதான் அவர் அவனை நம்புறதுக்கு அடையாளம். ஓடிப் போய் தூக்குறது கிடையாது!”

“அதுவே அவர் ரொம்ப நேசிக்கிற அவரோட சொந்தப் பையனா இருந்தா?”

சட்டென அவரை ஏறிட்டுப் பார்த்தாள் தாட்சா.

“ஒரு ஹெட்டா நீங்க தனியா சமாளிக்கணும்னு நான் நினைச்சேன். ஆனா என்னோட மனசுக்குப் பிடிச்ச ஒருத்தருக்கு பிரச்னை வர்றப்ப கூட இருக்கணும்னும் நினைச்சேன். அதனாலதான் வந்தேன் தட்ஸ் ஆல்” என மேனன் புன்னகையுடன் சாப்பிடத் துவங்க... அந்த ஒரு நொடியில் அவர் மேல் இருந்த கோபம் எல்லாம் மறைந்து இதயத்துக்கு நெருக்கமான ஒருவராக அவரை உணர்ந்தாள் தாட்சா. சட்டென தன்னுடைய ஸ்பூனால் மேனனின் தட்டில் இருந்த மீன் துண்டு ஒன்றை எடுத்து அவள் சாப்பிட அதை எதிர்பார்க்காத மேனன் ஆச்சர்யமாக அவளைப் பார்த்தார்.

“உங்களுக்கு மீன் ரொம்ப பிடிக்குமா?” என்றார் மேனன்.

'இல்லை' என தலையாட்டியபடி தாட்சா புன்னகைத்தாள். மேனனும் அர்த்தம் புரிந்து புன்னகைத்தார்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

மேனன் ஹோட்டலின் மீட்டிங் ஹாலை ஓட்டியிருந்த பால்கனிக்கு வந்தவர் சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைக்க போக “சார்” என்ற குரல் கேட்டு திரும்பினார். ஏஞ்சல் நின்று கொண்டிருந்தாள்.

“ஹாய் ஏஞ்சல்...”

“சார் நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்!”

“சொல்லும்மா”

“எவ்வளவு சார் அந்த மார்க்ஸை சப்போர்ட் பண்ணுவீங்க... முதல் நாள் கான்ஃபரன்ஸ் ரூம்ல ஆரம்பிச்சு இன்னைக்கு சவுத் ஹெட் கிட்ட சண்டை போட்ட வரைக்கும் அவனை எத்தனை தடவ காப்பாத்தியிருக்கீங்க... ஏன் சார்?”

மேனன் புன்னகைத்தார்.

“அவனுக்காக உங்க வேலையைக்கூட தூக்கி போட தயாரா இருக்கீங்க சார்... எனக்கு இது புரியல சார்!”

“சித்தார்த் மேனன்றது நான் மட்டும் கிடையாது. என்னை நம்புனவங்க, எனக்கு வாய்ப்பு குடுத்தவங்க, என்ன சப்போர்ட் பண்ணவங்க, நான் கீழே விழும்போது என்னை கைதூக்கி விட்டவங்க, வாழ்க்கையோட ஒவ்வொரு தருணத்துலயும் இதை செய், இதை செய்யாதேன்னு நமக்கு கத்து குடுத்தவங்க... இவங்க எல்லாம் சேர்ந்ததுதான் நான்.”

ஏஞ்சல் அவரைப் பார்த்தபடி இருந்தாள்.

“அவங்களுக்கு எல்லாம் நான் நன்றி சொல்ல முடியல. ஏன்னா நான் நன்றி சொல்லணும்னு நினைக்கிறப்ப அவங்க யாரும் இல்ல... அவங்க எனக்கு பண்ணதை நான் மார்க்ஸூக்குப் பண்றேன். இதை நான் அவனுக்குப் பண்ற உதவியா நினைக்கல... என்னை உருவாக்குனவங்களுக்கு நான் சொல்ற நன்றியா நினைக்கிறேன்.

சில சமயம் நமக்கு நல்லது பண்ணவங்களுக்கே திரும்பி நம்ம நல்லது பண்ணனும்னு அவசியம் இல்ல... உதவி தேவைப்படுற வேற யாரோ ஒருத்தருக்கு பண்ணா கூட அக்கவுன்ட் பேலன்ஸ் ஆயிடும்” எனச் சிரித்தார்.

“அதுக்காக அவனை எவ்வளவுதான் சார் சப்போர்ட் பண்ணுவீங்க?”

“சப்போர்ட் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டா அதுல என்ன இவ்வளவு அவ்வளவுன்னு கணக்குப் பார்த்துகிட்டு...”

“எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு சார்...”

மேனன் சிரித்தார்.

“அவன் ரொம்ப லக்கி சார். உங்களை மாதிரி ஒருத்தரோட அன்பு கிடைக்க அவன் குடுத்து வச்சிருக்கணும்!”

“ஏஞ்சல்... உனக்கு ஒரு பிரச்னைன்னாலும் நான் இப்படித்தான் நடந்துப்பேன்!”

“இல்ல சார்... உங்களுக்கு மார்க்ஸ் கொஞ்சம் ஸ்பெஷல்தான்!”

“அம்மாவுக்கு எல்லா பிள்ளைகளும் ஒண்ணுதான். ஆனாலும் அம்மாக்கள் எப்பவுமே பிரச்னையான பிள்ளைகள் கூடவே இருப்பாங்க... ஏன்னா அவங்களோட உதவி அந்தப் பிள்ளைகளுக்கு கொஞ்சம் அதிகமாகத் தேவைப்படும். அவ்வளவுதான்!”

“எனக்கு மார்க்ஸைப் பிடிக்காது சார்...”

“எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்கணும்னு அவசியம் இல்லம்மா!”

“அது தப்புன்னு உங்களுக்குத் தோணுதா சார்?”

“எல்லாரையும் பிடிச்சிருக்கணும்னு அவசியம் இல்ல. எனக்கும் நம்ம ஆபிஸ்ல பலரைப் பிடிக்காது. ஆனா அவங்களை வெறுக்குறதுக்குன்னு நான் நேரம் ஒதுக்குறது இல்ல. வெறுப்பு எதிரில் இருக்கிறவனை விட நம்மளதான் அதிகமா பாதிக்கும். அதனால சொல்றேன்!”

“சார்...”

“சொல்லும்மா...”

“எங்க கூடவும் இருங்க சார்!”

“ஏஞ்சல்... நான் உனக்கும் சேர்த்துதான் பாஸ்!”

“தேங்ஸ் சார்!”

“சாப்பிட்டியா?”

“இல்ல சார்...”

“போய் சாப்பிடும்மா...”

புன்னகையுடன் அவள் போவதையே மேனன் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஏஞ்சல் ஹாலுக்குள் நுழைந்தாள் ஆங்காங்கே அனைவரும் தட்டைக் கையில் வைத்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். திவ்யா தனியாக நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஏஞ்சல் மெதுவாக தட்டில் உணவை போட்டுக் கொண்டவள் திவ்யாவின் அருகில் வந்தாள்.

“எங்க போயிட்ட ரொம்ப நேரமா உன்னைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்” என்றாள் திவ்யா.

ஏஞ்சல் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தாள். அவளது புன்னகை திவ்யாவுக்கு வித்தியாசமாகப்பட்டது.

“என்னாச்சு” என்றாள் திவ்யா...

“நான் ஒண்ணுகேட்டா நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களே...”

திவ்யா ஏஞ்சலை ஏறிட்டுப் பார்த்தாள்.

“கரியர்ல உங்களோட அடுத்த கனவு என்ன?”

திவ்யா யோசித்தவள், “அடுத்து என்ன? சவுத் புரோகிராமிங் ஹெட், நேஷனல் புரோகிராமிங் ஹெட்...”

“உங்க பர்சனல் லைஃப்ல நீங்க விரும்பின எல்லாம் நடக்கலாம் காதல், கல்யாணம், குழந்தைங்க... ஆனா புரொஃபஷனல் லைஃப்ல நீங்க ஆசைப்படுறது எல்லாம் நடக்கனும்னா நீங்க இப்படி இருந்தா முடியாது!” என்றாள் ஏஞ்சல்.

“நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு புரியல...” என்றாள் திவ்யா.

"உங்களுக்கு மார்க்ஸைப் பிடிச்சிருக்கு நீங்க ஒண்ணா ஒரே வீட்ல இருக்கீங்க... அதுல எல்லாம் நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பல. ஆனா உங்க ப்ரொஃபஷனல் வாழ்க்கையில நீங்க மார்க்ஸ்கிட்ட தோத்துட்டு இருக்கீங்க... அது மட்டும் ஞாபகத்தில வெச்சுக்குங்க...”

திவ்யா முகம் மாறி ஏஞ்சலைப் பார்த்தாள்.

“அவன் மேல மேல போயிகிட்டே இருக்கான். அவனை உங்களுக்கு பிடிச்சிருக்கிறதால ப்ரொஃபஷனலா அவனை ஜெயிக்கணும்ங்கற எண்ணம் உங்களுக்கு வர மாட்டேங்குது. இப்படியே போனா உங்க ப்ரொஃபஷனல் கனவு வெறும் கனவாதான் இருக்கும். தோணுச்சு சொல்றேன்... அவ்வளவுதான்!”

திவ்யா ஏதோ சொல்ல வர ஏஞ்சல் கையை உயர்த்தி அவளை இடைமறித்தவள்.

“மார்க்ஸுக்கு பதிலா அந்த இடத்தில வேற ஒருத்தன் இருந்தா நீங்க என்ன பண்ணுவீங்கன்னு மட்டும் யோசிச்சு பாருங்க, அப்புறமா முடிவு பண்ணுங்க. ஒரு ஹெட்டா உங்களைப் பார்த்தப்ப எனக்கு ரொம்ப நம்பிக்கையா இருந்துச்சு. ஆனா நீங்களும் எல்லா பொண்ணுங்க மாதிரி காதல், காபி ஷாப்னு மாறினதைப் பார்க்குறப்ப ரொம்ப சங்கடமா இருக்கு” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ஏஞ்சல்.

திவ்யாவுக்குள் சட்டென பல விளக்குகள் எரிந்தன. 'இது இல்லையே நான்' என்ற எண்ணம் அவளுக்குள் சட்டென எழுந்தது. எல்லா பெண்களையும் போல் காதல் தன் கண்ணை மறைத்துவிட்டதோ எனத் தோன்றியது அவளுக்கு. பழைய திவ்யாவாக மாற வேண்டும் என அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

திவ்யா தலை நிமிர்ந்து பார்க்க சற்று தொலைவில் தனது சகாக்களுடன் பேசிக் கொண்டிருந்த மார்க்ஸ் தற்செயலாக திரும்பி திவ்யாவைப் பார்த்தான். திவ்யா புன்னகைத்தாள். மார்க்ஸும் புன்னகைத்தான். திவ்யாவின் மனதுக்குள் நடந்து கொண்டிருந்த மாற்றங்கள் மார்க்ஸுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை!

- Stay Tuned...